வீட்டிலேயே சுவாச பரிசோதனை செய்வது யாருக்கெல்லாம் ஆபத்தாகக் கூடும்? 7 முக்கிய விஷயங்கள்

நுரையீரல்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

நீங்கள் சமூக வலைதளங்களை தொடர்ந்து கவனித்து வருபவராக இருந்தால், நுரையீரல் செயல்திறனை அறிவதற்கான உத்திகள் என சில காணொளிகளை பார்த்திருப்பீர்கள். அதில் சுமார் 50 விநாடிகள் முதல் 1 நிமிடம் வரை மூச்சை இழுத்துப் பிடிக்க முடிந்தால், உங்களின் நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தம் என அந்த காணொளிகளில் கூறப்படுவதை கேட்டிருக்கலாம்.

அந்த காணொளிகளை பார்க்கும் எவருக்கும் அச்சோதனைகளை செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எழும். அதிக நேரம் மூச்சை இழுத்துப் பிடிக்க வேண்டும் என்றுகூட முயற்சி செய்திருப்பீர்கள்.

ஆனால், நீங்கள் இருக்கும் இடத்திலேயே செய்யப்படும் இத்தகைய சோதனைகள் உண்மையிலேயே உங்கள் நுரையீரலின் செயல்திறனை அறிய உதவுமா? இத்தகைய சோதனைகளை எல்லோரும் செய்யலாமா என்ற கேள்வி கூட எழலாம்.

இவற்றை தெரிந்துகொள்வதற்க்கு முன்னர் நுரையீரலின் செயல்பாடுகள் குறித்த சில அடிப்படை தகவல்களை அறிவது அவசியமாகிறது.

1. நுரையீரலின் செயல்பாடு என்ன?

நுரையீரல் இரு முக்கியமான பணிகளை செய்கிறது. ஒன்று, ஆக்சிஜனை உள்ளிழுத்து, அதை ரத்த ஓட்டத்தில் செலுத்துவது. மற்றொன்று, கார்பன் - டை-ஆக்சைடு வாயுவை வெளியேற்றுவது. அதாவது, நாம் உயிர்வாழ்வதற்கு நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் ஆக்சிஜன் அவசியம். அந்த ஆக்சிஜனை உள்ளிழுத்து ரத்த ஓட்டத்தில் செலுத்தும் முக்கியமான பணியை நுரையீரல் செய்கின்றது.

உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் கார்பன் - டை - ஆக்சைடு எனும் தேவையற்ற வாயுவுக்கு பதிலாக ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. பின்னர், உங்கள் ரத்த ஓட்டம் கார்பன்-டை- ஆக்சைடு வாயுவை மீண்டும் நுரையீரலுக்குக் கொண்டு செல்கிறது. அங்கு அது ரத்த ஓட்டத்திலிருந்து நீக்கப்பட்டு, நீங்கள் சுவாசிக்கும்போது வெளியேற்றப்படுகிறது.

"எளிமையாக சொல்வதானால், மூச்சை இழுப்பது, மூச்சை வெளியிடுவது தான் நுரையீரலின் வேலை. அதாவது ஆக்ஸிஜனை உள் இழுத்து கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுவது. கார்பன் டை ஆக்ஸைடு போதுமான அளவு வெளியேறாமல் உள்ளேயே இருந்தாலோ அல்லது ஆக்ஸிஜனை போதுமான அளவு உள்ளிழுக்காமல் இருப்பதோ தான் நுரையீரல் செயலிழப்பு என்கிறோம்," என்கிறார் சென்னையை சேர்ந்த நுரையீரல் மருத்துவரும் தூக்க ஒருங்கின்மை சிகிச்சையாளருமான ஜெயராமன்.

வீடியோக்களில் வருவது போன்று மூச்சை இழுத்துப் பிடித்தால் நுரையீரலின் செயல்திறனை அறிய முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

2. சுவாச விகிதம் என்ன?

ஆரோக்கியமான நபர் ஒருவர் ஒரு நிமிடத்துக்கு எத்தனை முறை காற்றை உள்ளிழுத்து வெளிவிடுகிறார், அதாவது மூச்சுவிடுகிறார் (respiratory rate) என்பது கவனிக்க வேண்டிய விஷயம். வயதுவந்த ஒருவர் ஒரு நிமிடத்துக்கு 12-20 முறை மூச்சுவிட வேண்டும். 12க்குக் கீழோ அல்லது 25 முறைக்கு மேலோ இருந்தால் பிரச்னை என்கிறது அமெரிக்க நுரையீரல் சங்கம். இந்த பிரச்னை உள்ளவர்கள், டச்சிப்னியா (Tachypnea - விரைவான மற்றும் ஆழமற்ற சுவாசம்) அல்லது ஏதோவொரு அடிப்படை உடல்நலப் பிரச்னையைக் குறிக்கும் வகையிலான, வேகமான மற்றும் மேலோட்டமான சுவாசம் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்கிறது, அமெரிக்க நுரையீரல் சங்கம்.

இது வயதுக்கேற்ப மாறுகிறது. பச்சிளம் குழந்தைகளுக்கு முதல் ஓராண்டுக்கு ஒரு நிமிடத்துக்கு 30-60 என்பது இயல்பானதாக கருதப்படுகிறது. அதன்பிறகு இந்த விகிதம் குறைய ஆரம்பிக்கிறது.

3. வீட்டிலேயே சுவாச பரிசோதனைகளை செய்யலாமா?

சமூக ஊடக காணொளிகளில் வருவது போன்று, குறிப்பிட்ட நேரத்துக்கு மூச்சை இழுத்துப் பிடித்து வீட்டிலேயே நுரையீரலின் திறனை பரிசோதிக்கலாமா என, நுரையீரல் மருத்துவரும் தூக்க ஒருங்கின்மை சிகிச்சையாளருமான ஜெயராமனிடம் கேள்வி எழுப்பினோம்.

"சமூக வலைதளங்களில் உள்ள காணொளிகளில் கூறப்படும் பயிற்சிகளை மட்டும் வைத்து ஒருவரின் வயதையோ அல்லது நுரையீரலின் செயல்திறனையோ தீர்மானிக்க முடியாது. அதனை அறிய பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் உள்ளன. வீடியோக்களில் உள்ள பயிற்சிகளை உங்களின் நுரையீரலின் செயல்திறனை மறைமுகமாக அறியக்கூடிய எளிமையான உத்தியாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். மருத்துவ ரீதியாக அதற்கான பரிசோதனைகள் உள்ளன. பல்வேறு மூச்சுப் பரிசோதனைகள் உள்ளன." என்றார்.

 வீடியோக்களில் வருவது போன்று மூச்சை இழுத்துப் பிடித்தால் நுரையீரலின் செயல்திறனை அறிய முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

4. வீட்டிலேயே சுவாச பரிசோதனை செய்வது யாருக்கெல்லாம் ஆபத்தாகக் கூடும்?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சமூக ஊடக காணொளிகளில் வரும் சோதனைகள் சிலருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்கிறார் மருத்துவர் ஜெயராமன்.

இதய நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிக நேரம் மூச்சை இழுத்துப் பிடித்திருக்கும்போது மயக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக மருத்துவர் ஜெயராமன் குறிப்பிடுகிறார்.

ஆஸ்துமா, சீரற்ற இதயத்துடிப்பு (Heart Arrhythmia ), வலிப்பு பிரச்னை உள்ளவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என, நியூ யார்க்கில் உள்ள மவுண்ட் சினாய் மருத்துவ மையத்தின் சுனி டவுன்ஸ்டேட் மருத்துவ மையத்தின் பேராசிரியரும் மருத்துவப் பயிற்சியாளருமான பாயெல் குப்தா அமெரிக்க நுரையீரல் சங்கத்தின் இணையதளத்தில் வெளியான கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட நேரத்துக்கு மூச்சை இழுத்துப் பிடிப்பது நுரையீரலின் திறனை அதிகப்படுத்தாது என அவர் கூறுகிறார். தடகள வீரர்கள், டைவர்கள் போன்றோர் நீண்ட நேரத்துக்கு மூச்சை இழுத்துப் பிடித்து பயிற்சி செய்வதிலிருந்து இந்த யோசனை தொடங்கியதாக குறிப்பிடும் அவர், "மூச்சை அடக்கிப் பயிற்சி செய்வதன் மூலம் உண்மையில் பயிற்றுவிக்கப்படுவது நுரையீரல்கள் அல்ல; மாறாக, கார்பன் டை ஆக்சைடைத் தாங்கிக்கொள்ளும் உங்கள் உடலின் திறனும், ரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரிக்கும்போது மூளை அதற்கு அளிக்கும் எதிர்வினையுமே ஆகும்." என்கிறார்.

"வீட்டிலேயே மூச்சு பரிசோதனைகளை செய்துகொள்ள நாங்கள் பரிந்துரைக்க மாட்டோம். ஒவ்வொருவருக்கும் நுரையீரலின் திறன், எவ்வளவு நேரம் நம்மால் மூச்சை இழுத்துப் பிடிக்க முடிகிறது என்பது ஒருவருடைய வயது, அவரது உடல் நலத்தைப் பொறுத்து மாறுபடும்." என்கிறார் மருத்துவர் ஜெயராமன்.

சமூக ஊடக காணொளிகளில் குறிப்பிடுவது போன்று குறிப்பிட்ட நேரமோ அல்லது குறிப்பிட்ட சதவிகிதமோ மூச்சை இழுத்துப் பிடித்தால் ஒருவரின் நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பதாக கருதிவிட முடியாது என்றும் அவர் கூறுகிறார்.

அதேபோன்று, ஒருவர் எவ்வளவு பலூன்களை ஊதுகிறார், அதை எவ்வளவு பெரிதாக ஊதுகிறார் என்பதுவும் கூட நுரையீரலின் செயல்திறனை அறிவதற்கான பயிற்சியாக சமூக வலைதளங்களில் பரிந்துரைக்கப்படுகிறது.

"இதுவும் ஒரு மறைமுக சோதனையே. இத மட்டும் தீர்மானிக்காது. மேலும், இந்த பயிற்சி சிகிச்சையின் ஒருபகுதியாக பயன்படுத்தப்படுகிறது" என்கிறார் மருத்துவர் ஜெயராமன்.

நுரையீரலின் செயல்திறனை சோதிப்பதற்கான பல பரிசோதனைகள் உள்ளன என குறிப்பிடும் நுரையீரல் மருத்துவர் ஜெயராமன், அந்த பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் பிரச்னைகளை கண்டறியலாம் என்கிறார்.

"இந்த பரிசோதனைகள் மூலம் நுரையீரலின் அளவு, அழுத்தம் ஆகியவற்றை வைத்து அசாதாரணமாக ஏதும் உள்ளதா என்பதை கண்டறிவோம். அசாதாரணமாக இருந்தால் அது நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயா (Obstructive Airway Disease ) அல்லது கட்டுப்படுத்தப்பட்ட நுரையீரல் நோயா (Restrictive Lung Disease) என்பதை கண்டறிவோம்." என்கிறார்.

5. மருத்துவப் பரிசோதனைகள் என்னென்ன உள்ளன?

நுரையீரல் செயல்பாட்டு பரிசோதனையை (Pulmonary Function Test - PFT) மூன்று வழிகளில் அறியலாம் என பட்டியலிடுகிறார் மருத்துவர் ஜெயராமன்.

ஸ்பைரோமெட்ரி (spirometry) - ஸ்பைரோமீட்டர் எனப்படும் கருவியின் மூலம் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இது நீங்கள் எவ்வளவு காற்றை உள்வாங்குகிறீர்கள், வெளியிடுகிறீர்கள் என்பதை துல்லியமாக அறிய பயன்படுத்தப்படுகிறது. மூக்கில் சாஃப்ட் கிளிப்புகள் பொருத்தப்பட்டு, ஊதுகுழல் மூலம் மூச்சை இழுக்கவும் வெளியிடவும் வேண்டும். உங்களின் நுரையீரல் செயல்திறன் மட்டுமல்லாது, நெஞ்சு வலி, இருமல், மூச்சு விடுதலில் சிரமம் போன்ற பிரச்னைகளை கண்டறியவும் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

ப்ரீத்தோமெட்ரி - ப்ரீத்தோமீட்டர் அல்லது பீக் ஃப்ளோ மீட்டர் என்பது கையில் பிடித்துப் பயன்படுத்தக்கூடிய சிறிய சாதனம். முடிந்தவரை வேகமாகவும், அதிக அழுத்தத்துடனும் மூச்சை வெளியேற்றும்போது (exhale), உங்கள் நுரையீரலிலிருந்து காற்றை எவ்வளவு வேகமாக வெளியேற்ற முடிகிறது என்பதை இது அளவிடுகிறது.

ஆஸிலோமெட்ரி (Oscillometry) முறையில், ஒருவர் இயல்பாக சுவாசிக்கும்போது, வாயின் வழியாக ஒலி அலைகளின் மூலம் மாறுபட்ட அதிர்வெண்களில் காற்றோட்டம் அல்லது அழுத்தம் செலுத்தப்படுகிறது. இந்த ஒலி அலைகள் பொதுவாக 5 முதல் 40 ஹெர்ட்ஸ் (Hertz) வரையிலான அதிர்வெண் வரம்பில் இருக்கும். இது இயல்பான சுவாசத்தின் அதிர்வெண்ணைவிட அதிகமாகும்.

பின்னர், இந்த ஒலி அலைகளுக்கு நுரையீரல் ஏற்படுத்தும் மாறுபடும் அழுத்தம் அல்லது காற்றோட்டத்தை இந்த கருவி அளவிடுகிறது.

இவை தவிர சில மேம்பட்ட பரிசோதனைகளும் உள்ளதாக மருத்துவர் ஜெயராமன் பட்டியலிட்டார்.

ஹைப்பாக்ஸிக் சேலஞ்ச் பரிசோதனை ( hypoxic challenge test): இமயமலை உள்ளிட்ட கடினமான மலைகளுக்கு மலையேற்றம் செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் இந்த பரிசோதனையை மேற்கொள்ளலாம். அதேபோன்று நீண்ட நேரம் விமான பயணத்தை மேற்கொள்ள விரும்புபவர்களும் இந்த பரிசோதனையை மேற்கொள்ளலாம். ஒருவருக்கு இத்தகைய மலையேற்றம், விமான பயணங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படுமா என்பது இதில் பரிசோதிக்கப்படும்.

கார்டியோ பல்மனரி எக்சர்சைஸ் பரிசோதனை: நுரையீரல் மற்றும் இதயத்தின் செயல்திறனை ஒருசேர பரிசோதிக்கும் சோதனை.

வீடியோக்களில் வருவது போன்று மூச்சை இழுத்துப் பிடித்தால் நுரையீரலின் செயல்திறனை அறிய முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

6. எப்போதெல்லாம் இந்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்?

"வேகமாக மூச்சு வாங்குவது, மார்பு இறுக்கம் (chest tightness), இடைவிடாத இருமல், மூச்சுவிடும்போது சப்தம், தூங்கும்போது குறட்டை விடுதல், மூச்சுவிடும்போது விசில் சப்தம் கேட்டல், மூச்சுவிடும்போது நெஞ்சு வலி உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகி அவருடைய பரிந்துரைக்கேற்ப மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்" என்கிறார் மருத்துவர் ஜெயராமன்.

40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களுடைய வழக்கமான உடல் பரிசோதனைகளில் நுரையீரலின் செயல்திறனையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கிறார் அவர்.

"நெஞ்சு எக்ஸ்ரே (chest xray), நுரையீரலின் உடற்கூறு (lung anatomy) ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். உடற்கூறில் நுரையீரலின் வடிவமைப்பு, அது சுருங்கியுள்ளதா அல்லது வீங்கியுள்ளதா ஆகியவற்றை கவனிப்போம்."

7. என்னென்ன பயிற்சி செய்ய வேண்டும்?

நுரையீரல் நலனுக்கு சில பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர் ஜெயராமன் அறிவுறுத்துகிறார்.

  • நடைபயிற்சி, நீச்சல், சைக்கிளிங் போன்ற ஏரோபிக் பயிற்சிகள்
  • மூச்சுப்பயிற்சி (பிராணயாமா)
  • புரதம் செரிவான உணவுகள், சரிவிகித உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • காற்று மாசுபாடு நிறைந்த பகுதிகளை தவிர்த்தல்
  • புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும்.

இவைதவிர, சில பயிற்சிகளை அமெரிக்க நுரையீரல் சங்கம் பரிந்துரைக்கிறது.

  • வயிற்றுப் பகுதி உதரவிதானச் சுவாசம் (Diaphragmatic belly breathing), உங்கள் உதரவிதானத் தசையைப் பயன்படுத்தி ஆழமான மற்றும் திறமையான முறையில் சுவாசிக்க உதவுகிறது; இது ஆஸ்துமா பிரச்னைக்காக பரிந்துரைக்கப்படுகிறது.
  • சுருக்கப்பட்ட உதட்டு மூச்சுப் பயிற்சி (pursed lip breathing) வாய் மூடிய நிலையில் மூக்கு வழியாக மூச்சை இழுத்து பின் விசிலடிப்பது போன்று வாயைக் குவித்து மூக்கு வழியாக மூச்சை வெளியிட வேண்டும். நான்கு வரை எண்ணி இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
  • பாக்ஸ் ப்ரீத்திங் (box breathing) : இதில் ஒவ்வொரு செயலையும் 4 வரை எண்ணி செய்ய வேண்டும்.இது 4-4-4-4 பயிற்சி என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது, நான்கு வரை எண்ணி மூச்சை உள்ளிழுத்து, பின் அதை 4 எண் வரை தக்கவைத்து, பின்னர் அதே கால அளவில் வெளியிட்டு, ரிலாக்ஸ் செய்ய வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு