ஜே.பி. நட்டா: மோதி, அமித் ஷாவை அடுத்து பாஜகவின் சக்தி வாய்ந்த தலைவராக மாறுகிறாரா?

ஜே.பி. நட்டா

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், ஃபைசல் முகமது அலி
    • பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதியுடன் நடக்க முயன்ற ஜகத் பிரகாஷ் நட்டாவை அமித் ஷா தனது கையால் பின்னால் இழுத்த வீடியோ அதிகம் பகிரப்பட்டது. நரேந்திர மோதிக்கு அடுத்தபடியாக பாரதிய ஜனதா கட்சியின் உயர் தலைவராகவும், மோதிக்கு நெருக்கமானவராகவும் கருதப்படுபவர் அமித் ஷா.

ஜே.பி.நட்டா மேலும் ஓராண்டுக்கு கட்சியின் தலைவராக நீடிப்பார் என்று அமித் ஷா செவ்வாய்க்கிழமை ஊடகங்களிடம் தெரிவித்தார். ’இது ஒரு நல்ல செய்தி' என விவரித்த அவர், 'ஜெகத் பிரகாஷ் நட்டாவின் பதவிக்காலத்தை 2024 ஜூன் வரை நீட்டிக்க செயற்குழு ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளது’ என்றார்.

ஜே.பி. நட்டா தனது சிறப்பான தலைமையின் கீழ் மோதியின் பிரபலத்தை மேலும் விரிவுபடுத்தினார். 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய தொற்றுநோய் தாக்கத்தின்போது கூட அமைப்பின் பணிகளைத் தொடர்ந்தார் மற்றும் பலப்படுத்தினார் என்று அமித் ஷா கூறினார்.

அதிகாரத்தில் இருப்பவர்களின் எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்வதில் ஜே.பி. நட்டா ஒரு 'முன்மாதிரி' என்றும், ' எல்லை என்ன என்று வெளிப்படையாக கூறப்படாத போதிலும் கூட, எல்லை மீறாத திறமை அவருக்கு உண்டு' என்றும் அரசியல் ஆய்வாளர் ராதிகா ராமசேஷன் கூறுகிறார்.

மிகவும் சக்தி வாய்ந்த இரு தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவது எளிதல்ல. ஆனால் ஜே.பி.நட்டா கட்சியில் தனக்கென ஓர் இடத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக ராதிகா ராமசேஷன் கூறுகிறார்.

கட்சியின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டத்தின் போது வைக்கப்பட்ட கட்-அவுட்களில் நரேந்திர மோதிக்கு அடுத்தபடியாக அதிகம் காணப்பட்டவர் ஜேபி நட்டா. கூட்டம் நடந்த இடத்தின் நுழைவாயிலில் ஒருபுறம் மோதியின் கட்அவுட்டும், மறுபுறம் ஜேபி நட்டாவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தன.

தலைவராக நட்டாவின் செயல்பாடு

ஜே.பி.நட்டா

பட மூலாதாரம், ANI

ஆனால் மோதியின் ரோட்ஷோவில் ’நரேந்திர மோதி’ மட்டுமே காணப்பட்டார். அமித் ஷாவும் நட்டாவும் அவருடன் வாகனத்திலோ அல்லது அவருக்குப் பின்னால் இருந்த காரிலோ இருக்கவில்லை.

பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தின்போது ஊடக வட்டாரங்களிடையே ஒரு கேள்வி ஓடிக்கொண்டிருந்தது.

நட்டாவின் தலைமையின் கீழ், அவரது சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த தேர்தலில் கட்சி தோல்வியடைந்தது. அவர் பிறந்த இடமான பிகாரில் ஆட்சி கையைவிட்டுப்போனது. இந்த ஆண்டு ஒன்பது மாநிலங்களிலும், அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலும் நடக்க உள்ள நிலையில் கட்சியின் தலைமைபொறுப்பு அதுவரை அவரிடம் இருக்குமா என்பதே அந்த கேள்வி.

ஜகத் பிரகாஷ் நட்டா பிகாரில் பிறந்தவர். தொடக்கக் கல்விக்குப் பிறகு, பாட்னா பல்கலைக்கழகத்தில் பி.ஏ பட்டம் பெற்றார். பின்னர் இமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வியிலும் பட்டம் பெற்றுள்ளார்.

நட்டாவின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்த அமித் ஷா, ”அவரது தலைமையின் கீழ் கட்சி பிகாரில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டைப் பெற்றது. மகாராஷ்டிரா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பற்றி பேசினால், அவரது தலைமையில் கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது. உத்தராகண்ட், மணிப்பூர், அசாம் ஆகிய மாநிலங்களில் வெற்றி கிடைத்தது. மேற்கு வங்கத்திலும் ஒருசில இடங்கள் குறைவு காரணமாக ஆட்சியில் அமர முடியாமல் போனது. தமிழகத்தில் கட்சி ஒரு சக்தியாக உருவாகி வருகிறது. கோவாவில் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது,” என்றார்.

நட்டாவின் வளர்ச்சி

ஜே.பி.நட்டா

பட மூலாதாரம், Twitter/@JPNadda

குஜராத்தை குறிப்பிட்ட அமித் ஷா, "மோதி மற்றும் ஜே.பி. நட்டாவின் சிறப்பான தலைமையின் கீழ் நாங்கள் 156 இடங்களையும் 53 சதவிகித வாக்குகளையும் பெற்றோம். மோதியின் பிரபலத்தை நட்டா மேலும் விரிவுபடுத்தினார்," என்று குறிப்பிட்டார்.

