You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னையில் லாரி மோதி பள்ளி மாணவி பலி: கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்
இன்று ஜூன் 20 தமிழ்நாட்டில் பத்திரிக்கைகள் மற்றும் இணைய செய்தித்தளங்களில் இடம் பெற்றுள்ள முக்கியச் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
தண்ணீர் லாரி மோதி பள்ளி சிறுமி உயிரிழந்ததன் எதிரொலியாக சென்னைக்குள் வரும் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கி சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார் என்று இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"சென்னை கொளத்தூர், பொன்னியம்மன் மேடு பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி சவுமியா, நேற்று முன்தினம் காலை தாயாருடன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விவகாரத்தில் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்ட நிலையில், நேரக் கட்டுப்பாடுகளை மீறி மக்கள் அதிகளவில் சாலையை பயன்படுத்தும் பீக் ஹவர்ஸில் தண்ணீர் லாரியை அனுமதித்த குற்றச்சாட்டில் செம்பியம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுடலை மணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். புளியந்தோப்பு போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் போக்குவரத்து போலீஸாருக்கு பிறப்பித்த உத்தரவில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வரும் நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிவழங்கக்கூடாது. பள்ளி தொடங்கும், முடியும் நேரங்களில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போலீஸார் கட்டாயம் ஈடுபட வேண்டும். கவனக்குறைவாக செயல்பட்டு விபத்து உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்களுக்குள் ஒப்படைக்கக்கூடாது.
காலை 7 மணிமுதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பள்ளிகள் உள்ள பகுதிகளில் கனரக வாகனங்களை அனுமதிக்கும் போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்," என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலை வேட்டையாடி டி-84 புலி புற்றுநோயால் மரணம்
ஆரோஹெட் (Arrowhead) என்று அழைக்கப்பட்ட பெண் புலி டி-84 உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. ராஜஸ்தானின் ரந்தம்பூர் புலிகள் சரணாலயத்தில் உள்ள ஜோஹி மஹால் அருகே அந்த புலியின் உயிர் பிரிந்தது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
11 வயதான அந்த புலி, முதலையை வேட்டையாடும் திறன் கொண்ட, அச்சமற்ற புலியாக உயிரியலாளர்கள் மத்தியில் அறியப்பட்டுள்ளது.
"தன்னுடைய பாட்டி மச்சிலி புலியின் சிறப்புப் பண்புகளை கொண்ட அந்த புலி கடந்த சில மாதங்களாக எலும்புப் புற்றுநோயால் பாதித்திருந்தது. மூத்த அதிகாரி ஒருவர் இது தொடர்பாக பேசிய போது, 'டி-84 புலியின் உடல் ராஜ்பாக் அருகே எரியூட்டப்பட்டது. புலியின் இறுதிச் சடங்கில் புகைப்படக் கலைஞர்கள், இயற்கை ஆர்வலர்கள் போன்றோர்கள் பங்கேற்றனர். தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் அறிவித்த விதிமுறைகளின் படி இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது' என்று தெரிவித்தார்'' என்கிறது அச்செய்தி.
''இந்த டி-84 புலி முதன்முறையாக மார்ச் 2014-ல் மக்கள் கண்ணில் சிறு குட்டியாக தென்பட்டது. கிருஷ்ணா மற்றும் ஸ்டார் மாலி புலிகளுக்கு குட்டியாக பிறந்த இந்த புலி அதன் பாட்டியின் (மச்சிலி - டி-16) சிறப்புப் பண்புகளைப் பெற்றிருந்தது.
தன்னுடைய பாட்டியைப் போன்றே, முதலைகளை வேட்டையாடி உண்ணும் தன்மை கொண்டதால் இது 'க்ரகோடைல் ஹண்டர்' என்று அழைக்கப்பட்டது. இந்த தனிப்பண்பு பலரையும் வியப்பிற்கு ஆளாக்கியது.
இடது கண்ணம் மற்றும் நெற்றியின் மேல் அம்பின் குறி போன்று தோலின் வரிகள் அமைந்திருப்பதால் இதனை ஆரோஹெட் என்றும் அழைத்தனர்.
பின்னங்கால் எலும்புகளில் ஏற்பட்ட புற்றுநோய் கட்டிகள் காரணமாக வேட்டையாடும் இயல்பை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்தது ஆரோஹெட். அதனால் அதற்கும் அதன் 3 குட்டிகளுக்கும் வனத்துறையினரே உணவுகளை வழங்கினர்," என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு