தமிழ்நாட்டின் நீண்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் வைத்ததால் என்ன சர்ச்சை?

பட மூலாதாரம், MKStalin/X
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
சாதி அடிப்படையிலான பெயர்களைக் கொண்ட சாலைகள், தெருக்கள், குடியிருப்புப் பகுதிகள், பேருந்து நிலையங்கள், சந்தைகள், நீர்நிலைகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளை அடையாளம் கண்டு, அவற்றை மறுபெயரிடுவதற்கான விரிவான வழிகாட்டுதல்களை தமிழக அரசு திங்கட்கிழமை (அக்டோபர் 6) அன்று வெளியிட்டது.
அதற்கு அடுத்த நாளே (அக்டோபர் 7), கோவை அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்திற்கு 'ஜி.டி.நாயுடு' பெயர் சூட்டப்படும் என அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதை கடந்த அக்டோபர் 9ஆம் தேதி திறந்து வைத்தார்.
இந்த இரண்டு அறிவிப்புகள் குறித்து பல்வேறு தரப்புகளில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்துவருகின்றன.
சாதி அடிப்படையிலான பெயர்கள் குறித்த அரசாணை
கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி, சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "இந்த மண்ணின் ஆதிக்குடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாக 'காலனி' என்ற சொல் பதிவாகி இருக்கிறது. ஆதிக்கத்தின் அடையாளமாகவும் தீண்டாமையின் குறியீடாகவும் வசைச் சொல்லாகவும் மாறியிருப்பதால் இனி இந்தச் சொல்லை, அரசு ஆவணங்களில் இருந்தும் பொது பயன்பாட்டில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறியிருந்தார்.
அந்த அறிவிப்பைச் செயல்பாட்டிற்கு கொண்டுவரும் வகையில் தமிழக அரசின் அரசாணை இந்த வாரம் வெளியிடப்பட்டது.
அதில், "அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளில் உள்ள குடியிருப்புகள், சாலைகள், நீர்நிலைகள், இன்னபிறவை மற்றும் வருவாய்க் கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குதல்/மறுபெயரிடுதல் - வழிகாட்டு நெறிமுறைகள்" என்று குறிப்பிடப்பட்டு, இந்த வழிகாட்டுதல்களை செயல்படுத்துவதற்கான காலவரம்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
வழிகாட்டுதல்களின்படி, தற்போதைய பெயர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்துகின்றனவா என்பதை தீர்மானிக்க உள்ளாட்சி அமைப்புகள் விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டும்.
அத்தகைய பெயர்களின் பட்டியலைத் தயாரித்த பிறகு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்ளூர் நிலைமையை மதிப்பிட்டு, மக்களின் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏற்கனவே உள்ள பெயரைத் தொடர்வதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றால், அதே பெயரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால், அவமதிக்கும் அல்லது புண்படுத்தும் வகையில் ஒரு பெயர் இருப்பதாகக் கண்டறியப்பட்டு, மக்கள் மாற்றத்தைக் கோரினால், அதைச் செய்ய வேண்டும்.
அதேசமயம், 'ஆதிதிராவிடர் காலனி, ஹரிஜன் காலனி' உள்ளிட்ட சில பெயர்களை அவசியம் மாற்ற வேண்டும் என்றும் அரசாணை கூறுகிறது.
தெருக்கள் மற்றும் சாலைகளுக்கான எடுத்துக்காட்டுப் பெயர்களாக திருவள்ளுவர், ஒளவையார், கபிலர், சீத்தலை சாத்தனார், நக்கீரர், பிசிராந்தையார், கம்பர், அகத்தியர், வீரமாமுனிவர், பாரதியார், பாரதிதாசன், மகாத்மா காந்தி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, காமராசர், கலைஞர் ஆகிய 16 பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
அதேபோல, குளம் மற்றும் நீர்நிலைகளுக்கான எடுத்துக்காட்டுப் பெயர்களாக ரோஜா, மல்லி, செம்பருத்தி, சூரியகாந்தி, சாமந்தி, தாழம்பூ, காந்தள், கனகாம்பரம், கொன்றை, மகிழம்பூ, முல்லை, செண்பகம், குவளை, குறிஞ்சி, செவ்வந்தி ஆகிய 15 பெயர்களும் கொடுக்கப்பட்டிருந்தன.

பட மூலாதாரம், TNGOV
இந்த அறிவிப்பு வெளியானவுடன் பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கையில், "சாதிப் பெயர் மாற்றம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டுவது தொடங்கியுள்ளது. மக்களின் கடும் கோபத்தில் இருந்து தப்பிக்க, மடைமாற்றும் அரசியல் வித்தையில் திமுக இறங்கி இருக்கிறது." என்று விமர்சித்திருந்தார்.
மேலும், "மாற்றுப் பெயர்கள் பட்டியலில் நாயன்மார்கள், ஆழ்வார்கள் பெயர்களோ, ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன், ராணி வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், அஞ்சலை அம்மாள், கொடிகாத்த குமரன், வ.உ.சி, சுப்ரமணிய சிவா ஆகியோரின் பெயர்களோ இல்லை. தமிழக அரசின் இந்தச் செயலை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்." என்றும் அவர் கூறியிருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் நேற்று (அக்டோபர் 10) பேசிய ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, "தமிழ்நாட்டில் அக்டோபர் 11 அன்று 12,480 கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெறும். சாதிப் பெயர்கள் அல்லது இழிவுபடுத்தும் பெயர்கள் கொண்ட உள்கட்டமைப்புகளின் பெயர்களை மாற்றுவது குறித்து மக்களுடன் ஆலோசித்து தான் முடிவெடுக்கப்படும்." என்று கூறியிருந்தார்.
கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர்

பட மூலாதாரம், MKStalin/X
சாதி அடிப்படையிலான பெயர்கள் குறித்த அரசாணை வெளியான பிறகு, "கோவையில் அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்திற்கு, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன், தந்தை பெரியாரின் உற்ற கொள்கைத் தோழர் ஜி.டி.நாயுடுவின் பெயரை சூட்டி மகிழ்கிறேன்" என அறிவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அதைத் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி திறந்து வைத்தார். கோவை அவினாசி சாலையில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கிலோமீட்டர் நீளமுள்ள இதுவே தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலமாகும்.
இதைக் குறிப்பிட்டு, "ஒரு பக்கம் சாதி பெயர்களை நீக்குதல் / மறுபெயரிடுதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஆணையாக வெளியிட்டுவிட்டு இன்னொரு பக்கம் சாதியோடு பாலத்திற்கு பெயரிடும் இரட்டை நிலைப்பாட்டுக்கு பெயர் தான் திராவிட மாடலா?" என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது எக்ஸ் தள பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

பட மூலாதாரம், GD Group
'அம்பேத்கர் பெயர் விடுபட்டது ஏன்?'
"தமிழக அரசின் வழிகாட்டுதல்களில், தீண்டாமையின் குறியீடுகளாக இருக்கும் 'ஹரிஜன் காலனி' போன்ற பெயர்களை உடனடியாக மாற்ற வேண்டுமென கூறியிருந்தாலும், மறுபுறம் சாதி ஆதிக்கத்தின் அடையாளமாக இருக்கக் கூடிய பெயர்களை 'மக்கள் எதிர்ப்பு இல்லையென்றால்' தொடரலாம் என கூறியிருப்பது முரண்பாடாக உள்ளது" என்கிறார் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத்தலைவர் கே.சாமுவேல்ராஜ்.
தொடர்ந்து பேசிய அவர், "உதாரணத்திற்கு டி.கல்லுப்பட்டியில் பெரும்பாலான தெருக்களில் சாதிப் பெயர்களே உள்ளன. ஆனால், அவை ஆதிக்கம் மற்றும் பெருமையின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றன. அந்தப் பகுதி மக்கள் எங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்று கூறிவிட்டால், அது அப்படியே தொடரும் என்றால், பிறகு ஏன் இந்த சட்டம்?" எனக் கேள்வியெழுப்புகிறார்.
மேலும், "எடுத்துக்காட்டு பெயர்கள் என தமிழக அரசு கூறியிருந்தாலும் கூட, 'அந்தப் 16 பெயர்களை மட்டும் தான் வைக்க வேண்டும்' அல்லது 'இதைத் தவிர வேறு ஏதும் பரிந்துரைத்தால் சிக்கல் ஆகுமோ' என்று தான் அதிகாரிகள் நினைப்பார்கள். சாதி மறுப்பு என்று சொல்லிவிட்டு, அம்பேத்கர் பெயர் இல்லாததை எப்படி ஏற்க முடியும்" என்று அவர் கூறுகிறார்.
உடனடியாக தமிழக அரசு இந்த வழிகாட்டுதல்களை மறுபரிசீலனை செய்யவேண்டுமென கோரும் சாமுவேல்ராஜ், "ஒருபுறம் இந்த வழிகாட்டுதல்களும் மறுபுறம் கோவை மேம்பாலத்திற்கு 'ஜிடி நாயுடு' என பெயர் வைப்பதும், ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரை இழிவாகவும், மற்றொரு சாதியின் பெயரை உயர்வாகவும் பார்க்கும் பிற்போக்கு மனப்பான்மைக்கு ஆதரவளிக்கும் வகையில் உள்ளது." என்று கூறுகிறார்.
'வலதுசாரி அரசியலுக்கு வலு சேர்க்கும்'

பட மூலாதாரம், AadhavanDheetchanya/Facebook
"திராவிடம் கருத்தாக்கத்தை தீவிரமாக முன்வைத்த அயோத்திதாசர் பண்டிதர் பெயர் கூட எடுத்துக்காட்டு பட்டியலில் இல்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. வெறும் பெயர்களை மாற்றுவது என்பதைக் கடந்து, அந்தப் பெயர்களை வைத்ததற்கு பின் உள்ள சமூக மனப்பான்மையை மாற்ற முயற்சிகள் எடுக்க வேண்டும்" என்று கூறுகிறார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா.
கோவை மேம்பாலத்திற்கு 'ஜிடி நாயுடு' பெயர் சூட்டப்பட்டது குறித்துப் பேசிய ஆதவன் தீட்சண்யா, "ஜிடி நாயுடுவின் குடும்பத்தாரே தங்களது நிறுவனங்களுக்கு 'ஜிடி' என்று தானே பெயர் வைத்துள்ளார்கள். அவரது மகனின் பெயர் கூட ஜி.டி.கோபால் தான். அப்படியிருக்க 'நாயுடு' எனச் சொன்னால் தான் மக்களுக்கு தெரியும் என்பதை ஏற்க முடியாது." என்று கூறுகிறார்.
இங்கு ஆதவன் தீட்சண்யா குறிப்பிடுவது போல, 'ஜிடி குரூப்' (GD Group) என்ற பெயரிலேயே ஜிடி நாயுடுவின் குடும்பத்தினரின் நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன என்பதை அந்த நிறுவனங்களின் இணையதளங்களில் காண முடிந்தது.
"வலதுசாரியினர் பெரியாரை 'ராமசாமி நாயக்கர்' என்றே அழைக்கிறார்கள். கேட்டால் அதுதானே அவரது இயற்பெயர் என்று சொல்கிறார்கள். அது போல தான் இதுவும் உள்ளது. சமூக நீதி பேசும் அரசு இப்படிச் செய்வது வலதுசாரி அரசியலுக்கு தான் வலு சேர்க்கும்" என்கிறார் ஆதவன் தீட்சண்யா.
தமிழக அமைச்சர் பதில்
இந்தச் சர்ச்சைகளுக்கு பதிலளித்த தமிழக அமைச்சர் எ.வ.வேலு, "பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயரை வைத்ததற்கு நடுநிலை மக்கள் பாராட்டுகின்றனர். பொதுவாக ஜி.டி.நாயுடு என்றே அவரை அழைப்பார்கள். அதன் காரணமாக தான் அந்த பெயர் வைக்கப்பட்டது. சாதிய அடையாளம் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, ஜி.டி.நாயுடு குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்." என்றார்.

பட மூலாதாரம், இரா.முருகவேள்/Facebook
'ஒருபுறம் சமூக நீதி, மறுபுறம் சாதிப் பெயரா?'
ஆனால், "இந்த விஷயம் தேன் கூட்டில் கல்லெறிவது போல, மற்ற சமூகங்களும் தங்கள் தலைவர்கள் பெயரில் கட்டமைப்புகளை நிறுவ கோரிக்கை வைப்பது அதிகரிக்கும். உண்மையில், இந்தப் பாலம் கோவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளது. ஆனால், இந்தப் பெயர் சர்ச்சையால் அரசுக்கு தான் அவப்பெயர்." என்று கூறுகிறார் கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் முருகவேள்.
"உதாரணத்திற்கு கோவையின் ஆர்எஸ் புரம் என்பது ரத்னசபாபதி முதலியாரின் நினைவாக வைக்கப்பட்ட பெயர். ஆனால், அடையாளம் என்ற பெயரில் 'முதலியார்' இணைக்கப்படவில்லை அல்லவா?" என்றும் அவர் கேள்வியெழுப்புகிறார்.
"ஒருபுறம் சமூக நீதி என்ற பெயரில் சாதிப் பெயர்களை மாற்ற வேண்டுமென கூறும் அரசு, மறுபுறம் ஒரு புதிய கட்டமைப்பிற்கு சாதியப் பெயரை வைப்பது நிச்சயம் கேலிக்கு உள்ளாகும். எனவே தமிழக அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று கூறுகிறார் முருகவேள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












