கனமழை, வெள்ளத்தால் மூழ்கிய சென்னை - பதறவைக்கும் காட்சிகள்

காணொளிக் குறிப்பு, புயல் வெள்ளத்தால் மூழ்கியது சென்னை; தத்தளிக்கும் மக்கள்
கனமழை, வெள்ளத்தால் மூழ்கிய சென்னை - பதறவைக்கும் காட்சிகள்

மிக்ஜாம் புயல் நாளை (டிசம்பர் 5) முற்பகல் தெற்கு ஆந்திர மாநிலத்தின் கடற்கரையை, நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாகக் கடக்கக்கூடும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயலின் அறிகுறிகள் தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதலே தென்படத் தொடங்கிவிட்டன. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை முதல் கன மழை பெய்து வருகிறது.

மிக்ஜாம் புயல் நாளை தெற்கு ஆந்திராவில் கரையை கடக்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

பெரும்பாலான சாலைகளில் நீர் தேங்கியிருப்பதால், சென்னையின் முக்கிய சுரங்கப் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கிறன.

புயல் உருவாகியுள்ள நிலையில், துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைk கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, எண்ணூர், காட்டுப்பாக்கம் துறைமுகங்களில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

நவம்பர் 30-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 1-ஆம் தேதி காலை ஐந்தரை மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

சென்னை வெள்ளம்

பட மூலாதாரம், Getty Images

புயல் எச்சரிக்கை - விடுமுறை அறிவிப்பு

மிக்ஜாம் புயல் நாளை தெற்கு ஆந்திராவில் கரையை கடக்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

வட தமிழக மாவட்டங்களில் மிக்ஜாம் புயலின் காரணமாக நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் சில இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 25 செ.மீ மழை வரை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பெருங்குடியில் 29 செ.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

மேலும் நாளை புயலை கரையை கடக்கவுள்ள நிலையில், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது.

இதையடுத்து பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகம், வங்கி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நாளை(டிசம்பர் 05) விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தீவிர புயலாக வலுப்பெற்ற மிக்ஜாம்

தமிழ்நாடு புயல்

பட மூலாதாரம், RMC, Chennai

படக்குறிப்பு, சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயல் குறித்து, சென்னை மண்டல வானிலை மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் சமீபத்திய நிலவரங்களை பகிர்ந்துள்ளார்.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் இன்று காலை நிலவரப்படி சென்னையிலிருந்து 110 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருந்தது.

தற்போது மிக்ஜாம் புயல் மேலும் வலுப்பெற்று, தீவிரப் புயலாக சென்னைக்கு கிழக்கு - வடகிழக்கே 90 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

மேலும் மிக்ஜாம் புயல், தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து நாளை முற்பகல் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே பாபட்லாவிற்கு அருகே தீவிர புயலாக கடக்கக்கூடும்.

புயலின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.

இன்று இரவு வரை இந்த மாவட்டங்களில் மழையும், பலத்த காற்றும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முதலை

பட மூலாதாரம், SOCIAL MEDIA

படக்குறிப்பு, சென்னையில் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், பெருங்களத்தூர் அருகே முதலை ஒன்று சாலையில் செல்லும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பிபிசி இந்தக் காணொளியை சரிபார்க்க இயவில்லை.

பெருங்களத்தூரில் முதலை வந்ததா?

சென்னையில் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், பெருங்களத்தூர் அருகே முதலை ஒன்று சாலையில் செல்லும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பிபிசி இந்தக் காணொளியை சரிபார்க்க இயவில்லை.

இது தொடர்பாக பதிவிட்டுள்ள தமிழ்நாடு வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, "இந்த வீடியோ குறித்து பலர் ட்வீட் செய்து வருகின்றனர்.சென்னையில் உள்ள பல நீர்நிலைகளில் சில குவளை முதலைகள் உள்ளன. இவை கூச்ச சுபாவமுள்ள விலங்குகள். மனித தொடர்பைத் தவிர்க்கின்றன. புயலின் தாக்கத்தில் பாரிய மழை காரணமாக நீர் பெருக்கெடுத்துள்ளதால், தயவு செய்து நீர்நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம். இந்த விலங்குகளை தனியாக விட்டுவிட்டு, தூண்டப்படாமல் இருந்தால், மனிதர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட வாய்ப்பில்லை. பீதியடைய தேவையில்லை. வனவிலங்கு பிரிவு உஷார்படுத்தப்பட்டு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

ரத்தான விமானம் மற்றும் ரயில்கள்

மிக்ஜாம் புயல் விமானம் ரத்து

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் 20 விமானங்களின் வருகை, புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்து வரும் கனமழையினால், சென்னை உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான நிலைய ஓடுதளத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தின் புறப்பாடு மற்றும் வருகை சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

மோசமான வானிலையின் காரணமாக 4ஆம் தேதி நள்ளிரவு 11 மணி வரை விமான சேவை ரத்து செய்யப்படுவதாக சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது.

இதனால் வெளியூர்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்த பயணிகள் சிலர், விமான நிலையங்களில் முடங்கியுள்ளனர்.

சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால், 150 விமான சேவைகள் வரை சேவை பாதிக்கப்பட்டுள்ளன.

சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானங்கள், தரையிறங்க ஏதுவான சூழல் இல்லாத நிலையில் பெங்களூரூவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

மிகவும் அவசியமான சூழலில் மட்டும் விமான பயணங்களை மேற்கொள்ளுமாறும், பிற பயணிகள் தங்களது பயணங்களை ரத்து செய்யுமாறும் சென்னை விமான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

கனமழை காரணமாக ஒரு சில ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய 6 ரயில்கள், வியாசர்பாடி - பேசின் பிரிட்ஜ் ரயில் பாலத்தில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் ரத்தாகியுள்ளன.

அதே போல சென்னைக்கு வர வேண்டிய 6 ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதே போல சென்னை புறநகர் ரயில் சேவையும் இன்று காலை 8 மணி வரை ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

கனமழையின் காரணமாக சென்னையின் ஒரு சில மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் வழக்கம் போல இயக்கப்பட்டாலும், பரங்கிமலை, கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும்போது என்ன செய்யக்கூடாது?

புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று 10 முக்கிய தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

1. புயல் வரும் சமயத்தில் வெளியே, குறிப்பாக கடற்கரைப் பகுதிகளுக்கு, சென்று வீடியோ எடுப்பது, செல்ஃபி எடுப்பது போன்றவற்றில் ஈடுபடக் கூடாது. இது உயிருக்கே ஆபத்தாக அமையலாம்

2. வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும். வீட்டின் கதவோ, சன்னல் கதவோ நல்ல நிலையில் இல்லாவிட்டால், அதை உடனடியாக சரி செய்துகொள்வது நல்லது.

3. காற்றின் அழுத்தத்தால் சன்னல் கண்ணாடிகள் விரிசல் விட்டு உடையவோ, உடைந்து சிதறவோ வாய்ப்புண்டு. மரப்பலகை, துணி ஏதேனும் இருந்தால், சன்னலை அதை வைத்து மூடிக்கொள்ளுங்கள். கண்ணாடித் துண்டுகள் காற்றின் வேகத்தில் வீட்டுக்குள் சிதறுவதை அது தடுக்கும்.

4. சிதிலமடைந்த கட்டடங்கள் மற்றும் பழைய கட்டடங்களுக்கு உள்ளேயோ அருகிலோ இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

5. பலத்த காற்றின் காரணமாக மின் இணைப்பு துண்டிப்பு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டார்ச் லைட், பவர் பேங்க், மெழுகுவர்த்தி, இன்வர்ட்டர் போன்றவற்றை தயார் செய்து வைத்துக்கொள்வது பாதுகாப்பானது.

6. பலத்த மழையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் முன்னெச்சரிக்கையாக காய்கறிகள், உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துகளை ஓரிரு நாட்களுக்கு தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

7. உங்கள் பகுதியில் உள்ள அரசு மற்றும் தொண்டூழிய அமைப்புகளின் உதவி எண்களைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

8. மின்சாரம் இல்லாமல் போனால், தொலைக்காட்சி செய்திகளை எல்லோரும் பார்க்க முடியாது. செல்பேசியே தகவல்களை பெற வழியாக இருக்கும். பேட்டரியில் இயங்கும் பழைய டிரான்சிஸ்டர் இருந்தாலும் அது உதவியாக இருக்கும். அதனால் சமூக ஊடகங்களில் வரும் அனைத்து தகவல்களையும் நம்பி விடாமல், போலிச் செய்திகள் குறித்து கவனமாக இருங்கள்.

9. புயல் கரையைக் கடக்கும்போது பொதுமக்கள் வெளியே நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும். வேறு வழியில்லாமல் வெளியே செல்ல நேர்ந்தால் கவனமாக இருக்கவும். இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் கவனம் தேவை.

10. கனமழையும் புயலுடன் சேர்ந்து வரும். தாழ்வான பகுதிகளில் உங்கள் வீடு இருந்தால், விலைமதிப்புள்ள பொருட்களையும் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை பத்திரப்படுத்திவிட்டு, நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது நல்லது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)