You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிறுமி வயிற்றில் இருந்த கருவுக்கு தந்தை யார்? மரபணு சோதனையில் அதிர்ச்சி
18 வயதுக்குக் குறைவான ஒரு பெண், தனது சொந்த சகோதரருடன் கொண்ட உடலுறவு காரணமாக கருவுற்றிருப்பது டிஎன்ஏ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் ஒளரங்காபாத் மாவட்டத்தில் நடந்துள்ளது.
இது தொடர்பாக மாவட்டத்தில் உள்ள காவல்நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 376(2)(n), (f), (j) 506, 34 மற்றும் போக்சோபிரிவுகள் 4, 5(j)(2)(l)(n) 6,8,12 ஆகியவற்றின் கீழ் பாதிக்கப்பட்டவரின் மூத்த சகோதரர் மற்றும் சித்தியின் கணவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முக்கியமாக குற்றம் சாட்டப்பட்ட, பாதிக்கப்பட்ட பெண்ணின் சித்தியின் கணவருக்கு மும்பை உயர் நீதிமன்றத்தின் ஒளரங்காபாத் பெஞ்ச் ஜாமீன் வழங்கியுள்ளது.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் குற்றம்சாட்டப்பட்டுள்ள அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவரான, பாதிக்கப்பட்டவரின் சகோதரர் தற்போது சிறையில் உள்ளார்.
விவகாரம் என்ன?
ஒளரங்காபாத் மாவட்டத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவர், தனது சித்தியின் கணவரால் தான் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானதாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்தார்.
“என் அம்மாவின் சகோதரியின் (சித்தி) கணவர் யாரும் இல்லாத நேரத்தில் எங்கள் வீட்டுக்கு வந்தார். அவர் என்னை காதலிப்பதாக கூறினார். தன்னுடன் உடலுறவு கொள்ளவில்லையென்றால் என்னை வயிற்றில் கத்தியால் குத்திக்கொன்று விடுவேன் என்று சொல்லி எனது விருப்பத்திற்கு மாறாக உடல் உறவில் ஈடுபடவைத்தார்.”
“அதற்குப் பிறகு நான் என் மாமா வீட்டில் இருந்தபோதும் என் சித்தியின் கணவர் அங்கு வந்து என் விருப்பத்திற்கு மாறாக என்னுடன் வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டார். நான் பயம் காரணமாக இந்த சம்பவத்தை வீட்டில் யாரிடமும் கூறவில்லை.”
“எனக்கு மாதவிடாய் வரவில்லை என்று என் அம்மா மற்றும் பாட்டியிடம் பின்னர் நான் சொன்னேன். இதற்குப் பிறகு மூன்று மாதங்கள் மாதவிடாய்க்காக காத்திருந்தேன். என் சித்தியின் கணவர் என்னுடன் இரண்டு முறை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதாக என் அம்மாவிடம் நான் சொன்னேன். என் அம்மாவின் யோசனைப்படி வீட்டில் கர்ப்ப பரிசோதனை கிட் மூலம் சோதனை செய்தபோது நான் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. பின்னர் காவல் நிலையம் சென்று புகார் செய்தேன்.” என்று தனது புகாரில் அந்தப் பெண் கூறியிருந்தார்.
துணை அறிக்கையில் பாதிக்கப்பட்டவர் என்ன சொன்னார்?
பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது. பரிசோதனைக்காக அவரது டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டன.
சில நாட்களுக்குப் பிறகு அதாவது 2023 மார்ச் 18 ஆம் தேதி பாதிக்கப்பட்டவர் ஒரு துணை அறிக்கையை தாக்கல் செய்தார். தனது சொந்த அண்ணன் கட்டாயப்படுத்தி தன்னுடன் உடல் உறவில் ஈடுபட்ட வைத்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
“கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் என் சகோதரனுடன் வீட்டிற்கு வந்திருந்தேன். அன்று என் அண்ணன் என் விருப்பத்திற்கு மாறாக தன்னுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தினான். நான் 10 நாட்கள் வீட்டில் இருந்தபோது என் அண்ணன் அவ்வப்போது என்னுடன் உடல் உறவில் ஈடுபட்டு வந்தார்.”
“அதன் பிறகு என் சகோதரர் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு எனக்கு சோனோகிராபி செய்யப்பட்டது. நான் 4 மாத கர்ப்பமாக உள்ளேன் என்று கூறப்பட்டது.
“உன்னால்தான் இதெல்லாம் நடந்தது என்று வீட்டுக்கு வந்து அண்ணனிடம் சொன்னேன். நீ வேறு ஒருவரின் பெயரை சொல்லிவிடு என்று அண்ணன் சொன்னார். தன்னுடைய பெயரை யாரிடமாவது சொன்னால் நான் தற்கொலை செய்துகொண்டுவிடுவேன் என்று மிரட்டினார். அதனால்தான் இதுவரை யாரிடமும் அவரது பெயரைச் நான் சொல்லவில்லை.” என்று அவர் கூறியிருந்தார்.
இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் வளரும் கரு அவரது சகோதரருடையது என டிஎன்ஏ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகினர்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சித்தியின் கணவர் மற்றும் சகோதரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சித்தியின் கணவர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.
பின்னர் அவர் மும்பை உயர் நீதிமன்றத்தின் ஒளரங்காபாத் பெஞ்சில் வக்கீல் ரவீந்திர கோரே மூலம் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார்.
2023 ஜூலை 5 ஆம் தேதி இந்த வழக்கு நீதிபதி எஸ்.ஜி.மெஹ்ரே தலைமையிலான ஒரு நபர் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
"இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சித்தியின் கணவர் மீது எந்த குற்றச்சாட்டும் நிரூபணமாகவில்லை.அவர் மீதான குற்றச்சாட்டுகள் வெறும் சந்தேகம் மட்டுமே. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது" என்று நீதிமன்றம் கூறியது.
“பாதிக்கப்பட்ட பெண்ணின் சித்தியின் கணவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்குரியவை என்பது முதல் நோக்குப்பார்வையில் தெரிய வந்துள்ளது. அதனால் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இனி இந்த வழக்கு செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெறும்,” என்று பிபிசி மராத்தியிடம் பேசிய வழக்கறிஞர் ரவீந்திர கோரே தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்