அமெரிக்கா-சீனா முரண்படும் 3 விஷயங்கள் - பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்குமா?

டொனால்ட் டிரம்பும் சீனப் பிரதமர் ஜி ஜின்பிங்கும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டொனால்ட் டிரம்பும் சீனப் பிரதமர் ஷி ஜின்பிங்கும் வியாழக்கிழமை சந்திக்க உள்ளனர்.
    • எழுதியவர், ஆஸ்மண்ட் சியா
    • பதவி, வணிக செய்தியாளர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் சீன தலைவர் ஷி ஜின்பிங்கும் இன்று சந்தித்து பேசியுள்ளனர். இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்ற இதுவரை இல்லாத அளவுக்கு நெருக்கமாக உள்ளதாக தெரிகிறது.

இந்த வாரம் இரு தரப்பினரும், "தங்கள் கவலைகளைத் தீர்க்க" ஒருமித்த கருத்தை எட்டியுள்ளதாக தெரிவித்தனர். டிரம்ப் சீனப் பொருட்களுக்கு 100% வரி விதிப்பதாக அச்சுறுத்தியிருந்தார். ஆனால் அது அமல்படுத்தப்படாது என்று அமெரிக்க நிதி செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறினார்.

இது மட்டுமே ஒரே பிரச்னை அல்ல.

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் தற்போது பல துறைகளில் போட்டியிடுகின்றன. பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகள் முதல், உயர் தொழில்நுட்ப உற்பத்திக்குத் தேவையான முக்கிய கனிமங்கள் மற்றும் செமிகண்டக்டர்கள் வரை அவை போட்டி போடுகின்றன.

கூடவே, சீனாவைச் சேர்ந்த பிரபல செயலியான டிக்டாக், தேசிய பாதுகாப்பு காரணங்களால் இரு நாடுகளுக்குமிடையே நீண்டகால பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சந்திப்பு நடைபெற்ற சூழல் சற்று வித்தியாசமாக இருந்தாலும், இது உலக அரசியலுக்கு மிக முக்கியமான சந்திப்பு. "கோவிட் காலத்திற்குப் பிறகு உலகமயமாக்கலை மீட்டமைக்கும் முக்கிய தருணம் இதுதான்," என்கிறார் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் பேராசிரியர் டிம் ஹார்கோர்ட்.

டிரம்ப் மற்றும் ஷி ஜின்பிங் சந்திக்க 10 மாதங்கள் ஆயின. இந்த காலகட்டத்தில், பதிலடி வரிகள், நிலையற்ற சூழல், உலகம் முழுவதும் உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு உருவான நிச்சயமற்ற சூழல் போன்ற அனைத்தும் நிகழ்ந்தன.

இந்நிலையில், தற்போதைய சூழல் எப்படி உருவானது ?

வரிப்போர்

ஏப்ரல் மாத "விடுதலை தினத்திற்கு" முன்பே, டிரம்ப் சீனாவுக்கு எதிரான தனது வர்த்தகப் போரைத் தொடங்கினார். அப்போது அவர் பல நாடுகளின் மீது புதிய வரிகளை விதித்தார். இதனால் அமெரிக்காவின் நட்பு நாடுகளும் பாதிக்கப்பட்டன.

சீனா மீது டிரம்ப் நீண்ட காலமாக குறி வைத்திருந்தார். நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் என விமர்சித்து, தனது முதல் பதவிக் காலத்திலேயே சீனா மீது அவர் வரி விதித்திருந்தார்.

டிரம்பின் இரண்டாவது பதவிக்காலம் தொடங்கிய நேரத்தில், பிப்ரவரி மாதத்தில், சீனாவிலிருந்து வரும் அனைத்து இறக்குமதிகளுக்கும், அதற்கு முன்பு இருந்த வரிகளுக்கும் மேலாக கூடுதலாக 10% வரி விதித்தார்.

சீனா உடனடியாக பதிலடி கொடுத்து தன் வரிகளை உயர்த்தியது. அதற்கு பதிலாக, டிரம்பும் மீண்டும் நடவடிக்கை எடுத்து, சீனாவுக்கு எதிரான அமெரிக்க வரிகளை 20% ஆக உயர்த்தினார்.

பின்னர் "விடுதலை தினத்தன்று" டிரம்ப் மேலும் 34% வரி விதிப்பதாக மிரட்டினார். இதனால் இரு தரப்பும் தொடர்ச்சியாக பதிலுக்கு பதில் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. இறுதியில், அமெரிக்கா சீனாவுக்கு விதித்த வரிகள் 145% ஆகவும், சீனா அமெரிக்காவுக்கு விதித்த வரிகள் 125% ஆகவும் உயர்ந்தன.

இந்த அதிர்ச்சியூட்டும் வரி உயர்வுகள், உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களை பெரும் குழப்பத்திலும் நிச்சயமற்ற சூழலுக்குள்ளும் தள்ளின. சீனாவின் கிடங்குகளில் சரக்குகள் குவிந்தன. அதேசமயம், அமெரிக்க வணிக நிறுவனங்கள் திடீரென மாற்று விநியோகச் சங்கிலிகளை எவ்வாறு கண்டுபிடிப்பது என திணறின.

பின்னர் “விடுதலை தினத்தன்று” டிரம்ப் மேலும் 34% வரி விதிப்பதாக மிரட்டினார். இதனால் இரு தரப்பும் தொடர்ச்சியாக பதிலுக்கு பதில் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. இறுதியில், அமெரிக்கா சீனாவுக்கு விதித்த வரிகள் 145% ஆகவும், சீனா அமெரிக்காவுக்கு விதித்த வரிகள் 125% ஆகவும் உயர்ந்தன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க சோயாபீன்ஸ் மீது சீனா விதித்த வரிகள், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியை நிறுத்தியது.

இதற்கிடையில், டிரம்பின் உலகளாவிய வரி நடவடிக்கைகள் "மாற்று வழியில் பொருட்களை அனுப்பும்" (டிரான்ஸ்ஷிப்மென்ட்) முறையையும் குறிவைத்தது. அதாவது, சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் வியட்நாம் போன்ற பிற நாடுகள் வழியாக அனுப்பப்படுவதையும் அமெரிக்கா தடுக்க முயன்றது.

ஆனால் சீனா பின்வாங்கவில்லை.

நாங்கள் பேச்சுவார்த்தையை எதிர்நோக்கி உள்ளோம் என்று தொடர்ச்சியாக தெரிவித்துக்கொண்டே இருந்தது. அதே நேரத்தில், இழப்புகளையும் பொருளாதார சுமையையும் சீனா ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதும் தெளிவாக தெரிந்தது.

அதேபோல் சீனாவும் அமெரிக்காவுக்கு தாக்கம் ஏற்படுத்தும் வகையில் பதிலடி கொடுத்தது. உதாரணமாக, டிரம்பின் முக்கிய வாக்கு வங்கியான விவசாயிகளை குறிவைத்து, சோயாபீன்ஸ் போன்ற அமெரிக்க விவசாயப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்தது.

மேலும், ஆப்பிள் முதல் வால்மார்ட் வரை பல அமெரிக்க நிறுவனங்களை சீன உற்பத்தியில் இருந்து பிரிக்க டிரம்ப் எடுத்த முயற்சிகள் சில விதிவிலக்குகளால் பலவீனமடைந்தன. இதுவும் சீனாவுக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்தது.

இறுதியில், மே மாதத்தில் இரு தரப்பினரும் ஒரு தற்காலிக முடிவை எட்டினர். இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை பேச்சுவார்த்தையைத் தொடர ஒப்புக்கொண்டனர்.

அதிநவீன சிப்களுக்கான மோதல்

வரி தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருந்தபோதும், அமெரிக்கா–சீனா உறவில் மற்றொரு பெரிய பிரச்னையாக, ஸ்மார்ட்போன்கள் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) வரை அனைத்திலும் பயன்படும் அதிநவீன சிப்கள் குறித்த மோதல் தலைதூக்கியது.

இந்த சிப்கள் சீனாவின் பொருளாதார வளர்ச்சித் திட்டத்திற்கு மிகவும் அவசியமானவை. "உலகின் தொழிற்சாலை" என்ற நிலையிலிருந்து அதிநவீன தொழில்நுட்ப மையமாக மாற வேண்டும் என்பது சீனாவின் இலக்கு. ஆனால் மிகுந்த திறமையுள்ள நிபுணர்கள் இருந்தாலும், சீனாவின் சிப் தொழில் அமெரிக்காவை விட பின்தங்கியதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதற்காக, சீனா மேம்பட்ட சிப்கள் பெறுவதை அமெரிக்க அரசு தடுக்க முயன்றது. இது டிரம்ப் ஆட்சிக்கு முன்பே தொடங்கியிருந்தாலும், டிரம்ப் நிர்வாகம் அதை மேலும் கடுமையாகக் கட்டுப்படுத்தியது. அதாவது, மிகக் குறைந்த அளவிலான மேம்பட்ட சிப்கள் மட்டுமே சீனாவுக்கு அனுப்ப அனுமதி வழங்கப்பட்டது.

இந்த உத்தியின் மையமாக இருந்தது என்விடியா (Nvidia) எனும் உலகின் மிக உயர்ந்த நிறுவனம். இந்நிறுவனம் வடிவமைக்கும் சிப்கள் தொழில்துறையில் 'உயர்ந்த தரநிலை' கொண்டதாகக் கருதப்படுகின்றன.

சீனா என்விடியாவுக்கு மிகப் பெரிய சந்தை. அங்கிருந்து அது பில்லியன் கணக்கில் வருமானம் பெறுகிறது. அதனால், சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி பெறுவதற்காக, என்விடியா தனது சீன விற்பனையின் 15% ஐ அமெரிக்க அரசாங்கத்துக்கு செலுத்த ஒப்புக்கொண்டது.

ஆனால் அதன் பிறகு சீனா எதிர்பாராத நடவடிக்கை எடுத்தது. உள்ளூர் நிறுவனங்களிடம் 'அமெரிக்கச் சிப்களை வாங்க வேண்டாம்' என்று சீனா அறிவித்தது. அதற்கு பதிலாக, அலிபாபா மற்றும் ஹுவாவே போன்ற சீன நிறுவனங்களைச் சுற்றி தனது தொழில்துறையை ஒன்றிணைத்தது.

மேலும், என்விடியாவுக்கு எதிராக சீனா ஒற்றை ஆதிக்க எதிர்ப்பு (anti-monopoly) விசாரணையையும் தொடங்கியது.

சீனா என்விடியாவுக்கு மிகப் பெரிய சந்தை. அங்கிருந்து அது பில்லியன் கணக்கில் வருமானம் பெறுகிறது. அதனால், சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி பெறுவதற்காக, என்விடியா தனது சீன விற்பனையின் 15% ஐ அமெரிக்க அரசாங்கத்துக்கு செலுத்த ஒப்புக்கொண்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிப் தயாரிப்பு உட்பட மேம்பட்ட தொழில்துறை உற்பத்தியில் சீனா பெருமளவில் முதலீடு செய்கிறது.

தன்னிறைவு பெற்ற நாடாக மாற வேண்டும் என்ற சீனாவின் நீண்ட கால இலக்கை, இந்த நடவடிக்கைகள் சுட்டிக்காட்டுவதாக கூறுகிறார் எஸ். ராஜரத்தினம் சர்வதேச ஆய்வுகள் பள்ளியின் சீனக் கொள்கை ஆய்வாளர் ஸ்டெபானி காம்.

சீனா, தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறைகளில் பெரும் அளவில் முதலீடு செய்து வருகிறது. அதேசமயம், நிறுவனங்கள் புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், புதிய சவால்களை எதிர்கொள்ளவும் ஊக்குவிக்கப்படுகின்றன.

பொருளாதாரத்தின் குறிப்பிட்ட துறைகளை ஒருங்கிணைக்க அரசின் "திட்டமிட்ட தலையீட்டை" திறம்படப் பயன்படுத்தும் திறமையே, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் சீனாவை அதிக உறுதியானதாக காட்டுகிறது என்று ஸ்டெபானி காம் விளக்குகிறார்.

சீனா நீண்ட கால திட்டத்தை முன்னெடுக்கிறது என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அதாவது, நீடிக்கக்கூடியதா இல்லையா என்பதில் உறுதியில்லாத ஒரு ஒப்பந்தத்தில் அவசரப்படுவதற்குப் பதிலாக, மேற்கத்திய நாடுகளை குறைவாக நம்பும் தொழில்துறைகளை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தி முதலீடு செய்கிறது.

அரிய பூமி தாதுக்களுக்கான மோதல்

ஆனால், சீனா நீண்ட கால திட்டத்தை தேர்ந்தெடுத்துள்ளது என்பதால், அது அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய விரும்பவில்லை என்று அர்த்தமில்லை.

சீனாவின் அதிகாரங்களுக்கும் ஒரு எல்லை உண்டு என்று பேராசிரியர் டிம் ஹார்கோர்ட் விளக்குகிறார்.

உள்நாட்டில் சீனா எதிர்கொள்ளும் சவால்களான வேலையின்மை, குறைவான நுகர்வு மற்றும் ரியல் எஸ்டேட் நெருக்கடி போன்ற அனைத்தும் அதற்கு அழுத்தம் கொடுக்கின்றன.

சீனாவின் தலைமை, ஜனநாயகத் தேர்தல்களால் கட்டுப்படுத்தப்படவில்லை என்றாலும், நடுத்தர வர்க்கத்தின் நலத்தைப் பேணவும் , அரசியல் சூழலை உறுதிப்படுத்தவும் வேண்டிய பொறுப்பு அதற்கு உள்ளது என அவர் கூறுகிறார்.

"சீனாவின் உள்நாட்டு பிரச்னைகளை அமெரிக்கா நன்றாகவே அறிந்திருக்கும். சீனா மீது பெரும் அழுத்தம் உள்ளது. அவர்கள் நீண்டகால, கடுமையான வர்த்தகப் போரை விரும்ப மாட்டார்கள்," என ஹார்கோர்ட் குறிப்பிடுகிறார்.

பேச்சுவார்த்தை நடக்கும்போது வலுவான நிலையில் இருப்பது தான் ஜின்பிங்கின் குறிக்கோள். அதனால், அக்டோபர் மாதத்தில் சீனா 'அரிய பூமி கனிமங்கள்' (rare earths) ஏற்றுமதிக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து பதிலடி கொடுத்தது.

மின்னணுவியல் சாதனங்கள், பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்கள், போர் விமானங்கள் போன்ற ராணுவ உபகரணங்களில் பயன்படும் இக்கனிமங்களை பதப்படுத்துவதில் சீனா கிட்டத்தட்ட முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்த நகர்வு, வர்த்தகப் போரில் ஒரு திருப்புமுனையாக இருந்தது.

அமெரிக்காவின் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் சீனாவின் வளர்ச்சியை மந்தமாக்கலாம். ஆனால் சீனா அரிய பூமி கனிமங்களை கட்டுப்படுத்தினால், அது முழுமையாக எல்லா தொழில்துறைகளையும் முடக்கிவிடும் என்று ஆஸ்திரேலியாவின் எடித் கோவன் பல்கலைக்கழகத்தின் நவோயிஸ் மெக்டோனாக் கூறுகிறார்.

 டிரம்பும் ஜப்பான் பிரதமர் சானே தகைச்சியும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த வார தொடக்கத்தில் அரிய பூமி கனிமங்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு டிரம்பும் ஜப்பான் பிரதமர் சானே டாக்காய்ச்சியும்.

அரிய பூமி கனிமங்கள் குறித்த சீனாவின் அறிவிப்பு, அமெரிக்க அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

குறிப்பாக, டிக்டாக்கின் அமெரிக்க செயல்பாடுகளை விற்பனை செய்வதில் இரு தரப்பும் ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக டிரம்ப் அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு இதுகுறித்த அறிவிப்பு வந்தது. அமெரிக்காவின் ஒரு மூத்த வர்த்தக அதிகாரி இதை அமெரிக்கா–சீன வர்த்தக போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இழைக்கப்பட்ட "துரோகம்" என்று விமர்சித்தார்.

இந்த நடவடிக்கை, சீன வளங்களை அமெரிக்கா எவ்வளவு தூரம் சார்ந்திருக்கிறது என்பதை வெளிப்படையாக சுட்டிக்காட்டியது. அதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா தொடர்ச்சியான ஒப்பந்தங்களை மேற்கொண்டது. இவை அனைத்தும் அரிய பூமி கனிமங்களை சீனாவுக்கு வெளியே பெறுவதற்கான "காப்பீட்டு திட்டங்கள்" என பேராசிரியர் டிம் ஹார்கோர்ட் விளக்குகிறார்.

இந்த ஒப்பந்தங்கள், டிரம்ப் மற்றும் அமெரிக்க பேச்சுவார்த்தை குழு சீனாவுடன் உள்ள பதற்றங்களைத் தணிக்க முயன்று, வியாழக்கிழமை நடைபெறும் சந்திப்பை ஏற்பாடு செய்ய சீன அதிகாரிகளைச் சந்தித்த நேரத்தில் உருவானவை.

இரு நாடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் மிகப் பெரியவை, போட்டியும் ஆழமாக உள்ளது.

ஆனால் "எளிதில் அடையக்கூடிய சில பலன்கள் உள்ளன," என பேராசிரியர் ஸ்டெபானி காம் கூறுகிறார் . உதாரணமாக, சீனா குறைந்த வரிகளுக்கு மாற்றாக அரிய பூமி கனிமம் மீதான ஏற்றுமதி தடைகளை தற்காலிகமாக தாமதப்படுத்தலாம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பேச்சுவார்த்தைக்கு முன்தினம், சீனா இந்த பருவத்தின் முதல் சோயாபீன் சரக்குகளை வாங்கியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. இது டிரம்புக்கும் அமெரிக்க விவசாயிகளுக்கும் கிடைத்த ஒரு முக்கிய வெற்றி.

இதற்குப் பதிலாக, ஷி ஜின்பிங் சீனாவுக்கு சிப் விற்பனை மீதான கட்டுப்பாடுகளில் இருந்து சிறிதளவு தளர்வு அளிக்க முயல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆய்வாளர்கள் கணித்தபடி, டிக்டாக் ஒப்பந்தத்திற்கு இறுதி ஒப்புதல் கிடைத்தால், அது டிரம்பிற்கு கிடைக்கும் மற்றொரு முக்கிய வெற்றி ஆகும்.

ஒரு ஒப்பந்தம் எவ்வளவு பலவீனமானதாக இருந்தாலும், அது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய திடீர் முடிவுகளின் "ஆபத்தை குறைக்கலாம்," என்று பேராசிரியர் காம் கூறுகிறார்.

பேராசிரியர் ஹார்கோர்டும் அதேபோன்ற கருத்தைக் கொண்டுள்ளார்.

"டிரம்ப் நிர்வாகம் வரி தொடர்பான விஷயத்தில் இன்னும் சீரற்ற முறையில் நடந்து கொள்கிறது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை, உறவுகளைச் சமரசம் செய்யக்கூடும்."

ஆனால், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எந்த ஒப்பந்தமும் நிரந்தரமாக நீடிக்காது என்றும் அவர் எச்சரிக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு