You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பல்லாவரம்: திடீர் வயிற்றுப் போக்கால் நிலைகுலைந்த மக்கள், இருவர் மரணம் - குடிநீரில் கழிவுநீர் கலந்ததே காரணமா?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னை பல்லாவரத்தில் திடீர் வயிற்றுப்போக்கு ஒரு தெருவையே நிலைகுலைய வைத்துள்ளது. இதன் பாதிப்பால், இருவர் உயிரிழந்துள்ளதாகவும் 23 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
மீன் உணவு சாப்பிட்டதே இறப்புக்குக் காரணம் எனக் கூறுகிறார், அமைச்சர் தா.மோ.அன்பரசன்.
ஆனால், மாநகராட்சி குடிநீரில் கழிவுநீர் கலந்ததே இறப்புக்குக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். உண்மை நிலையை அறிய ஆய்வக முடிவுக்கு காத்திருப்பதாகக் கூறுகிறார், அமைச்சர் மா.சுப்ரமணியன்.
சென்னை பல்லாவரத்தில் உள்ள மலைமேடு, மாரியம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களில் 30க்கும் மேற்பட்டோருக்கு கடந்த புதன் கிழமையன்று (டிசம்பர் 4) கடும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
இவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தாம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் மலைமேடு பகுதியைச் சேர்ந்த 42 வயதான மெக்கானிக் மோகனரங்கம் என்பவர், வியாழக்கிழமை காலை வயிற்றுப்போக்கால் உயிரிழந்துவிட்டார். திரிவேதி என்ற 54 வயதான முதியவரும் மரணம் அடைந்துள்ளார்.
இவர்களின் மரணத்திற்கு வயிற்றுப்போக்கு காரணம் என்பதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார்.
ஒரே நேரத்தில் ஏராளமான மக்கள் அரசு மருத்துவனைகளில் குவிந்த தகவலையடுத்து, பல்லாவரம் பகுதிக்கு அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்ரமணியன் ஆகியோர் வந்தனர்.
`மீன் உணவுதான் காரணம்’ - தா.மோ.அன்பரசன்
சம்பவம் நடந்த பகுதிகளில் ஆய்வு நடத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், "கழிவுநீர் கலந்திருந்தால் இந்தப் பகுதியில் வசிக்கும் 300 பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள். மாநகராட்சி குடிநீரால் வயிற்றுப்போக்கு ஏற்படவில்லை" என்றார்.
மீன் சாப்பிட்டதால் இப்படியொரு பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகக் கூறிய தா.மோ.அன்பரசன், "சுற்றுப்புறத்தைக் காப்பதில் மக்கள் மீதும் தவறு உள்ளது" என்றார்.
இதே தகவலை பிபிசி தமிழிடம் தெரிவித்த பல்லாவரம் காவல் உதவி ஆணையர் வெங்கட்குமார், "இதற்குக் குடிநீர் காரணமாக இருந்திருந்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். உணவு நஞ்சானதால் பாதிப்பு ஏற்பட்டதா என்பதை அறிய ஆய்வக முடிவுக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன" என்கிறார்.
அமைச்சர்கள் பேச்சில் முரண்பாடு
ஆனால், இந்தக் கருத்தில் முரண்பட்டு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், "குடிநீர் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இரண்டு நாள்களாக இப்பகுதியில் வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் சுகாதார அலுவலர்களுக்குத் தகவல் வரவில்லை" என்றார்.
இந்தப் பகுதியில் விநியோகிக்கப்பட்ட குடிநீர் மாதிரியை அரசின் கிங் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகக் கூறிய மா.சுப்ரமணியன், "ஆய்வு முடிவு வரும்போது உண்மை நிலவரம் தெரிய வரும். அதுவரை குழாயில் வரும் குடிநீரைப் பருகுவதற்கு இப்பகுதியில் தடை விதிக்கப்பட்டுள்ளது" என்றார்.
`அசைவ உணவே சாப்பிட்டதில்லை’
இந்த விவகாரத்தில் அமைச்சர்களின் பேட்டி இறந்து போனவர்களின் குடும்பத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. மலைமேடு பகுதியைச் சேர்ந்த மோகனரங்கத்தின் சித்தி வசந்தியிடம் பிபிசி தமிழ் பேசியது.
அப்போது, சிறு வயதில் இருந்தே மோகனரங்கம், அசைவ உணவு சாப்பிட்டதில்லை என்றார் வசந்தி. ஆனால், "மீன் சாப்பிட்டு இறந்து போனதாகக் கூறுகிறார்கள். ஊரே வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தண்ணீர்தான் காரணம் என்பதைச் சொல்ல மறுக்கிறார்கள்" என்று குற்றம் சாட்டினார்.
வீட்டில் உள்ளவர்கள் கேன் குடிநீர் வாங்கிக் குடித்தாலும், குடிநீர் குழாயில் வரும் தண்ணீரைக் குடிப்பதையே மோகனரங்கம் வழக்கமாக வைத்திருந்ததாகக் கூறுகிறார் வசந்தி.
"புதன் கிழமை இரவு உடல்நிலை சரியில்லாமல் போனதால், மோகனரங்கத்தை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். அங்கு ஓ.ஆர்.எஸ் கரைசலும் ஆறு மாத்திரைகளும் கொடுத்து அனுப்பிவிட்டார்கள்.
நேற்று காலையில் உடல்நிலை மோசமானதால், மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ஆனால் இறந்துவிட்டதாகச் சொன்னார்கள்" எனக் கூறி கண்கலங்கினார் வசந்தி.
"மலைமேடு பகுதியில் ஆறு, ஏரி, குளம் என எதுவுமில்லை. பிறகு எப்படி கழிவுநீரில் உள்ள மீனை பிடித்து சமைத்துச் சாப்பிட்டதாக அரசு கூறுகிறது?" என்றும் வசந்தி கேள்வி எழுப்பினார்.
குடிநீர் வரக்கூடிய இடங்கள் அனைத்துமே மிகவும் அசுத்தமாக இருப்பதாகவும், ஆனால் நாங்கள்தான் தவறு செய்துவிட்டதாக அரசு கூறுவதாகவும் கூறும் வசந்தி, மோகனரங்கத்தின் இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்திற்கு அரசுதான் பதில் கூற வேண்டும் என்கிறார்.
வசந்தியின் கருத்தைப் பிரதிபலித்த மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கார் டிரைவர் நூர் முகமது, "மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நபர்களில் சிலர் சபரிமலைக்கு மாலை போட்டுள்ளனர். அவர்கள் மீன் சாப்பிட்டதாகச் சொல்ல முடியுமா? இதற்குத் தண்ணீர்தான் பிரச்னை," என்கிறார்.
தங்கள் தெருவில் மட்டும் 40 பேருக்கு மேல் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டதாகவும் பிபிசி தமிழிடம் நூர் முகமது தெரிவித்தார்.
மிகுந்த சோர்வால் உடல் நலிவுற்ற மக்கள்
இதையடுத்து, மலைமேடு மக்கள் சிகிச்சை பெற்று வரும் தாம்பரம் அரசு மருத்துவமனைக்குச் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.
"தண்ணீர் குடிக்கும்போது எதுவும் தெரியவில்லை. ஆனால், என் வாழ்க்கையில் இப்படியொரு வயிற்றுப்போக்கைப் பார்த்ததில்லை. சிறுநீர் கழிவது போலத் தொடர்ந்து பேதி ஏற்பட்டது" என்கிறார் ஆட்டோ ஓட்டுநர் சதாசிவம்.
இவர் சிகிச்சை பெற்று வரும் வார்டு முழுக்கவே வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மிகுந்த சோர்வுடன் பேசவே முடியாத அளவுக்குப் பலரும் உடல் நலிவுற்று இருப்பதைப் பார்க்க முடிந்தது.
தற்போது மலைமேடு, மாரியம்மன் கோவில் பகுதிகளில் உள்ள தெருக்களில் பிளீச்சிங் பவுடர்கள் போடப்பட்டிருந்தன. சுகாதாரத் துறை சார்பில் மருத்துவ முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கிருந்த பெண் மருத்துவர் ஒருவரிடம் பிபிசி தமிழ் பேசிய போது, தடுப்பு மருந்துகளைத் தவிர ஓ.ஆர்.எஸ். கரைசல், துத்தநாக கரைசல் ஆகியவவை கொடுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும், தொற்று பரவாமல் தடுக்க ஆன்டிபயாடிக் மருந்துகளைக் கொடுப்பதாகவும், தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிக்காததுதான் வாந்தி, பேதி ஏற்படக் காரணம் எனவும் அவர் கூறினார்.
வெள்ளிக்கிழமையன்று காலையில் இருந்து பலர் சிகிச்சை பெற வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதுதவிர, பல்லாவரம் ராணுவ முகாமைச் சேர்ந்த மருத்துவக் குழு ஒன்றும் அப்பகுதி மக்களுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தது.
குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கத் தடை
இந்தச் சம்பவத்தால் பல்லாவரம் பகுதிகளில் மாநகராட்சி விநியோகிக்கும் குடிநீரைப் பருகுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் நடந்து கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.
அப்போது பிபிசி தமிழிடம் பேசிய சரண்யா என்பவர், "கடந்த மூன்று நாட்களாக குடிநீர் குழாயில் தண்ணீர் கலங்கலாக வந்தது. இந்தத் தெருவில் கால்வாய் தோண்டியதால் குடிநீர் குழாய் உடைந்து, அதில் கழிவுநீர் கலந்திருக்க வாய்ப்புள்ளது" என்றார்.
அதற்கேற்ப, எதிரில் புதிதாக சாக்கடை அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. அதன் கால்வாய் நீர், குடிநீர் குழாய் செல்லும் பாதையோடு கலந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.
கால்வாயில் ஓடும் தண்ணீரைவிட மிகக் கலங்கலாக நேற்று (டிசம்பர் 5) தண்ணீர் வந்தது. இப்போது குழாயில் வரும் தண்ணீரும் சரியில்லை. அதனால்தான் லாரி தண்ணீரைப் பிடிக்குமாறு அதிகாரிகள் கூறியதாகத் தெரிவித்தார், அப்பகுதியைச் சேர்ந்த ரேஷ்மா.
குற்றச்சாட்டுக்கு அமைச்சரின் பதில்
"கழிவுநீர் கலந்த குடிநீர்தான் காரணம்" என மக்கள் கூறுவது குறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் பிபிசி தமிழ் கேட்டது.
"தண்ணீர் மாதிரிகளை ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளோம். அதன் முடிவுகள் விரைவில் கிடைத்துவிடும். என்ன காரணம் என்ற விவரம் விரைவில் வெளியிடப்படும்" என்றார்.
அசைவ உணவு சர்ச்சை குறித்துக் கேட்டபோது, "ஆய்வு முடிவுகள் வரட்டும்" என்று மட்டும் அமைச்சர் பதில் அளித்தார்.
"தற்போது வரை இரண்டு பேர் இறந்துள்ளனர். ஆய்வு முடிவுகளை அடுத்து குடிநீரில் கழிவுநீர் கலந்ததா என்பது குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும்" என்றார் மா.சுப்ரமணியன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)