ஆதிபுருஷ் விமர்சனம் - ராமனாக ரசிகர்களை ஈர்க்கிறாரா பிரபாஸ்?

இந்தியா, சினிமா, ராமாயணம்

பட மூலாதாரம், TWITTER

இந்தியாவின் இதிகாசக் கதைகளில் ஒன்றான ராமாயணத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் ‘ ஆதி புருஷ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. 500 கோடி அளவில் மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் பற்றிய ரசிகர்கள், ஊடகங்களின் பார்வை என்ன?

தென்னிந்தியாவின் முக்கிய நட்சத்திரமாகக் கருதப்படும் பிரபாஸ், பாலிவுட் நடிகர்கள் சைஃப் அலிகான், கீர்த்தி சனோன், சன்னி சிங், தேவ்தத்தா நாகே உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பாலிவுட் இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ளார்.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு, சஞ்சித் பல்ஹாரா மற்றும் அங்கித் பல்ஹாரா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். மேலும் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆதி புருஷ் கதைக்களம் என்ன?

இந்தியா, சினிமா, ராமாயணம்

பட மூலாதாரம், UV CREATIONS/FACEBOOK

ராமாயணத்தை மையமாகக் கொண்டு, கறுப்பு வெள்ளை சினிமா காலத்திலிருந்தே இந்தியாவில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பல தொலைக்காட்சி தொடர்களும் எடுக்கப்பட்டிருக்கின்றன.

‘சீதையை (கீர்த்தி சனோன்) கவர்ந்து செல்லும் ராவணனிடம் (சைஃப் அலிகான்) போரிட்டு, ராமன் (பிரபாஸ்) எப்படி தனது மனைவியை மீட்கிறார்’ என்பதே தற்போது வெளியாகியிருக்கும் ஆதிபுரூஷ் திரைப்படத்தின் மையக்கருவாக இருக்கிறது.

இது ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்த கதையாக இருந்தாலும், பிரபாஸ் போன்ற பெரும் நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக படத்தின் காட்சிகளை படக்குழுவினர் எப்படி வடிவமைத்திருப்பார்கள், இப்படத்திற்கான திரைக்கதை எப்படியிருக்கும் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் காணப்பட்டன.

ஆனால் அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த படம் பெரும் ஏமாற்றத்தை மட்டுமே அளித்துள்ளதாக பெரும்பாலான ஊடக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

மோசமான கிராஃபிக்ஸ் காட்சிகள்

இந்தியா, சினிமா, ராமாயணம்

பட மூலாதாரம், TWITTER

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய போதே, மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இப்படம் உருவாக்கப்படுகிறது என்ற செய்தி வெளியானது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசரில் வெளிப்பட்ட மிக மோசமான அனிமேஷன் காட்சிகள், சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்யப்பட்டன.

இதனையடுத்து படத்தில் அனிமேஷன் காட்சிகளின் தரம் மேம்படுத்தப்படும் என்று படக்குழு அறிவித்தது. ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் படத்தில், அப்படி மேம்படுத்தப்பட்ட எந்தவொரு காட்சிகளும் தெரியவில்லை என இந்து தமிழ் திசை விமர்சித்துள்ளது.

இதுகுறித்து இந்து தமிழ் திசை வெளியிட்டிருக்கும் விமர்சனத்தில், “ஆதி புருஷ் டீசருக்கு கிடைத்த மோசமான வரவேற்பையடுத்து, 100கோடி ரூபாய் செலவில் படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் மேம்படுத்தப்படும் என படக்குழு அறிவித்தது. ஆனால் படத்தின் அனிமேஷனில் எந்தவொரு முன்னேற்றமும் தெரியவில்லை. ஏறக்குறைய ரூ.500 கோடி பட்ஜெட் செலவு செய்து, மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் படத்தின் அனிமேஷன் இந்தி சீரியல்களில் வரும் கிராபிக்ஸுக்கு ஒப்பாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், “படம் 3டியில் வெளியாகியிருப்பதால் மட்டுமே வீடியோ கேம் போன்ற கிராபிக்ஸ் காட்சிகளை ஓரளவு சகிக்க முடிகிறது. கோடிகளைக் கொட்டி எடுக்கப்படும் இந்தியப் படங்களால் ஏன் இன்னும் ஒரு சாதாரண ஹாலிவுட் அனிமேஷன் படத்தில் இருக்கும் தரத்தைக் கூட எட்டமுடியவில்லை” என்றும் இந்து தமிழ் திசை கேள்வியெழுப்பியிருக்கிறது.

“மோசமான கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்களுடன் பாலிவுட்டில் வெளிவந்திருக்கும் படம் ஆதிபுருஷ்” என இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சித்துள்ளது.

அதேபோல் ”படத்தின் அனிமேஷன் காட்சிகள் அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை” என டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளமும் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.

பிரபாஸ் ராமனாக ஈர்க்கிறாரா?

இந்தியா, சினிமா, ராமாயணம்

பட மூலாதாரம், TWITTER

இப்படத்தில் ராமனாக நடித்திருக்கும் பிரபாஸின் நடிப்பு அவ்வளவு ரசிக்கும்படி இல்லை என இந்து தமிழ் திசை கூறியுள்ளது.ராமனாக நடித்திருக்கும் பிரபாஸ் வைத்திருக்கும் கடா மீசையும், அவரது முரட்டுத்தனமான உருவமும் கதாபாத்திரத்துக்கு சுத்தமாக ஒட்டவில்லை என இந்து தமிழ் திசை குறிப்பிடுகிறது.

“பிரபாஸ் படம் முழுக்க முகத்தில் எந்தவொரு உணர்ச்சியையும் காட்டாமல் வந்து செல்கிறார். எமோஷனல் காட்சிகள், ஆக்‌ஷன் காட்சிகள் என எல்லாவற்றிலும் ஒரே போன்ற நடிப்பை வெளிப்படுத்துகிறார்” என இந்து தமிழ் திசை விமர்சித்துள்ளது.

பிரபாஸை விட படத்தில் ராவணன் கதாபாத்திரமாக வரும் சைஃப் அலிகான் நடிப்பில் ஈர்ப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.

ஆனால், “சைஃப் அலிகானின் நடிப்பு ஆரம்பத்தில் ஓரளவு ரசிக்க வைத்தாலும் படம் முழுக்க ஒரே மாதிரியான பாவனையை செய்து கொண்டிருப்பது எரிச்சலைத் தருகிறது” என்று இந்து தமிழ் திசை தெரிவிக்கிறது.

சீதையாக நடித்திருக்கும் கீர்த்தி சனோன் மட்டுமே குறை சொல்லமுடியாத நடிப்பை வழங்கி ஸ்கோர் செய்கிறார் எனவும் இந்து தமிழ் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.

”சில காட்சிகளில் சைஃப் அலிகான் ராவணனாகத் தோன்றினாலும், மற்ற சில காட்சிகளில் பாலிவுட் படங்களில் வரும் முகாலய அரசர்கள் போலத் தோற்றமளிக்கிறார்” என இந்தியன் எக்ஸ்பிரஸ் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஆதி புருஷ் திரைக்கதை சுவாரஸ்யமளிக்கிறதா?

இளைய தலைமுறையினரை ஈர்ப்பதற்காக ராமாயண கதையை மார்வெல் படங்களின் ஸ்டைலில் ஆக்‌ஷன் படமாக எடுக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் ஓம் ராவத் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.

“கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதிலும், ராமனும் சீதையும் எதற்காக வனவாசம் சென்றார்கள் என்பதை விளக்குவதிலும் நேரத்தைச் செலவிடாமல், சீதையைக் கடத்தி செல்லும் ராவணனிடம், ராமன் எப்படி போர் புரிந்து தனது மனைவியை மீட்டார் என்று நேரடியாகக் கதைக்குள் செல்கிறது ஆதிபுருஷ் திரைப்படம்” என டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிடுகிறது.

அதேசமயம் ஒரு இதிகாச கதையை, சூப்பர் ஹீரோ கதையாக சொல்ல முயன்று, அதில் இயக்குனர் தடுமாற்றம் அடைந்திருக்கிறார் எனவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

பொதுவாக ராமாயணம் கதைகளில் வெளிப்படும் எந்தவொரு உணர்வுகளும் ஓம் ராவத் இயக்கியுள்ள இந்த ஆதிபுருஷ் திரைப்படத்தில் வெளிப்படவில்லை என இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

, “ ஒரு இதிகாச கதையை ஆக்‌ஷன் படமாக எடுக்க முயன்றிருக்கிறார்கள். மேலும் இதில் வரும் சில ஆக்‌ஷன் காட்சிகள் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ், கேம் ஆஃப் த்ரோன்ஸ் மற்றும் பல படங்களை உங்களுக்கு நினைவுபடுத்தலாம்” எனவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிடுகிறது.

”எந்தவொரு தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் வெளியான திருவிளையாடல், கந்தன் கருணை போன்ற திரைப்படங்களை இப்போதும் பார்க்க முடிகிறது, ஆனால் ஆதிபுருஷ் படத்தின் தொடக்கத்தில் வரும் சண்டைக் காட்சியே படுசலிப்பை ஏற்படுத்துகிறது.” என இந்து தமிழ் திசை விமர்சித்துள்ளது.

படத்தின் கதை ஒரு யுத்தத்தை நோக்கித்தான் நகர்கிறது என்றால், படம் பார்ப்பவர்களிடம் ராமனும், ராவணனும் எப்போது மோதிக்கொள்வார்கள் என்ற பதற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் தொய்வான காட்சியமைப்புகள் படம் பார்ப்பவர்களிடம் சின்ன சலனத்தைக் கூட ஏற்படுத்தவில்லை என இந்து தமிழ் திசை குறிப்பிடுகிறது.

மொத்த படத்திலும், இசையமைப்பு மட்டும் ஆறுதல் அளிக்கும் விதமாக அமைந்துள்ளதாக ஊடக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. சஞ்சித் பல்ஹாரா மற்றும் அங்கித் பல்ஹாராவின் பின்னணி இசை படத்தை பல இடங்களில் தூக்கி நிறுத்த முயல்கிறது எனவும், அஜய் - அதுல், ராம சீதா ராம் ,ஞாழல் மலரே போன்ற பாடல்கள் ரசிக்க வைக்கின்றன எனவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: