You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எஸ்சிஓ மாநாட்டு அறிக்கையில் இந்தியா கையெழுத்திட மறுத்தது ஏன்? காங்கிரஸ் எழுப்பும் கேள்விகள் என்ன?
சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ- SCO) கூட்டத்தில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், எஸ்சிஓவின் சில உறுப்பு நாடுகளுக்கு இடையே சில விஷயங்களில் ஒருமித்த கருத்து இல்லாததால் கூட்டு அறிக்கை வெளியிடப்படவில்லை என்றார்.
"பயங்கரவாதம் தொடர்பாக எங்களுக்கு சில கவலைகள் இருந்தன, அவற்றை அந்த ஆவணத்தில் சேர்க்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். ஆனால் ஒரு நாடு அதற்கு ஆட்சேபனை தெரிவித்தது. இதன் காரணமாக அந்த அறிக்கைக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை" என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.
இருப்பினும், கூட்டு அறிக்கையில் பஹல்காம் பற்றி குறிப்பிடாததற்காக பிரதமர் நரேந்திர மோதி மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மீது காங்கிரஸ் கேள்விகளை எழுப்பியுள்ளது.
பிரதமர் மோதியின் தலைமையில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது கூறுகிறார்.
சீனாவில் இரண்டு நாள் நடைபெற்ற எஸ்சிஓ கூட்டத்தில் பங்கேற்க இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் சீனாவுக்குச் சென்றிருந்தார்.
ஜூன் 25 அன்று தொடங்கி ஜூன் 26 வரை இந்த கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
"பயங்கரவாத அச்சுறுத்தலை நாம் எதிர்த்துப் போராட வேண்டும். இந்தப் பிரச்னையை (எஸ்சிஓ கூட்டத்தில்) எழுப்பினோம்" என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.
வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் குறித்த விரிவான விளக்கத்தை எஸ்சிஓ கூட்டத்தில் வழங்கினார்" என்று கூறப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த சவாலை எதிர்கொள்ள, உறுப்பு நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜ்நாத் சிங் கூறியது என்ன?
இந்தப் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையின்மையே மிகப்பெரிய சவால்களாக உள்ளன என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
"இந்தப் பிரச்னைகள் அதிகரித்து வரும் வெறுப்புணர்வு, தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தால் ஏற்படுகின்றன" என்று அவர் கூறினார்.
"அமைதி மற்றும் வளர்ச்சியுடன் பயங்கரவாதம் ஒன்றாக நிலைக்க முடியாது. இந்த சவால்களை எதிர்கொள்ள உறுதியான நடவடிக்கைகள் அவசியம்" என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
"சில நாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கின்றன. இதுபோன்ற இரட்டைத் நிலைப்பாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது. எஸ்சிஓ அத்தகைய நாடுகளை விமர்சிக்கத் தயங்கக்கூடாது" என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
எஸ்சிஓ கூட்டத்தில் அளிக்கப்பட்ட அறிக்கையில், ராஜ்நாத் சிங் 'ஆபரேஷன் சிந்தூர்' பற்றியும் குறிப்பிட்டார்.
"பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் போது, பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் மத அடையாளத்தின் அடிப்படையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஐ.நா.வால் பயங்கரவாதக் குழுவாக அறிவிக்கப்பட்ட லஷ்கர்-இ-தொய்பாவுடன் (LeT) தொடர்புடைய டிஆர்எஃப் குழு, இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
"பஹல்காம் தாக்குதலின் தன்மை, இந்தியாவில் லஷ்கர்-இ-தொய்பா நடத்திய முந்தைய பயங்கரவாதத் தாக்குதல்களைப் போன்றது. பயங்கரவாத மையங்கள் இனி பாதுகாப்பானவை அல்ல என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம், அவற்றை குறிவைக்க நாங்கள் தயங்க மாட்டோம். பயங்கரவாதம் போன்ற தீமைகளை எஸ்சிஓ உறுப்பினர்கள் கண்டிக்க வேண்டும்" என்றும் அவர் அக்கூட்டத்தில் வலியுறுத்தினார்.
பிரதமர் மோதி மீது கேள்விகள் எழுப்பப்படுவது ஏன்?
தீவிரவாதம் தொடர்பான பிரச்னைகள் குறித்த கருத்து வேறுபாடுகளால், இந்தியா எஸ்சிஓ கூட்டு அறிக்கையில் கையெழுத்திட மறுத்தது குறித்து, சீனாவின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாங் ஷாவோகிங்கிடம் கேள்வி எழுப்பட்டதாக சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ், சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
இதற்குப் பதிலளித்த ஜாங் ஷாவோகிங், "எனக்குத் தெரிந்த வரை, எஸ்சிஓ பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் அனைத்து தரப்பினரின் கூட்டு முயற்சியால் வெற்றிகரமாக நிறைவடைந்தது" என்று கூறினார்.
"இந்தியா கையெழுத்திட மறுத்ததோ அல்லது பஹல்காம் பற்றி குறிப்பிடப்படாததோ முக்கிய செய்தி அல்ல. மாறாக, பலுசிஸ்தானில் இந்திய பயங்கரவாதத்தைக் கண்டிப்பதில் அனைத்து எஸ்சிஓ உறுப்பினர்களும் ஒன்றிணைந்துள்ளனர். இது பாகிஸ்தானுக்கு முக்கியமான ஒரு ராஜ்ஜீய வெற்றி" என்று தி வயர் பிகே மற்றும் நியூ பாகிஸ்தான் பவுண்டேஷன் சிந்தனைக் குழுவின் பத்திரிகையாளர் அலி கே சிஷ்டி சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"இந்தியா உலக அரங்கில் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான சமீபத்திய உதாரணமாக எஸ்சிஓ செய்திக்குறிப்பு அமைந்துள்ளது. இதில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் புறக்கணிக்கப்பட்டு, பலுசிஸ்தான் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் முற்றிலும் தோல்வியடைந்துள்ளார். அவர் ராஜினாமா செய்ய வேண்டும்" என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோதி மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர், எஸ்சிஓ கூட்டு அறிக்கையில் பஹல்காம் பற்றி குறிப்பிடாததது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது கேள்விகளை எழுப்பியுள்ளார்.
"எஸ்சிஓ கூட்டு அறிக்கையில் பஹல்காம் மற்றும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பஹல்காம் பயங்கரவாதம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் பலுசிஸ்தான் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது" என்று அவர் எக்ஸ் தள பதிவு கூறுகிறது.
"இது ஒரு ராஜ்ஜீய தோல்வி. நரேந்திர மோதி அரசாங்கத்தின் கீழ் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு பில்லியன் கணக்கான உதவிகள் கிடைக்கின்றன, பயங்கரவாதத்தைக் கண்டிக்க எந்த நாடும் எங்களுடன் நிற்கவில்லை."
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்றால் என்ன?
சீனா, ரஷ்யா மற்றும் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்த நான்கு மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவற்றால், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ), 2001 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
1996 இல் ரஷ்யா, சீனா மற்றும் இந்த மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையேயான எல்லை ஒப்பந்தத்திலிருந்து இந்த அமைப்பு உருவானது. இது 'ஷாங்காய் ஃபைவ்' ('Shanghai Five') ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது.
பிராந்திய நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக சீனாவின் ஆலோசனையின் பேரில் இந்த ஒப்பந்தம் விரிவுபடுத்தப்பட்டது.
உறுப்பு நாடுகளிடையே வர்த்தகம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதில், இந்த அமைப்பின் பங்கை அதிகரிப்பது குறித்தும் பேசப்பட்டது.
பின்னர், இந்தியாவும் பாகிஸ்தானும் 2017 ஆம் ஆண்டில் இந்த அமைப்பில் இணைந்தன. அதே நேரத்தில் இரான் 2023 ஆம் ஆண்டில் அதன் உறுப்பினரானது.
தற்போது, உலக மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் எஸ்சிஓ நாடுகளில் வாழ்கின்றனர். எஸ்சிஓ நாடுகள், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவீத பங்கைக் கொண்டுள்ளன.
அதேபோல் உலகின் எண்ணெய் இருப்பில் சுமார் 20 சதவீதம் இந்த நாடுகளில் உள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு