You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா - ஐரோப்பா சரக்கு கப்பல் சேவையில் புதிய சிக்கல் - 'கண்ணீர் வாசலில்' என்ன நடக்கிறது?
ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சமீபத்தில் கப்பல்களைத் தாக்கியதைத் தொடர்ந்து, உலகின் பெருநிறுவனங்கள் செங்கடல் வழியாகச் செல்லும் தங்களது அனைத்து கப்பல் போக்குவரத்தையும் நிறுத்துவதாக அறிவித்துவருகின்றன.
சமீபத்திய இந்த அறிவிப்பைச் செய்த பெரிய நிறுவனம், எண்ணெய் நிறுவனமான பிரிட்டிஷ் பெட்ரோலியம் (BP).
இதற்குமுன் மேர்ஸ்க் (Maersk) போன்ற உலகின் மிகப்பெரிய கப்பல் நிறுவனங்கள் உலகளாவிய வர்த்தகத்தில் முக்கியமாக விளங்கும் இந்தப் பாதையில் தங்கள் கப்பல்கள் செல்வதை நிறுத்தின. ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 18), ஹூதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, பிரிட்டன், பஹ்ரைன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, சீஷெல்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகியவற்றின் பங்கேற்புடன் ஒரு சர்வதேச கடற்படையை அமெரிக்கா அறிவித்தது.
செங்கடலில் கடல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ‘ஆபரேஷன் ப்ராஸ்பெரிட்டி கார்டியனைத்’ தொடங்குவதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் அறிவித்திருக்கிறார்.
உலக வர்த்தகத்தில் மிக முக்கிய பாதை
எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மற்றும் நுகர்வோர் பொருட்களை கொண்டு செல்வதற்கான உலகின் மிக முக்கியமான பாதைகளில் செங்கடல் ஒன்றாகும்.
S&P குளோபல் மார்க்கெட் இன்டலிஜென்ஸ் என்ற ஆலோசனை நிறுவனம் நடத்திய ஆய்வில், ஐரோப்பா, மத்திய கிழக்கு, மற்றும் வட ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் கிட்டத்தட்ட 15% இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து செங்கடல் வழியாக அனுப்பப்பட்டதாகக் கண்டறியப்பட்டது. அதில் 21.5% சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், 13% க்கும் அதிகமானது கச்சா எண்ணெய்.
‘கண்ணீர் வாசல்’ என்றும் அழைக்கப்படும் மந்தப் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களை ஹூதிகள் குறிவைக்கிறார்கள். இதனால், இந்த 32 கி.மீ. அகலமுள்ள நீரிணை கப்பல்கள் செல்வதற்கு ஆபத்தானதாக மாறியுள்ளது.
அரேபிய தீபகற்பத்தில் இருக்கும் ஏமன், மற்றும் ஆப்பிரிக்கக் கடற்கரையில் உள்ள ஜிபூடி மற்றும் எரித்திரியா ஆகிய நாடுகளுக்கு இடையே அமைந்துள்ளது.
இது ஒரு முக்கியமான கடல் வழியான சூயஸ் கால்வாயை தெற்கிலிருந்து கப்பல்கள் அடையும் பாதையாகும்.
சமீபத்திய தாக்குதல்
உலகின் இரண்டாவது பெரிய கப்பல் நிறுவனமான மேர்ஸ்க், கடந்த வாரம் செங்கடல் வழித்தடத்தில் ஏற்றுமதியை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. அதன் ஒரு கப்பல் மற்றும் ஒரு கண்டெய்னர் கப்பல் மீது நடத்தப்பட்ட, ‘மயிரிழையில் தப்பிய’ தாக்குதலுக்குப்பின் நிலைமை ‘ஆபத்தானது’ என்று விவரித்திருந்தது.
அதைத் தொடர்ந்து உலகின் மிகப்பெரிய கப்பல் குழுவான மெடிடரேனியன் ஷிப்பிங் கம்பெனி (எம்.எஸ்.சி) தனது கப்பல்களையும் அந்தப் பகுதியிலிருந்து திருப்பி விடுவதாகக் கூறியது.
திங்கட்கிழமை (டிசம்பர் 18), உலகின் மிகப்பெரிய கப்பல் நிறுவனங்களில் ஒன்று, இனி செங்கடல் வழியாக இஸ்ரேலிய சரக்குகளை கொண்டு செல்லாது என்று கூறியது.
பிபிசி பார்த்த ஒரு அறிக்கையில், எவர்கிரீன் லைன் நிறுவனம், ‘கப்பல்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக, உடனடியாக இஸ்ரேலிய சரக்குகளை ஏற்றுக்கொள்வதை தற்காலிகமாக நிறுத்த முடிவுசெய்திருப்பதாக’ அறிவித்திருந்தது. மேலும் அதன் கண்டெய்னர் கப்பல்கள் செங்கடல் வழியாக செல்வதை மறுஅறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தியது.
இந்தியா - ஐரோப்பா சரக்கு கப்பல் சேவையில் புதிய சிக்கல்
மந்தப் நீரிணையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, கப்பல்கள் இப்போது தென் ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையை சுற்றிகொண்டு ஒரு நீண்ட பாதையில் செல்ல வேண்டும். இதனால் பயணம் சுமார் 10 நாட்கள் நீளும். இதற்கு பல மில்லியன் டாலர்கள் அதிகமாகச் செலவாகும்.
"நுகர்வோர் பொருட்கள் தான் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொள்ளும். இருப்பினும் தற்போதைய இடையூறுகள் சீசன் இல்லாத சமயத்தில் நிகழ்கின்றன," என்று S&P குளோபல் மார்க்கெட் இன்டலிஜென்ஸ் நிறுவனத்தின் கிறிஸ் ரோஜர்ஸ் கூறினார்.
ஆசியா, மத்திய தரைக்கடல், ஐரோப்பா, அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை ஆகிய பகுதிகளுக்கு இடையே நீண்ட பயணங்களை மேற்கொள்ளும் கண்டெய்னர்களும் தென் ஆப்பிரிக்காவைச் சுற்றி திருப்பி விடப்படும் என்று எவர்கிரீன் லைன் தெரிவித்துள்ளது.
சரக்கு விகிதங்களின் தரவுகளை ஆய்வு செய்யும் நிறுவனமான செனெட்டாவின் தலைமை ஆய்வாளர் பீட்டர் சாண்ட், சரக்குகள் தாமதமாக வருவதை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க கப்பல் நிறுவனங்கள் இப்போது தொடர்பு கொள்ளும் என்றார். “இது போன்ற ஒரு சூழ்நிலைக்கு கண்டிப்பாக விலை கொடுக்க வேண்டும்,” என்றும் கூறினார்.
அதிக இன்சூரன்ஸ் பிரீமியங்கள் போன்ற சங்கிலித் தொடர் விளைவுகளை தொழில்கள் எதிர்கொள்ளும் என்று அவர் கூறினார். ஆனால் 2021-ஆம் ஆண்டில் எவர் கிவன் என்ற பெரும் கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்கியபோது விளைந்த நெருக்கடியைச் சமாளித்ததைவிட கப்பல் நிறுவனங்கள் தற்போது சிறந்த நிலையில் உள்ளன என்று குறிப்பிட்டார்.
எண்ணெய் விலை உயரும்
சரக்கு மற்றும் போக்குவரத்துக்கான பட்டய நிறுவனத்தைச் சேர்ந்த சூ டெர்பிலோவ்ஸ்கி, எரிபொருள் மற்றும் நேரத்தின் கூடுதல் செலவுகள் ஒருபுறமிருக்க, போர் அபாயங்களின் மீதான காப்பீட்டுச் செலவுகள் ‘அதிவேகமாக’ அதிகரித்து வருவதாகவும், வாடிக்கையாளர்களும் அதிக விலையை எதிர்கொள்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
மற்ற பெரிய எண்ணெய் நிறுவனங்களும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தைப் போலவே கப்பல்களின் பாதையை மாற்ற முடிவெடுத்தால், எண்ணெய் விலை உயரக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எண்ணெய் விலைக்கான சர்வதேச அளவுகோலான ப்ரெண்ட் கச்சா (Brent Crude) எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 78.44 அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
"இந்த கட்டத்தில் தாக்கம் எவ்வளவு குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை" என்று யூரேசியா குழுமத்தின் ஆய்வாளர் கிரிகோரி ப்ரூ கூறினார்.
"பல கப்பல் நிறுவனங்கள் தங்கள் போக்குவரத்தை திசை திருப்பினாலும், இடையூறு ஓரிரு வாரங்களுக்கு மேல் நீடித்தால், விலை மேலும் உயர வாய்ப்புள்ளது," என்றார் ப்ரூ.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)