அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ்: இந்திய சுழல் கூட்டணியின் மேஜிக் ஆஸ்திரேலியாவின் வேகத்தை மட்டுப்படுத்துமா?

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட், வான்கடே

பட மூலாதாரம், YEARS

    • எழுதியவர், அர்னாவ் வசவாதா
    • பதவி, பிபிசி குஜராத்தி

சில காயங்கள், சிலருக்கு நம்பிக்கையிழப்பு, கேப்டன், துணை கேப்டன் விவாதம் எனப் பல்வேறு சிக்கல்களுக்கு நடுவே இன்று தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி களம் காண்கிறது.

இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி தனது பலம், பலவீனத்தைச் சோதிக்க இந்தத் தொடர் ஒரு பொன்னான வாய்ப்பு.

சமீபத்தில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

அதைத் தொடர்ந்து நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் உலகின் இரண்டு வலுவான அணிகளான இந்தியா, ஆஸ்திரேலியா போதுகின்றன.

வரவுள்ள உலகக் கோப்பைக்குத் தயாராவதற்கு இரு அணிகளுக்கும் இந்தத் தொடர் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

ஒருநாள் போட்டி எங்கு நடைபெறுகிறது?

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட், வான்கடே

பட மூலாதாரம், Getty Images

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்திலும், இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்திலும், மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னையிலும் நடைபெறுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா போட்டிக்கான அட்டவணை

  • முதல் போட்டி – 17 மார்ச் 2023 (வெள்ளிக்கிழமை)
  • 2வது போட்டி – 19 மார்ச் 2023 (ஞாயிற்றுக்கிழமை)
  • 3வது போட்டி – 22 மார்ச் 2023 (புதன்கிழமை)

இந்தியா vs ஆஸ்திரேலியா யாருக்கு கூடுதல் பலம்?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஒருநாள் தரவரிசை பட்டியலின் அடிப்படையில், இந்திய கிரிக்கெட் அணி 114 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இந்தப் பட்டியலில் 112 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 2வது இடத்தில் உள்ளது.

தரவரிசையில் இந்தியா முதலிடத்தைத் தக்க வைத்துக் கொள்ளுமா என்பதை இந்தத் தொடரின் முடிவு தீர்மானிக்க இருக்கிறது.

2022-23ஆம் ஆண்டில் இந்திய அணி சொந்த மண்ணில், இலங்கை, நியூசிலாந்து அணிகளை வீழ்த்தியுள்ளது. அதேநேரத்தில் நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளுக்கு எதிராக வெளிநாட்டில் ஒருநாள் போட்டித் தொடரை இழந்துள்ளது.

  • இந்தியா - நியூசிலாந்து தொடர் - நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என வெற்றி
  • இந்தியா - வங்கதேசம் தொடர் - வங்கதேசம் அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என வெற்றி
  • இந்தியா - இலங்கை தொடர் - இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என வெற்றி
  • இந்தியா - நியூசிலாந்து தொடர் - இந்தியா அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என வெற்றி
இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட், வான்கடே

பட மூலாதாரம், YEARS

2022-23ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை, சொந்த மண்ணில் இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரைக் கைப்பற்றியுள்ளது. ஆனால் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது ஒருநாள் தொடரை இழந்தது.

  • ஆஸ்திரேலியா - இலங்கை தொடர் - இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-2 என வெற்றி
  • ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே தொடர் - ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என வெற்றி
  • ஆஸ்திரேலியா - இங்கிலாந்து தொடர் - ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என வெற்றி
  • ஆஸ்திரேலியா - நியூசிலாந்து தொடர் - ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என வெற்றி

ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் சமீபத்திய செயல்திறனைப் பார்க்கும்போது, சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்றுள்ள வெற்றி இது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளின் கேப்டன்கள்

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட், வான்கடே

பட மூலாதாரம், Getty Images

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியதில் இருந்து, இந்திய அணியின் கேப்டன்ஷிப்பில் அடிக்கடி மாற்றம் நிகழ்ந்து வருகிறது.

இந்திய அணிக்கு இப்போது ரோஹித் சர்மா கேப்டனாக இருந்தாலும், ஷிகர் தவான், கே.எல்.ராகுல் ஆகியோரும் சில காலம் இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ரோகித் சர்மா சொந்த காரணங்களுக்காக விடுப்பில் இருப்பதால் அவர் கேப்டனாக செயல்பட முடியாது. இந்நிலையில் முதல் முறையாக ஹர்திக் பாண்டியா இந்திய ஒருநாள் அணியை வழிநடத்துவார் என்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

முதல் போட்டியைத் தவிர எஞ்சிய 2 போட்டிகளிலும் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார். ஐபிஎல் மற்றும் டி20 போட்டிகளில் அணியை வெற்றிகரமாக வழிநடத்திய அவர், ஒருநாள் போட்டிகளில் தனது திறமையைக் காட்ட முடியுமா இல்லையா என்ற கேள்விக்கு இந்தத் தொடர் விடையளிக்கும்.

இந்தியாவை போலவே ஆஸ்திரேலிய அணியும் கேப்டன் பதவியை வெவ்வேறு வீரர்களிடம் வழங்கி வருகிறது.

கடந்த 5 ஒருநாள் தொடர்களில் ஆஸ்திரேலிய அணிக்கு 4 வீரர்கள் கேப்டனாக இருந்துள்ளனர்.

கடந்த செப்டம்பரில் ஆரோன் ஃபின்ச் ஓய்வு பெற்றதை அடுத்து கம்மின்ஸ் அந்த அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார்.

இருப்பினும், இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் இரண்டாவது போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. மேலும் ஜோஸ் ஹேசில்வுட் நவம்பரில் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

இந்திய அணிக்கு எதிரான தொடரில் இப்போதைய கேப்டனான பேட் கம்மின்ஸ் ஆடவில்லை. எனவே 51 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித்திடம் மீண்டும் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள ஸ்டீவ் ஸ்மித், இந்தியாவுடனான டெஸ்ட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு டிராவை ஆஸ்திரேலியாவுக்காக பெற்றுத் தந்தார்.

இந்தியாவுடன் 10 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்காக கேப்டனாக செயல்பட்டுள்ள ஸ்மித், 5 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார்.

காயங்கள் தலைவலியாக இருக்குமா?

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட், வான்கடே

பட மூலாதாரம், YEARS

ஏற்கெனவே இந்திய அணியின் நட்சத்திர பவுலரான ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக அணியில் இல்லை. இவர் மீண்டும் ஜூன் மாதத்திற்குப் பிறகு அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியின்போது இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் காயமடைந்ததால், அவரும் இன்று தொடங்கும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே அடுத்து வரும் போட்டிகளில் அவருக்குப் பதிலாக இந்திய அணியில் யார் களமிறக்கப்படுவார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பன்ட் இன்னும் அணிக்குத் திரும்பவில்லை.

மறுபுறம், ஆஸ்திரேலியாவின் முக்கிய பந்துவீச்சாளர் ஹேசில்வுட்டும் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார்.

அந்த அணியின் ஆக்ரோஷமான ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்லும் கடந்த நவம்பர் மாதம் முதல் காயத்தால் அணியில் இருந்து விலகியுள்ளார். அடுத்து வரும் மூன்று போட்டிகளிலும் மேக்ஸ்வெல் அணிக்குத் திரும்புவது உறுதியாகவில்லை என ஊடக செய்திகள் கூறுகின்றன.

  • இரு அணிகளும் இதற்கு முன்பு 143 முறை ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 80 முறையும் இந்தியா 53 முறையும் வென்றுள்ளன.
  • கடைசியாக இரு அணிகளுக்கும் இடையே நடந்த 20 போட்டிகளில் இந்திய அணி 12 போட்டிகளும் ஆஸ்திரேலிய அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
  • இந்திய அணி கடைசியாக விளையாடிய 10 ஒருநாள் போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி அடைந்துள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய அணி தனது கடைசி 10 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. எஞ்சிய 9 போட்டிகளையும் தன்வசமாக்கியுள்ளது.

நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளின் 8 இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 63 முறை விக்கெட்டுகளை இழந்தது. இதில் 50 முறை அந்த அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களே.

ஒருநாள் தொடரில் இந்திய அணிக்காக குல்தீப் யாதவ், அக்‌ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சஹால் ஆகியோர் அடங்கிய சுழல் கூட்டணி மீண்டும் மேஜிக்கை நிகழ்த்துமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

உலகக் கோப்பை தொடரை மனதில் வைத்து இரு அணிகளும் விளையாடும் என்பதால், இரு அணிகளுக்கும் இடையிலான இந்தத் தொடர் சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல் - அபிஜித் ஸ்ரீவஸ்தவா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: