ஒன்றல்ல, 3 கப்பல்கள்: இந்தியா நோக்கி வந்த கப்பலை டிரோன் மூலம் இரான் தாக்கியதா?

பட மூலாதாரம், Getty Images
செங்கடல் மற்றும் அரபிக் கடலில் ஒரே நாளில் 3 சரக்கு கப்பல்கள் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதில், ரசாயனம் ஏற்றிக் கொண்டு இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த கப்பல் மீது இரானில் இருந்து வந்த டிரோன் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா கூறியுள்ளது.
அதுகுறித்து இரான் கூறியது என்ன? நடுக்கடலில் என்ன நடந்தது? அங்கே இந்திய கடற்படை என்ன செய்கிறது? அவர்களது விளக்கம் என்ன?
அமெரிக்க கடற்படை கூறுவது என்ன?
இந்தியாவுக்கு ரசாயனம் ஏற்றிக் கொண்டு வந்த கெம் ப்ளூட்டோ (CHEM PLUTO) கப்பல் சௌதி அரேபியாவில் இருந்து வந்து கொண்டிருந்தது. லைபீரிய நாட்டுக்கொடியுடன் அந்த கப்பல் அரபிக்கடலில் பயணத்தை தொடர்ந்தது. குஜராத் மாநிலம் போர்பந்தர் கடற்கரையில் இருந்து 200 நாட்டிகல் மைல் தொலைவில் கப்பல் வந்துகொண்டிருந்தபோது அதன் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
கெம் ப்ளூட்டோ கப்பல் மீது இரானில் இருந்து ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது. கப்பலின் மேல் தளத்தில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டு விட்டதாகவும், இதில் உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. சரக்கு கப்பல் மீது இரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா முதன் முறையாக நேரடியாக குற்றம்சாட்டியுள்ளது.

பட மூலாதாரம், @CENTCOM/X
இந்த கப்பல் மட்டுமல்லாது, எம்.வி. சாய்பாபா (MV SAIBABA) என்ற சரக்கு கப்பல் மீதும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க கடற்படை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், டிசம்பர் 23 ஆம் தேதி ஏமன் நேரப்படி, மதியம் 3 மணி முதல் 8 மணி வரை செங்கடல் பகுதியில் ரோந்து சென்றதாகவும், அப்போது, ஏமனில் ஹூதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்து நான்கு ஆளில்லா ட்ரோன்கள் நுழைந்ததாகவும், அதனை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், 8 மணிக்குப் பிறகு இரண்டு சரக்கு கப்பல்கள் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதில் நார்வேக்கு சொந்தமான கப்பல் தாக்குதலில் இருந்து தப்பியது. இந்தியக் கொடியுடன் கூடிய எம்.வி. சாய்பாபா கப்பல் தாக்குதலுக்கு உள்ளானது எனினும் யாருக்கும் காயங்களோ சேதங்களோ பதிவாகவில்லை என்றும் அமெரிக்க கடற்படை கூறியுள்ளது.

பட மூலாதாரம், CHEM PLUTO
அமெரிக்காவுக்கு இந்திய கடற்படை மறுப்பு
தாக்குதலுக்கு உள்ளான எம்.வி. சாய்பாபா கப்பல் இந்திய கொடியுடன் சென்றது என்ற அமெரிக்க கடற்படையின் கூற்றை இந்திய கடற்படை மறுத்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த கப்பல் மத்திய ஆப்ரிக்க நாடான கெபான்-க்கு(Gabon) சொந்தமானது என்றும் அந்நாட்டின் கொடியுடனே அந்த கப்பல் சென்றதாகவும் இந்திய கடற்படை கூறியுள்ளது.
அரபிக் கடலில் தாக்குதலுக்கு இலக்கான கெம் ப்ளூட்டோ கப்பலை பாதுகாக்க இந்தியாவின் ஐசிஜிஎஸ் விக்ரம் (ICGS Vikram) ரோந்து கப்பல் அனுப்பி வைக்கப்பட்டதாக இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்ததாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்தது. அந்த ரோந்து கப்பல் கெம் ப்ளூட்டோ கப்பலை சென்றடைந்ததோடு அதனை பாதுகாப்பாக அழைத்துவருவதாகவும் இரண்டு கப்பல்களும் திங்கட்கிழமை காலை மும்பை கடற்கரையை வந்து அடையும் என எதிர்பார்ப்பதாகவும் கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்ததாகவும் ஏ.என்.ஐ. குறிப்பிட்டுள்ளது. இந்திய கடற்படையின் P-8I கடல்சார் கண்காணிப்பு விமானமும் அந்த கப்பலை நோக்கி கோவாவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்டுள்ள கப்பலின் பணியாளர்கள் மற்றும் கப்பலின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை கப்பல்கள் கூடுதல் உதவியை வழங்குவதற்காக அந்த கப்பலை நோக்கி சென்றுள்ளதாகவும் பெயர் சொல்ல விரும்பாத இந்திய கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் கூறியுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதற்கு பின்னர் செங்கடலுக்கு வெளியே சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

மீண்டும் பயணத்தை தொடங்கிய கப்பல்
தாக்குதலில் அந்த கப்பலின் தானியங்கி முறையில் கப்பலை கண்டறியும் கருவி செயல்படாமல் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் கப்பல் செயல்பாட்டுக்கு வந்து விட்டதால் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை கப்பல் மற்றும் விமானம் அந்த வணிக கப்பலோடு தொடர்பில் உள்ளனர்.
ஏற்கனவே 11 நாட்டிகல் மைல் வேகக்தில் அந்த வணிக கப்பல் தனது பயணத்தை தொடங்கி விட்டது. இன்று இரவு 10 மணியளவில் ஐசிஜிஎஸ் விக்ரம் போர்க் கப்பல் மற்றும் எம்வி செம் புளூட்டோ சந்திக்க கூடும் எனவும், ஐசிஜிஎஸ் விக்ரம் ரோந்து கப்பல் வணிக கப்பலை அழைத்து நாளை தினம் மும்பை துறைமுகத்தில் சேர்க்கும் என்றும் இந்திய கடற்படை அதிகாரிகள் கூறியதாக ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இரான் பதில் என்ன?
செங்கடலுக்கு வெளியே முதன் முறையாக, அரபிக்கடலில் இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த கப்பல் மீது தாக்குதல் நடந்துள்ளது. அதனை நடத்தியது அமெரிக்காவின் கூற்றுப்படி இரான்தானா அல்லது அதன் ஆதவில் இயங்கும் ஹூதி அமைப்பினரா என்பதை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை.
இந்தியாவுக்கு ரசாயனம் ஏற்றி வந்த கெம் ப்ளூட்டோ மீது தாக்குதல் நடத்திய இரான் தான் என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டிற்கு இரான் இன்னும் கருத்து ஏதும் அளிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்கச் சென்றுள்ள இரான் பிரதிநிதிகள் குழுவிடம் இதுகுறித்து ராய்ட்டர்ஸ் செய்தி முகமை விளக்கம் கேட்டுள்ளது. ஆனால், இரான் தரப்பில் இருந்து இதுவரை பதில் ஏதும் தரப்படவில்லை.
தாக்குதலில் ஈடுபட்டது யார்?
செங்கடல் பகுதியில் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்கள் மீது ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சி குழுவினரால் டிரோன் தாக்குதல் நடத்தப்படும் ஆளில்லா விமான தாக்குதலின் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுள்ளது என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. ஹூதிக்கள் குழு இஸ்ரேல் - ஹமாஸ் போரை தொடர்ந்து காஸாவுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளது.
ஏற்கனவே, செங்கடலில் பயணிக்கும் எந்த விதமான இஸ்ரேல் சார்பு கப்பல்களையும் சிறைபிடிப்போம் என்று ஹூதிக்கள் அறிவித்துள்ள நிலையில் தற்போது, செங்கடலுக்கு வெளியே அரபிக் கடலில் இந்த டிரோன் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
யார் இந்த ஹூதிக்கள்?
2014ம் ஆண்டு ஏமன் தலைநகர் சனாவை கைப்பற்றிய ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சி குழு தற்போது செங்கடல் பகுதிகளில் அச்சுறுத்தும் சக்தியாக விளங்கி வருகின்றன.
குறிப்பாக பல அரபு நாடுகளே பாலஸ்தீனம் பக்கம் நிற்கலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பாலத்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேல் மீது முதன் முதலில் தாக்குதலை அறிவித்தது இந்த ஹூதிக்கள் குழுதான். ஏற்கனவே துருக்கியில் இருந்து இந்தியா நோக்கி வந்த இஸ்ரேல் சார்பு கப்பலை ஏமன் அருகில் தெற்கு செங்கடல் பகுதியில் இந்த குழு ஹெலிகாப்டர் வாயிலாக கைப்பற்றியதாக குற்றம் சாட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், reuters
கடந்த அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேல் தனது கட்டுக்கடங்காத எதிர்தாக்குதலை தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பாலத்தீனிய மக்கள் பாதிக்கப்பட்டனர். இதில் பல அரபு நாடுகள் காஸா பக்கம் நிற்கலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பாலத்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதலை அறிவித்தது ஏமனை சேர்ந்த ஹூத்தி கிளர்ச்சியாளர் குழு.
2014ம் ஆண்டு ஏமன் தலைநகர் சனாவை கைப்பற்றிய ஈரான் ஆதரவு பெற்ற ஹுதி கிளர்ச்சி குழு, சௌதி அரேபிய ஆதரவு பெற்ற ஏமன் அரசை 2015ல் அங்கிருந்து வெளியேற்றினர். ஏமன் அதிபரும் அதற்கு அடுத்த ஆண்டில் நாட்டை விட்டு வெளியேறி சௌதி அரேபியா சென்று விட்டார். ஒரு நாட்டின் தலைமையையே விரட்டும் அளவிற்கான சக்தி கொண்ட ஹுதி குழுவின் எழுச்சி 1990களில் இருந்தே தொடங்கி விட்டது.
1990ம் ஆண்டில் ஏமனின் வடக்குப்பகுதியில் இருந்த ஜைதிஷம் எனப்படும் ஷியா இஸ்லாத்தின் மரபுகளை பாதுகாக்கும் இளைஞர்களின் மறுமலர்ச்சி குழுவாக உருவாகியதுதான் இந்த ஹூத்திக்கள் என்று அழைக்கப்படும் அன்சார் அல்லாஹ்ஹ் (கடவுளின் கட்சிக்காரர்கள்) கிளர்ச்சி குழுவினர். ஆனால், இவர்களின் மரபுரீதியான வரலாறு பண்டைய காலத்திலிருந்து தொடங்கியதாகும்.
தங்களை முகமது நபிகள் நாயகத்தின் வழித்தோன்றல்களாக கூறிக்கொள்ளும் ஜைதிக்கள் பண்டைய ஏமனில் 1000 வருடங்களுக்கும் மேலாக 1962ம் ஆண்டு வரை ஆட்சி செய்து வந்த ஜைதி இமாம் ராஜ்ஜியத்தில் முக்கிய பங்காற்றியவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த ஆட்சியாளர்கள் புதிய ஏமன் குடியரசு ஆட்சி அமைக்கப்பட்ட பிறகு அச்சுறுத்தலாக கருதப்பட்டு ஒதுக்கப்பட்டனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












