You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகம் இடிப்பு - உண்மையான காரணம் என்ன?
- எழுதியவர், சங்கர் வடிஷெட்டி
- பதவி, பிபிசி செய்தியாளர்
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி (YSRCP) அலுவலகம் இடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குண்டூர் மாவட்டம், மங்களகிரி-தாடேபள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட சர்வே எண் 202/A1-இல் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டு வரும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி (YSRCP) அலுவலகத்தை அனுமதி இல்லாமல் கட்டப்பட்டு வந்தது என்ற காரணம் கூறப்பட்டு இடிக்கப்பட்டுள்ளது.
நிலத்தை ஒப்படைப்பதற்கு முன் கட்டுமானங்களைத் தொடங்குவது சட்டத்தை மீறிய செயல் என்று நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக மங்களகிரி-தாடேபள்ளி பேரூராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகக் கட்டிடத்தைக் கட்டி முடிப்பதற்குள் இடித்துத் தள்ளி, பாகுபாடான, பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டதாக தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான அரசு மீது அக்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதை அனைத்து ஜனநாயகக் கட்சியினரும் கண்டிக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
உண்மையில் அந்த இடம் யாருக்கு சொந்தம்?
குண்டூர் மாவட்டத்தில் மங்களகிரி-தாடேபள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட சர்வே எண் '202/A1’-இல் உள்ள இரண்டு ஏக்கர் நிலம், முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி அரசால் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகம் கட்ட ஒதுக்கப்பட்டது. அந்த நிலம் நீர்ப்பாசனத் துறையின் கீழ் உள்ளது.
மாநிலத்தில் அரசியல் கட்சிகளுக்கு அரசு இடங்கள் ஒதுக்குவதும், கட்சி அலுவலகங்கள் கட்டுவதும் வழக்கமாகி வருகிறது.
தற்போதைய தெலுங்கு தேசம் கட்சி அலுவலகமான என்.டி.ஆர் பவன் ஆத்மகுருப் பகுதியில் உள்ள அரசு நிலத்தில் கட்டப்பட்டது தான்.
ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியைச் சேர்ந்த அல்லா ராமகிருஷ்ண ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சிக்கு அந்த இடத்தை ஒதுக்குவதற்கு அப்போது எதிர்ப்பு தெரிவித்தார். நீதிமன்ற வழக்குகளும் தொடரப்பட்டன.
ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆட்சிக்கு வந்த பிறகு, பாசனத் துறைக்குச் சொந்தமான படகுத் தள நிலத்தின் ஒரு பகுதியை, தங்கள் கட்சி அலுவலகம் கட்ட ஒதுக்கியது அந்தச் சமயத்தில் பெரும் சர்ச்சையானது. இந்த நடவடிக்கையை அப்போதைய எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி விமர்சித்தது.
பெயரளவிலான குத்தகை என்ற போர்வையில் அதிக மதிப்புமிக்க நிலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக ஒய்.எஸ்.ஆர்.சி.பி மீது விமர்சனம் எழுந்தது.
நடந்து முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் மற்றும் புதிய அரசு அமைவதற்கு முன் ஜூன் 10-ஆம் தேதி ஒய்.எஸ்.ஆர்.சி.பி-க்கு ஆந்திரப் பிரதேச தலைநகர் மண்டல மேம்பாட்டு ஆணையம் (CRDA) நோட்டீஸ் அனுப்பியது.
ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி அலுவலகம் என்ற பெயரில் அனுமதியின்றி கட்டுமானம் நடக்கிறது. இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்றம் சொல்வது என்ன?
2023-ஆம் ஆண்டு, பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை (GO) எண் 52-இன் படி, தாடேபள்ளி படகு தளம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதேவேளை நீர்ப்பாசனத் துறையின் அனுமதிப்பத்திரம் எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த சர்வே எண்ணில் உள்ள 19 ஏக்கரில் 9 ஏக்கர் வாய்க்கால், மேலும் 5 ஏக்கர் விதை அணுகுச் சாலைக்காக (seed access road) வருவாய்த்துறையினரால் கோரப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலத்தில் 2 ஏக்கர் ஒய்.எஸ்.ஆர்.சி.பி அலுவலகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சி.சி.எல்.ஏ மற்றும் கலெக்டரின் ஒப்புதலுடன் நீர்பாசனத்துறை அனுமதியின்றி கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக சி.ஆர்.டி.ஏ (Andhra Pradesh Capital Region Development Authority - CRDA) தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசனத் துறையின் அனுமதியின்றி நிலம் பயன்படுத்தப்பட்டதாகவும், கட்டிடம் கட்டுவதற்கு சி.ஆர்.டி.ஏ-வின் அனுமதியைப் பெறாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சி.ஆர்.டி.ஏ தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக மே 20-ஆம் தேதி மற்றும் ஜூன் 1-ஆம் தேதி ஆகிய தேதிகளில் இரண்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஜூன் 10-ஆம் தேதி கட்டடத்தை இடிக்க நோட்டீஸ் அனுப்பிய போதிலும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி பதிலளிக்கவில்லை என்று சி.ஆர்.டி.ஏ தெரிவித்துள்ளது.
சி.ஆர்.டி.ஏ சட்டத்தின் 115-வது பிரிவின்படி, சட்டவிரோதக் கட்டுமானங்களை இடிக்க உரிமை உண்டு. அதன்படி, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஒய்.எஸ்.ஆர்.சி.பி அலுவலகம் என்ற பெயரில் 15 ஏக்கர் நிலத்தை பெற அக்கட்சியினர் சதி செய்வதாக தெலுங்கு தேசம் கட்சியின் குண்டூர் மாவட்ட பொதுச்செயலாளர் பொதினேனி சீனிவாச ராவ் புகார் தெரிவித்துள்ளார்.
அவரது புகாரின்படி, சி.ஆர்.டி.ஏ மற்றும் மங்களகிரி-தாடேபள்ளி பேரூராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நோட்டீஸ் மீதான நடவடிக்கை மற்றும் கட்டிடங்களை இடிக்கும் பணியை நிறுத்தக்கோரி ஒய்எஸ்ஆர்சிபி கட்சி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. நீதிமன்றம் ஜூன் 21-ஆம் தேதி அன்று உத்தரவு பிறப்பித்தது.
ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியின் எம்.எல்.சி லெல்லா அப்பிரெட்டி கூறுகையில், சி.ஆர்.டி.ஏ-வுடன் இணைந்து மங்களகிரி-தாடேபள்ளி நகராட்சி அதிகாரிகளுக்கும் நீதிமன்ற உத்தரவுகளை வழங்கியுள்ளோம் என்றார்.
``சட்டப்படி செயல்பட வேண்டும்’’ என உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.
இந்நிலையில், நீர்ப்பாசனத் துறையின் கீழ் உள்ள நிலம் ஒய்எஸ்ஆர்சிபி-க்கு பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஒப்படைக்கப்படவில்லை என்று சிஆர்டிஏ அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், அங்கு கட்டிடம் கட்ட அனுமதி கோரவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட நிலத்தில் கட்டுமானங்களை மேற்கொள்வது சட்டவிரோதமான செயல் என்றும், அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஒய்.எஸ்.ஆர்.சி.பி என்ன சொல்கிறது?
அதிகாரிகளின் கூற்றை ஒய்.எஸ்.ஆர்.சி.பி தரப்பு மறுக்கிறது. நீதிமன்றத்தின் உத்தரவுகள் மீறப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சி.ஆர்.டி.ஏ-வுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தப் போவதாக அக்கட்சியின் தலைவர்கள் கூறுகின்றனர்.
“எங்கள் தரப்பில் நோட்டீஸ் கொடுத்துள்ளோம். அது செல்லுபடியாகும் என உயர்நீதிமன்றத்தில் முறையிட்டோம். சட்ட வரம்புக்குள் செயல்பட வேண்டிய அதிகாரிகள் அதிகாலையில் தங்களின் சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கையை ஆரம்பித்தனர். மேல் தளம் போடுவதற்கு எல்லாம் தயாராக இருந்த நிலையில் கட்டிடம் இடிக்கப்பட்டது. அவர்கள் மீது நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிலம் ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டனர், ஆனால் தற்போது அனுமதி பெறாத நிலம் என்று கூறி எங்களை துன்புறுத்துகின்றனர்,” என்று குறிப்பிட்டனர்.
"சந்திரபாபுவின் தேர்தல் வாக்குறுதிகளாக சூப்பர்-6ஐ அமல்படுத்தாமல் எங்களின் கட்சி அலுவலகத்தை புல்டோசர்களை அனுப்பி இடித்த சந்திரபாபு ஜனநாயகவாதியா?" என முன்னாள் ஆந்திரா நீர்ப்பாசன அமைச்சர் அம்பதி ராம்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியும் அலுவலகம் இடிக்கப்பட்டதற்கு எதிர்வினையாற்றினார். தன் எக்ஸ் தளப் பக்கத்தில் இந்தச் செயலைக் கண்டிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார்.
விசாகப்பட்டின அலுவலகத்துக்கும் நோட்டீஸ்
தாடேபள்ளி அலுவலகத்துடன் சேர்த்து விசாகப்பட்டினத்தில் உள்ள எண்டாடா என்னும் பகுதியிலும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி அலுவலகம் கட்டப்பட்டது. இந்த அலுவலகத்துக்கும் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அனகாப்பள்ளியில் மாவட்ட அலுவலகம் கட்டுவது தொடர்பாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.
'பிரஜா வேதிகா’ இடிக்கப்பட்ட நிகழ்வு
கடந்த காலங்களில், ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றபோது, சந்திரபாபுவின் அரசு நிதியில் கட்டிய பொது மேடையை இடித்துத் தள்ளியது பலராலும் நினைவுக் கூறப்படுகிறது.
அந்த சமயத்தில், விதிகளை மீறி கட்டப்பட்டதால் சந்திரபாபு நாயுடு கட்டியெழுப்பிய 'பிரஜா வேதிகா’ என்னும் கட்டிடம் இடிக்கப்பட்டது.
இம்முறை விதிகளை பின்பற்றாததால் ஒய்.எஸ்.ஆர்.சி.பி அலுவலகம் இடிக்கப்பட்டது.
தெலுங்கு தேசம் தரப்பு சொல்வது என்ன?
ஆந்திராவில் அரசு நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துவோம் என தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ போண்டா உமா மகேஸ்வர ராவ் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சியில் ஆக்கிரமிப்புக்கு இடமளிக்காமல் இருப்பதற்கு சமீபத்திய நடவடிக்கைகள் ஒரு எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார்.
"ஒய்.எஸ்.ஆர்.சி.பி அலுவலகம் கட்டும் பணி, அனுமதி பெறாமல் நடந்து வருகிறது. மீனவர்களின் படகுத் தளத்துக்கான இடத்தை அபகரிக்கும் நடவடிக்கை இது,” என்றார்.
கடந்த காலங்களில் மீனவர்களுக்கு படகுகள் தயாரிக்க அரசு நிலம் ஒதுக்கியது. ஜெகன் அரசு அதை பறித்தது. இந்த மதிப்புமிக்க நிலத்தை, அவர்கள் சொந்தமாக்கப் பார்க்கின்றனர். அதனால் விதிகளுக்கு மாறாக நடக்கும் நடவடிக்கைகளை சிஆர்டிஏ தடுத்து நிறுத்தியுள்ளது. இந்த இடிப்புக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவளிக்கிறது,” என்று அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
ஜெகன் ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து பல புகார்கள் வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உமாமகேஸ்வர ராவ் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)