You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹமாஸ் தலைவரை கொன்றது இஸ்ரேலின் மொசாட் உளவாளிகளா? இரான் புதிய குற்றச்சாட்டு
- எழுதியவர், மாட் மர்பி மற்றும் ஜென்னி ஹில்
- பதவி, பிபிசி செய்திக்காக, லண்டன், டெல்அவிவ் நகரங்களில் இருந்து
ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே இரான் தலைநகர் டெஹ்ரானில் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்கு வெளியில் இருந்து "குறுகிய தூர எறிகணை" மூலம் கொல்லப்பட்டதாக இரானின் புரட்சிகர காவலர் படை (IRGC) தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை ஏவப்பட்ட அந்த எறிகணை சுமார் 7 கிலோ (16lbs) எடையுடன் "பலமான வெடிப்பை" ஏற்படுத்தியதாகவும், இதனால் ஹனியே மற்றும் அவரது மெய்ப் பாதுகாவலர் கொல்லப்பட்டதாகவும் இரான் துணை ராணுவ அமைப்பு கூறியது.
இரானில் புதிய அதிபராக மசூத் பெசெஷ்கியான் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க டெஹ்ரானுக்கு இஸ்மாயில் ஹனியே சென்றிருந்திருந்தார்.
இரானின் புரட்சிகர காவலர் படை (ஐஆர்ஜிசி), இந்த நடவடிக்கையை அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் செயல்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டியது.
ஆனால் ஹனியேவின் மரணம் குறித்து இஸ்ரேல் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
ஐஆர்ஜிசி அமைப்பின் கூற்று மேற்கத்திய ஊடகங்களில் வெளியான செய்திகளுடன் முரண்படுகிறது. விருந்தினர் மாளிகையில் இஸ்ரேலிய ரகசிய ஏஜென்டுகளால் வெடிபொருட்கள் வைக்கப்பட்டதாக மேற்கத்திய ஊடக செய்திகள் கூறுகின்றன.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
சீற்றத்தில் இரான்
ஹனியேவின் மரணத்தைச் சுற்றியுள்ள தோல்விகள், குறிப்பாக தீவிர பாதுகாப்பு போடப்பட்டிருந்த ஒரு நாளில் இது நிகழ்ந்திருப்பது இரான் மற்றும் அதன் பாதுகாப்பு அமைப்பான ஐஆர்ஜிசி-க்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹனியே இறந்த சில நாட்களில் பல ஐஆர்ஜிசி அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
ஹனியே தங்கியிருந்த விருந்தினர் மாளிகையில் இருந்த பணியாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் மற்றும் அவர்களது தொலைபேசிகள் மற்றும் பிற மின் சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஹமாஸ் தலைவரை கொன்றது மொசாட் உளவாளிகளா?
இதற்கிடையில், இரானிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு விவரங்களில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி வியாழக் கிழமை ஹனியேவுக்காக பிரார்த்தனைகளை நடத்தினார். அவரது பாதுகாப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் விழா முடிந்தவுடன் அவர் உடனடியாக வெளியேறினார்.
இரானிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி, இஸ்ரேலின் மொசாட் ஏஜெண்டுகளால் (Mossad intelligence agency) இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்த அறையில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டார் என்று பிரிட்டனின் டெய்லி டெலிகிராப் ஊடகம் கூறியுள்ளது.
இரண்டு மொசாட் உளவாளிகள் விருந்தினர் மாளிகைக்குள் நுழைந்து மூன்று அறைகளில் வெடிமருந்துகளை வைத்ததாக பிரிட்டனி டெய்லி டெலிகிராப் நாளிதழ் செய்தி வெளியிட்ட பிறகு இரானின் புரட்சிகர காவலர் படை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வதற்கு முன்பாக இருவரும் பின்னர் இரானை விட்டு வெளியேறிவிட்டனர் என்று சிசிடிவி காட்சிகளை பார்த்த இரானிய அதிகாரிகள் கூறியதாக அந்த நாளிதழ் செய்தி கூறுகிறது.
நியூயார்க் டைம்ஸ், ஹனியேவின் அறையில் வெடிகுண்டுகள் வைத்து, அதனை வெடிக்கச் செய்து அவர் கொல்லப்பட்டதாகவும், அவை இரண்டு மாதங்களுக்கு முன்பே வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறியது.
பிபிசியால் இந்தக் கூற்றுகளை சரிபார்க்க முடியவில்லை.ஆனால் ஹனியே இதற்கு முன்பு அதே விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்ததாக இந்த வார தொடக்கத்தில் பிபிசியிடம் பேசிய ஹமாஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேலுக்கு பதிலடி தர இரான், ஹமாஸ் உறுதி
2017ல் அரசியல் பணியகத்தின் தலைவராக பதவியேற்றதில் இருந்து இஸ்மாயில் ஹனியே 15 முறை இரானுக்கு பயணம் செய்துள்ளார்.
இந்த அறிக்கைகள் உண்மையாக இருந்தால் - இரானின் புரட்சிகர காவலர் படைக்கு இன்னும் பெரிய தோல்வியை இந்த சூழல் பிரதிபலிக்கும். காரணம் இந்த அமைப்பு நீண்ட காலமாக நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக்கு பொறுப்பேற்றுள்ளது.
இரானில் எந்த அளவிற்கு மொசாட் எளிதாக நுழைந்து செயல்பட முடியும் என்பதை இந்த சூழல் எடுத்துக் காட்டுகிறது என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.
ஹனியேவின் மரணம் எப்படி நிகழ்ந்திருந்தாலும், இரானும் ஹமாஸும் பதிலடி கொடுப்பதாக உறுதியளித்துள்ளன.
இரானின் புரட்சிகர காவலர் படை சனிக்கிழமை அன்று இஸ்ரேலுக்கு "தகுந்த நேரம், இடம் மற்றும் முறையில் கடுமையான தண்டனை கிடைக்கும்" என்று கூறியது.
இரானிய ஆதரவு ஆயுதக்குழுக்கள் மற்றும் லெபனானில் இருந்து செயல்படும் ஹெஸ்பொலாவும் இஸ்ரேலை பழிவாங்க சூளுரைத்துள்ளன. ஹெஸ்பொலா உயர்மட்ட தளபதிகளில் ஒருவரான ஃபுவாட் ஷுக்ர் கடந்த செவ்வாய்கிழமை பெய்ரூட் நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் டமாஸ்கஸில் இரானின் புரட்சிகர காவலர் படையின் பிரிகேடியர் தளபதி முகமது ரெசா ஜாஹேடி கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இரான் 170 ட்ரோன்கள், 30 கப்பல் ஏவுகணைகள் மற்றும் 110 பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி ஏவியது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)