"நரேந்திர மோதி பிரச்சாரகராகவும், கட்சி பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார். மிகவும் சக்திவாய்ந்த அரசு, ஆட்சியை பின்தொடரும் அமைப்பாக கட்சியை ஆக்கிவிடக்கூடாது என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அப்படி நடந்தால், பா.ஜ.க இருப்பிற்கான காரணமே முடிவுக்கு வந்துவிடும்,” என்று ராதிகா ராமசேஷன் கூறினார்.

ஜே.பி. நட்டா பிகாரில் நீண்ட காலம் இருந்தார். ஆனால் அவரது அரசியல் வாழ்க்கை இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து தொடங்கியது. 1990-களில் இமாச்சலப் பிரதேசத்தின் பொறுப்பு நரேந்திர மோதியிடம் இருந்தது. அப்போது முதல் மோதியுடனான அவரது நட்பு தொடர்ந்து வருகிறது.

2014 தேர்தல் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்தது. இதில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து மோதி கட்சியில் தனது நிலையை படிப்படியாக வலுப்படுத்தினார்.

அவரது தலைமையில் கட்சி முதலில் அமித் ஷாவை தலைவராக தேர்ந்தெடுத்தது. அவர் இரண்டு முறை கட்சியின் தலைவராக இருந்தார். அதன் பிறகு 2020 ஜனவரியில் கட்சியின் தலைமை ஜேபி நட்டாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு முன் அவர் சில நாட்கள் செயல் தலைவராகவும் இருந்தார்.

கொரோனா தொற்றுநோய் தாக்கம் காரணமாக, பூத் மட்டம் முதல் உயர்நிலை வரை தேர்தல் பணிகள் முடிவடையாததால், நட்டாவின் பொறுப்பு மேலும் சில காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கட்சி கூறுகிறது.

ஜே.பி. நட்டாவின் சவால்கள்

செயற்குழு கூட்த்தின் போது, ஜே.பி.நட்டாவின் பெயரை, பாதுகாப்பு அமைச்சரும், கட்சியின் முன்னாள் தலைவருமான ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார். அதற்கு அனைவரும் ஒப்புதல் அளித்தனர்.

பிகார் மாநிலத்தின் சார்பில் ஜூனியர் நீச்சல் போட்டியில் பங்கேற்றவரான ஜே.பி.நட்டா, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றுள்ளார். இதன் மூலம் கொரோனா தொற்றுநோய் காலகட்டத்திலும் தொண்டர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். மாணவப் பருவத்திலிருந்தே தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததால் அவருக்கு இது எளிதாக இருந்தது.

இருப்பினும்,தொடர்ந்து மூன்று முறை இமாச்சல பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த ஜே.பி.நட்டாவுக்கு, கட்சியில் இரண்டு வலுவானவர்களுடன் இணைந்து பணியாற்றுவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. தனது சொந்த மாநிலத்தில் தலைவரை நியமிக்க வேண்டிய மற்றும் குஜராத் விவகாரங்களை மேற்பார்வையிட வேண்டிய சந்தர்ப்பங்களும் அவருக்கு முன் வந்துள்ளன.

நரேந்திர மோதி மற்றும் அமித் ஷா இருவரும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். அதே வேளையில் இமாச்சலப் பிரதேசத்தில் தலைவர் நியமனத்தில் நட்டாவுக்கு சொந்த விருப்பம் இருப்பதும் இயற்கையானதே.

நட்டாவின் சிறப்புகள் என்ன?

ஜே.பி.நட்டா

பட மூலாதாரம், Twitter/@JPNadda

"உயர்மட்டத்தில் உள்ள இருவருக்குமே இவர் பொருத்தமாக இருக்கிறார். வேறு யாரையும் நம்ப இருவரும் விரும்பவில்லை. தங்களுக்கு சவாலாக இல்லாத ஒருவரைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள்,” என்று தனது பெயர் வெளியிடப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் பாஜகவை உன்னிப்பாகக் கவனித்து வரும் ஒருவர் தெரிவித்தார்.

அடல் பிஹாரி வாஜ்பாய் அரசின்போது கட்சித்தலைவராக இருந்த குஷாபாவ் தாக்கரே போலவே நட்டா உள்ளார் என்பது சில நிபுணர்களின் கருத்து. வாஜ்பாய், எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பிரமோத் மகஜன் போன்ற சக்தி வாய்ந்த தலைவர்கள் மத்தியில் பணியாற்றிய குஷாபாவ் தாக்ரே, தேவையில்லாத விஷயங்களில் சிக்கிக்கொள்வதை தவிர்த்து வந்தார்.

ஆனால் குஷாபாவ் போல அல்லாமல் நட்டா, சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார் என்றும் ஒரு வரம்புக்கு அப்பால் பின் தங்கியிருப்பதில் நம்பிக்கை இல்லாதவர் என்றும் மற்றவர்கள் கூறுகிறார்கள். மேலும் அவர் கூட்டங்கள் தொடர்பான எல்லா விஷயங்களையும் அதிக உழைப்புடன் ஆவணப்படுத்துகிறார். அனைவரையும் உடன் அழைத்துச் செல்வது அவரது பாணி. மேலும் முன்னேறிச்செல்ல இது அவருக்கு உதவிடும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: