இலங்கையில் ராமர், ஹனுமான் படங்களுடன் வைக்கப்பட்ட பேனர் ஏன் சர்ச்சை ஆனது?

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கையின் மன்னார் தீவையும், இந்தியாவின் ராமேஸ்வரத்தையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள மணல் திட்டுக்களை ராமாயணத்துடன் தொடர்பு படுத்துவது குறித்து இலங்கையில் சர்ச்சை எழுந்துள்ளது.

இலங்கையின் மன்னார் தீவுக்கும் இந்தியாவின் ராமேஸ்வரம் தீவுக்கும் இடையில் உள்ள கடல் பகுதியில் தொடர்ச்சியாக மணல் திட்டுகள் உள்ளன. இதனை இந்துக்களில் ஒரு தரப்பினர் ராமர் பாலம் என அழைக்கின்றனர். ஆதாமின் பாலம் எனவும் சிலர் இதனை குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில், இலங்கையின் சுற்றுலாத் துறை அமைச்சின் கீழ் இயங்கும் சுற்றுலா அதிகார சபையினால் மன்னார் தீவின் நுழைவாயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையொன்றில் இந்து கடவுள்களின் உருவப் படங்கள் காட்சிப் படுத்தப்பட்டதை அடுத்தே இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த அறிவிப்புப் பலகையில் ராமர், ஹனுமான் ஆகியோரின் உருவப் படங்கள் இடம்பெற்றுள்ளன. சுற்றுலா அதிகார சபையின் வட மாகாண அலுவலகத்தினால் இந்த அறிவிப்புப் பலகை சமீபத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

இந்தப் பகுதி வரலாற்று முக்கியத்துவமும் சூழல் முக்கியத்துவமும் கொண்ட இடமாகக் கருதப்படுகிறது.

ராவணன் சீதையை இலங்கைக்குக் கடத்தி வந்ததன் பின்னர், இலங்கைக்கு வந்த சீதையை மீட்பதற்காக ராமர் தலைமையிலான படையினர் செல்வதற்காக அனுமன் ஒரு பாலத்தை அமைத்ததாக ராமாயணம் கூறுகிறது. இந்த மணல் திட்டுக்களே அந்தப் பாலம் என இந்துக்களில் ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.

ஆனால், இதனை ஆதாமின் பாலம் என்றே சில தரப்பினர் தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றனர்.

ஆனால், இந்த அறிவிப்புப் பலகை, இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டு வைக்கப்பட்டுள்ளது என்றும் இதனை அந்த இடத்திலிருந்து அகற்ற வேண்டும் என்றும் மன்னாரைச் சேர்ந்த கிறிஸ்தவ மத குருமார்கள் கோரியுள்ளனர்.

இந்து சமயக் கடவுள்களின் படங்களைத் தாங்கியுள்ள இந்த பெயர்ப் பலகை மன்னாரின் மத நல்லிணக்கத்தைப் பாதிக்கிறது என மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தின் மன்னார் மறைக் கோட்ட முதல்வர் பி.கிறிஸ்துநாயகம் தெரிவித்துள்ளார்.

மன்னார் நகர சபைக்கு பி. கிறிஸ்துநாயகம் எழுதியுள்ள கடிதத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார். இது மதங்களுக்கு இடையிலான ஒற்றுமையைச் சீர்குலைத்து குழப்பத்தையும் தோற்றுவிப்பதாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பெயர்ப் பலகை தொடர்பாக பொதுமக்கள் தமது அதிருப்தியையும் எதிர்ப்பையும் தினமும் தமக்குத் தெரிவித்து வருவதாகவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே மன்னாரிலுள்ள அனைத்து மத மக்களின் நன்மையையும் கருதி, இந்த பெயர் பலகையை இந்த இடத்திலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பி. கிறிஸ்துநாயகம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

'அகற்ற கூடாது'

ஆனால், மன்னார் நகர நுழைவாயிலில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள இந்த அறிவிப்புப் பலகையை அகற்றக்கூடாது என இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய அவர், "ராமருக்கும் மன்னாருக்கும் தொடர்பு இருக்கிறது. அவர்கள் வந்திறங்கியது மன்னார் தீவில்தான். திரும்பி போனதும் மன்னார் தீவிலிருந்துதான். இது தொடர்பான இலக்கிய பதிவுகள் இருக்கின்றன. இலக்கிய பதிவுகளின்படி, ராமர் மன்னார் தீவில் வந்திறங்கினார். பின்னர் சீதையையும் கூட்டிக்கொண்டு ராமேஸ்வரம் போனார். தமிழர்களை சமய அடிப்படையில் பிளவுபடுத்துகிற வேலையை இப்போது மன்னார் கத்தோலிக்கர்கள் செய்துக்கொண்டிருக்கின்றார்கள்" என்று தெரிவித்தார்.

கடிதம் எழுதியவர் என்ன சொல்கிறார்?

க.சச்சிதானந்தனின் கருத்து குறித்தும் கடிதம் எழுதப்பட்டமைக்கான காரணம் குறித்தும் பி.கிறிஸ்துநாயகத்திடம் பிபிசி கேட்டபோது, "மன்னார் நகரத்திற்குள் வருகின்ற நுழைவாயிலில் இருக்கின்ற படியினால், அது சில வேளைகளில் மற்ற மதத்தவர்களை புண்படுத்தலாம். அதனால், அந்த இடத்திலிருந்து எடுங்கள் என்று மாத்திரமே சொல்லப்பட்டிருக்கின்றது. அதை வேறு இடத்தில் வைக்கலாம். அதில் எந்தவொரு பிரச்னையும் இல்லை. தலைமன்னாரில் வைக்கலாம் அல்லது வேறு எங்கேயும் வைக்கலாம். நுழைவாயில் என்ற படியால் மாத்திரமே இந்த கடிதம் எழுதப்பட்டது. அதைவிடுத்து, ஏனைய மதங்களை புண்படுத்தும் வகையிலான நோக்கம் என்னிடம் இருக்கவில்லை." என்று தெரிவித்தார்.

அரசாங்கம் என்ன சொல்கின்றது?

மன்னார் நகர் நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள படம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்னை குறித்து பிபிசி தமிழ், சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்கவை தொடர்புக் கொண்டு வினவியது.

மதங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையில் இந்த பிரச்னை தொடர்பில் தாம் தலையீடு செய்து பிரச்னையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

"சமூகத்தில் இவ்வாறு சர்ச்சைகளை எழுப்பும் சம்பவங்கள் நிகழும் பட்சத்தில், அந்த குழுக்களுடன் கலந்துரையாடல்களை நடத்த தயாராகவுள்ளோம். சமயத் தலைவர்கள், சமூகத்திலுள்ள முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடல்களை நடத்தி சிறந்ததொரு தீர்வை எடுக்க வேண்டும். உரிய குழுக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி, அனைத்து மதங்களையும் பாதுகாக்கும் விதத்தில் இந்த பிரச்னையை தீர்த்து வைக்க நாங்கள் தலையீடு செய்வோம்" என பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

இவ்வாறான பிரச்னைகள் தொடர்ச்சியாக வரும் சந்தர்ப்பத்தில் சுற்றலாத்துறைக்கு பாதிப்புக்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதா என கேட்டபோது, ''அப்படியான பிரச்னைகளுக்கு வாய்ப்பில்லை'' என்றார் ருவன் ரணசிங்க.

"நாங்கள் மிகுந்த தெளிவான சிந்தனையுடன் சுற்றுலாத் துறையை மேம்படுத்தி வருகின்றோம். இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இதனூடாக எந்தவித பிரச்னையும் ஏற்படாது. யாழ்ப்பாணம், மன்னார், நுவரெலியாவின் சீதை அம்மன் கோவில், ராவணனின் இடங்கள் ஆகிய இடங்களுக்கு இந்திய சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்கின்றார்கள். அதில் எந்தவித பிரச்னையும் இல்லை'' என ருவன் ரணசிங்க தெரிவிக்கின்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு