You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய முடியுமா? அதற்கான நடைமுறை என்ன?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்யக் கோரும் தீர்மான நோட்டீஸை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் டிசம்பர் 9 அன்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி எம்.பிக்கள் அளித்துள்ளனர்.
"குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பளிப்பதாக", தீர்மான நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், நீதித்துறையை மிரட்டும் வகையில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி செயல்படுவதாக பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
நீதிபதிக்கு எதிராக 'இந்தியா' கூட்டணி அளித்துள்ள தீர்மான நோட்டீஸால் என்ன நடக்கும்?
என்ன நடந்தது?
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள பிள்ளையார் மண்டபத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.
ஆனால், 'மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்து இந்து தமிழர் கட்சியைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்றுமாறு உத்தரவிட்டார்.
அவர் தனது தீர்ப்பில், 'டிசம்பர் 3 அன்று மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்பட வேண்டும். தவறினால் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' எனக் கூறியிருந்தார்.
இதையடுத்து, மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்குச் சென்ற இந்து அமைப்பினருக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இதனால், போலீஸாருக்கும் இந்து அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற, மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு அனுமதி வழங்கி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். தன்னுடன் அவர் 10 பேரை அழைத்துச் செல்லலாம் என்றும் சிஐஎஸ்எப் (CISF) வீரர்கள் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் ஜி.ஆர். சுவாமிநாதன் கூறினார். எனினும் காவல்துறை இதற்கு அனுமதியளிக்கவில்லை.
ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், 'நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என்ற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை முன்வைத்தன.
இந்தநிலையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மான நோட்டீஸை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் 'இந்தியா' கூட்டணி எம்.பிக்கள் அளித்துள்ளனர்.
இதில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சி எம்.பி பிரியங்கா காந்தி, தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, ஆ.ராசா எம்.பி உள்பட நூறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
'2 புகார்கள்'
பாரபட்சம், வெளிப்படைத்தன்மை மற்றும் நீதித்துறையில் மதச்சார்பற்ற செயல்பாடு ஆகியவற்றை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் நடத்தை கடும் கேள்விகளை எழுப்புவதாக நோட்டீஸில் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது, வழக்குகளைத் தீர்ப்பதில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவருக்கு (அவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது) ஆதரவாக ஜி.ஆர்.சுவாமிநாதன் செயல்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் இந்திய அரசியலமைப்பு வகுத்துள்ள மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிராக வழக்குகளைத் தீர்ப்பதாகவும் நோட்டீஸில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் எழுதிய கடிதங்களை இணைத்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்மான நோட்டீஸில் மக்களவை உறுப்பினர்களில் குறைந்தபட்சம் 100 பேர் கையொப்பமிட வேண்டும் என்பது விதியாக உள்ளது. அந்தவகையில், 'இந்தியா' கூட்டணிக் கட்சியினர் அளித்துள்ள நோட்டீஸில் 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
பதவி நீக்கம் - நடைமுறை என்ன?
"நீதிபதியை பதவி நீக்கக் கோரும் தீர்மானத்தின் வரைவு நகலை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் மூன்று பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்" எனக் கூறுகிறார், ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "குழுவில் உச்ச நீதிமன்ற நீதிபதி, மாநில தலைமை நீதிபதி, சட்ட நிபுணர் ஆகியோர் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சபாநாயகர் கடிதம் எழுத வேண்டும்" என்கிறார்.
"நோட்டீஸில் கூறப்பட்டுள்ள விவகாரங்களில் நீதிபதியின் தவறான நடத்தைகள் குறித்து விசாரித்து மூவர் குழு அறிக்கை அளிக்கும்" எனக் கூறும் சந்துரு, "நீதிபதிக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதாக குழு கூறினால் மட்டுமே நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வரும்" என்கிறார்.
"அவ்வாறு முகாந்திரம் இல்லாவிட்டால் இதற்கு எந்தவித மதிப்பும் இருக்காது. தவிர, தீர்மானத்தில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகள் தவிர வேறு எதையும் விவாதிக்க முடியாது" என்கிறார் அவர்.
"இந்த விவகாரத்தில் தொடர்புடைய நீதிபதி பதில் அளிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும். அவர் பதில் அளிக்கலாம் அல்லது தனது வழக்கறிஞர் மூலம் விளக்கம் அளிக்கலாம்" என்கிறார் சந்துரு.
நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு அவையில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். அப்படி பெரும்பான்மையினர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும்போது, குடியரசுத் தலைவருக்கு பதவி நீக்க தீர்மானம் அனுப்பப்படுவது நடைமுறையாக உள்ளது.
இதன்பிறகு தொடர்புடைய நீதிபதியை குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் (impeachment) செய்வது சட்ட நடைமுறையாக உள்ளதாகக் கூறுகிறார், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு.
'தீர்ப்பின் அடிப்படையில் பதவி நீக்கம் சாத்தியமில்லை'
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் அவரை பதவி நீக்கம் செய்ய கோர முடியாது எனவும் சந்துரு குறிப்பிட்டார்.
சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் அளித்த மனுவில் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 217ன்படி பதவி நீக்கம் செய்யுமாறு கூறியுள்ளனர்.
"சட்டப்பிரிவு 217 என்பது நீதிபதியின் நடத்தையைப் பற்றிக் கூறுகிறது. திருப்பரங்குன்றம் வழக்கின் தீர்ப்பு சரியா.. தவறா என நாடாளுமன்றம் கூற முடியாது. ஆனால், அதற்கான நடத்தையைப் பற்றி விவாதிக்கலாம்" என்கிறார் சந்துரு.
" மத்திய தொழில் பாதுகாப்புப் படையை (CISF) அனுப்பியது போன்றவற்றை குறிப்பிட்டு, 'இவை நீதிபதியின் வரையறைக்குள் வரவில்லை' எனக் கூறலாம்" எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சந்துரு, "தனியார் அமைப்பு நடத்திய நிகழ்வில், வேதம் படித்த ஒருவர் கொலைக் குற்றச்சாட்டில் இருந்து காப்பாற்றப்பட்டதைப் பற்றி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசியதைப் பற்றி விவாதிக்கலாம். ஆனால், அவர் வழங்கிய தீர்ப்பு குறித்து பேச முடியாது" என்கிறார்.
நீதிபதிகள் பதவி நீக்கம் - கடந்த காலங்களில் நடந்தது என்ன?
இந்திய நீதித்துறை வரலாற்றில் நீதிபதியை பதவி நீக்கக் கோரும் சம்பவங்கள் நடந்துள்ளன.
உதாரணமாக நீதிபதிகள் பி.டி.தினகரன், சௌமித்ரா சென் உள்ளிட்டோர் மீது பதவி நீக்கம் கோரும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. "இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளதாக மூவர் குழு கூறியது" என்கிறார், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு.
"ஆனால், வாக்கெடுப்புக்கு முன்னதாக இவர்கள் ராஜினாமா செய்துவிட்டனர்" எனவும் அவர் தெரிவித்தார்.
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சௌமித்ரா சென் மீது 2012 ஆம் ஆண்டு முறைகேடு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக மக்களவையில் விவாதம் நடத்தப்படும் சூழல் இருந்த நிலையில், தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு சௌமித்ரா சென் அனுப்பினார் என்கிறார் சந்துரு. அவரது பதவி விலகல் கடிதத்தை அப்போதைய குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.
சிக்கிம் மாநில தலைமை நீதிபதியாக இருந்த பி.டி.தினகரன் மீது நில அபகரிப்பு தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தன என்றார் சந்துரு.
1993 ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி வி.ராமசாமி மீது அதீத செலவீனம் தொடர்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
"இவருக்கு எதிரான தீர்மானத்துக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இதனால் தீர்மானம் நிறைவேறவில்லை" என்கிறார், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு.
"இந்தியாவில் நாடாளுமன்ற விவாதத்தின் மூலம் நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக வரலாறு இல்லை" எனக் கூறும் சந்துரு, "சௌமித்ரா சென், பி.டி.தினகரன் ஆகியோர் தங்களுக்கான ஓய்வூதிய பலன்களுடன் தானாக வெளியேறினர்" என்கிறார்.
அந்தவகையில், பதவி நீக்கக் கோரும் தீர்மானத்தில் இருந்து வெளியேறும் வகையில் பல்வேறு வழிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆதரவும் எதிர்ப்பும் சொல்வது என்ன?
நீதிபதியை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மான நோட்டீஸில், மூத்த வழக்கறிஞர் ஒருவருக்கு அதிகமான முக்கியத்துவத்தை ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
பிபிசி தமிழிடம் பேசிய மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் மு.ராமமூர்த்தி, "இவர் சென்னையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்களில் ஒருவர். இவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்கின்றனர். அவ்வாறு சாதகமாக கொடுத்திருந்தால் எதிர்த்தரப்பினர் அமைதியாக இருந்திருக்க மாட்டார்கள்." எனக் கேள்வி எழுப்பினார்.
"இவர்கள் கூறும் காலகட்டத்தில் ஏராளமான தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அவை எல்லாவற்றையும் தவறு எனக் கூற முடியுமா?" என்கிறார், அவர்.
சித்தாந்தரீதியாக நீதிபதி செயல்படுவதாக இந்தியா கூட்டணியினர் குறை கூறுவதாகக் குறிப்பிட்ட மு.ராமமூர்த்தி, "இது தவறானது. மதுரையில் இடதுசாரி வழக்கறிஞர்களும் தங்கள் தரப்புக்கு ஆதரவாக இவரின் நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றுள்ளனர். குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இவ்வாறு பேசுகின்றனர்" என்கிறார்.
நீதித்துறையின் அதிகாரத்தை ஜி.ஆர்.சுவாமிநாதன் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார், தி.மு.க செய்தித் தொடர்புத் துறை தலைவரும் முன்னாள் எம்.பியுமான டி.கே.எஸ்.இளங்கோவன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சட்டம் ஒழுங்கை மாநில அரசின் காவல்துறை கவனிக்கிறது. அது மாநில அரசின் பொறுப்பாக உள்ளது. காவல்துறைக்கு உத்தரவிடாமல் மத்திய தொழில் பாதுகாப்புப் படையை தீபம் ஏற்றுவதற்கு பாதுகாப்புக்கு செல்லுமாறு உத்தரவிட்டார். இது தவறானது" என்கிறார்.
"நிரூபணம் செய்யப்பட்ட ஒழுங்கீனத்தை நீதிபதி செய்துள்ளாரா என்று மட்டுமே பார்க்க வேண்டும்" எனக் கூறும் மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் மு.ராமமூர்த்தி, "இந்தியா கூட்டணி அளித்துள்ள தீர்மான நோட்டீஸ் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தப் போவதில்லை" எனவும் அவர் தெரிவித்தார்.
தி.மு.க அரசின் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளை திசைதிருப்புவதற்காக இதனைக் கையில் எடுத்துள்ளதாகக் கூறும் அவர், "எந்த நீதிமன்றத்திலும் தீர்வு கிடைக்காது என்பதால் நாடாளுமன்றத்தில் நீதிபதி விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளனர்" என்கிறார்.
இதனை மறுத்துப் பேசும் டி.கே.எஸ்.இளங்கோவன், "அவ்வாறு பார்ப்பது தவறு. அப்படியானால் எங்களுக்கு உதவி செய்வதற்காக நீதிபதி இவ்வாறு தீர்ப்பளித்தார் எனக் கூற முடியுமா?" எனக் கேள்வி எழுப்புகிறார்.
"நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால் இந்தத் தீர்மானம் நிறைவேறப் போவதில்லை. ஆனால், மக்கள் மத்தியில் இது விவாதப் பொருளாக மாறும். அந்தவகையில் மட்டுமே தீர்மான நோட்டீஸ் பயன்படும்" எனவும் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு