LSG vs RR: ராஜஸ்தானை கரைசேர்த்த சஞ்சு சாம்சன், ஜூரெல் - குழம்பி நின்ற கே.எல்.ராகுல்

ஐபிஎல் 2024: LSG vs RR

பட மூலாதாரம், SPORTZPICS

கடந்த சில நாட்களாக ஐபிஎல் டி20 தொடரில் 200 ரன்களுக்கு மேல் ஒரு அணி அடித்தாலே அது பாதுகாப்பில்லாத ஸ்கோராக மாறி வந்தது. தற்போதைய ஐபிஎல் தொடரில் அதிகபட்சமாக கொல்கத்தாவின் 261 ரன்களை சேஸிங் செய்த பஞ்சாப், எதுதான் பாதுகாப்பான ஸ்கோர் என்று அணிகளை யோசிக்க வைத்துள்ளது.

அப்படியிருக்கும்போது, 197 ரன்கள் ஸ்கோரை வைத்துக்கொண்டு டிபெண்ட் செய்ய நினைப்பதும், அதற்கான முயற்சியில் ஈடுபடுவதும் சற்று கடினமானதுதான். இருப்பினும் 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்த அணிகளின் முன் 197 ரன்கள் இலக்கு இலகுவாகத்தான் தெரியும்.

அதுபோலத்தான் நேற்றைய ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டமும் இருந்தது.

லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 43வது லீக் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த லக்னெள அணி 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் சேர்த்தது. 196 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு ஓவர் மீதமிருக்கையில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ப்ளே ஆஃப் வாய்ப்பு

ஐபிஎல் 2024: LSG vs RR

பட மூலாதாரம், SPORTZPICS

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. இருப்பினும் நிகர ரன்ரேட் 0.694 என்ற அளவில்தான் இருக்கிறது, இன்னும் ஒரு புள்ளி அளவைத் தொடவில்லை.

ராஜஸ்தான் அணிக்கு இன்னும் 5 லீக் ஆட்டங்கள் மீதமிருக்கையில் இன்னும் குறைந்தபட்சம் 2 போட்டிகளில் வென்றாலே ப்ளே ஆஃப் சுற்று உறுதியாகிவிடும். இ்ப்போது 16 புள்ளிகள் என்ற நிலையில் ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஏற்றதுதான் என்றாலும், நிகர ரன்ரேட்டை உயர்த்துவது அவசியமாகிறது.

அதேநேரம், லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்வி என 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் நீடிக்கிறது. நிகர ரன்ரேட் 0.059 என்ற பாதுகாப்பில்லாத நிலையில் இருக்கிறது. அடுத்து ஒரு போட்டியில் தோற்றால்கூட நிகர ரன்ரேட் லக்னெளவுக்கு மைனசில் சென்றுவிடும்.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் நேற்றைய வெற்றியால் அந்த அணியும் 10 புள்ளிகளுடன் லக்னெள அணிக்கு குடைச்சலாக வரத் தொடங்கியுள்ளது. டாப் 4 அணிகளில் லக்னெள இடம் பெற அடுத்து வரும் 5 லீக் ஆட்டங்களில் குறைந்தபட்சம் 4 போட்டிகளில் வெல்வது அவசியம்.

ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் கேப்டன் சஞ்சு சாம்ஸன்தான். துருவ் ஜூரெலை வைத்துக்கொண்டு 3வது விக்கெட்டுக்கு 121 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து இலக்கை அடைந்து அணியை வெற்றிபெற வைத்தார். அணி இக்கட்டான நிலையில் இருக்கும்போது ஒரு கேப்டன் செய்ய வேண்டிய பணியை சிறப்பாகச் செய்து ஒரு கேப்டனாகவும், சிறந்த பேட்டராகவும் சாம்ஸன் நிரூபித்துள்ளார்.

சிறப்பாக பேட் செய்த சாம்ஸன் 33 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்து (4சிக்ஸர், 7பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். கடந்த சில போட்டிகளில் ஜூரெலின் அதிகபட்ச ஸ்கோர் 10 ரன்களை கடக்கவில்லை. ஆனால், ஜூரெலுக்கு தேவையான நம்பிக்கையளித்து, அவரை பேட் செய்ய வைத்த பெருமை சாம்ஸனுக்கே சேரும்.

அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜூரெல் 34 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து (2சிக்ஸர், 5பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 4வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

'சரியான திசையில் செல்கிறோம்'

ஐபிஎல் 2024: LSG vs RR

பட மூலாதாரம், SPORTZPICS

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சாம்ஸன் கூறுகையில், “புதிய பந்தில் பேட் செய்வதைவிட, பழைய பந்தில் பேட் செய்தபோது, விக்கெட் நன்கு ஒத்துழைத்தது. இந்த வெற்றி அணியின் ஒற்றுமைக்குக் கிடைத்தது.

டெத் ஓவர்களில் நாங்கள் சிறப்பாகப் பந்து வீசினோம். ஒவ்வொரு ஓவரையும் திட்டமிட்டு, நீண்ட ஆலோசனை செய்து பந்து வீசினோம். தொடக்கத்திலும், டெத் ஓவரிலும் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. ஆனால், நடுப்பகுதி ஓவர்களில் ஆட்டம் லக்னெள பக்கம் சென்றது.

ஜூரெல் தற்காலிகமாக ஃபார்மின்றி இருந்தார், உண்மையில் டி20 கிரிக்கெட்டில் 5வது பேட்டராக வருவது கடினமான பணி. துருவ் திறமை மீது நம்பிக்கை இருந்தது, கடினமாக பேட்டிங் பயிற்சி எடுத்தார். நாங்கள் அணியாகவே சிறப்பாகச் செயல்பட்டோம், அதேபோல அதிர்ஷ்டமும் இருக்கிறது.

தவறுகளைக் குறைத்துக்கொண்டதாலேயே வெற்றி எங்களுக்கு வசமானது. தவறுகள் நடப்பது இயல்பு அதை ஒவ்வொரு போட்டியிலும் குறைத்துக் கொள்வதில்தான் வெற்றி இருக்கிறது. சரியான திசையில் பயணிக்கிறோம் என்று நினைக்கிறேன். ப்ளே ஆஃப் சுற்றுக்கு இன்னும் ஒரு வெற்றிதான் தேவை,” எனத் தெரிவித்தார்.

இக்கட்டில் சிக்கிய ராஜஸ்தான்

ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெரிய சிக்கலில் தோல்வியை நோக்கிச் சென்றது. 8.4 ஓவர்களில் 78 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

கணினியின் கணிப்பும், லக்னெள அணி வெல்வதற்குத்தான் 86 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகக் கணித்தது. கடைசி 10 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 116 ரன்கள் தேவைப்பட்டது.

ஆனால், 4வது விக்கெட்டுக்கு கேப்டன் சாம்ஸன், ஜூரெல் ஜோடி ஆகச் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர். இவர்கள் இருவரையும் பிரிக்க லக்னெள கேப்டன் கே.எல்.ராகுல் 7 பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் பிரிக்க முடியவில்லை. இறுதியில் 197 ரன்களை எந்தவிதமன சிரமும் இன்றி ஒரு ஓவர் மீதமிருக்கையில் ராஜஸ்தான் சேஸிங் செய்தது.

பட்லர், ஜெய்ஸ்வால் அடித்தளம்

ஐபிஎல் 2024: LSG vs RR

பட மூலாதாரம், SPORTZPICS

ராஜஸ்தான் அணி சேஸிங்கிற்கு அடித்தளமிட்டவர்கள் ஜாஸ் பட்லர், ஜெய்ஸ்வால் ஜோடிதான். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 60 ரன்கள் சேர்த்து 10 ரன்ரேட்டில் கொண்டு சென்றனர்.

பவர்ப்ளே முடிய இரு பந்துகள் இருந்தநிலையில், யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் பட்லர் ஃபுல் டாஸ் பந்தைத் தவறவிட க்ளீன் போல்டாகி 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்த ஓவரை ஸ்டாய்னிஷ் வீச, ஜெய்ஸ்வால் 24 ரன்கள் சேர்த்த நிலையில் பிஸ்னோயிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். 4வது வீரராகக் களமிறங்கிய ரியான் பராக் 14 ரன்கள் சேர்த்த நிலையில் 41வயது லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா பந்துவீச்சில் பதோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 60 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி இருந்த ராஜஸ்தான் அணி அடுத்த 18 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தடுமாறியது.

அணியை மீட்ட நாயகர்கள்

நான்காவது விக்கெட்டுக்கு கேப்டன் சாம்ஸன், துருவ் ஜூரெல் ஜோடி இணைந்தனர். சாம்ஸன் இந்த சீசனில் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்து ஃபார்மில் இருக்கிறார். ஆனால் ஜூரெல் தனது 6 போட்டிகளில் கடைசியாக ஆடிய 3 ஆட்டங்களில் 10 ரன்களைக் கூட கடக்கவில்லை.

இதனால், ஜூரெல் எவ்வாறு பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்கப் போகிறார் என்று எண்ணப்பட்டது. இருவரும் மெதுவாகவே ஆட்டத்தைத் தொடங்கினர். 8 பந்துகளில் இருவரும் பார்ட்னர்ஷிப்பில் 3 ரன்கள் மட்டுமே சேர்த்து மெதுவாகத் தொடங்கினர்.

அதன்பின் மிஸ்ரா ஓவரில் ஜூரெல் ஒரு சிக்ஸரும், யாஷ் தாக்கூர் ஓவரில் சாம்ஸன் 3 பவுண்டரிகளும் அடித்து ரன்ரேட்டை உயர்த்தினர். மோசின் கான் வீசிய 14வது ஓவரில் இந்த ஜோடியை பிரிக்க லக்னெள அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்து. அந்த ஓவரில் ஜூரெல் அடித்த இரு ஷாட்களிலும் கேட்ச் பிடிக்கும் வாய்ப்பை யாஷ் தாக்கூர் நழுவவிட்டார். யாஷ் தாக்கூர் கேட்சை நழுவவிடவில்லை, வெற்றியை நழுவவிட்டார் என்றுதான் கூற வேண்டும்.

இந்த வாய்பைப் பயன்படுத்திய ஜூரெல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். கேப்டனுக்குரிய பொறுப்புடனும், ரன்ரேட்டை உயர்த்தும் நோக்கில் அதிரடியாக ஆடிய சாம்ஸன் 28 பந்துகளில் அரைசதம் அடித்து அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஒன்பதாவது ஓவரில் சேர்ந்த ஜோடியை லக்னெள பந்துவீச்சாளர்களால் ஆட்டத்தின் கடைசிவரை பிரிக்க முடியவில்லை. 7 பந்துவீச்சாளர்கள் மாறி, மாறி பந்துவீசியும், சாம்ஸனின் பேட் முன், ஜாலங்கள் தோற்றன, ஜூரெல் பேட்டிங் முன் எந்த உத்தியும் எடுபடவில்லை.

குழப்பத்தில் கே.எல்.ராகுல்

ஐபிஎல் 2024: LSG vs RR

பட மூலாதாரம், SPORTZPICS

டிரன்ட் போல்ட் தனது முதல் ஓவரில் பெரும்பாலும் விக்கெட் எடுப்பதை வழக்கமாக வைத்திருப்பதை நேற்றைய ஆட்டத்திலும் தவறவிடவில்லை. முதல் இரு பந்துகளில் டீ காக் இரு பவுண்டரிகள் அடித்தநிலையில் 3வது பந்தில் குயின்டன் டீகாக்கை க்ளீன் போல்டாக்கி பெவிலியன் அனுப்பினார் போல்ட். அடுத்து வந்த ஸ்டாய்னிஷ் ரன் ஏதும் சேர்க்காமல் சந்தீப் சர்மாவின் அருமையான இன்ஸ்விங்கில் க்ளீன் போல்டாகினார். 11 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து லக்னெள அணி திணறியது.

மூன்றாவது விக்கெட்டுக்கு கேப்டன் கே.எல்.ராகுலுடன், தீபக் ஹூடா சேர்ந்தார். தீபக் ஹூடாவும் இந்த சீசனில் இதுவரை பெரிதாக ஸ்கோர் செய்யாமல் தடுமாறி வந்தார். ஆனால், நேற்றை ஆட்டத்தில் ராகுலுடன், சேர்ந்து அருமையான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இருவரும் சேர்ந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். பவர்ப்ளே ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு லக்னெள 46 ரன்கள் சேர்த்தது.

ஆவேஷ் கான் வீசிய 8வது ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என விளாசி ராகுல் 21 ரன்கள் சேர்த்தார். 10 ஓவர்களில் லக்னெள அணி 2 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் சேர்த்திருந்தது. கேப்டன் ராகுல் 31 பந்துகளில் அரைசதம் அடைந்தார்.

நிதானமாக பேட் செய்த தீபக் ஹூடா 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரின் நீண்ட பார்ட்னர்ஷிப்பை அஸ்வின் தனது கேரம்பால் பந்துவீச்சால் பிரித்தார். தீபக் ஹூடா 50 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் பாவெலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இருவரும் 62 பந்துகளில் 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர்.

அடுத்து வந்த ஆபத்தான பேட்டர் பூரன் 11 ரன்னில் சந்தீப் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ராகுல் 76 ரன்கள் சேர்த்த நிலையில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

ஐபிஎல் 2024: LSG vs RR

பட மூலாதாரம், SPORTZPICS

பதோனி 18 ரன்களுடனும், குர்னல் பாண்டியா 15 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெத் ஓவர்களை சரியாகப் பயன்படுத்தாத லக்னெள அணி கடைசி 3 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே சேர்த்தது. டெத் ஓவர்களை சரியாகப் பயன்படுத்தி கூடுதலாக 25 ரன்களை சேர்த்திருந்தால், ஆட்டம் இன்னும் பரபரப்பாக அமைந்திருக்கும்.

இந்த ஆட்டத்தில் கேப்டன் ராகுல் விக்கெட் கீப்பிங்கின்போது சற்று குழப்பத்துடனே காணப்பட்டார். ஒரு கேட்சையும் கோட்டைவிட்ட ராகுல், கேப்டன்சியை சரியாகச் செய்யவில்லை என்றே தெரிகிறது. சாம்ஸன், ஜூரெல் பாட்னர்ஷிப்பை உடைக்க எந்தப் பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்துவது எனத் தெரியாமல் குழப்பமான முடிவுகளை எடுத்தார்.

உதாரணமாக சிறந்த லெக் ஸ்பின்னரான ரவி பிஸ்னோய்க்கு ஒரு ஓவர் மட்டுமே வீச வாய்ப்பு வழங்கப்பட்டது, 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய மோசின் கான், யாஷ் தாக்கூருக்கு 4 ஓவர்களும் முழுதாக வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஸ்டாய்னிஷ் தனக்கு வழங்கப்பட்ட ஒரு ஒவரை வீசி 3 ரன்கள் கொடுத்து ஜெய்ஸ்வால் விக்கெட்டையும் வீழ்த்தினார். ஆனால், ஸ்டாய்னிஷ்க்கு ஏன் தொடர்ந்து பந்துவீச ராகுல் வாய்ப்பு வழங்கவில்லை எனத் தெரியவில்லை.

ஐபிஎல் 2024: LSG vs RR

பட மூலாதாரம், SPORTZPICS

பந்துவீச்சாளர்களை ஏமாற்றிய ஆடுகளம்

லக்னெள ஆடுகளம் கறுப்பு மண் கொண்டதாலும், விக்கெட்டில் அதிகமான விரிசல்கள் இருந்ததாலும் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்று கணிக்கப்பட்டது. வரலாற்று ரீதியாகவே லக்னெள விக்கெட் சுழற்பந்துவீச்சுக்கு சொர்க்கபுரிதான்.

ஆனால், லக்னெள அணி பேட் செய்தபோது, ராஜஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்கள் அஸ்வின், சஹல் இருவருமே பந்துவீச சிரமப்பட்டனர். பந்துவீச்சு எடுக்கவே இல்லை. இருவரும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி 80 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

அதேபோல லக்னெள சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் விக்கெட் ஒத்துழைக்கவில்லை. குர்னல் பாண்டியா, ரவி பிஸ்னோய், அமித் மஸ்ரா ஆகிய 3 பேரும் பந்துவீசியும் எடுபடவில்லை. 3 பேரும் சேர்ந்து 7 ஓவர்கள் வீசிய 50 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினர்.

இதில் குர்னல் பாண்டியா மட்டும்தான் ஓரளவுக்கு கட்டுக்கோப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்தார். மிஸ்ரா, பிஸ்னோய் பந்துவீச்சு எடுபடவில்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)