ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள் - அச்சத்தில் தூக்கமின்றி வாடும் டோகரா தீவு மக்கள்

12 டோகரா தீவுகளில் ஏழு தீவுகளில் சுமார் 700 பேர் வசிக்கின்றனர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 12 டோகரா தீவுக் கூட்டத்தில் உள்ள ஏழு தீவுகளில் சுமார் 700 பேர் வசிக்கின்றனர்
    • எழுதியவர், கெல்லி என்ஜி, சிங்கப்பூரில் இருந்து
    • பதவி, பிபிசி நியூஸ்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், அங்கு இருப்பவர்கள் கவலையோடு இரவு முழுவதும் விழித்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.

புதன்கிழமை 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து. ஜூன் 21 முதலே டோகரா தீவுகளைச் சுற்றிய கடற்பகுதிகளில் நிலநடுக்க செயல்பாடுகள் "மிகவும் தீவிரமாக" இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை, சுனாமி எச்சரிக்கைகள் விடப்படவில்லை, ஆனால் தேவைப்பட்டால் வெளியேற தயாராக இருக்கும்படி மக்களை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

"தூங்குவது கூட மிகவும் அச்சமூட்டுவதாக இருக்கிறது," என பிராந்திய ஒலிபரப்பாளர் எம்.பி.சியிடம் ஒரு உள்ளூர்காரர் தெரிவித்தார். "எப்போதுமே ஆடிக்கொண்டிருப்பது போல் தோன்றுகிறது."

உள்ளூர் ஊடகங்களின் கூற்றுப்படி கடந்த காலங்களிலும் டோகாரா பகுதியில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டாலும், மிக அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் தொடர்ச்சி அசாதரணமானது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர் என்று அழைக்கப்படும் பல கண்டத்தகடுகள் சந்திக்கக்கூடிய இடத்தில் அமைந்திருப்பதால், ஜப்பான் உலகில் அதிக நிலநடுக்கம் ஏற்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக உள்ளது. அங்கு ஓர் ஆண்டில் சுமார் 1,500 நிலநடுக்கங்கள் உணரப்படுகின்றன.

அந்நாட்டில் உள்ள டோக்ரா தீவுக்கூட்டத்தில் மொத்தமாக 12 தீவுகள் உள்ளன. அதில் ஏழு தீவுகளில் சுமார் 700 பேர் வசிக்கிறார்கள். ஜப்பான் பெருநிலப்பரப்பில் இருந்து தொலைதூரத்தில் உள்ள இந்தத் தீவுகள் சிலவற்றில் மருத்துவமனைகளே இல்லை. அந்த மாகாணத்தின் தலைநகரான ககோஷிமாவில்தான் மருத்துவமனை உள்ளது. அதுதான் அந்தத் தீவுக்கூட்டத்தில் வாழும் மக்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனை. ஆனால், அதை அடைவதற்கே படகில் 6 மணிநேரம் பயணிக்க வேண்டும்.

"நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கு முன்பு, அதிலும் குறிப்பாக இரவில், கடலில் இருந்து வினோதமான கர்ஜனையை கேட்க முடியும். அது அச்சுறுத்துகிறது" என்று அகுசேகிஜிமா தீவைச் சேர்ந்த சிசுகோ அரிகாவா, தி அசாஹி ஷிம்புன் நாளிதழிடம் தெரிவித்தார்.

"அனைவரும் சோர்ந்து போயிருக்கிறோம். இது முடிவுக்கு வர வேண்டும் என்பது மட்டுமே எங்கள் விருப்பம்," என்கிறார் கடலுக்கு அருகே தனது கணவருடன் வசித்தபடி, ஒரு கால்நடைப் பண்ணையை நடத்தி வரும் 54 வயதான அந்தப் பெண்மணி.

"இவ்வளவு நிலநடுக்கங்கள் ஏற்பட பின்னர், இப்போது நடுக்கம் ஏற்படாத போதுகூட தரை ஆடுவது போலத்தான் தெரிகிறது" என்கிறார் அகுசேகிஜிமாவில் உள்ள உள்ளூர் குடியிருப்புவாசிகள் சங்கத்தின் தலைவரான 60 வயது முதியவர் இசாமு சகாமோட்டோ.

"இந்த நிலநடுக்கங்கள் கீழே இருந்து ஓர் அதிர்வுடன் தொடங்குகின்றன. பின்னர் வீடுகள் அசைகின்றன, இது உடலை பாதிப்பதாக உள்ளது," என்கிறார் அவர்.

தோஷிமா கிராமத்தில், சில உள்ளூர்வாசிகள் தூக்கத்தை இழந்து களைத்துப் போய் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உள்ளூர்வாசிகளை கேள்விகளால் மூழ்கடிக்க வேண்டாம் என்றும் அவர்கள் ஊடகங்களிடம் வலியுறுத்தினர்.

"அதிகப்படியான கேள்விகளையோ, நேர்காணல்களையோ நடத்த வேண்டாம் எனவும் சற்றே பரிவுடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்," என அந்த கிராமத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

நிலநடுக்கங்கள் காரணமாக டோகரா தீவுகளில் சில விருந்தினர் இல்லங்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு இடமளிப்பதை நிறுத்தியுள்ளதாக தோஷிமா கிராமம் தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது. இவை உள்ளூர் மக்களுக்கு தங்குமிடமாகப் பயன்படுத்தப்படலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஜப்பான் நிலநடுக்க அபாயத்தால் மக்கள் கவலை
படக்குறிப்பு, ஜப்பானின் பெருநிலப்பரப்பில் இருந்து டோகரா தீவுக்கூட்டம் வெகுதொலைவில் அமைந்துள்ளது

மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பயங்கரமான நிலநடுக்கம் விரைவில் ஏற்படக்கூடும் என்ற வதந்திகள் பரவியதால் நாடே பதற்றத்தில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில்தான் இந்தத் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

மாங்கா கலைஞர் ரியோ டாட்சுகி 1999ஆம் ஆண்டு வெளியிட்ட புத்தகம்தான் இந்த வதந்திகளைத் தூண்டியுள்ளது. 2021இல் வெளியிடப்பட்ட புதிய பதிப்பில், அடுத்த பெரிய நிலநடுக்கம் இந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி ஏற்படும் என அவர் கூறியிருந்தார்.

இந்த ஊகங்கள் சில சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தியுள்ளன. இதனால் பல பயணங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்துப் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானை தாக்கும் பெரும்பாலான நிலநடுக்கங்கள் லேசானவை. ஆனால், 2011இல் வடகிழக்குக் கரையோரம் 18,000க்கும் மேற்பட்டோரை பலிகொண்ட சுனாமி ஏற்படக் காரணமாக இருந்த நிலநடுக்கத்தைப் போன்று மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் சிலவும் ஏற்பட்டுள்ளன.

இருப்பினும், சிறிய வயதில் இருந்து "பெரிய ஒன்று" என விவரிக்கப்படும் ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறை ஏற்படும் மிகப்பெரிய நிலநடுக்கத்தைப் பற்றிய எச்சரிக்கைகளைக் கேட்டு வளர்ந்த அதிகாரிகள், அது குறித்து அஞ்சுகின்றனர். மேலும், மிக மோசமான சூழ்நிலைகளில் இது 300,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம் என்றும் கணிக்கப்படுகிறது.

அதுபோன்ற ஒரு பேரழிவு ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள மக்களின் தயார் நிலையை வலுப்படுத்துவதற்காக கரைப் பகுதிகள் மற்றும் மக்களை பாதுகாப்பதற்கான கட்டடங்களைக் கட்டுவது போன்ற புதிய நடவடிக்கைகளுக்கு அரசு இந்த வாரத்தில் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் இன்னமும் நிறைய இருப்பதாகவும் அரசு எச்சரித்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு