இந்தியாவின் 7.8% ஜிடிபி வளர்ச்சி விகிதம் குறித்து சந்தேகம் எழுப்பப்படுவது ஏன்?

நிர்மலா சீதாராமன், நரேந்திர மோதியின் இரண்டாவது ஆட்சிக் காலத்திலிருந்து நிதியமைச்சராக உள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிர்மலா சீதாராமன், நரேந்திர மோதியின் இரண்டாவது ஆட்சிக் காலத்திலிருந்து நிதியமைச்சராக உள்ளார்.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்–ஜூன்), இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.8% ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் பதிவான 6.9% வளர்ச்சியை விட அதிகம்.

ஆனால், இந்த ஆண்டின் ஜனவரி–மார்ச் காலாண்டில் பதிவான 8.6% வளர்ச்சியை விட இது குறைவாகும். இந்த தரவுகளை அரசு இந்த வாரம் திங்கள்கிழமை வெளியிட்டது.

இந்த வளர்ச்சியில் உற்பத்தித் துறை மற்றும் சேவைத் துறை முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது. முதல் காலாண்டு வளர்ச்சி விகிதம், ப்ளூம்பெர்க் ஆய்வில் கணிக்கப்பட்ட 7.3% சராசரி மதிப்பீட்டையும், இந்திய ரிசர்வ் வங்கியின் 7% முன்னறிவிப்பையும் விட அதிகமாக இருந்தது.

பிரதமர் நரேந்திர மோதி இந்த வளர்ச்சியை மிகப் பெரிய சாதனையாகக் குறிப்பிட்டார். எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், எண்ணெய் விலையில் திடீர் ஏற்றங்கள், விநியோகச் சங்கிலி தடைகள் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற சூழ்நிலைகள் இருந்தபோதிலும் இந்தியா இந்த திறனை வெளிப்படுத்தியதாக அவர் கூறினார்.

ஆட்டோமொபைல்கள், மொபைல் தொலைபேசிகள், மருந்துகள், ரசாயனங்கள் மற்றும் எஃகு உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா உற்பத்தி செய்து வருகிறது. தற்போது செமிகண்டக்டர் துறையையும் பெருமளவில் மேம்படுத்த முயற்சிக்கிறது. இருப்பினும், பொருளாதாரத்தில் உற்பத்தித் துறையின் பங்கு 17% மட்டுமே உள்ளது. இது பிரதமர் மோதி நிர்ணயித்த 25% இலக்கை விட இன்னும் குறைவாகும்.

ப்ளூம்பெர்க் தனது செய்தியில், "ஜூன் காலாண்டின் செயல்திறன், ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான இந்தியா, 2027ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை உள்ள 12 மாதங்களில் 7%க்கும் அதிகமான வளர்ச்சியைப் பெறும் பாதையில் இருப்பதைக் காட்டுகிறது" என்று குறிப்பிட்டுள்ளது.

"இந்த வளர்ச்சி வலுவானதாக இருந்தாலும், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் பிரதமர் நரேந்திர மோதியின் கனவை நிறைவேற்ற, இந்தியா இதைவிட வேகமாக வளர வேண்டும்" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஜிடிபி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 2026–27 நிதியாண்டின் முதல் காலாண்டில் 4.2 பில்லியன் அமெரிக்க டாலராக, அதாவது ஜிடிபியில் 0.5% ஆக உயர்ந்துள்ளது. ஒரு ஆண்டு முன்பு இதே காலாண்டில் அது 3.4 பில்லியன் டாலர் அதாவது ஜிடிபியில் 0.4% ஆக இருந்தது.

மோதி அரசில் நிதிச் செயலாளராக இருந்த சுபாஷ் சந்திர கார்க், ஜிடிபி தரவுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மோதி அரசில் நிதிச் செயலாளராக இருந்த சுபாஷ் சந்திர கார்க், ஜிடிபி தரவுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏன் சந்தேகம்?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

எதிர்க்கட்சிகள் 7.8% ஜிடிபி வளர்ச்சி விகித தரவுகள் குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளன.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே, எக்ஸ் தளத்தில், "வேலையின்மை 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பட்டம் பெற்ற இளைஞர்களில் 40% பேர் வேலை இல்லாமல் உள்ளனர். 2026ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இந்திய இளைஞர்களில் ஆறில் ஒருவருக்கு வேலை இல்லை. ஆண்டுதோறும் இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற வாக்குறுதி முற்றிலும் சிதைந்துள்ளது" என்று பதிவிட்டார்.

மேலும், சில்லறை பணவீக்கம் கடந்த 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், சர்க்கரை, வெங்காயம், தக்காளி, பருப்பு, சமையல் எண்ணெய், அரிசி, பால் மற்றும் அத்தியாவசிய சமையல் பொருட்களின் விலைகள் "கடுமையாக" உயர்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

மோதி அரசின் இரண்டாவது பதவிக்காலத்தில் நிதிச் செயலாளராக இருந்த சுபாஷ் சந்திர கார்கும் ஜிடிபி தரவுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

என்டிடிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "7.8% வளர்ச்சி முதல் பார்வைக்கு மிகவும் ஈர்க்கக்கூடியதாகத் தோன்றலாம். ஆனால் அதன் உண்மையான நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.

"கடந்த ஆண்டு முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.8% என்று கூறப்பட்டது. இந்தாண்டும் அதே வளர்ச்சி விகிதம் கூறப்படுகிறது. ஆனால் பின்னர் கடந்த ஆண்டின் தரவுகள் திருத்தப்பட்டு 6.9% ஆக மாற்றப்பட்டன. அந்த திருத்தப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த ஆண்டின் வளர்ச்சி அதிகமாகத் தெரிகிறது. ஆனால் விஷயம் அத்துடன் முடிந்து விடவில்லை" என கார்க் கூறினார்.

"7.8% ஜிடிபி வளர்ச்சி என்பது பணவீக்கத்தின் தாக்கம் நீக்கப்பட்ட மதிப்பாகும். உண்மையில் ஜிடிபி தற்போதைய விலைகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அதாவது மக்கள் மற்றும் நிறுவனங்கள் செலுத்தும் விலைகள் அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. எனவே, தற்போதைய விலைகளில் உள்ள ஜிடிபிதான் பொருளாதாரத்தை மதிப்பிடும் உண்மையான வழி" என தெரிவித்தார் கார்க்.

"இதுவரை பலர் கவனிக்காத ஒரு எண்ணிக்கையை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கடந்த ஆண்டு தற்போதைய விலைகளில் ஜிடிபி 86 டிரில்லியன் ரூபாயாக இருந்தது. ஆனால், அது பின்னர் 80 டிரில்லியன் ரூபாயாக திருத்தப்பட்டது."

''கடந்த ஆண்டின் ஜிடிபி முழுமையாக 6 டிரில்லியன் ரூபாய் வரை திருத்தப்பட்டதன் காரணமாக, இந்த ஆண்டின் முதல் காலாண்டு ஜிடிபி சுமார் 10.3 சதவிகிதம் அதிகரித்துக் காட்டுகிறது என்று நான் கூறுகிறேன். கடந்த ஆண்டின் ஜிடிபி திருத்தப்படாமல் இருந்திருந்தால், தற்போதைய விலையிலான வளர்ச்சி 2.6 சதவிகிதம் மட்டுமே இருந்திருக்கும்.''

கடந்த ஆண்டின் பெயரளவு ஜிடிபி அடிப்படை மதிப்பு பெரிதும் குறைக்கப்பட்டிருப்பதன் மூலம் இந்த ஆண்டின் வளர்ச்சி விகிதம் அதிகப்படுத்திக் காட்டப்படுகிறது என்பது அவரது குற்றச்சாட்டு.

அரசின் தரவுகள் மீது ஏன் சந்தேகம் என்பதற்கு பதிலளித்த அவர், "கடந்த ஆண்டின் தரவுகளும் அரசின் தரவுதான். இந்த ஆண்டின் தரவுகளும் அரசின் தரவுதான். கடந்த ஆண்டு இதே அரசு முதல் காலாண்டு ஜிடிபி 86 டிரில்லியன் ரூபாய் என்று கூறியது. இப்போது அது 80 டிரில்லியன் ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டின் 88 டிரில்லியன் ரூபாயை 2.6% வளர்ச்சியாகக் காட்ட முடிகிறது."

"கடந்த ஆண்டின் அரசாங்க தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், வேளாண்மை மற்றும் சுரங்கத் துறைகளில் மட்டுமே உண்மையான வளர்ச்சி காணப்படுகிறது. கடந்த ஆண்டின் தற்போதைய விலைகளில் உள்ள ஜிடிபி தரவுகளுடன் ஒப்பிடும்போது, உற்பத்தித் துறை உண்மையில் எதிர்மறை வளர்ச்சியை காட்டுகிறது. அரசு ஏன் தற்போதைய விலைகளில் உள்ள ஜிடிபியை இவ்வளவு பெரிய அளவில் குறைத்து திருத்தியது என்பதை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும்." என கூறினார்.

ஒவ்வொரு அரசும் ஜிடிபி வளர்ச்சி விகிதத்தை பொருளாதார வலிமையுடன் இணைத்து விளக்கி வந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒவ்வொரு அரசும் ஜிடிபி வளர்ச்சி விகிதத்தை பொருளாதார வலிமையுடன் இணைத்து விளக்கி வந்துள்ளது.

அடிப்படை ஆண்டை மாற்றிய அரசு

ஜிடிபி வளர்ச்சி விகிதம் இந்திய பொருளாதாரத்தின் உண்மையான வலிமையை பிரதிபலிக்கிறதா என்ற கேள்வி அடிக்கடி எழுந்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் அரசு புதிய ஜிடிபி தொடர் (GDP series) ஒன்றை அறிவித்தது. அதில் 2022–23 அடிப்படை ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டது.

2026ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி, 2022–23, 2023–24 மற்றும் 2024–25 நிதியாண்டுகளுக்கான ஜிடிபி மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய தரவுகள் குறித்த புதிய தொடரை அரசு வெளியிட்டது. இதன் மூலம் 2011–12 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட பழைய முறையை மாற்றியது.

அடிப்படை ஆண்டு என்பது விலைகள், உற்பத்தி அமைப்பு மற்றும் செலவின முறைகள் போன்றவற்றுக்கு ஒப்பீட்டு அளவுகோலை வழங்குகிறது. பொருளாதாரம் காலத்துக்கேற்ப மாறுவதால் அடிப்படை ஆண்டை புதுப்பிப்பது அவசியமானதாகக் கருதப்படுகிறது. இதற்கு முன் இந்தியா 2004–05 மற்றும் 1999–2000 ஆண்டுகளை அடிப்படை ஆண்டுகளாக பயன்படுத்தியுள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகு இது எட்டாவது திருத்தமாகும்.

வளர்ச்சியடைந்த பல பொருளாதாரங்களுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் பொருளாதாரச் செயல்பாடுகளில் பெரும் பகுதி அமைப்புசாரா துறையில் நடைபெறுகிறது. அதிகாரப்பூர்வ வரி பதிவுகள், பாரம்பரியமாக வரி செலுத்தாத சிறிய தொழில்கள் குறித்து முழுமையான தகவல்களை வழங்குவதில்லை.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பொருளாதார நிபுணர் அருண் குமார் கூட இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஜிடிபி வளர்ச்சி விகிதத் தரவுகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினார். அதிகாரப்பூர்வ மதிப்பீடுகள் முறைசார்ந்த துறையின் குறிகாட்டிகளைப் பெரிதும் சார்ந்துள்ளன என்றும், அதே வேளையில் நாட்டின் மிகப்பெரிய முறைசாரா பொருளாதாரத்தைப் போதுமான அளவு அளவிடத் தவறுகின்றன என்றும் அவர் வாதிட்டார்.

"கடந்த ஆண்டு ஜூலை–செப்டம்பர் காலாண்டில் 8.2% உண்மையான ஜிடிபி வளர்ச்சி பதிவாகியது. இது சுமார் 18 மாதங்களில் மிக உயர்ந்த அளவாகும். ஆனால், மற்ற பொருளாதாரக் குறியீடுகள் பலவீனமான நிலையைச் சுட்டிக் காட்டின. அக்டோபர் மாதத்தில் தொழில்துறை வளர்ச்சி 0.3% மட்டுமே இருந்தது. வேலையின்மை கவலைக்குரியதாகவே நீடித்தது. பல முதலீட்டு திட்டங்கள் தாமதமடைந்ததாக அல்லது திரும்பப் பெறப்பட்டதாகக் கூறப்பட்டது. அதேபோல், நிகர வெளிநாட்டு நேரடி முதலீடும் எதிர்மறை நிலைக்குச் சென்றது" என அருண்குமார் கூறினார்.

இத்தகைய முரண்பாடுகள் இருக்கும்போது, ஜிடிபி தரவுகளை ஆய்வு செய்வதே சரியான அணுகுமுறை; அதிகாரப்பூர்வ வளர்ச்சி விகிதத்தை கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தியாவின் சுமார் 94% தொழிலாளர்கள் அமைப்புசாரா துறையில் பணிபுரிகின்றனர். ஆனால் காலாண்டு உற்பத்தியை கணக்கிட பயன்படுத்தப்படும் விமானப் போக்குவரத்து, வர்த்தக வாகன விற்பனை, சரக்கு போக்குவரத்து போன்ற பல குறியீடுகள் பெரும்பாலும் அமைப்புசார்ந்த பொருளாதார நடவடிக்கைகளையே பிரதிபலிக்கின்றன என்பதே அருண் குமாரின் முக்கிய விமர்சனம்.

அமைப்புசார்ந்த துறை வளர்ந்தாலும், சிறு நிறுவனங்கள், அமைப்புசாரா வணிகர்கள் மற்றும் சுயதொழில் செய்யும் மக்கள் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொண்டிருந்தால், அமைப்புசார்ந்த துறை தரவுகளின் அடிப்படையில் அமைப்புசாரா துறையின் வளர்ச்சியை மதிப்பிடுவது, முழு பொருளாதாரமும் வலுவாக வளர்கிறது என்ற தவறான தோற்றத்தை உருவாக்கக்கூடும் என்பதே அவரது வாதமாகும்.

அவரின் கருத்துப்படி, இந்தியாவின் ஜிடிபி வேலைவாய்ப்பைச் சார்ந்த அமைப்புசாரா பொருளாதாரத்தை விட அமைப்புசார்ந்த மற்றும் நிறுவன மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை அதிகமாக அளவிடுகிறது.

ஜிடிபி தரவுகளை மேம்படுத்த பல மாற்றங்கள் தேவைப்படுகின்றன என்றும் அவர் கூறுகிறார். அவற்றில் புதிய அடிப்படை ஆண்டு, மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் புதுப்பிக்கப்பட்ட மாதிரிகள், அமைப்புசாரா துறைக்கான மேம்பட்ட ஆய்வுகள், தரவு சேகரிப்பின் சிறந்த முறைகள் ஆகியவை அடங்கும். மேலும், விலைகளை அளவிடும் அமைப்பும் மேம்படுத்தப்பட வேண்டும். காலாண்டு மற்றும் ஆண்டு ஜிடிபி தரவுகளுக்கு இடையிலான ஒத்திசைவும் கூடுதல் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு