"மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவை மீண்டும் முதல்வராக்க முடியாது" - உச்ச நீதிமன்றம்

மகாராஷ்டிரா

பட மூலாதாரம், Getty Images

மகாராஷ்டிராவில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளாமல் உத்தவ் தாக்கரே பதவி விலகியதால், அவரை மீண்டும் ஆட்சியில் அமரவைக்க வாய்ப்பில்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தபோது, அதற்கு எதிராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். உத்தவ் தாக்கரேவுக்கு அளித்து வந்த ஆதரவை சொந்த கட்சி எம்எல்ஏக்களில் பெரும்பான்மையினர் திரும்பப்பெற்றதால் அம்மாநிலத்தில் ஆட்சியை இழக்கும் நிலைக்கு சிவசேனை அரசு தள்ளப்பட்டது.

இந்த விவகாரத்தில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவிட்டார். ஆனால், அதற்கு இடமளிக்காமல் தமது அமைச்சரவையை கலைத்துவிட்டு உத்தவ் தாக்கரே பதவி விலகினார்.

சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் இருந்த பா.ஜ.கவுடன் இணைந்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்த நிலையில், அது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கில் இன்று நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், "ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு தற்போதைக்கு எந்த ஆபத்தும் இல்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளாமல் உத்தவ் தாக்கரே பதவி விலகியதால், அவரை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வாய்ப்பில்லை," என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வழக்கின் பின்னணி

1. மகாராஷ்டிராவில் ஆட்சி அதிகார போட்டி தொடர்பாக யாரெல்லாம் நீதிமன்றத்தை நாடினர்?

ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே குழு இந்த வழக்கில் முக்கிய மனுதாரர்கள். இது தவிர, பல்வேறு நிறுவனங்களும் நீதிமன்றத்திற்கு விரைந்துள்ளன. இதில் சில வழக்கறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களும் அடங்குவர்.

மேலும், இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசையும் உச்ச நீதிமன்றம் எதிர்மனுதாரர்களாக ஆக்கியுள்ளது.

2. மனுக்களில் என்ன கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன?

இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 4 முக்கிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 16 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குழு முதல் மனு தாக்கல் செய்தது.

இரண்டாவது மனு, கிளர்ச்சி எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்யக் கோரி உத்தவ் தாக்கரே தரப்பு தாக்கல் செய்த மனு.

மூன்றாவது மனு, உத்தவ் தாக்கரே குழுவைச் சேர்ந்த 14 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பானது.

நான்காவது மனு, ஜூலை 3, 4ஆம் தேதிகளில் சுபாஷ் தேசாய் நடத்திய சிறப்பு அமர்வு செல்லாது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டது.

உத்தவ் தாக்கரே

பட மூலாதாரம், Getty Images

3. இந்த விவகாரத்தை விசாரித்த நீதிமன்றத்தின் கருத்துக்கள் என்ன?

இந்த வழக்கில் அரசியலமைப்புச் சிக்கல் இருப்பதாக தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் கருதினார்.

மேலும், நெபாம் ரெபியா வழக்கின் தீர்ப்பு இந்த வழக்கிற்கு பொருந்துமா இல்லையா என்பதை பரிசீலித்து இந்த வழக்கின் முடிவை அறிவிப்பது குறித்தும் தலைமை நீதிபதி சில முடிவுகளை எடுத்தார்.

இது தொடர்பாக பிப்ரவரி மாதம் நடைபெற்ற தொடர் விசாரணையில் அரசியல் சாசன பெஞ்ச், பல்வேறு கருத்துகளை பதிவு செய்ததோடு, பல்வேறு விளக்கங்களையும் கேட்டுப் பெற்றது. இந்த விசாரணைகளின் போது, நாட்டின் பிரபல மற்றும் மூத்த வழக்கறிஞர்களான மகேஷ் ஜெத்மலானி, கபில் சிபல், ஹரிஷ் சால்வே, அபிஷேக் மனு சிங்வி, நீரஜ் கிஷண் கவுல், மனிந்தர் கவுல் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

4. அரசியலமைப்பு அமர்வில் எந்தெந்த நீதிபதிகள் இடம்பெற்று இருந்தனர்?

தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரணை நடத்தியது. அவருடன் எம். ஆர். ஷா, கிருஷ்ணா முராரி, ஹிமா கோஹ்லி, மற்றும் நீதி நரசிம்மர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது மட்டுமே பயன்படும் என்ற அளவில் இல்லாமல் எதிர்காலத்திலும குறிப்பிடப்படும் என்பதால் வழக்கை பெரிய அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தரப்பு கோரியிருந்தது.

5. உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

இந்த அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி எம். ஆர். ஷா இம்மாதம் 15ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். எனவே, அவர் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்ட நிலையில், இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: