You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கிய பயணிகள் 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது எப்படி?
- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன், சிராஜ்.
- பதவி, பிபிசி தமிழுக்காக
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.25 மணிக்கு திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. அந்த ரயிலில் சுமார் 957 பயணிகள் பயணித்தனர்.
ஆனால் அந்த பயணிகளுக்கு அப்போது தெரியாது, ஒரு இரவில் முடிய வேண்டிய பயணத்திற்கு இரண்டு நாட்களுக்கும் மேல் ஆகப் போகிறது என்று.
"நான் எனது குடும்பத்துடன் திருச்செந்தூர் வந்து சுவாமி தரிசனம் முடித்துவிட்டு சொந்த ஊரான மயிலாடுதுறை செல்வதற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினேன். அப்போது கனமழை பெய்து கொண்டிருந்தது. ரயில் புறப்பட்டு சுமார் 9:15 மணி அளவில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. ஸ்ரீவைகுண்டம் நிலையத்தில் ரயில் வெகு நேரம் நின்றது. கனமழை, சுற்றிலும் இருட்டுக்கு மத்தியில் இரயில் வெகு நேரம் நின்றதால் ஒருவித அச்சம் ஏற்பட்டது" என்கிறார் சுரேஷ்.
தன் குடும்பத்துடன் இரண்டு நாட்களாக இவர் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் தங்கி இருந்தார்.
"ரயில் இயக்கத் தொடங்கியபோது கனமழை பெய்து கொண்டிருந்தது. இதனால் மிகுந்த கவனத்துடன் தான் ஓட்டிக் கொண்டிருந்தேன். ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் வழக்கமாக செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நிற்கும் இடம் தான்" என்று கூறுகிறார் என்ஜின் லோகோ பைலட் ஷாஜு.
ஸ்ரீவைகுண்டதிற்கு அடுத்து இருக்கும் தாதன்குளம் அருகே கனமழையால் மண் அரிப்பு ஏற்பட்டு, தண்டவாளத்தின் அடிப்பகுதியில் இருந்த சரளைக் கற்கள் முழுவதும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் ரயில்வே தண்டவாளம் அந்தரத்தில் தொங்கிய படி நின்றது.
இந்த தகவல் உடனடியாக லோகோ பைலட் ஷாஜுவுக்கு தெரிவிக்கப்பட்டு, ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலிருந்து மேற்கொண்டு ரயிலை இயக்க வேண்டாமென அறிவுறுத்தப்பட்டது.
மாட்டில் பால் கறந்து குழந்தைகளின் பசியாற்றிய கிராம மக்கள்
அதிகபட்சமாக சில மணிநேரங்களில் நிலைமை சரியாகிவிடும் என நினைத்தவர்களுக்கு, விடிந்த பிறகும் கூட எந்த உதவியும் வராத போது தான் வெள்ள பாதிப்பின் தீவிரம் புரிய தொடங்கியது.
"ரயிலில் இருந்த பயணிகள் வேறு ரயில் கடந்து செல்வதற்காக காத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த நிலையில் ரயில்வே ஊழியர்கள் சிலர் கன மழை பெய்வதால் ரயில்வே தண்டவாளத்தில் உள்ள ஜல்லிக்கற்கள் அடித்துச் சென்றதால் தொடர்ந்து ரயில் செல்லாது என தெரிவித்தனர்" என்கிறார் பயணி சுரேஷ்.
வெள்ள நீர் ரயில் நிலையத்தை சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் ரயிலை விட்டு வெளியே வர வேண்டாம், இந்த பிரச்சனை ஒரு சில மணி நேரத்தில் சரி செய்யப்படும் என தெரிவித்திருந்த நிலையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நின்றது என்று நம்மிடம் கூறினார் சுரேஷ்.
"ஞாயிற்றுக்கிழமை இரவு ரயிலில் இருந்த முதியவர்கள், குழந்தைகள் மற்றும் ரயில் பயணிகள் தங்கள் கொண்டுவந்த உணவு மற்றும் மருந்துகளை எடுத்துக் கொண்டனர்.
அடுத்த நாள் திங்கள் கிழமை காலை எங்களுக்கு உணவு கிடைக்காததால் அருகில் இருந்த ஒரு கடைக்குச் சென்று பயணிகள் தங்களுக்கு தேவையான பிஸ்கட், பன் மட்டும் வாங்கி கொண்டனர்" என்றார்.
ரயில் நிலையத்தைச் சுற்றியிருந்த பகுதிகளில் பல இடங்களில் சாலைகள் உடைபட்டு வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், மீட்பு படையினரால் அந்த பகுதிக்கு செல்ல முடியவில்லை என தெற்கு இரயில்வே கூறியது. இதனால் மீட்புப் பணியில் மேலும் தாமதம் ஏற்பட்டது.
உணவில்லாது மிகுந்த கஷ்டப்பட்டு வந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் கிராம மக்கள் ரயில் பயணிகளின் உணவுக்காக பேருதவி செய்தனர் என்று கூறுகிறார் சுரேஷ்.
அவர் கூறியது, "கிராம மக்கள் ரயில் நிலையத்தின் அருகில் இருந்த பத்ரகாளியம்மன் கோவிலில் திங்கட்கிழமை காலையிலிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு வரை மூன்று வேளையும் உணவு சமைத்து எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் அனைவருக்கும் பசியாறினர்.
மேலும் ரயிலில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு கிராம மக்கள் மாட்டில் பால் கறந்து அதை காய்ச்சி ரயிலில் இருந்த ஒவ்வொரு பெட்டியாக சென்று பால் தேவைப்படுபவர்கள் வாங்கி கொள்ளுமாறு குழந்தை வைத்திருந்த ஒவ்வொருவரிடமும் கேட்டுகேட்டு கொடுத்தனர். ரயில் பயணிகள் அனைவரும் அந்த கிராம மக்களுக்கு மிகுந்த கடமைப்பட்டுள்ளோம்"
ஹெலிகாப்டர் மூலம் வழங்கப்பட்ட உணவு
தொடர்ந்து பேசிய சுரேஷ், "இன்று காலை ஹெலிகாப்டர்களில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. ஆனால் யாரையும் மீட்கும் பணியில் ஹெலிகாப்டரில் வந்தவர்கள் ஈடுபடவில்லை. பின்னர் மாலை நேரத்தில் ரயில்வே மீட்பு படையினர் ரயில் நிலையத்திற்கு வந்து ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலிருந்து கயிறு கட்டி ஒவ்வொரு நபராக அருகில் உள்ள வெள்ளூர் என்ற கிராமத்திற்கு அழைத்து வந்தனர்.
அங்கிருந்து முதல் கட்டமாக ஆறு பேருந்துகளில் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்துக்கு அழைத்து செல்கின்றனர். இன்னும் ரயில் நிலையத்தில் 400க்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர்" என்றார்.
தன்னுடைய வயதுக்கு இவ்வாறான இயற்கை பேரிடரை சந்தித்ததில்லை எனவும் தானும் தன் குடும்பமும் கடந்த இரண்டு நாட்களாக மிகுந்த அவதி அடைந்ததாகவும் கூறுகிறார் சுரேஷ்.
மேலும் ரயில் பயணிகளுக்கு உதவிய கிராம மக்கள் வசிக்கும் பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, மீட்பு குழுவினர் யாரும் இதுவரை அந்த கிராமத்திற்கு வரவில்லை எனவும், அரசு மீட்பு குழுக்கள் அந்த கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட கிராம மக்களை காப்பாற்ற வேண்டுமென சுரேஷ் கோரிக்கை வைத்துள்ளார்.
இறுக்கமான மனநிலையில் பெண்கள்
ரயிலில் மாட்டிக்கொண்ட மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரி பிபிசி தமிழிடம் பேசுகையில், "கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்செந்தூரில் இருந்து கனமழையுடன் ரயிலில் புறப்பட்டோம்.
தண்டவாளங்கள் ஏற்பட்ட பழுது காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்படவில்லை. தொடர்ந்து கனமழை பெய்ததால் இரவு முழுவதும் ரயில் விட்டு வெளியே வராமல் ரயிலின் உள்ளேயே படுத்து உறங்கினோம்.
திங்கட்கிழமை காலை மழையின் தாக்கம் சற்று குறைந்ததை அடுத்து குழந்தைகள், பெரியவர்கள் பசியால் மிகவும் அவதிப்பட்டனர். அருகில் இருந்த கடைகளில் தின்பண்டங்களை மட்டுமே வாங்க முடிந்தது.
நாங்கள் ரயில் நிலையத்தில் உணவின்றி சிக்கி தவிப்பதை அறிந்த ஸ்ரீவைகுண்டம் கிராம மக்கள் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து உணவளித்து எங்களை காப்பாற்றினார்கள்" என்று கூறுகிறார் மகேஸ்வரி.
மேலும் அவர் கூறுகையில், "ரயிலில் மாட்டி கொண்டவர்கள் பலர் தினசரி மருந்து எடுத்துக் கொள்ளும் முதியவர்கள். அவர்கள் தங்களுக்கு தேவையான மருந்துகளை வைத்திருந்ததால் உடல் ஆரோக்கியம் மோசமடையாமல் பார்த்து கொண்டனர்.
ரயிலில் இருந்த பெண்களை பொறுத்த அளவு மிகுந்த இறுக்கமான மனநிலை இருந்ததை காண முடிந்தது. ரயிலை விட்டு வெளியே வந்தால் கனமழை, எனவே ரயிலுக்குள்ளேயே முடங்கி இருக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது" என்கிறார் மகேஸ்வரி.
ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்துவிட்டு திங்கட்கிழமை காலை சொந்த ஊருக்கு திரும்பி எனது மகள் தேர்வு எழுத இருந்தாள், ஆனால் இன்று தான் நாங்கள் மீட்கப்பட்டுள்ளோம். இதனால் எனது மகள் தேர்வு எழுத முடியவில்லை என வேதனைப்படுகிறார் மகேஸ்வரி.
கனமழை காரணமாக முன்னெச்சரிக்கையாக ரயிலை ரத்து செய்திருந்தால் இந்த நிகழ்வை தவிர்த்து இருக்கலாம், ரயில் பயணிகள் அனைவரும் இறுக்கமான மனநிலையில் தான் இதுவரை இருக்கிறோம் என்று கூறிய அவர்,
மேலும், "செவ்வாய்க்கிழமை காலை ஹெலிகாப்டரில் இருந்து உணவு பொட்டலங்கள் மட்டுமே வழங்கப்பட்டன. யாரையும் மீட்கும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடவில்லை. அதன் பின்னர் ரயில்வே மீட்பு படையினர் வந்து பேருந்துகளில் அழைத்துச் சென்றனர்" என்றார் மகேஸ்வரி.
தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து
"மதிய வேளையில் மழை குறைந்து, வெள்ளம் சற்று வடியத் தொடங்கியதும் வயதானவர்கள் சிலர் தவிர்த்து, மற்ற அனைவரும் வெள்ள நீரில் நடந்தே ரயில் நிலையத்தை விட்டு வெளியே சென்றோம். எங்களுடன் என்.டி.ஆர்.எஃப் குழுவும் இருந்தது. சிலரை படகுகள் மூலமும் மீட்டனர்" என்று கூறினார் செந்தூர் இரயிலின் ஓட்டுநர் ஷாஜு.
"நாங்கள் வெளியே சற்று தூரம் வந்தவுடன், அங்கு ஆறு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதன் மூலமாக நாங்கள் மணியாச்சி இரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டோம். இங்கு எங்களுக்கு அனைத்து உதவிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேறொரு ரயில் மூலமாக பயணிகள் அனைவரும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்" என்று அவர் கூறினார்.
"இரயில் ஸ்ரீவைகுண்டம் நிலையத்திற்கு வந்தவுடன், மேற்கொண்டு இரயிலை இயக்க வேண்டாம் என இரயில்வே துறை எனக்கு எச்சரிக்கை அளித்தது. அதனால் நான் ரயிலை அங்கேயே நிறுத்தி விட்டேன். இதனால் ஒரு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது" எனக் கூறுகிறார் ஷாஜு.
இரண்டு நாட்களாக இரயில் நிலையத்தில் கழித்தது மறக்க முடியாத அனுபவம் என்றும், இரயில்வே தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தது, சுற்றியிருந்த அனைத்து கிராம மக்கள் மிகவும் உதவியாக இருந்தனர். இது போன்ற பேரிடர் காலங்களில் பிறரைக் குறை கூறாமல் கிடைத்த உதவிகளுக்கும் வாய்ப்புகளும் நன்றி கூற வேண்டும்" என்கிறார் ஷாஜு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)