You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நயினார் நாகேந்திரன் பாஜக மாநிலத் தலைவரானதன் பின்னணியும் அரசியல் வியூகமும்
- எழுதியவர், சங்கரநாராயணன் சுடலை
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராக பதவியேற்றுள்ளார் நயினார் நாகேந்திரன்.
கடந்த 2017-ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு வந்த நயினார் நாகேந்திரனை தலைவராக்கியதன் மூலம் பாஜகவின் அரசியல் திட்டம் என்ன? நயினார் நாகேந்திரனின் பின்னணி என்ன?
உள்ளூர் மக்களால் "பண்ணையார்" என அழைக்கப்படும் நயினார் நாகேந்திரன் செல்வந்தரான குடும்பத்தைச் சேர்ந்தவர். நெல்லை பணகுடி அருகே உள்ள தண்டையார்குளம்தான் நயினாருக்கு சொந்த ஊர் என்றாலும், அரசியலுக்கு வரும் முன்னரே நெல்லை டவுனில் தொழில் உள்ளிட்ட தேவைகளுக்காக குடியேறிவிட்டார்.
நேரடியான அரசியல் பிரவேசத்திற்கு முன்னதாகவே, கட்சிப்பணிகளில் அவர் ஈடுபட்டிருந்தார். நெல்லையின் பழம்பெரும் அதிமுக தலைவரான கருப்பசாமி பாண்டியனின் ஆதரவாளராக அறியப்பட்டார் நயினார் நாகேந்திரன்.
பின்நாட்களில் கருப்பசாமி பாண்டியன் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு திமுகவுக்கு செல்ல, நயினார் நாகேந்திரன் அதிமுகவில் பெயர் சொல்லும் தலைவராக வளர்ந்திருந்தார். அப்போதும் கருப்பசாமி பாண்டியனுடன் பரஸ்பரம் நட்பு பாராட்டியதாகக் கூறுகின்றனர் நெல்லை மாவட்ட அதிமுகவினர்.
அரசியல் களம்
2001-ம் ஆண்டு கருப்பசாமி பாண்டியன் திமுகவுக்கு கட்சி மாறியது , இவருக்கு சாதகமாக திரும்பியது. 2001 முதல் 2006 வரையிலான ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் அமைச்சராகும் வாய்ப்பு இவருக்கு கிட்டியது.
அதிரடியான அமைச்சர் பதவி பறிப்புகள் சாதாரணமாக நடைபெறும் ஜெயலலிதா நிர்வாகத்திலும், முழுமையாக 5 ஆண்டுகள் அமைச்சராகவே தொடர்ந்தார் நயினார் நாகேந்திரன். பலமுறை துறைகள் மாற்றப்பட்டப் போதும் அமைச்சர் பதவியை இவர் இழக்கவில்லை.
2006-ம் ஆண்டு தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் (606 வாக்குகள்) நெல்லை தொகுதியில் தோல்வியடைந்தாலும், 2011-ம் ஆண்டு தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், அமைச்சரவையில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.
2016 சட்டமன்றத் தேர்தலிலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால் சிறிது காலம் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்த நயினார் நாகேந்திரன், 2017-ம் ஆண்டு பாஜகவில் இணைந்து கொண்டார்.
'முன்பு போல அதிமுக இல்லை'
"ஜெயலலிதாவின் தலைமையிலிருந்தது போல அதிமுக இப்போது இல்லை" என்று காரணம் கூறி 2017-ம் ஆண்டு பா.ஜ.க. வில் இணைந்த நயினார், இன்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்புக்கு வந்திருக்கிறார்.
பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை உடனான கருத்து வேறுபாடுகள் மற்றும் விமர்சனங்களே அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு காரணமாக கூறப்பட்டது. அண்ணாமலை அதிமுகவினரையும், அதிமுகவினர் அண்ணாமலையையும் பொதுத்தளத்தில் விமர்சித்ததையும் காண முடிந்தது.
இந்நிலையில் ஏற்கெனவே அதிமுகவில் இருந்தவரான நயினார் நாகேந்திரன் இந்த பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டிருப்பது, இரு கட்சிகளிடையே இணக்கமான சூழலை ஏற்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
பாஜகவிற்கு கட்சி மாறிய பின்னர் மூன்று தேர்தல்களை எதிர்கொண்டிருக்கிறார் நயினார் நாகேந்திரன். 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நெல்லை மக்களவைத் தொகுதியில் கூட்டணி கட்சியான அதிமுகவின் பி.எச்.மனோஜ் பாண்டியன் போட்டியிட, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் நயினார் நாகேந்திரன்.
சொந்த மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டம் வந்து போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், கணிசமான வாக்குகளைப் பெற்றார் நயினார்.
அனைத்து கட்சிகளுடன் இணக்கம்
இதன் பின்னர் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் நயினார் நாகேந்திரன்.
இந்த தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்ற போதும், அதிமுக கூட்டணியில் தேர்வான 4 பா.ஜ.க. எம்எல்ஏக்களில் ஒருவராக இருந்தார் நயினார் நாகேந்திரன்.
கட்சி பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்ட உறவுகளில் அனைத்துக் கட்சியினருடனும் இணக்கமான உறவு பாராட்டக்கூடியவராக நயினார் நாகேந்திரன் அறியப்படுகிறார். சட்டமன்றத்தில் சொந்த மாவட்டக்காரரான அப்பாவு சபாநாயகராக இருக்கும் சூழலில் பல சுவையான விவாதங்களிலும் நயினார் நாகேந்திரனின் பெயர் இடம்பெறத் தவறுவதில்லை.
நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தலைநகரை திருச்சிக்கு மாற்றுங்கள் என நயினார் நாகேந்திரன் கோரிக்கை வைக்க, இதனை அன்போடு பரிசீலிப்போம் என்று பதிலளித்திருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இதே போன்று தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் பெயர் அடிபட்ட போதே கடந்த பிப்ரவரி மாதம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஒரே மேடையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது மத்திய அரசை விமர்சித்த முதலமைச்சர், நயினார் நாகேந்திரன் கோபித்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொண்டதும் நடந்தது.
சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போதே, 2024ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க. சார்பில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டார். இத்தேர்தலில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தில் முடித்தார்.
சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை
இந்த தேர்தலில் நயினார் நாகேந்திரனை மையமாக வைத்து சர்ச்சைகளும் வலம் வந்தன. 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று பேரிடம் இருந்து ரூ.4 கோடியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சென்னை எழும்பூரிலிருந்து ரயில் மூலம் திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த அவர்களை தாம்பரத்தில் பறக்கும் படையினர் பிடித்தனர். சரியான ஆவணங்கள் இல்லாததால் அவர்களிடமிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்திருந்தனர்.
தேர்தலுக்கு சுமார் ஓராண்டுக்கு முன்பு 2023ம் ஆண்டில் நயினார் நாகேந்திரனின் மகன் பெயரிலான பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது. சென்னையில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் ஒன்று பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மகன் பெயரில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் ஒன்றில் பதிவு செய்யப்பட்டது.
நிலம் மோசடியாக பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறி, அறப்போர் இயக்கம் தலைமைச் செயலர், சென்னை நகர காவல்துறை, பத்திரப் பதிவுத்துறை அமைச்சர், பத்திரப் பதிவுத்துறை செயலர் ஆகியோருக்கு 2023 மார்ச் மாதம் புகார் அனுப்பி வைத்தது.
இதற்குப் பிறகு திருநெல்வேலி மாவட்ட மண்டல துணை பதிவுத்துறை தலைவர் இந்தப் பதிவை ரத்து செய்தார். இதுவும் அந்த நேரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
அரசியல் கணக்கு என்ன?
தற்போது பாஜகவின் மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்றிருப்பது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அரசியல் திறனாய்வாளர் ரவீந்திரன் துரைசாமி," பிற முக்குலத்தோர் சமுதாய தலைவர்களான டிடிவி தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் போன்றோரை மறைக்கும் அளவுக்கு நயினாரின் செல்வாக்கு உயருமா என்று கேட்டால், தேர்தல் அரசியலில் தங்களை நிரூபித்த தினகரன் மற்றும் , பன்னீர்செல்வத்துடன் ஒப்பிடுகையில் நயினார் நாகேந்திரன் சபார்டினேட் (துணை நிலைத் தலைவர்) தான். எனவே அவரை இவர்களுக்கு மாற்றாகக் கருத முடியாது. பாஜகவில் இருக்கும் இதே சமுதாயத்தைச் சார்ந்த மற்றவர்களோடு ஒப்பிடுகையில் , முக்குலத்தோர் மத்தியில் கட்சியை வளர்க்க நயினார் நாகேந்திரன் பயன்படலாம்.'' என்கிறார் அவர்
மேலும், ''தேர்தல் அரசியலைப் பொருத்தவரையிலும் சசிகலா தனது பலத்தை நிரூபிக்காதவர், ஆனால் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் தேர்தலை சந்தித்தவர்கள். குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு ஆர்.கே.நகர் தேர்தலை வென்றவர் டிடிவி தினகரன், கடைசியாக சந்தித்த தேனி மக்களவைத் தேர்தலில் 2வது இடமும் பெற்றிருக்கிறார். இதே போன்று ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தவர். மற்றவகையில் தேசிய கட்சியின் மாநிலப் பொறுப்பில் இருப்பவரை, தேர்தலில் நிரூபித்த தலைவர்களுடன் ஒப்பிட தேவையில்லை" என்றார்.
"தேசிய கட்சியின் நிழல்"
மேலும் தேசிய கட்சியான காங்கிரசில் மாநிலத் தலைவராக இருக்கும் செல்வப் பெருந்தகையின் வளர்ச்சிக்கென ஒரு எல்லை இருப்பதைப் போலத்தான், நயினார் நாகேந்திரனும் தேசிய கட்சியின் அடையாளத்தால் அறியப்படுவார் என்று ரவீந்திரன் துரைசாமி கூறுகிறார்.
ஜெயலலிதாவை விமர்சித்த அண்ணாமலையை மேடையில் வைத்துக் கொண்டே, அதிமுகவுடனான கூட்டணியை அறிவித்திருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
''கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் திறன்களை பாஜக பயன்படுத்தும்" என அமித் ஷா கூறியிருக்கிறார்
தமிழ்நாட்டில் கட்சியை வளர்க்கும் நோக்கம் கொண்டிருக்கும் பா.ஜ.க. தற்போதைய அரசியல் சூழலில் நயினார் நாகேந்திரனை தேர்வு செய்திருப்பதும் கட்சியை வளர்ப்பதற்கான வியூகமே என்கின்றனர் அரசியல் திறனாய்வாளர்கள்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு