உமர் காலித்திற்கு பிணை மறுப்பு ஏன்? உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் வழக்கின் பின்னணி

உமர் காலித், டெல்லி கலவர சதி வழக்கு, உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், உமாங் போடார்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

டெல்லி கலவர சதி வழக்கில் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு பிணை வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

இருப்பினும், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 5 பேருக்கு, அதாவது குல்ஃபிஷா ஃபாத்திமா, மீரான் ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான் மற்றும் ஷதாப் அகமது ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.

உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் பங்கு குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களிடமிருந்து வேறுபட்டது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோர் கலவரங்களைத் திட்டமிட்டு வியூகம் வகுப்பதில் ஈடுபட்டிருந்ததாக இவ்வழக்கின் முதல் கட்ட ஆதாரங்கள் காட்டுவதாக நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு அல்லது சாட்சிகளிடம் விசாரணை முடிந்த பிறகு, உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகிய இருவரும் மீண்டும் ஜாமீனுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

காலித் மற்றும் ஷர்ஜீல் உட்பட குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரும், 2019 ஆம் ஆண்டு குடியுரிமைத் திருத்தச் சட்ட (சிஏஏ) போராட்டங்களின் போர்வையில், 2020 பிப்ரவரியில் டெல்லியில் வகுப்புவாத வன்முறையைத் தூண்ட சதி செய்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தாங்கள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதாகவும், ஆனால் விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாதிட்டனர்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற பலருக்கு ஏற்கனவே பிணை வழங்கப்பட்டுள்ளதால், தனக்கும் பிணைவழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, செப்டம்பர் மாதம், இந்த ஏழு பேரின் பிணை மனுக்களையும் டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

உமர் காலித், டெல்லி கலவர சதி வழக்கு, உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷர்ஜீல் இமாம் 2020-ம் ஆண்டு ஜனவரி முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறையில்...

மாணவர் தலைவர் மற்றும் சமூக ஆர்வலர் உமர் காலித் செப்டம்பர் 2020 முதல் சிறையில் உள்ளார். 2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் வன்முறையைத் தூண்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீது இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஒரு வழக்கில், உமருக்கு ஏப்ரல் 2021 இல் பிணை வழங்கப்பட்டது. இரண்டாவது வழக்கில், அவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை இரண்டு நீதிமன்றங்கள் அவரது பிணை மனுவை நிராகரித்துள்ளன. அவரது பிணை மனு ஏப்ரல் 2023 முதல் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.

உமர் காலித்துக்கு எதிரான ஆதாரங்கள் மிகவும் பலவீனமாக இருப்பதால், அவர் பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் என்று பல சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கடந்த சில மாதங்களாக, காலித்தின் பிணை மனு, பட்டியலிடும் விதிகளுக்கு முரணாக ஒரு அமர்வின் முன் பட்டியலிடப்பட்டதாக வழக்கறிஞர்கள் புகார் கூறி வந்தனர்.

2020 முதல் அவருக்கு எதிரான விசாரணை தொடங்கப்படவில்லை. அவர் மீது இன்னும் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை.

உமர் காலித் மீதான குற்றச்சாட்டுகள் என்ன?

டிசம்பர் 2019-ல், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்தன. இந்தத் திருத்தம், முஸ்லிம்களைத் தவிர்த்து, இந்துக்கள் மற்றும் சமணர்களுக்கு குடியுரிமை வழங்க முயன்றது. ஏறக்குறைய மூன்று மாதங்கள் நீடித்த இந்தப் போராட்டங்களில் உமர் காலித் பங்கேற்றார்.

பிப்ரவரி 2020-ல், வடகிழக்கு டெல்லியில் கலவரங்கள் வெடித்தன. இதில், பெரும்பாலும் முஸ்லிம்கள் உட்பட 53 பேர் உயிரிழந்தனர். இந்தப் போராட்டங்களின் போது வன்முறையைத் தூண்டுவதற்காக உமர் காலித் மற்றவர்களுடன் சேர்ந்து சதி செய்தார் என்றும், அதுவே கலவரங்களுக்கு வழிவகுத்தது என்றும் அரசுத் தரப்பு குற்றம் சாட்டுகிறது.

உமர் காலித், டெல்லி கலவர சதி வழக்கு, உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லி கலவரத்தின் போது நிறைய பேரின் சொத்துகள் சேதமடைந்தன.

உமர் காலித் மீது இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டன. 101/2020 என்ற முதல் தகவல் அறிக்கை பிப்ரவரி 24, 2020 அன்று வடகிழக்கு டெல்லியில் பதிவு செய்யப்பட்டது. கலவரம் செய்தல், கல்வீச்சு, குண்டு வீசுதல், இரண்டு சமூகங்களிடையே வெறுப்பைத் தூண்டுதல், காவல்துறையைத் தாக்குதல் மற்றும் அரசுச் சொத்துகளைச் சேதப்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் உமர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

டெல்லியில் நடந்த கலவரங்கள் ஒரு ஆழமான சதியின் விளைவு என்று இந்த வழக்கில் அரசுத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தவறான தகவல்களைப் பரப்புதல் மற்றும் சாலை மறியல்களைத் தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இந்தச் சதியில் குற்றம் சாட்டப்பட்டவர்களை உமர் காலித் சந்தித்ததாக ஒரு சாட்சி அடையாளம் காட்டியுள்ளதாக அரசுத் தரப்பு கூறுகிறது.

இதற்கிடையில், கல்வீச்சு நடந்த நேரத்தில் அவர் அங்கு இல்லை என்று காலித்தின் வழக்கறிஞர் வாதிடுகிறார். உமர் காலித்தின் கைது ஒரு அரசியல் சதி என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.

வன்முறை நடந்த நேரத்தில் அவர் அங்கு இல்லை என்பதையும், வன்முறையில் அவரது ஈடுபாட்டை நிரூபிக்க அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் குறிப்பிட்ட நீதிமன்றம், இந்த வழக்கில் உமர் காலித்திற்கு பிணை வழங்கியது.

பிணை வழங்கும்போது நீதிமன்றம், "இத்தகைய முழுமையற்ற ஆதாரங்களின் அடிப்படையில் உமர் காலித்தை இந்த வழக்கில் சிறையில் வைத்திருக்க அனுமதிக்க முடியாது" என்று கூறியது. இருப்பினும், உமர் காலித் மீது நிலுவையில் உள்ள மற்றொரு வழக்கு குறித்து நீதிமன்றம் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் கூறியது.

உமர் காலித், டெல்லி கலவர சதி வழக்கு, உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

முதல் தகவல் அறிக்கை எண் 59

முதல் வழக்கில் பிணை வழங்கப்பட்ட போதிலும், உமர் காலித் மீது இரண்டாவது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் சிறையிலேயே இருக்கிறார். 59/2020 என்ற முதல் தகவல் அறிக்கையில் உமர் காலித் மற்றும் பிறர் குற்றம் சாட்டப்பட்டவர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

மற்ற பிரிவுகளைத் தவிர, உமர் காலித் மீது தீவிரவாதம், சதி, கலவரம் செய்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. பிஞ்ச்ரா தோட் மற்றும் இந்திய மாணவர் கூட்டமைப்பு போன்ற அமைப்புகள் சதி செய்து, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களைச் சீர்குலைத்தன என்றும், இதில் "காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகள் மீதான தாக்குதல்கள், வகுப்புவாத வன்முறை, முஸ்லிம் அல்லாதவர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல்" ஆகியவை அடங்கும் என்றும் அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது.

பெயரறியாத சாட்சிகளின் வாக்குமூலங்கள், அவர் இணைந்த வாட்ஸ்அப் குழுக்கள், அவர் செய்த தொலைபேசி அழைப்புகள் மற்றும் போராட்டங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களில் அவர் கலந்துகொண்டது ஆகியவற்றின் அடிப்படையில், உமர் காலித் கலவரங்களைத் திட்டமிட்டு, தொலைவிலிருந்து கண்காணித்தார் என்று அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இருப்பினும், கலவரங்கள் நடந்தபோது தான் டெல்லியில் இல்லை என்பதே உமர் காலித்தின் நிலைப்பாடு.

அவர் எந்தத் தூண்டிவிடும் பேச்சுகளையும் பேசவில்லை அல்லது வன்முறையைத் தூண்டவில்லை என்று வாதிடுகிறார். அரசுத் தரப்பின் சாட்சியங்கள் எந்தக் குற்றத்தையும் நிரூபிக்கவில்லை என்று அவர் கூறுகிறார். ஜார்கண்டில் உள்ள பழங்குடியினரின் நலன் குறித்து உமர் காலித் எழுதிய முனைவர் பட்ட ஆய்வறிக்கையிலிருந்து அவரது மனநிலையை மதிப்பிட முடியும் என்றும் அவரது வழக்கறிஞர் வாதிடுகிறார்.

உமர் காலித், டெல்லி கலவர சதி வழக்கு, உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

கீழ் நீதிமன்றங்களில் வாதம் என்னவாக இருந்தது?

டெல்லியில் உள்ள கர்கர்டூமா விசாரணை நீதிமன்றமும், டெல்லி உயர் நீதிமன்றமும் உமர் காலித்தின் பிணை மனுவை நிராகரித்துவிட்டன. உமருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மேலோட்டமாகப் பார்க்கும்போது உண்மையானவை என்று இரு நீதிமன்றங்களும் தீர்ப்பளித்தன. மற்ற காரணிகளுடன், நீதிமன்றம் பின்வருவனவற்றையும் சார்ந்து இருந்தது:

உமர் காலித் பல வாட்ஸ்அப் குழுக்களில் ஒரு பகுதியாக இருந்தார், அங்கு கலவரச் சதிகாரர்கள் மற்றவர்களும் சாலை மறியல் குறித்து விவாதித்தனர்.

கலவரங்கள் தொடங்கிய பிறகு மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்கள் உமருக்குப் பலமுறை அழைப்புகள் விடுத்தனர், இது கலவரங்களில் அவரது ஈடுபாட்டைக் காட்டுகிறது.

அடையாளம் வெளியிடப்படாத பல சாட்சிகளும் காலித்திற்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அவர் 'சக்கா ஜாம்' (சாலை மறியல்) போராட்டத்திற்கு ஆதரவளித்ததாகவும், அரசாங்கத்தைக் கவிழ்க்க அழைப்பு விடுத்ததாகவும், தூண்டிவிடும் பேச்சுகளைப் பேசியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வருகையைக் குறிப்பிட்டு, காலித் மகாராஷ்டிராவில் ஒரு உரையாற்றினார். ஒரு சாட்சியின் வாக்குமூலத்தின் படி, அவர் மக்களைத் தெருக்களில் இறங்குமாறு வலியுறுத்தினார்.

உமர் காலித் ஒரு புரட்சிக்கு அழைப்பு விடுத்ததாகவும், அது அங்கு இல்லாத மக்களையும் பாதிக்கும் என்று அவர் நம்பியதாகவும், அந்தப் புரட்சி இரத்தம் சிந்தாததாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் கூறியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு