சுனாமிக்குப் பிறகு பேரிடரை எதிர்கொள்வதில் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இலங்கை நிலை என்ன?

இலங்கையில் சுனாமி எச்சரிக்கை பலகை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கை உள்ளிட்ட நாடுகளை சுனாமி பேரனர்த்தம் தாக்கி, இன்றுடன் 19 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

இதனை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் பெலிஅத்த - பெரலிய பகுதியில் பயணிகளுடன் ரயிலொன்று முழுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில், கொழும்பு - மருதானை ரயில் நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 6.25க்கு விசேட ரயிலொன்று புறப்பட்டது.

2006ம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ரயிலின் 591 இலக்கத்துடனான எஞ்ஜின் இன்று பயன்பாட்டில் உள்ளமை விசேட அம்சமாகும்.

இந்த ரயில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்ததை அடுத்து, அங்கு ரயிலில் உயிர்நீத்த உறவுகளுக்காக ரயில்வே அதிகாரிகளினால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தனது பயணத்தை ஆரம்பித்த குறித்த ரயில் பெரெலிய சுனாமி நினைவு தூபிக்கு அருகில் 9.25க்கு சென்றடைந்ததுடன், அங்கு விசேட நினைவேந்தல் நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.

அத்துடன், நாடு முழுவதும் 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்களுக்கு என்ன நேர்ந்துள்ளது?

சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள்
படக்குறிப்பு, சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரம்

இலங்கையை தாக்கிய சுனாமி அனர்த்தம் காரணமாக சுமார் 31,000 பேர் உயிரிழந்ததுடன், 4,000 பேர் வரை காணாமல் போயிருந்தனர்.

இந்த பேரனர்த்தம் காரணமாக இலங்கைக்கு 100 கோடி அமெரிக்க டாலர் நட்டம் ஏற்பட்டதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இலங்கை எதிர்கொண்ட பாரிய இயற்கை அனர்த்தமாக வரலாற்றில் இது பதிவாகியுள்ளது.

எதிர்காலத்தில் சுனாமி அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில், மக்களை உடன் வெளியேற்றும் நோக்கில் சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்களை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

எனினும், சுனாமி ஏற்பட்டு 19 வருடங்கள் ஆகின்ற இன்றைய தினத்தில் 77 கோபுரங்களில் 57 கோபுரங்கள் செயலிழந்துள்ளதாக தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிபிசி வினவிய போது, இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு ஏற்பட்ட சுனாமி காரணமாக இலங்கையின் 4ல் 3 பகுதியான கடற்பரப்பிற்கு பாதிப்பு ஏற்பட்டது.

இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டு, தற்போது செயற்பாட்டிலுள்ள சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்களில் 11 கோபுரங்கள், இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்திலிருந்து செயற்படுத்த முடியும் என அந்த நிலையத்தின் தகவல் வழங்கும் அதிகாரி எமது செய்திப் பிரிவிற்கு தெரிவித்தார்.

எஞ்சிய 9 கோபுரங்களும், அந்த கோபுரங்களுக்கு சென்றே செயற்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார்.

எனினும், 57 கோபுரங்களை எந்தவிதத்திலும் செயற்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோபுரங்கள் பல முறை புனரமைக்கப்பட்டு செயற்படுத்தப்பட்ட போதிலும், இந்த கோபுரங்களை இயக்கும் செயற்கை கோள் காலாவதியாகி செயலிழந்துள்ளது.

குறித்த செயற்கை கோள் செயலிழந்துள்ளதுடன், அந்த செயற்கை கோளுக்கு சொந்தமான நிறுவனம், சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரத்திற்கான உபகரண உற்பத்திகளை கைவிட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இனி கரையோர மக்களை அப்புறப்படுத்துவது எப்படி?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நடந்த கூட்டம்

பட மூலாதாரம், PMD SRI LANKA

படக்குறிப்பு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நடந்த கூட்டம்

இலங்கையில் தற்போது கையடக்கத் தொலைபேசி வழியாக அனர்த்தங்கள் தொடர்பான தகவல்களை வழங்கும் முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

மக்களை தெளிவூட்டும் வகையிலான வெற்றியளிக்கும் முறையொன்று இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிலையம் குறிப்பிடுகின்றது.

தொலைபேசி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கான உடன்படிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கையெழுத்திடப்பட்டது.

இயற்கை அனர்த்தம் ஒன்று ஏற்படும் பட்சத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களின் தொலைபேசிகளுக்கு ஒலிப்பதிவு செய்யப்பட்ட குரல் வடிவிலாக குறுந்தகவலொன்று அனுப்பி வைக்கப்படும்.

இதன் முதற்கட்டமாக 14 மாவட்டங்களில் 60 ஆயிரம் நிலையான மற்றும் கையடக்கத் தொலைபேசிகளுக்கு இந்த தகவல் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் இந்த நடவடிக்கை விஸ்தரிக்கப்படவுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

சுனாமி மாத்திரமன்றி, எந்தவொரு இயற்கை அனர்த்தங்கள் தொடர்பிலும் இந்த முறையின் ஊடாக அறிவிக்கப்படும் என நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பிபிசிக்கு அனுப்பியுள்ள தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழாக பதில் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

''சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்ட எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் போதும் முன்னெச்சரிக்கைகளை விடுக்கும் வகையிலான தொழில்நுட்ப உபகரணங்களை ஸ்தாபிக்கும் முதற்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், நாடு எதிர்நோக்கியுள்ள நிதி பற்றாக்குறை காரணமாக அதனை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது" என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது.

அத்துடன், ''சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்களின் செயற்பாடு தொடர்பில் எதிர்காலத்தில் நிபுணர்களின் பரிந்துரைகளின் ஊடாக குறித்த செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்" எனவும் அந்த பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இலங்கை நிலை என்ன?

இலங்கையின் அயல் நாடான இந்தியா, இயற்கை அனர்த்தங்களின் போது மக்களை தெளிவூட்டும் வகையில் எஸ்.எம்.எஸ் தகவல்கள், வானொலி, தொலைகாட்சி மூலமாக அறிவிப்புகள், ஒலிபெருக்கி மூலமாக அறிவிப்புக்கள் உள்ளிட்ட பல முறைகளை பயன்படுத்தி வருகின்றது.

அத்துடன், இந்து மகா சமுத்திரத்திலுள்ள பல நாடுகள் இந்த முறைகளை பயன்படுத்தி வருகின்றன.

அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளும் இவ்வாறான பல முறைகளை பயன்படுத்தி வருகின்றன.

பல இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளும் காலத்தையே, உலகிலுள்ள நாடுகள் தற்போது கடந்து செல்கின்றன.

சுனாமி ஏற்பட்டு இன்றுடன் 19 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

அப்படியென்றால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மற்றுமொரு சுனாமி அனர்த்தம் ஏற்படும் வரை காத்திருக்காது, அவசர நிலைமைகளின் போது உரிய மற்றும் சரியான முறையில் மிக துரிதகதியில் நம்பகரமான தகவல்களை வழங்கி மக்களை பாதுகாக்கும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்துவது அவசியமானது.

இலங்கையில் தற்போது ஸ்தாபிக்கப்பட்டுள்ள சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்களை நம்பியிருக்காது, புதிய தொழில்நுட்ப முறைகளை நோக்கி நகர்ந்து, மக்களின் உயிர்களை பாதுகாக்கும் இயலுமை எந்தளவிற்கு உள்ளது என்பது கேள்வியாகவே உள்ளது.

மற்றுமொரு சுனாமி ஏற்படும் வரை காத்திருக்காது, இந்த தொழில்நுட்ப முறைகளை அறிமுகப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, மக்களின் உயிரை பாதூக்க வேண்டும் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)