You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆப்ரிக்காவை விட மோசம்: இந்தியாவில் குழந்தை வளர்ச்சி குறைபாட்டிற்கு சாதி ஒடுக்குமுறையே காரணமா? ஆய்வில் புதிய தகவல்
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, இந்திய செய்தியாளர்
சமீபத்திய ஆய்வின்படி, ஆப்ரிக்காவின் சப்-சஹாரா (சஹாராவுக்கு தெற்கே உள்ள ஆப்ரிக்க நாடுகள்) பிராந்தியத்தில் உள்ள மற்ற எந்த நாட்டையும் விட இந்தியாவில் குழந்தைகள் வளர்ச்சி குறைபாடு (child stunting rates) விகிதங்கள் அதிகமாக உள்ளன. இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது இந்தியாவில் பல தசாப்தங்களாக நிலவும் சாதிய ஒடுக்குமுறை என்கிறது ஆய்வு.
உலகின் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 44% ஆப்ரிக்காவின் சப்- சஹாரா பகுதி மற்றும் இந்தியா ஆகிய இரண்டு பிராந்தியங்களில் உள்ளனர். அதே சமயம் உலகளவில் வளர்ச்சி குன்றிய குழந்தைகளில் 70% பேர் இந்த பிராந்தியங்களில் தான் உள்ளனர். இது அங்கு நிலவும் ஊட்டச்சத்து குறைபாட்டின் பிரதிபலிப்பு.
ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் இந்த இரண்டு பிராந்தியங்களிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில், இந்தியாவின் வளர்ச்சி குன்றிய குழந்தைகளில் விகிதம் 35.7 சதவீதமாக உள்ளது. ஆப்ரிக்காவின் சப்-சஹாரா பகுதிகளில் இருக்கும் 49 நாடுகளில் சராசரியாக 33.6 சதவீதமாக உள்ளது.
ஒரு குழந்தையின் உயரம் அவர்களின் வயதுக்கும் சராசரிக்கும் குறைவாக இருந்தால், வளர்ச்சி குன்றிய நிலையாகக் கருதப்படுகிறது, இது தீவிர ஊட்டச்சத்து குறைபாடுகளின் வெளிப்படையான அறிகுறியாகும்.
அசோகா பல்கலைக்கழகத்தை சேர்ந்த அஸ்வினி தேஷ்பாண்டே மற்றும் மலேஷியா மோனாஷ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ராஜேஷ் ராமச்சந்திரன் ஆகியோரின் ஆய்வு சில முக்கிய பிரச்னைகளை முன்வைக்கிறது.
அவர்களின் கூற்றுப்படி, குழந்தைகளில் உயரத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வு மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதாவது, இந்தியக் குழந்தைகள் ஆப்ரிக்க சப்-சஹாரா பகுதியில் உள்ள குழந்தைகளை விட உயரம் குறைவாக இருப்பதற்கான காரணங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருவது ஒரு முக்கிய அம்சத்தை புறந்தள்ள வழிவகுக்கிறது என்பதை இவர்களின் ஆய்வு கண்டறிந்தது.
இந்த ஆய்வில், இந்தியாவில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டில் சமூக அடையாளம் முக்கிய முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக சாதி அடையாளம் முக்கிய பங்கு வகிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு குழந்தையின் வாழ்வில் முதல் 1,000 நாட்கள் "பொற்காலம்" என்று அழைக்கப்படுகிறது. இந்த காலக்கட்டம் அவர்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. இரண்டு வயதுக்குள், அவர்களின் மூளை 80% வளர்ச்சி அடைந்து, வாழ்நாளுக்கான ஆற்றலின் அடித்தளத்தை அமைக்கிறது.
இந்த ஆரம்ப ஆண்டுகளில், சுகாதாரம், நல்ல ஊட்டச்சத்து, ஆரம்ப கால கற்றல் அனுபவம் மற்றும் பாதுகாப்பான சூழல் ஆகியவை குழந்தையின் எதிர்காலத்தை ஆழமாக வடிவமைக்கின்றன.
இந்தியாவும் ஆப்ரிக்காவின் சப்-சஹாரா பகுதியும், வேகமாக வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கங்கள், இளம் தலைமுறையினரின் மக்கள்தொகை மற்றும் குறிப்பிடத்தக்க தொழிலாளர் திறன் கொண்டவை. இந்த காரணங்களுக்காக, நீண்ட கால ஒப்பீடுகளைப் பகிர்ந்து கொள்கின்றன.
2021 உலக வங்கி அறிக்கையின்படி, “உலகளவிலான ஏழைகளின் எண்ணிக்கையில் 85%க்கும் மேற்பட்டோர் ஆப்ரிக்காவின் சப்-சஹாரா மற்றும் தெற்காசியாவில் [இந்தியா உட்பட] உள்ளனர். இது குழந்தைகளின் ஊட்டச்சத்து பிரச்னை போன்றே, வறுமை மற்றும் வளர்ச்சியில் சவால்கள் இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
அதிகாரப்பூர்வ தரவுகளைப் பயன்படுத்தி, குழந்தைகள் வளர்ச்சி குறைபாடு விகிதத்தில் இந்தியாவிற்கும் ஆப்பிரிக்க சப்-சஹாராவில் உள்ள 19 நாடுகளின் மாதிரிக்கும் இடையிலான இடைவெளிகள் குறித்த மிக சமீபத்திய மதிப்பீடுகளை ஆய்வாளர்கள் பார்த்தனர்.
இந்தியாவின் ஐந்து வயதுக்குட்பட்ட 13,7 கோடி குழந்தைகளில் 35%க்கும் அதிகமானோர் வளர்ச்சி குறைபாடு உள்ளவர்கள் என்றும், மூன்றில் ஒரு பங்கினர் எடை குறைவாக இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தரவுகள் காட்டுகின்றன. உலகளவில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 22% வளர்ச்சி குறைபாடு பிரச்னைகளை கொண்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் இந்தியாவில் சமூக ரீதியாக பின்தங்கிய ஆறு பெரிய் சமூகக் குழுக்களை ஆய்வு செய்தனர். அவர்களில் பழங்குடியினர் மற்றும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே ஐந்து வயதுக்கு உட்பட்ட மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளனர்.
இந்தியாவில் உள்ள உயர் சாதிக் குழுக்களின் குழந்தைகள், சாதிக் கட்டமைப்பின் அடிமட்டத்தில் இருக்கும் விளிம்பு நிலை சமூக குழுக்களின் குழந்தைகளைக் காட்டிலும், வளர்ச்சி குறைபாடு ஏற்படும் அபாயம் 20% குறைவாக இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
சுகாதார நடைமுறைகள், தாய்வழி உயரம், உடன்பிறந்தவர்களின் எண்ணிக்கை, கல்வி, ரத்த சோகை மற்றும் குடும்பத்தின் சமூக-பொருளாதார நிலை போன்ற காரணிகளைக் கணக்கிட்ட பின்னரும் இந்த முடிவு குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
எழுபது ஆண்டுகளாக உறுதியான நடவடிக்கை இருந்த போதிலும், இந்தியாவின் சாதி அமைப்பு அதாவது இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்ட நான்கு அடுக்கு அமைப்பு ஆழமாக வேரூன்றி உள்ளதால் குழந்தைகள் மத்தியில் காணப்படும் வேறுபாடுகளும் மாறவில்லை.
"இந்தியாவில் உயர்சாதி சமூக குழுக்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அதிக கலோரிகள் நிறைந்த உணவு கிடைக்கிறது, சிறந்த நோய் எதிர்ப்பு சூழலையும் கொண்டுள்ளனர். இதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை" என்று இந்த ஆய்வை மேற்கொண்ட ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இந்திய குழந்தைகளிடையே அதிகளவிலான வளர்ச்சி குறைபாடுகள் நிலவுவதற்கு பின்னணியில் இருக்கும் காரணங்கள் பல ஆண்டுகளாக ஒரு சிக்கலான விவாதத்தைத் தூண்டியுள்ளன.
சில பொருளாதார வல்லுநர்கள் இந்த வேறுபாடுகள் மரபணு சார்ந்தவை என்று வாதிட்டனர். இந்திய குழந்தைகள் மரபணு ரீதியாக குறைந்த உயரம் கொண்டிருக்கலாம் என்கின்றனர்.
குழந்தைகள் மத்தியில் இருக்கும் உயர வித்தியாசத்துக்கு மரபியல் தான் காரணம் என்று பல தலைமுறைகளாக நம்பப்படுவதால், ஊட்டச்சத்து அம்சம் மறக்கப்பட்டுவிட்டது என்றும் ஒரு தரப்பினர் நினைக்கின்றனர்.
சில ஆய்வுகள் வெவ்வேறு உலகளாவிய தரங்களைப் பயன்படுத்தி, ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளின் வளர்ச்சி நிலை மோசமாக இருப்பதாக சிலர் கூறுகின்றனர், மற்றவர்கள் எதிர்மாறாகவும் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
ஒரு ஆய்வின்படி, சமூகக் குழுக்களில் மத்தியில் வளர்ச்சி குறைபாடுகள் இருப்பது குறைந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில், உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து தலையீடுகள், வாழ்க்கைத் தரம் மற்றும் தாய்வழி காரணிகள் ஆகியவற்றில் இருந்த முன்னேற்றங்கள் 4 இந்திய மாநிலங்களில் வளர்ச்சி குறைப்பாடு பிரச்னையை ஓரளவுக்குக் குறைக்க வழிவகுத்தது.
(1992-93இன் மத்திய அரசின் குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வளர்ச்சி குன்றியவர்கள்).
பழங்குடி சமூகம் போன்ற விளிம்புநிலைக் குழுக்களைச் சேர்ந்த குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
ஆப்ரிக்காவில், 2010ல் இருந்து குழந்தைகள் வளர்ச்சி குறைபாடு விகிதம் குறைந்துள்ளது, ஆனால், ஒட்டுமொத்த எண்ணிக்கை அதிகரித்தது.
ஆனால், இந்தியாவில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், குறைவாகப் படித்த தாய்மார்கள் அல்லது ஒடுக்கப்பட்ட சாதிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள், வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர் என்பது தெளிவாகிறது.
"இந்தியா மற்றும் ஆப்ரிக்க சப்-சஹாரா குழந்தைகளுக்கு இடையே உள்ள உயர இடைவெளி பற்றிய விவாதம் சமூக அடையாளத்தின் பங்கை, குறிப்பாக சாதி கட்டமைப்பின் பங்கைக் கவனிக்கவில்லை" என்று ஆய்வின் ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
"இந்தியாவில் குழந்தைகளின் ஊட்டச்சத்து பிரச்னையை புரிந்துகொள்வதற்கு இது ஒரு முக்கியமான பரிமாணமாகும்."
இந்த பகுப்பாய்வு கட்டுரையில், மக்கள்தொகை மற்றும் சுகாதார ஆய்வுகளின் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை, இது 2019-21 இன் சமீபத்திய தரவுகளையும், ஆப்ரிக்காவில் சப்-சஹாரா பிராந்தியத்தில், 2015 முதல் கணக்கெடுப்புகளுடன் 19 நாடுகளின் தரவுகளையும் உள்ளடக்கியது.
தரவுகளின் தொகுப்பு இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட 195,024 குழந்தைகளுக்கான உடல் பரிமாணங்கள் மற்றும் மனித உடல் விளைவுகளின் கலவை தொடர்பான மானுடவியல் அளவீடுகளை உள்ளடக்கியது மற்றும் ஆப்ரிக்காவின் சப்-சஹாரா பகுதிகளில் ஐந்து வயதுக்குட்பட்ட 202,557 குழந்தைகளை உள்ளடக்கியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)