"சுரங்கத்துக்குள் ஆற்றுநீர் என்னை 20 நிமிடங்கள் துரத்தியது" - உயிர் பிழைத்த நேபாள தொழிலாளர் பிபிசியிடம் கூறியது என்ன?

- எழுதியவர், அசோக் டஹால் மற்றும் கமல் பரியார்
- பதவி, பிபிசி நேபாளி, மத்திய நேபாளத்தின் நுவாகோட் பகுதியில் இருந்து
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
கடந்த வாரம் கடுமையான திடீர் வெள்ளத்தால் மூழ்கிய நிலையில், திரிசூலி ஆற்றில் இருந்து பாய்ந்து வந்த நீர் தங்களது சுரங்கப்பாதைக்குள் மோதிய பேரழிவு தருணத்தைப் பற்றி நேபாள நீர்மின் நிலைய தொழிலாளர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
சுமார் 30 பேரைக் கொண்ட குழு சுரங்கப்பாதையின் கான்கிரீட் பூச்சு வேலையைச் செய்து கொண்டிருந்தபோது, திடீரென வீசிய பலத்தக் காற்றுடன் இது தொடங்கியது என்று பெம்பா துண்டு தமங் கூறுகிறார்.
அந்தக் காற்று வீச்சால் பிளைவுட்கள் காற்றில் பறந்தன மற்றும் கனரக இயந்திரங்கள் பெயர்ந்து விழுந்தன. வெளியே சற்று தொலைவில், வீடுகள் ஏற்கெனவே அடித்துச் செல்லப்பட்டிருந்தன.
"நான் சுரங்கப்பாதையின் வெளி வாயிலை நோக்கி ஓடினேன்," என்று அவர் கூறினார். "நீர் என் பின்னால் என்னைத் துரத்தியது; நான் அதற்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்தேன்."
அந்த நேரத்தில் வீட்டில் இருந்த தமங்கின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் உயிரிழந்தனர். கடந்த வாரத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்துக்குப் பிறகு நேபாளத்தின் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000-ஐத் தாண்டியுள்ளது, மேலும் சுமார் 4,000 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
காணாமல் போனவர்களில் பலர் (நூற்றுக்கணக்கானோராக இருக்க சாத்தியமுள்ளது) ஆற்றின் ஓரங்களில் உள்ள நீர்மின் நிலையங்களில் உள்ள பரந்த சுரங்கப்பாதை அமைப்பில் பணிபுரியும் தமங் போன்ற தொழிலாளர்கள். மிகப்பெரிய மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகப் பொறியாளர்கள் இந்தச் சுரங்கப்பாதைகளுக்குள் காற்றைச் செலுத்தி வருகின்றனர்.
"சுரங்கப்பாதைகளில் தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகளில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம், எங்கள் பணி தொடர்கிறது," என்று நேபாள ராணுவ செய்தித் தொடர்பாளர் ராஜா ராம் பாஸ்நெட் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
"சடலங்களைச் சேகரிக்கவும், நோய்கள் பரவாமல் தடுக்கவும் எங்கள் வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்."
செவ்வாய்க்கிழமை 119 பேர் மீட்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Reuters
"தெளிவாக யோசிக்க முடியவில்லை"
தமங், மேடான பகுதியை நோக்கித் தன் பின்னால் வந்த கொடூரமான வெள்ளத்தில் இருந்து தப்பிக்க சுமார் 20 நிமிடங்கள் ஓடியதாகக் கூறுகிறார்.
"அதிர்ச்சியால் நான் கிட்டத்தட்ட நினைவிழந்த நிலையில் இருந்தேன். என்னால் தெளிவாக யோசிக்க முடியவில்லை."
அவர்கள் வேகமாக ஓடியபோது, வீசிய பலத்த காற்று அவர்களை அப்படியே தூக்கி வீசும் நிலைக்குத் தள்ளியதாக அவருடைய சக ஊழியர் இதா கேலே கூறுகிறார்.
நேபாளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 99 சதவிகிதத்துக்கும் அதிகமானது நீர்மின்சாரத்தில் இருந்தே கிடைக்கிறது, மேலும் தமங்கும் கேலேவும் மேல் திரிசூலி 3பி நீர்மின் திட்டத்தைக் கட்ட உதவக்கூடிய ஒரு முக்கிய உற்பத்தி மையத்தில் பணிபுரிந்து வந்தனர்.
அடுத்த ஆண்டு திறக்கப்படவிருந்த இந்த ஆலை, நேபாளத்தின் தேசிய மின்கட்டமைப்புக்கு கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக, ஆற்றின் மேல் பகுதியில் உள்ள ஒரு நீர்மின் நிலையத்திலிருந்து வெளியேறும் நீரை மீண்டும் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டது.
அங்குப் பல்வேறு குழுக்கள் இயங்கி வந்தன - மேலும் பெரிய சுரங்கப்பாதை பூச்சு இயந்திரத்தை இயக்கும் குழுவே கடைசியாக வெளியேறியது என்று தமங் கூறுகிறார்.
ஆனால் விரைவில் ஒரு கொடூரமான உண்மை சுடத் தொடங்கியது.
"என் வீடு இருந்திருக்க வேண்டிய இடத்தை என்னால் பார்க்க முடிந்தது. அங்கு எதுவும் மிஞ்சவில்லை. அப்போதுதான் எல்லாமே போய்விட்டது என்பதை உணர்ந்தேன்."
தமங்கின் உறவினர்கள் ஆறு பேர் - அவரது தாய், மூத்த சகோதரர் மற்றும் அண்ணி மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகள் - காணாமல் போய்விட்டனர் என்று அவர் கூறினார். வெள்ளம் தாக்கியபோது அவர்கள் ஆற்றங்கரையில் உள்ள வீட்டில் இருந்தனர்.
அவரது மனைவி, மகன் மற்றும் ஒரு மருமகன் மட்டுமே உயிர் பிழைத்தனர்.

பட மூலாதாரம், Arun SANKAR / AFP via Getty Images
"உயிர் பிழைத்தவர்களே துன்பப்படுகின்றனர்"
"இப்போது வாழ்க்கை அர்த்தமற்றதாக உணர்கிறேன். உயிர் பிழைத்ததே பரிதாபமாகத் தோன்றுகிறது. எங்கே சாப்பிடுவது, எங்கே போவது என்று தெரியவில்லை," என்கிறார் தமங்.
"இறந்தவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். உயிர் பிழைத்த நாம் தான் துன்பப்படுகிறோம்."
தனது குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேரை இழந்த கேலே, தான் ஏன் உயிர் பிழைத்தேன் என்று தெரியவில்லை என்கிறார். "ஒருவேளை இறப்பது என் விதியாக இல்லையோ என்னவோ."
இழந்த எட்டு குடும்ப உறுப்பினர்களில் அவரது தாயாரும் மூத்த மகளும் அடங்குவர். அவரது மூன்று மகன்களும் மனைவியும் உயிர் பிழைத்தனர்.
தமங் எதிர்காலம் என்னாகுமோ என்று பயப்படுகிறார், குறிப்பாக இந்த நீர்மின் திட்டங்கள் மூடப்பட்டால். "நிலைமை இப்படித் தொடர்ந்தால், நாங்கள் பட்டினியால் வாடுவோம். சில நேரங்களில் உயிர் பிழைக்காமல் இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது."
ராணுவம் வந்து அவர்களை மீட்கும் வரை தமங் மேலும் சிலருடன் சேர்ந்து சாந்தி பஜார் கிராமத்தில் இரண்டு நாட்கள் தஞ்சமடைய முடிந்தது.
தன்னுடன் சேர்ந்து சுமார் 50 முதல் 60 தொழிலாளர்கள் சுரங்கப்பாதையில் இருந்து தப்பிக்க முடிந்ததாக அவர் மதிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், Ritesh Shukla/Getty Images
சரியான வளங்கள் இருந்திருந்தால் மேலும் பலரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று அவர் கூறுகிறார்.
பேரழிவு ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பே பனிப்பாறையை சுற்றியுள்ள பகுதி அதிகம் நிலைகுலையத் தொடங்கியதற்கான ஆதாரங்கள் இருந்தன; மேலும் சிறந்த முன்னெச்சரிக்கை எச்சரிக்கை அமைப்புகள் இருந்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்க முடிந்திருக்கும் என்று ஒரு புதிய அறிக்கையும் கூறுகிறது.
ஆசிய மலைசார் கல்வி கூட்டணி (Asian Mountain Academic Alliance), ஸ்டிம்சன் மையம் (Stimson Centre) மற்றும் சீனாவின் மலைசார் ஆபத்துகள் மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனத்தைச் (China's Institute of Mountain Hazards and Environment) சேர்ந்த நிபுணர்களின் கூற்றுப்படி, பனிப்பாறை மேற்பரப்பு வேகமாக நகர்வதையும், உருகும் நீர் பழுப்பு நிறமாக மாறுவதையும், சுற்றியுள்ள பாறையில் பிளவு ஏற்படுவதையும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன.
இவை அனைத்தும் மலைச்சரிவு ஏற்படக்கூடிய அசாதாரண நிலையைச் சுட்டிக்காட்டும் சாத்தியமான அடையாளங்களாகும்.
பனிச்சரிவே மிகவும் வேகமாக நடந்ததால், அதற்கு மிக அருகில் உள்ளவர்களுக்கு வழக்கமான எச்சரிக்கைகள் உதவ முடியவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆனால், வெள்ளம் வந்து சேர 10 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் எடுத்துக்கொண்ட ஆற்றின் கீழ் பகுதியில், ஒரு விரிவான எச்சரிக்கை அமைப்பு இருந்திருந்தால் கணிசமான எண்ணிக்கையிலான உயிர்களைக் காப்பாற்றியிருக்கக்கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், தற்போது சீனா, இந்தியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த நிபுணர்கள் அகழும் இயந்திரங்கள் மற்றும் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி நீர்மின் திட்டங்களின் இடிபாடுகளைத் தகர்த்து, பல்வேறு நீர்மின் நிலையங்களில் இன்னும் சிக்கியுள்ள தொழிலாளர்களை அடையத் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
"உள்ளே இன்னும் சிலர் உயிருடன் இருக்கலாம். அவர்கள் விரைவில் மீட்கப்பட்டால் நான் மகிழ்ச்சியடைவேன்," என்கிறார் தமங்.
"இன்னும் அங்குச் சிக்கியிருக்கும் பலரை எனக்குத் தெரியும்."
கூடுதல் செய்தி சேகரிப்பு- ஜஸ்டின் ரோலட், காலநிலை ஆசிரியர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































