'ஒரே வேலைக்கு 2 வகை சம்பளம்' - தமிழ்நாடு அரசின் முடிவால் சர்ச்சை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
"ஒரே அலுவலத்துக்குள் இரு வேறு பிரிவுகளை அரசு உருவாக்குகிறது. ஒரு தரப்புக்கு அதிக சம்பளமும் இன்னொரு தரப்புக்கு ஒப்பந்த ஊதியம் என்ற பெயரில் குறைவான சம்பளமும் வழங்கப்படுகிறது. அப்படியானால், குறைந்த சம்பளம் பெறும் நபரின் மனநிலை என்னவாக இருக்கும்?" எனக் கேள்வி எழுப்புகிறார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த முத்துகுமாரசாமி வேல்.
அரசுத் துறைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை அனுப்புவது தொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அறிவிப்புக்கு எதிராக இப்படியொரு கருத்தை அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
படித்த இளைஞர்களுக்கு அரசுப் பணியைக் கொடுக்காமல் இடஒதுக்கீட்டை அகற்றும் வகையில் அரசின் செயல்பாடுகள் இருப்பதாக தொழிற்சங்கங்கள் விமர்சிக்கின்றன.
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அறிவிப்பால் என்ன சர்ச்சை?
வெளிநாடுகளில் வேலை செய்ய விரும்பும் நபர்களுக்கு அவர்களின் திறனுக்கேற்ற வேலையைத் தேர்வு செய்து கொடுக்கும் பணியில் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
1978-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், அயல்நாட்டில் மருத்துவம், பொறியியல், செவிலியர், பட்டயப் படிப்பு, ஐ.டி.ஐ ஆகிய படிப்புகளை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது.
சர்ச்சையை ஏற்படுத்திய கடிதம்

இந்தநிலையில் தற்போது தமிழ்நாட்டில் அரசுத் துறைகளுக்குத் தேவையான ஆட்களை ஒப்பந்த அடிப்படையில் பணிமயர்த்தும் வேலையில் ஈடுபட்டு வருவதாக, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் (OMCL) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சஜ்ஜன் சிங் ஆர் சவான் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை அரசின் பல்வேறு துறைகளில் பணியமர்த்தியுள்ளதாக, கடந்த ஜூன் 30 அன்று தமிழ்நாடு எரிசக்தி துறையின் செயலருக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், அரசு அலுவலகங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை அனுப்புவது தொடர்பான நிலையான கட்டணத்தை (Standard Rate) நிதித்துறையின் வழிகாட்டுதலில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் இறுதி செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
'ஒப்பந்தப் பணியாளர்களின் சம்பளத்துடன் 8.4 சதவீத சேவைக் கட்டணம் (அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோரின் பங்கு அடக்கம்), 18 சதவீத ஜி.எஸ்.டி ஆகியவை வழங்கப்பட வேண்டும்' என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அரசுத் துறைகளுக்குக் கிடைக்கும் நன்மைகளையும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. அதன்படி,
- தனிப்பட்ட எந்த ஒப்பந்தமும் இல்லாமல் மனிதவளத்தை சரியான நேரத்தில் பயன்படுத்துதல்.
- செலவீனம் மற்றும் பணியமர்த்துதலில் சீரான தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை.
- வெளிப்புற பணியாளர்களை நியமிப்பதால் குறைக்கப்படும் நிர்வாகச் சுமை.
- சட்டப்பூர்வ விதிகள் மற்றும் தரமான சேவையை உறுதி செய்தல்.
அந்தக் கடிதத்தில் அரசின் துறைகளில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான சம்பளத்தை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
யாருக்கு எவ்வளவு சம்பளம்?
அதன்படி, வாட்ச்மேன், அலுவலக உதவியாளர், தூய்மைப் பணியாளர், தண்ணீர் கொண்டு வருபவர், தோட்டப் பணியாளர் ஆகியோருக்கு 13 ஆயிரம் ரூபாய் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நகல் எடுப்பவருக்கு (Xerox Operator) 15 ஆயிரமும் இளநிலை உதவியாளர் மற்றும் இளநிலை கணக்காளருக்கு 20 ஆயிரம் ரூபாயும் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தட்டச்சர், எலக்டீரிசியன், பிளம்பர் ஆகிய பணிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளமாக இறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், ஓட்டுநர் பணிக்கு 25 ஆயிரம் ரூபாயும் கண்காணிப்பாளர், உதவி மேலாளர் ஆகிய பணியிடங்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும் சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலாளர் பணியில் நியமிக்கப்படும் நபருக்கான சம்பளம் என 40 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 'இதனுடன் 8.4 சதவீத சேவைக் கட்டணம், 18 சதவீத ஜிஎஸ்டி தொகையை அரசுத் துறைகள் அளிக்க வேண்டும்' எனவும் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்பணியிடங்களுக்கான கட்டணத்தை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், கடலூர், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, திண்டுக்கல், சேலம், நாமக்கல், கரூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு மட்டும் இறுதி செய்யப்பட்டுள்ளன.
"மீதம் உள்ள மாவட்டங்களுக்கான கட்டணம் விரைவில் இறுதி செய்யப்படும்" என, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சஜ்ஜன் சிங் ஆர் சவான் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மின்வாரியத்தின் சுற்றறிக்கை
இந்தக் கடிதத்தை மேற்கோள்காட்டி, 22.7.2025 அன்று தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இருந்து மின்வாரிய பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில், 'மின்வாரியத்தின் TNPDCL(Tamil Nadu Power Distribution Corporation Limited), TNPGCL(Tamil Nadu Power Generation Corporation Limited), TNGECL (Tamil Nadu Green Energy Corporation Limited), TANTRANSCO (Tamil Nadu Transmission Corporation Limited) ஆகியவற்றில் பணியாற்றும் முதன்மைப் பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள் ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்களை தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம்' எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, எரிசக்தித் துறையின் துணைச் செயலர் கரிகாலன் ஜூலை 4 அன்று அனுப்பிய கடிதத்தில், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அளித்துள்ள ஒரே மாதிரியான ஒப்பந்தக் கட்டணத்தை அரசு அலுவலகங்கள் மற்றும் வேறு துறைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
"தூய்மைப் பணியாளருக்கு 13 ஆயிரம் ரூபாயை சம்பளமாக நிர்ணயித்துள்ளனர். இந்தச் சம்பளம் பெறும் ஒருவரால் சென்னையில் வாழ்க்கையை நடத்துவது சிரமம்" எனக் கூறுகிறார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட செயலாளர் முத்துகுமாரசாமி வேல்.
"திறன் வாய்ந்த அரசு ஊழியர்களை மையமாக வைத்துதான் அரசு இயந்திரம் செயல்படுகிறது. அவர்களுக்கு அதிக சம்பளம் தேவையில்லை என்பது சில அதிகாரிகளின் மனநிலையாக உள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டார்.
'சமூக நீதிக்கு துரோகம்'
"தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் குத்தகை முறையில் பணியிடங்களை நிரப்புவது என்பது சமூகநீதிக்கு இழைக்கப்படும் துரோகம்" என, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
செப்டம்பர் 25-ஆம் தேதி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய முறைப்படி கடந்த சில வாரங்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள், அரசு அலுவலகங்களில் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
'மின்வாரியம் உள்பட பொதுத்துறை நிறுவனங்களும் பணியாளர்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் நிரப்பிக் கொள்வதற்கு அறிவுறுத்தியுள்ளன. இது ஆபத்தானது' எனவும் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
'அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் தேர்வு செய்யப்படும் பணியிடங்களில் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படாது. இதனால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பின்னுக்குத் தள்ளப்படவே வாய்ப்புகள் அதிகம்' என்கிறார் அன்புமணி ராமதாஸ்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
'ஒரே அலுவலகத்தில் 2 பிரிவுகள்'
அரசின் முடிவை அரசு ஊழியர் சங்கங்களும் விமர்சித்துள்ளன. "ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனம் என்பது, ஓர் அலுவலகத்துக்குள் இரண்டு பிரிவுகளை உருவாக்குகிறது" எனக் கூறுகிறார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட செயலாளர் முத்துகுமாரசாமி வேல்.
"ஒரே பணியை மேற்கொள்ளும் ஒரு தரப்புக்கு அதிக சம்பளமும் இன்னொரு தரப்புக்கு குறைவான சம்பளமும் கொடுக்கப்படுகிறது. அவ்வாறு குறைவான சம்பளம் பெறும் நபரின் மனநிலை என்னவாக இருக்கும்?" எனக் கேள்வி எழுப்புகிறார்.
தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் சுமார் மூன்று லட்சத்துக்கும் மேல் காலிப் பணியிடங்கள் உள்ளதாகக் கூறும் முத்துக்குமாரசாமி வேல், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குறைந்தபட்ச அளவில் ஆள்சேர்ப்பை நடத்திவிட்டு மனிதவள மேம்பாட்டு நிறுவனங்கள் மூலம் அதிகளவில் தற்காலிக ஊழியர்களை அரசு நியமிக்கிறது" என்கிறார்.
2025-ஆம் ஆண்டில் ஏழு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.
ஆனால், "ஒவ்வொரு போட்டித் தேர்வு மூலமும் எவ்வளவு பேர் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறித்த விவரங்களை வெளியிடவில்லை" என, அறிக்கை ஒன்றில் பா.ம.க தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.
"படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு அரசுப் பணியைக் கொடுக்காமல் அதே வேலைக்கு குறைவான சம்பளத்தில் ஆட்களை தேர்வு செய்வது என்பது முரணானது" எனவும் முத்துகுமாரசாமி வேல் தெரிவித்தார்.
'சட்டங்களோ சலுகைகளோ கிடையாது'
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்ச்சி பெற்ற செவிலியர்கள் சுமார் முப்பதாயிரம் பேர் உள்ளதாகக் கூறும் முத்துகுமாரசாமி வேல், "எட்டு கோடிப் பேர் வசிக்கும் மாநிலத்தில் சுமார் 30 ஆயிரம் செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களில் 13 ஆயிரம் பேர் வரை தற்காலிக ஊழியர்களாக உள்ளனர்" என்கிறார்.
இவர்களுக்கு 18 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமாக தரப்படுவதாகக் கூறும் முத்துகுமாரசாமி வேல், "போராட்டத்தின் மூலமாகவே இந்தச் சம்பளத்தைப் பெற்றனர். இவர்கள் தேர்வு வாரியம் மூலமாக தகுதி பெற்று பணியில் சேர்ந்தவர்கள். ஆனால் தற்காலிகமாக பணியமர்த்தியுள்ளனர்" என்கிறார்.
"அரசுப் பணியில் 40 முதல் 50 சதவீத காலிப் பணியிடங்களை வைத்துக் கொண்டு குறைவான சம்பளத்துக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். இதனால் வேலையின் தன்மை மாறிவிடும். அரசின் சலுகைகள் கிடைக்காது என்பதால் அவர்களால் சிறப்பாக பணி செய்ய முடியாது" எனவும் அவர் குறிப்பிட்டார்.
"நிரந்தர தொழிலாளி செய்யும் அதே வேலையை ஒப்பந்த முறையில் பணியில் சேரும் தொழிலாளியும் செய்கிறார். ஆனால், அவருக்கு உரிய சம்பளமோ சட்டங்களோ சலுகைகளோ கிடையாது. இதை அரசே ஊக்குவிக்கிறது" எனக் கூறுகிறார் சி.ஐ.டி.யு மாநில தலைவர் அ.சவுந்தரராஜன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஒப்பந்த முறையில் இடஒதுக்கீடு என்பதே இருக்காது. இதனால் சமூக நீதி தான் பலியிடப்படுகிறது. ஒப்பந்தப் பணிகளில் எந்தச் சட்டத்தையும் மதிக்காத, ஏற்கெனவே உள்ள சட்டங்களையும் மீறும் வகையில் தவறுகள் நடக்கின்றன" எனவும் அவர் தெரிவித்தார்.
'அரசே, சட்டப்பூர்வமாக செய்கிறது'

பட மூலாதாரம், CV Ganesan
"ஓட்டுநர் போன்ற நிரந்தரமான பணிகளில் ஒப்பந்த தொழிலாளியை பயன்படுத்தக் கூடாது. ஆனால், மெட்ரோ ரயில்களில் ஓட்டுநர் பணியில் தற்காலிகமாக ஆட்களை பணியமர்த்துகின்றனர்" எனக் கூறும் அ.சவுந்திரராஜன். "சமவேலைக்கு சம ஊதியம் கொடுக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. ஆனால், அவ்வாறு நடப்பதில்லை" என்கிறார்.
ஒப்பந்த முறையில் ஆட்களை நிரப்பும் பணிகள் 1990-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கினாலும் கடந்த 10 ஆண்டுகளில் இதன் தாக்கம் அதிகரித்துவிட்டதாகவும் அ.சவுந்திரராஜன் குறிப்பிட்டார்.
"அரசு ஊழியர் என்பவர் அரசின் சொத்தாக பார்க்கப்படுகிறார். அரசின் திட்டங்களை செயல்படுத்தும் நபராகவும் இருக்கிறார். தனது அனுபவத்தை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறார். இந்த அனுபவம், ஒப்பந்த பணியாளர்களுக்குக் கிடைப்பதில்லை" என்கிறார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட செயலாளர் முத்துகுமாரசாமி வேல்.
"இளநிலை, முதுகலை படித்துவிட்டு தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டு அரசுப் பணித் தேர்வை எழுதுவதற்கு இளைஞர்கள் வருகின்றனர். நிரந்தர அரசுப் பணியே கிடைக்காது எனும்போது, எதற்காக படிக்க வேண்டும் என்ற கேள்வி தான் இளைஞர்கள் மத்தியில் எழுகிறது" எனவும் முத்துகுமாரசாமி வேல் குறிப்பிட்டார்.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் இருந்து ஒப்பந்தப் பணியாளர்களை எடுப்பது அதிகளவில் நடக்கத் தொடங்கிவிட்டதாகக் கூறும் முத்துகுமாரசாமி வேல், " இதையெல்லாம் தி.மு.க அரசு மாற்றும் என நினைத்தபோது அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் சட்டப்பூர்வமாக செய்கின்றனர்" என்கிறார்.
"ஒரே வேலைக்கு இரண்டு சம்பளம் என்பது சரியானதா என்பதை தொழிலாளர் நலத்துறை கண்காணிக்க வேண்டும். ஆனால், அரசுத் துறைகளில் நடப்பதைப் பற்றி தொழிலாளர் நலத்துறை கண்காணிப்பது இல்லை. அவர்களிடம் ஒப்புதலும் பெறப்படுவதில்லை" என்கிறார், முத்துகுமாரசாமி வேல்.

பட மூலாதாரம், Avadi Nasar
அமைச்சர்கள் சொன்னது என்ன?
தொழிற்சங்கங்களின் விமர்சனம் குறித்து தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனிடம் பிபிசி தமிழ் கேட்டது. "இந்த விவகாரம் குறித்துப் பிறகு பேசுகிறேன்" என்று மட்டும் அவர் பதில் அளித்தார்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் அயலக நலத்துறை அமைச்சர் ஆவடி நாசரிடம் பிபிசி தமிழ் பேசியது. "என்னுடைய உதவியாளரிடம் கேளுங்கள்" என்று மட்டும் பதில் அளித்தார்.
அவரிடம் பேசியபோது, "வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்கிறவர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்கான பணிகளை மட்டும் OMCL மூலமாக செய்யப்படுகிறது என கூறிய அவர், கூடுதல் விவரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டார்.
அரசுத் துறைகளுக்கு ஆட்களை அனுப்புவது தொடர்பான எந்த விளக்கத்தையும் அமைச்சர்களிடம் இருந்து பெற முடியவில்லை.
இதுதொடர்பாக அவர்கள் விளக்கம் அளிக்கும்பட்சத்தில் அவை இந்தக் கட்டுரையில் சேர்க்கப்படும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












