‘மை டியர் யங் மேன்’ என்று ஜெயலலிதா அழைத்த டி.ஆர்.பி. ராஜா யார்?

டி.ஆர்.பி. ராஜா, அமைச்சரவை மாற்றம், மன்னார்குடி

பட மூலாதாரம், TN DIPR

படக்குறிப்பு, டி.ஆர்.பி. ராஜாவுக்கு ஆளுநர் மாளிகையில் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி
முக்கிய சாராம்சம்
  • மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் டி.ஆர்.பி.ராஜா.
  • தற்போது திமுகவின் தகவல், தொழில்நுட்ப பிரிவின் (ஐ.டி. விங்) செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
  • திமுகவின் பொருளாரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர். பாலுவின் மகன்தான் டி.ஆர்.பி. ராஜா.
  • முதலமைச்சர் தலைமையில் இயங்கி வரும் மாநில திட்டக்குழுவின் உறுப்பினராகவும் இவர் இருக்கிறார்.
  • சென்னையில் உள்ள எம்.சி.சி கல்லூரியில் பள்ளிப்படிப்பை முடித்து, லயோலா கல்லூரியில் இளங்கலை படித்துள்ளார்.
  • அதைத் தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழகத்தில் உளவியல் பாடத்தில் முதுநிலை பட்டமும், சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டு, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரான டி.ஆர்.பி. ராஜா தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவி பிரமாணம், ரகசியக் காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

அவர் யார்? புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அவருக்கு மிக முக்கியமான துறை ஒதுக்கப்பட்டிருப்பது ஏன்?

ஜெயலலிதா vs டி.ஆர்.பி. ராஜா

டி.ஆர்.பி. ராஜா, அமைச்சரவை மாற்றம், மன்னார்குடி

பட மூலாதாரம், TN DIPR

மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் இருந்து 2011, 2016, 2021 ஆகிய சட்டப் பேரவைத் தேர்தல்களில் தொடர்ச்சியாக 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் டி.ஆர்.பி.ராஜா.

2016ஆம் ஆண்டு திமுக எதிர்கட்சியாக இருந்தபோது, சட்டமன்றத்தில் டி.ஆர்.பி. ராஜா பேசிய உரை கவனத்தை ஈர்த்தது.

தொழில்துறை மீதான மானியக் கோரிக்கையின் போது திமுக சார்பாக டி.ஆர்.பி. ராஜா பேசினார். தமிழ்நாட்டிலுள்ள தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவுக்கு செல்வதாக பேசினார்.

அதற்கு பதிலளித்த அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, “மை டியர் யங் மேன், நீங்கள் சொல்வது போல பிற மாநிலங்களுக்கு எந்த தொழிற்சாலையும் செல்லவில்லை. வரும் காலங்களில் தொழில் தொடங்க இங்கே முதலீட்டாளர்கள் வரிசையில் வந்து நிற்பார்கள்,” என்று பதிலளித்தார்.

இந்த காரசாரமான விவாதம் முழுவதும் ஆங்கிலத்திலேயே நடந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் டி.ஆர்.பி. ராஜா பேசிய கருத்துகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.

டெல்டாவுக்கு பிரநிதித்துவம்

டி.ஆர்.பி. ராஜா, அமைச்சரவை மாற்றம், மன்னார்குடி

பட மூலாதாரம், Twitter/OfficeOfTRBR

படக்குறிப்பு, சொந்த தொகுதியான மன்னார்குடியில் நடைபெறும், பேருந்து நிலைய விரிவாக்க பணிகளை டி.ஆர்.பி. ராஜா பார்வையிட்டார்

தமிழ்நாடு அமைச்சரவையில் டெல்டா மாவட்டங்களிலிருந்து அமைச்சர்கள் யாரும் இல்லை என்ற குறை இருந்து வந்தது.

தற்போது டி.ஆர்.பி. ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்டதையடுத்து, அந்த குறை நீங்கியிருக்கிறது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டி. ஆர்.பி. ராஜாவின் தந்தையும், திமுகவின் பொருளாளருமான டி.ஆர். பாலு, முதலமைச்சரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கிறேன். டெல்டா மாவட்டத்திற்கு மேலும் அமைச்சர்களை தர வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைப்பேன், என்றார்.

இதுமட்டுமின்றி, டெல்டா மாவட்டங்களில் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கத்தால், திமுகவின் செல்வாக்கு குறைந்து வருவதற்கு மாற்றாக உறுதியான ஒரு தலைவரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் டி.ஆர்.பி. ராஜாவை தேர்தலில் அறிமுகப்படுத்தினார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

பதவி பிரமாணத்தில் எழுந்த சர்ச்சை

2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, முதலமைச்சராக பதவியேற்றபோது 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்' என மு.க.ஸ்டாலின் பதவியேற்றார்.

அதைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் பதவி ஏற்றுக் கொண்டபோது, 'தளிக்கோட்டை ராசுத்தேவர் பாலு ராஜா என்னும் நான்' என்று டி.ஆர்.பி. ராஜா தனது தாத்தாவின் பெயரையும், அவரது பெயரிலிருந்த சாதிப்பெயரையும் சேர்த்து பதவியேற்றுக் கொண்டார்.

இது அப்போது பரவலாக விமர்சனத்திற்குள்ளானது.

ஐ.டி விங் செயல்பாடுகள்

2021ஆம் ஆண்டு, அயலக தமிழர்கள் அணி என திமுகவில் அமைப்பு ரீதியாக புதிதாக ஒரு அணி உருவாக்கப்பட்டது. அந்த அணியின் செயலாளராக டி.ஆர்.பி. ராஜா அப்போது நியமிக்கப்பட்டார்.

ஐ.டி விங் துறையின் செயலாளராக இருந்த பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் அந்த பொறுப்பிலிருந்து விலகிய பிறகு ஐடி விங் செயலாளர் பொறுப்பு டி.ஆர்.பி. ராஜாவுக்கு வழங்கப்பட்டது.

அதன் பிறகு 'ஐ.டி. விங் 2.0' என்று திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள தகவல், தொழிநுட்ப அணியின் தொண்டர்களை திரட்டினார். கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம், 'திராவிட மாதம்' என்ற தலைப்பில் ட்விட்டர் ஸ்பேஸ் மூலமாக பல்வேறு கூட்டங்களை நடத்தினார்.

டி.ஆர்.பி. ராஜாவின் துறை எவ்வளவு முக்கியம்?

டி.ஆர்.பி. ராஜா, அமைச்சரவை மாற்றம், மன்னார்குடி

பட மூலாதாரம், Twitter/OfficeOfTRBR

படக்குறிப்பு, மாநிலத் திட்டக்குழு உறுப்பினராக இருக்கிறார் டி.ஆர்.பி. ராஜா

முதல்முறையாக அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் டி.ஆர்.பி. ராஜாவுக்கு தொழில்துறை வழங்கப்பட்டது மிகமுக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

தமிழ்நாடு அரசை பொறுத்தவரை, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030ஆம் ஆண்டுக்குள் '1 ட்ரில்லியன் டாலர்' பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என இலக்கை நிர்ணயித்துள்ளது.

இதற்காக தமிழ்நாட்டில் மட்டுமின்றி, உலக நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை ஈர்க்கும் பணியை மேற்கொண்டு வருகிறது தமிழ்நாடு அரசு.

விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர், ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டு முதலீட்டாளர்களை சந்திக்க இருக்கிறார்.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தனிக்கொள்கையை வகுத்ததோடு மட்டுமல்லாமல், பல மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

இப்படி தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தொழில்துறை, தகவல், தொழில்நுட்பத்துறை, சிறு, குறு, நடுத்தர தொழில் வளர்ச்சித்துறை ஆகிய துறைகள் பங்கு அவசியம் என முதலமைச்சர் கருதுகிறார்.

3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதிலும், முதல் முறையாக அமைச்சராக பொறுபேற்று இருக்கும் டி.ஆர்.பி. ராஜா, தொழில்துறை வளர்ச்சிக்கு எந்தளவு பங்களிப்பார் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: