உதகை, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவது எப்படி? அரசுப் பேருந்தில் செல்ல இ-பாஸ் அவசியமா?

ஊட்டி, கொடைக்கானல், சுற்றுலா. இ-பாஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோடை காலங்களில் உதகைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்
    • எழுதியவர், தங்கதுரை குமாரபண்டியன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் உதகை, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல இ-பாஸ் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்த இ-பாஸ் பெறுவது எப்படி? அரசுப் பேருந்தில் பயணம் செய்வோரும் இ-பாஸ் பெறவேண்டுமா?

இ-பாஸ் நடைமுறை

உதகை, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களுக்குக் கோடைகாலத்தில் சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுோறும் அதிகரித்து வருகிறது. இது அந்த மலைப் பிரதேசங்களின் சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி, அதனை கட்டுப்படுத்த, கொரோனா காலத்தைப் போல இ-பாஸ் நடைமுறையை பின்பற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, நாளை (மே 7-ஆம் தேதி) முதல் ஜூன் 30-ஆம் தேதி வரையில் இ-பாஸ் நடைமுறை அமலில் இருக்கும். அதற்கான இணையப் பக்கத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியிருக்கிறது. அதில் பச்சை, ஊதா, நீலம் என மூன்று நிறங்களைக் கொண்ட கோடுகளுடன் இ-பாஸ் வழங்கப்படுகிறது. இதைப் பெற்றால் மட்டுமே வாகனங்கள் இந்த இடங்களுக்குள் செல்ல அனுமதியளிக்கப்படும்.

இந்நிலையில், இ-பாஸ் பெற வெளி மாவட்ட, பிற மாநில, வெளிநாட்டுப் பயணிகள் எப்படி முன்பதிவு செய்வது? மூன்று நிறங்கள் கொண்ட இ-பாஸ் வழங்கப்படுவது ஏன்? அரசு பேருந்தில் பயணிப்பவர்களுக்கு இ-பாஸ் அவசியமா? போன்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

ஊட்டி, கொடைக்கானல், சுற்றுலா. இ-பாஸ்

பட மூலாதாரம், TN ePass

இ-பாஸ் எடுப்பது எப்படி?

இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரியை தமிழ்நாடு அரசு நேற்று (மே 5-ஆம் தேதி) வெளியிட்டது.

epass.tnega.org என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று, அதில் விவரங்களை உள்ளீடு செய்து இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த இணைய பக்கத்திற்குச் சென்றவுடன் `தமிழ்நாடு இ-பாஸ்` என்ற பக்கம் திரையில் தோன்றும். அதில், இந்தியாவுற்கு வெளியே இருந்து (outside India), இந்தியாவுக்கு உள்ளே (within India) என்ற இரண்டு தெரிவுகள் வரும். அதில், பிற மாநில, வெளிமாவட்ட சுற்றுலாப் பயணிகள் 'இந்தியாவுக்கு உள்ளே' என்று தேர்வு செய்து, பின்னர் உங்களது செல்போன் எண்ணை உள்ளீடு செய்தால் உங்களது செல்போனுக்கு ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் (one time password) கிடைக்கும். அதனைப் பதிவு செய்து உள்ளே செல்ல வேண்டும்.

வெளிநாட்டவராக இருந்தால் இந்தியாவுக்கு வெளியே என்பதை தேர்வு செய்து, அவரது மின்னஞ்சல் முகவரியை (E-mail) பதிவிட்டு, பின்னர் அதன் கீழ் இருக்கும் எண்ணை உள்ளீடாக கொடுத்தால் உங்களது மின்னஞ்சலுக்கு ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் அனுப்பப்படும். அதனை பதிவு செய்து உள்ளே செல்லலாம்.

அங்கே ‘நீங்கள் செல்ல விரும்பும் இடம்’ (choose your destination) என நீலகிரி, கொடைக்கானல் என இரண்டு தேர்வுகள் கொடுக்கப்படிருக்கும். இதில், நீலகிரி அல்லது கொடைக்கானல் என தேர்வு செய்து உள்ளே சென்றால் விண்ணப்பதாரின் பெயர், முகவரி, வருகைக்கான காரணம், வாகனத்தின் பதிவெண், மொத்தப் பயணிகளின் எண்ணிக்கை, வாகனத்தின் வகை, வாகனம் தயாரிக்கப்பட்ட ஆண்டு, எரிபொருள் வகை, பயணத்தின் தொடக்க நாள், பயணம் முடியும் நாள், மாவட்டம், அஞ்சல் எண், என தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.

சுற்றுலாத் தலத்தில் தங்குமிடத்தை முன்பதிவு செய்து செல்பவர்கள் அந்த விடுதியின் பெயரையும் பதிவிட வேண்டும்.

அதன் பின்னர், வனப்பகுதிக்குள் பின்பற்றப்பட வேண்டிய சட்டங்களுக்குட்பட்டு செயல்படுவேன், ஏதாவது விதிமீறலில் ஈடுபட்டால் சட்டப்படி தண்டிக்கப்படுவேன் என்பதை உறுதி செய்கிறேன் என்ற உறுதிமொழியை அளிக்க வேண்டும். அதன்பின் உங்களுடைய இ-பாஸ் தயாராகி திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் செய்து சுற்றுலா அல்லது உங்களின் தேவைகளுக்காகப் பயணத்தை மேற்கொள்ளலாம்.

அதேபோல் இ-பாஸ் பதிவிற்காக உள்ளே சென்றவுடன் உள்ளூர் ஆட்களுக்கான (Localite pass) இ-பாஸ், முந்தைய பாஸ்கள் (Previous Passes) என்ற இரண்டு தெரிவுகள் இருக்கும். அதில் உள்ளூர் மக்கள் உரிய ஆவணங்களைப் பதிவுச் செய்து இ-பாஸ் பெறலாம். முன்பே இ-பாஸ் பெறப் பதிவு செய்திருந்தால் முந்தைய இ-பாஸ் என்ற தேர்வில் சென்று பதிவு செய்த இ-பாஸைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த இணையப் பக்கம் தானியங்கி முறையில் இ-பாஸ் வழங்கும் வகையில் வடிவமைக்கப்படிருக்கிறது. எனவே, நீங்கள் இணையப் பக்கத்தில் கேட்கப்படும் தகவல்களை பூர்த்தி செய்தவுடன் இ-பாஸ் கிடைத்து விடும்.

ஊட்டி, கொடைக்கானல், சுற்றுலா. இ-பாஸ்

பட மூலாதாரம், TN ePass

மூன்று நிறங்களில் இ-பாஸ் வழங்கப்படுவது ஏன்?

உதகை மற்றும் கொடைக்கானல் செல்லும் வாகனங்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டு இ-பாஸ் வழங்கப்படும்.

அதன்படி:

  • சுற்றுலா மற்றும் வர்த்தக ரீதியான வாகனங்களுக்கு ஊதா நிற அடையாள கோடுடன் கூடிய இ-பாஸ் வழங்கப்படுகிறது.
  • வேளாண் விளைபொருட்கள், அத்தியாவசிய பொருட்கள், சரக்குகளை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு நீல நிற கோடுகளுடன் கூடிய இ-பாஸ் வழங்கப்படுகிறது.
  • உதகை மற்றும் கொடைக்கானலைச் சேர்ந்த பொதுமக்கள் வெளியூர் பதிவெண் கொண்ட வாகனத்தை பயன்படுத்தினால் பச்சை நிற இ-பாஸ் வழங்கப்படுகிறது.
ஊட்டி, கொடைக்கானல், சுற்றுலா. இ-பாஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொடைக்கானல் ஏரியின் தோற்றம்

உள்ளூர் மக்கள் பதிவு செய்வது எப்படி?

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வெளிமாவட்ட பதிவெண் வாகனத்தை பயன்படுத்தினால் உதகை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குச் சென்று அசல் பதிவுச் சான்று, காப்புச் சான்று, வாகன புகை பரிசோதனைச் சான்றிதழுடன் பதிவு செய்து பாஸ் பெறலாம்.

அதேபோல் திண்டுக்கல் மாவட்ட மக்கள் வத்தலகுண்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குச் சென்று ஆவணங்களுடன் உள்ளூர் இ-பாஸை பெற்றுக் கொள்ளலாம். அல்லது இ-பாஸ் பெறத் தேவையான ஆவணங்களை பயன்படுத்தி இணையம் வாயிலாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

அரசுப் பேருந்தில் சென்றாலும் இ-பாஸ் அவசியமா?

இல்லை.

பொதுப் போக்குவரத்தான அரசு பேருந்துகளில் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் அவசியமில்லை. கொடைக்கானலுக்கு வரும் பேருந்துகள் மற்றும் பயணிகளின் விவரங்களை போக்குவரத்துத் துறையின் மேலாண்மை இயக்குநரிடமிருந்து பெற திட்டமிட்டுள்ளதாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

ஊட்டி, கொடைக்கானல், சுற்றுலா. இ-பாஸ்

பட மூலாதாரம், Dindugal District PRO

படக்குறிப்பு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மொ.நா.பூங்கொடி

'இ-பாஸ் உச்சவரம்பு இல்லை'

'ஒரு நாளைக்கு எத்தனை இ-பாஸ் வழங்கப்படும்?' என்ற கேள்வியை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மொ.நா பூங்கொடியிடம் பிபிசி தமிழ் முன்வைத்தது.

அதற்கு பதிலளித்த ஆட்சியர், “கொடைக்கானலுக்கு வர சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தத் தடையும் இருக்காது. கொடைக்கானல் வர விரும்புபவர்கள் இ-பாஸ் பெற்று வந்து செல்லலாம். ஒரு நாளைக்கு இத்தனை இ-பாஸ்கள் தான் வழங்கப்படும் என்று உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்படவில்லை. இணையத்தில் பதிவு செய்பவர்களுக்கு இ-பாஸ் கிடைக்கும்,” என்றார்.

“உதகையை நோக்கி வருபவர்களிடம் பர்லியாறு பகுதியில் இ-பாஸ் ஆய்வு செய்யப்பட்டு, உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல் கொடைக்கானலுக்கு வாகனங்களில் வரும் நபர்களுக்கு வெள்ளி நீர்வீழ்ச்சி அருகேயுள்ள சுங்கச் சாவடியில் இ-பாஸ் சரிபார்க்கப்பட்டு அனுமதியளிக்கப்படும்,” என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)