ஒரு வாழைப்பழத்தை ரூ.52 கோடிக்கு வாங்கி சாப்பிட்ட தொழிலதிபர் - ஏன் இதை செய்தார்?

    • எழுதியவர், அலெக்ஸ் லோஃப்டஸ்
    • பதவி, பிபிசி செய்தி

சீனாவை பூர்வீகமாக கொண்ட கிரிப்டோகரன்சி தொழிலதிபர் ஒருவர் கடந்த வாரம் 6.2 மில்லியன் டாலருக்கு (சுமார் 52 கோடி ரூபாய்) ஒரு வாழைப்பழ கலைப்படைப்பை வாங்கி பிரபலமடைந்தார். அவர் அந்த வாழைப்பழத்தை சாப்பிடுவதாக கொடுத்த வாக்கை தற்போது நிறைவேற்றியுள்ளார்.

நியூயார்க்கில் உள்ள சதபி ஏல மையத்தில் நடைபெற்ற ஏலத்தில் மவுரிசியோ கேட்டலான் என்ற கலைஞரின் ‘காமெடியன்’ என்று பெயரிடப்பட்ட கலைப்படைப்பு வைக்கப்பட்டது. அது சுவற்றில் டேப் மூலம் ஒட்டப்பட்ட ஒரு வாழைப்பழம்.

இந்த கலைப்படைப்பை வாங்க 7 பேர் ஏலத்தில் பங்கேற்றனர். அதில் தொழிலதிபர் ஜஸ்டின் சன் ஆறு பேரை விஞ்சி அந்த ஒற்றை வாழைப்பழத்தை தன்வசப்படுத்தினார்.

இந்தநிலையில் ஹாங்காங்கில் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், கலை மற்றும் கிரிப்டோகரன்சி பற்றி பேசுகையில் ஜஸ்டின் சன் அந்த வாழைப்பழத்தை சாப்பிட்டார்.

'மற்ற வாழைப்பழங்களை விட சுவையாக இருந்தது'

ஒவ்வொரு முறையும் இந்த கலைப்படைப்பு காட்சிப்படுத்துவதற்கு முன்னதாக வாழைப்பழம் மாற்றி வைக்கப்படும்.

இனி இந்த கலைப்படைப்பை காட்சிப்படுத்தும் உரிமையுடன், பழத்தை எவ்வாறு மாற்றுவது என்பது குறித்த வழிகாட்டுதலையும் சன் பெற்றிருக்கிறார்.

இந்த கலைப்படைப்பில் வைக்கப்படும் வாழைப்பழம் இதற்கு முன்பு இரு முறை சாப்பிடப்பட்டுள்ளது

2019 இல் ஒரு கலைஞரும், 2023 இல் தென் கொரிய மாணவர் ஒருவரும் இந்த வாழைப்பழத்தை சாப்பிட்டனர். ஆனால் அவர்கள் பணம் எதுவும் செலுத்தவில்லை.

''பத்திரிகையாளர் சந்திப்பில் இதை சாப்பிடுவதும் இந்த கலைப்படைப்பின் வரலாற்றில் இடம்பெறும். மற்ற வாழைப்பழங்களை விட இது எனக்கு சுவையாக இருந்தது” என்று ஜஸ்டின் சன் குறிப்பிட்டார்.

34 வயதான சன் இந்த கலைப்படைப்பு தன்னை மிகவும் கவர்ந்ததாக கூறினார். இருப்பினும், இந்த வாழைப்பழம் ஒரு வேலை அழுகி இருக்குமோ என்னும் கேள்வி தனக்குள் இருந்ததையும் அவர் ஒப்புக் கொண்டார்.

இந்த வாழைப்பழம் உலகின் மிக விலையுயர்ந்த பழமாக ஏலம் எடுக்கப்பட்ட அந்த நாள், 35 சென்டுக்கு ஒரு புதிய பழம் வாங்கி வைக்கப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் நினைவுப் பரிசாக ஒரு வாழைப்பழமும் ஒரு டேப் ரோலும் வழங்கப்பட்டது.

"அனைவரும் சாப்பிட வாழைப்பழம் இருக்கிறது” என்று சன் கூறினார்.

இவர் யார்?

ஜஸ்டின் சன், ட்ரான் பிளாக்செயின் நெட்வொர்க்கை நடத்துகிறார். அதில் பயனர்கள் கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்கிறார்கள்.

`கிரிப்டோகரன்சி’ என்பது வங்கிகளுடன் எந்த தொடர்பும் இல்லாத மெய்நிகர் நாணயங்கள் ஆகும்.

சன் இந்த கலைப்பொருளை ‘NFT’ உடன் ஒப்பிட்டார். NFT என்பது நான்-ஃபஞ்சிபிள் டோக்கன்கள் (Non-fungible tokens).

இந்த நான்-ஃபஞ்சிபிள் டோக்கனில் பல டிஜிட்டல் கலைப்படைப்புகள் இருக்கும். அதற்கென்று நிர்ணயிக்கப்பட்ட மதிப்பு இல்லை. மக்களே இதன் மதிப்புகளை தீர்மானிக்கின்றனர்.

NFTகளை சன் போன்ற கிரிப்டோ தொழிலதிபர்களின் தளங்களில் வர்த்தகம் செய்யலாம்.

பதிவு செய்யப்படாத பாதுகாப்பு டோக்கன்களை வழங்கியதாகவும், விற்றதாகவும் அவர் மீது அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் கடந்த ஆண்டு குற்றம் சாட்டியது.

இருப்பினும், ஜஸ்டின் சன் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார். இதுதொடர்பான வழக்கு இன்னும் நடந்து வருகிறது.

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆதரவளித்துள்ள கிரிப்டோ திட்டத்தில் $30 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளதாக ஜஸ்டின் சன் இந்த வாரம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)