அரிசி விலை தொடர்ந்து உயர்வது ஏன்? தமிழ் நாட்டில் தட்டுப்பாடு வருமா?

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியா முழுவதும் அரசியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. விலை இப்போதைக்குக் குறையாது என்கிறார்கள் நிபுணர்கள். இதற்கு காரணம் என்ன?

பாஸ்மதி அரிசி தவிர மற்ற அரிசிகளின் ஏற்றுமதியை இந்தியா தற்போது தடைசெய்திருக்கிறது. இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவரும் அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டிருக்கிறது.

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் அரிசியில் சுமார் 25 சதவீதம் மட்டுமே பாஸ்மதி அரிசி; மீதி 75 சதவீதம் வழக்கமான அரிசி எனும் நிலையில், இந்தியா மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கையால் உலகம் முழுவதுமே உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தியாவில் அரிசியின் விலை வேகமாக உயர்வதாக தற்போது நுகர்வோர் உணர்ந்தாலும், கடந்த ஓராண்டாகவே இந்தியாவில் அரிசியின் விலை தொடர்ந்து அதிரித்துக்கொண்டே வருகிறது என்பதுதான் நிதர்சனம்.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஏற்படுத்திய தாக்கம்

அரிசி விலை உயர்வுக்கு உள்ளூர் காரணங்களும் சர்வதேசக் காரணங்களும் இருக்கின்றன. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, உலகம் முழுவதும் கோதுமையின் விலை உயர்ந்ததால், மற்றொரு முக்கிய தானியமான அரிசியின் விலையும் உயர ஆரம்பித்தது. சமீபத்தில், யுக்ரைனிலிருந்து உணவு தானியங்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிப்பதாகக் கொடுத்த வாக்குறுதியிலிருந்து விலகிக்கொள்வதாக ரஷ்யா அறிவித்தது, உணவு தானிய விலையேற்ற அபாயத்தை உலகம் முழுவதும் ஏற்படுத்தியிருக்கிறது.

உலகில் அதிக அளவில் அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகில் ஏற்றுமதி செய்யப்படும் அரசியில் 40 சதவீதம் இந்தியாவிலிருந்தே ஏற்றுமதியாகிறது. பாஸ்மதி அல்லாத அரிசி, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

இந்தியாவில் கடந்த ஆண்டிலிருந்து அரிசியின் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில், அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீதம் வரி விதித்தது இந்தியா. கோதுமை, சர்க்கரை ஆகியவற்றின் ஏற்றுமதிகளும் கட்டுப்படுத்தப்பட்டன.

இந்தியாவில் அரிசியின் விலை உயர்வது ஏன்?

இது எல் - நினோ ஆண்டு என்பதால், இந்த ஆண்டு மழை குறைவாகப் பெய்து விளைச்சல் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்கனவே தென் மாநிலங்களில் ஏற்பட்டிருக்கிறது. மாறாக, வட மாநிலங்களில் பெய்துவரும் கன மழையும் வரலாறு காணாத வெள்ளமும் உணவு உற்பத்தியைக் கடுமையாக பாதித்திருக்கிறது. அரிசி மட்டுமல்லாமல் தக்காளி போன்ற காய்கறிகளின் விலையும் கடுமையாக அதிகரித்திருக்கிறது.

கடந்த ஆண்டைப் பொறுத்தவரை இந்தியா முழுவதுமே மழை 11 சதவீதம் அதிக அளவில் பெய்தது. உத்தரப்பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பெய்த கடும் மழையின் காரணமாக கடந்த ஆண்டில் நெல் உற்பத்தி 14 சதவீதம் அளவுக்குக் குறைந்தது. அதனால், 2022ஆம் ஆண்டு அக்டோபரிலிருந்தே அரிசியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மே மாதம் பண வீக்க விகிதம் 4.25ஆக இருந்தாலும்கூட, அரிசி விலை உயர்வு சுமார் 11 சதவீதம் அளவுக்கு இருந்தது.

அரிசியின் விலை அதிகரித்திருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்கிறார் தமிழ்நாடு அரசின் விலை கண்காணிப்புக் குழு உறுப்பினர் டி. சடகோபன்.

"விளைச்சல் பற்றிய கணிப்பு விலை ஏற்றத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மற்றொரு பக்கம், எரிபொருள் விலை உயர்வு போன்ற வேறு பல பொருட்களின் விலை உயர்வும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இதெல்லாம் போக, கடந்த ஒரு மாதமாக வட இந்தியாவில் பெய்து வரும் கன மழை, உணவுப் பொருள் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் விலை ஏற்றத்திற்கு ஒரு காரணம். இந்தச் சூழலில் மத்திய, மாநில அரசுகள் பதுக்கலை கண்காணிக்கவேண்டும்" என்கிறார் அவர்.

ஏற்றுமதிக்கு தடை விதித்த பிறகும் அரசி விலை உயர்வது ஏன்?

ஒரு பொருளின் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டால், அதன் விலை குறையும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால், அப்படி நடப்பதில்லை என்கிறார் தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான ராமசாமி. "வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டால், அதன் விலை உடனடியாக உயர்வதைக் கவனித்திருக்கிறீர்களா. அதுதான் அரிசியிலும் நடக்கிறது. அதனை தட்டுப்பாட்டுக்கு அறிகுறியாக வியாபாரிகள் கருதுவார்கள். மேலும், தற்போது பல மாநில அரசுகள் இலவச அரசி கொடுக்க முயல்வதால், வெளிச் சந்தைக்கு வருவதற்கு முன்பாகவே, மாநில அரசுகள் கொள்முதல் செய்கின்றன. இதனால், வெளிச் சந்தை விலை அதிகரித்து வருகிறது" என்கிறார் அவர்.

ராமசாமி இன்னொரு விஷயத்தையும் சுட்டிக்காட்டுகிறார். கடந்த சில ஆண்டுகளில் இந்தியா முழுவதுமே உணவுப் பழக்கம் வெகுவாக மாறியிருப்பதும் ஒரு காரணம் என்கிறார் அவர். பாஸ்மதி அரிசியல்லாத, வேறு அரிசியின் பயன்பாடு வட இந்தியப் பகுதியில் வெகுவாக அதிகரித்திருக்கிறது என்கிறார் அவர்.

தமிழ் நாட்டில் தட்டுப்பாடு ஏற்படுமா?

ஆனால், அரிசி தட்டுப்பாடு குறித்தோ, விலை உயர்வு குறித்தோ நுகர்வோர் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை என்கிறார் தமிழ்நாடு அரிசி ஆலை மற்றும் நெல்லரிசி மொத்த வணிகர்கள் சம்மேளனத்தின் தலைவர் துளசிங்கம்.

"மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சம் டன் அரிசியை ஒதுக்கீடு செய்கிறது. இது தவிர மாநிலத்தில் விளையும் அரிசி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சேமிக்கப்படும் அரிசி ஆகியவையும் உள்ளன. ஆகவே, தற்போது ஏற்பட்டிருக்கும் விலை உயர்வு தற்காலிகமானது. இது குறித்து அச்சமடையத் தேவையில்லை. தமிழ்நாட்டில் ஒருபோதும் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படாது" என்கிறார் துளசிங்கம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பொதுவாக 19 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் நெல் பயிரிடப்படுகிறது. விளைச்சல் சரியாக இருக்கும் பட்சத்தில் ஆண்டுக்கு 72.65 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. மழை சரியாக பெய்யாத காலகட்டத்தில் சுமார் 14 லட்சம் ஹெக்டேர் நிலத்திலும் மழை நன்றாகப் பெய்யும் காலகட்டத்தில் சுமார் 20 லட்சம் ஹெக்டேர் அளவுக்கும் நெல் பயிரிடப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: