You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையாகும் இலங்கை பிரஜைகள் தாயகம் வர முடியுமா?
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த 6 பேரையும் விடுதலை செய்ய இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அந்த ஆறு பேரில் நால்வர் இலங்கை பிரஜைகள்.
நளினியின் கணவரான முருகன் என்றழைக்கப்படும் ஸ்ரீஹரன், சாந்தன், ராபர்ட் பயஸ் மறறும் ஜெயகுமார் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்.
இவர்களில் சாந்தன் மற்றும் முருகன் ஆகியோர் இலங்கை கடவுச்சீட்டை கொண்டவர்கள்.
ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் 1990ம் ஆண்டு தமிழகத்திற்கு பயணித்து, அங்கு அகதி அந்தஸ்த்தை கொண்டவர்கள்.
இவ்வாறு இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள இந்த நான்கு இலங்கையர்களுக்கும் இலங்கைக்கு வருகைத் தர சந்தர்ப்பம் உள்ளதாக என்பது தற்போது கேள்விகுரியதாகியுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு இலங்கையில் தொடர்ந்து தடை அமலில் உள்ள நிலையில், விடுதலைப் புலிகளின் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இந்தியாவில் கைது செய்யப்பட்டு, விடுவித்து விடுதலையான இலங்கை பிரஜைகளால் நாட்டிற்கு மீள வர முடியுமா? என்ற கேள்வி எழுகிறது.
இலங்கைக்கு வர முடியுமா?
ஒருவேளை இலங்கைக்கு வருகை தரும் இவர்களை, விடுதலைப் புலிகளாக கருதி இலங்கை அரசாங்கம் அவர்களை மீள கைது செய்ய முடியுமா?
இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கையர்கள், மீண்டும் நாட்டிற்கு வருகை தர சந்தர்ப்பம் உள்ளதா? என்பது குறித்து பிபிசி தமிழ், சட்ட நிபுணர்கள் சிலரிடம் வினவியது.
இவ்வாறு எழுந்த கேள்விகளை, பிபிசி தமிழ், இலங்கையின் பிரபல ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி.சில்வாவிடம் வினவியது.
''அவர்களுக்கு இலங்கைக்கு வருகைத் தருவதில் எந்தவித பிரச்சினையும் கிடையாது. அவர்களுக்கு கடவுச்சீட்டு உள்ளது என்றால், அவர்களுக்கு விசா உள்ளது என்றால், நிச்சயமாக நாட்டிற்கு வருகை தர முடியும். எனினும், ஏதேனும் குற்றச்சாட்டு தொடர்பில் இவர்களின் பெயர்கள் சந்தேக நபர்களின் பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அவர்களை கைது செய்ய முடியும்," என்கிறார் சில்வா.
இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இந்தியாவில் கைது செய்யப்பட்டு, விடுதலையாகியுள்ளவர்களை மீள அதே குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்ய முடியுமா? என ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி.சில்வாவிடம் நாம் வினவினோம்.
''அந்த குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்ய முடியாது. இலங்கைக்குள் ஏதேனும் குற்றம் செய்திருக்க வேண்டும். உதாரணமாக விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு நிதி வழங்கியிருந்தால், அல்லது வேறு விதமான ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தால், அவர்களை கைது செய்ய முடியும்" என அவர் பதிலளித்தார்.
மனித உரிமைகள் ஆணையக்குழு என்ன சொல்கிறது?
இதே கேள்விகளை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவாவிடம் நாம் வினவினோம்.
''அவர்களுக்கு இலங்கைக்கு வருகைத் தர முடியும். விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு இலங்கையில் தொடர்ந்தும் தடை காணப்படுகின்றது. இவர்கள் உறுப்பினர்கள் என்றால், விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களின் பெயர்களும் கறுப்பு பட்டியலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.
இவர்கள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்ற சந்தேக நபர்கள் மாத்திரமே. எனினும், அவர்கள் விடுதலைப் புலிகள் என்ற பெயர் அவர்கள் மீது பொறிக்கப்படவில்லை.
வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்படுகின்றார்கள் என்றால், அவர்களுக்கு தண்டனை இல்லாது செய்தே, விடுதலை செய்யப்பட்டார்கள். அப்படி என்றால், அவர்களுக்கு அடிப்படை உரிமை உள்ளது. இலங்கை பிரஜையொருவருக்கு எந்தவொரு நேரத்திலும் இலங்கைக்கு வருகைத் தர முடியும்.
எந்தவொரு நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறவும் முடியும் என ஆட்டிக்கல் 14ல், இறுதியாக கூறப்பட்டுள்ளது. வேறு குற்றங்களை செய்திருந்தால், கைது செய்யப்படலாம். ஆனால், வேறு குற்றங்கள் கிடையாது.
அப்படி என்றால், கைது செய்ய முடியாது" என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா தெரிவிக்கின்றார்.
இதேவேளை, குறித்த நான்கு பேரும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், அது அவர்களுக்கு பிரச்சினையாக உருவாகலாம் என மூத்த சட்டத்தரணி இளையதம்பி தம்பையா பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.
சந்தேகம் எழுப்பும் வழக்கறிஞர்
''விடுதலைப் புலி உறுப்பினர்களாக இருந்து, அவர்கள் இந்த தாக்குதலை நடத்த உதவி செய்துள்ளார்கள் என குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தால், அவர்களுக்கு பிரச்சினை உள்ளது. விடுதலைப் புலிகள் தடை விதிக்கப்பட்ட அமைப்பு.
இலங்கை அரசாங்கம் தடையை நீக்க வேண்டும். தடை செய்யப்பட்ட சிலரின் பெயர்களை, தடை பட்டியலிலிருந்து இலங்கை நீக்கியுள்ளது. இவர்கள் மீது தடை இருந்தால், அந்த தடையை நீக்க வேண்டும். இந்தியாவிலும் அவர்களுக்கு பிரச்சினை உள்ளது.
அவர்களை முகாம்களுக்கே அனுப்புவார்கள். அவர்களை இந்தியாவில் நடமாட விடமாட்டார்கள். சொந்த நாட்டு பிரஜைகள் இல்லாதமையினால், அவர்களை முகாமிற்கே அனுப்புவார்கள்.
ஆனாலும், இந்தியா விஸா கொடுத்தால், அவர்களுக்கு அங்கு இருக்க முடியும். நாடு கடத்தினாலும், இலங்கை ஏற்குமா என்ற கேள்வி இருக்கின்றது. எங்களுக்கு இலங்கைக்கு போக முடியாது, தங்குமிட விசாவை வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுக்க முடியும்.
அதற்கு மறுப்பு தெரிவிக்கப்படும் பட்சத்தில், அந்த நாட்டு நீதிமன்றத்தை நாட முடியும். இவர்களை வருகைத் தர இலங்கை அனுமதி வழங்கினால், பிரச்சினை கிடையாது" என மூத்த சட்டத்தரணி இளையதம்பி தம்பையா குறிப்பிடுகின்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்