அதானி, செபியை குறிவைத்த ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் வேலை, அதன் பின்னணி என்ன?

காணொளிக் குறிப்பு, இந்தியாவில் மீண்டும் பேசுபொருளான ஹிண்டன்பர்க் - இந்த நிறுவனத்தின் பின்னணி என்ன?
அதானி, செபியை குறிவைத்த ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் வேலை, அதன் பின்னணி என்ன?

அதானி குழுமத்தை அடுத்து இந்தியாவில் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையமான செபியின் தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் மீதும் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது ஹிண்டன்பர்க் நிறுவனம்.

இந்தியாவில் பெரும் பேசுபொருளாகியுள்ள இந்த ஹிண்டர்பர்க் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இதன் தலைவர் நேதன் எனப்படும் நெட் ஆண்டர்சன். 2017-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.

2020 முதல் 30 நிறுவனங்களின் ஆய்வு அறிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளது என்றும் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான அடுத்த நாளிலேயே அந்த நிறுவனங்களின் பங்குகள் சராசரியாக 15% சரிந்தன என்றும் ப்ளூம்பெர்க் அறிக்கை கூறுகிறது.

கணக்கியல் முறைகேடுகள், முக்கியமான பதவிகளில் தகுதியற்ற நபர்கள், வெளிப்படுத்தப்படாத பரிவர்த்தனைகள், சட்டவிரோத அல்லது நெறிமுறையற்ற வணிகம் உள்ளிட்ட சந்தர்ப்பங்களில் ஒரு நிறுவனத்தை பற்றி ஹிண்டன்பர்க் விசாரிக்கும் என அதன் இணையத்தில் கூறப்பட்டுள்ளது.

1937-ல் நடந்த ஹிண்டன்பர்க் விமான விபத்தை முற்றிலும் மனிதனால் நேர்ந்த பேரிடர் என கூறும் நிறுவனம், அதேபோல சந்தைகளில் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளை கண்டறிந்து அது அதிகப்படியான நபர்களைப் பாதிக்கும் முன்பாக வெளிச்சம் போட்டுக் காட்டுவதை நோக்கமாக கொண்டு அதே பெயரை வைத்திருப்பதாக அதன் இணைய பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)