ஆந்திராவில் பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய நபர்கள் - என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய நபர்கள் - என்ன நடந்தது?
ஆந்திராவில் பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய நபர்கள் - என்ன நடந்தது?

ஆந்திராவில் கடனை திருப்பிச் செலுத்தாத ஒரு பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நாராயணபுரம் கிராமத்தில் ஜூன் 16ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது. என்ன நடந்தது, அவர் ஏன் தான் தாக்கப்பட்டார் என்பதை ஷிரிஷா பிபிசியிடம் விளக்கினார்.

அடவி கொட்டாலாவைச் சேர்ந்த திம்மராயப்பா, நாராயணபுரத்தைச் சேர்ந்த முனிகண்ணப்பாவிடம் ரூ. 80,000 கடன் வாங்கிவிட்டு, கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டார். அவர் அருகிலுள்ள மற்ற கிராமத்தைச் சேர்ந்தவர்களிடமும் கடன் வாங்கியதாக போலீசார் கூறுகின்றனர். ஜூன் 16 ஆம் தேதி, ஷிரிஷா தனது மகனின் பள்ளி இடமாற்றச் சான்றிதழைப் பெற கிராமத்திற்கு வந்திருக்கிறார். அப்போது முனிகண்ணப்பாவின் குடும்பத்தினர் அவரைப் பிடித்து, ஒரு மரத்தில் கட்டி வைத்து கடனைத் திருப்பிச் செலுத்தக் கோரி தாக்கினர்.

ஷிரிஷாவை தாக்கிய நான்கு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் கூறுகின்றனர். ஷிரிஷா அளித்த புகாரின் பேரில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு நால்வரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குப்பம் டி.எஸ்.பி. பார்த்தசாரதி பிபிசியிடம் கூறினார். கடன் கொடுத்தவர்களின் கொடுமை தாங்க முடியாமல் தனது மகன் ஊரைவிட்டு சென்றுவிட்டதாக ஷிரிஷாவின் மாமியார் கூறுகிறார்.

ஷிரிஷா தாக்கப்பட்ட இடத்துக்கு பிபிசி சென்றது. முனிகண்ணப்பாவின் குடும்பத்தினருடன் பேச முயற்சித்தோம், ஆனால் கைது காரணமாக அவர்கள் வீடு பூட்டப்பட்டிருந்தது. ஷிரிஷாவின் குடும்பத்தினர் வசிக்கும் அடவி கொட்டாலாவிற்கும் பிபிசி சென்றது, ஆனால் அவர்களது வீடும் பூட்டப்பட்டிருந்தது. கிராமத்தில் யாரும் இந்த சம்பவம் குறித்து பேச விரும்பவில்லை. இந்த சம்பவம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தொகுதியில் நடந்ததால், அரசியல் ரீதியான விமர்சனங்களும் எழுந்தன. முதல்வர் சந்திரபாபு நாயுடு பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5,00,000 நிதி உதவி மற்றும் முழு ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு