தீவிரமடையும் வடகிழக்குப் பருவமழை - தமிழகம் முழுக்க நிலவரம் என்ன? புகைப்பட தொகுப்பு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ள நிலையில் இன்று தமிழகம் முழுவதும் பரவலாக மழைப் பெய்து வருகிறது.

வானிலை ஆய்வு மையத் தகவலின்படி, கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியில் 14 செ.மீ, வேளாங்கண்ணியில் 13 செ.மீ, செங்கப்பட்டு அருகே மதுராந்தகத்தில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் கொளத்தூர், மாதாவரம், பெரம்பூர், அம்பத்தூர் உள்ளிட்டப் பகுதியில் 11 செ.மீ மழை பொழிவு பதிவாகி உள்ளது.

இதுதொடர்பாக, இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (டிச. 12) வெளியிட்ட அறிவிப்பில், "மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலைகொண்டுள்ளது. இது தென் தமிழகத்தை நோக்கி மேற்கு - வடமேற்கு திசையில் நகரும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை கடந்த 24 மணிநேரத்தில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

ஒரு சில தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நெல் வயல்களில் தண்ணீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

"நேற்று இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது.

இது அடுத்த 12 மணிநேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலு குறைந்து தென்தமிழகப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவக்கூடும்" என்று இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கினார்.

கடந்த 24 மணிநேர நிலவரப்படி தமிழகத்தில் நாகை மாவட்டத்தில் அதிக மழைப்பொழிவு பதிவான நிலையில், இன்று காலை 6.00 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலான நிலவரப்படி சென்னையை அடுத்துள்ள ஆவடியில் 18.7 செமீ மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து மழை நீரின் ஓட்டத்தை ஆய்வு செய்து மீட்பு பணிகளை மேற்கொள்வதாக மாநகராட்சி நிர்வாகம் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளது.

சென்னையில் சில இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. பழைய வண்ணாரப்பேட்டையில் மழையால் விழுந்த மரங்களை, மாநகராட்சி ஊழியர்கள் ஜேசிபி இயந்திரத்தைப் பயன்படுத்தி அகற்றியதாகத் தெரிவித்துள்ளனர்.

பருவமழை காரணமாக சென்னையில் தாழ்வான பகுதியில் தேங்கிய மழைநீர் 100 ஹார்ஸ்பவர் கொண்ட மின் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பழவந்தாங்கல் சுரங்கப்பாதை மற்றும் அரங்கநாதன் சுரங்கப்பாதை மழை காரணமாக மூடப்பட்ட நிலையில் தற்போது மழை நீர் அகற்றப்பட்டு மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து போலீசார் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளனர்.

அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறிய அவர் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட 16 சதவீதம் அதிகமாகப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. டிசம்பர் 15ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நாளை தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி இருக்கும் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்தப் பகுதிக்கு இன்றும் நாளையும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலு குறையும் என்ற போதிலும் நாளை கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, சென்னையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணிநேரத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த 3 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)