You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிளாஸ்டிக் டப்பாவில் வைக்கும் உணவு ரசாயனத்தை உறிஞ்சி புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா?
- எழுதியவர், சூ க்வின்
- பதவி, பிபிசி
பிளாஸ்டிக் டப்பாக்கள் நம்மில் பலருக்கு அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகும்; பல்வேறு வகையான உணவுகளை சேமிக்கவும், உறைய வைக்கவும், வெப்பப்படுத்தவும் மற்றும் வெளியே கொண்டு செல்லவும் அவற்றைப் பயன்படுத்துகிறோம்.
ஆனால் சில விஞ்ஞானிகள் பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் நமது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் வாய்ப்பு இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.
பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஆயிரக்கணக்கான பொருட்களில் சில, நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களில் சேரலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் உற்பத்தியாளர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அப்படி கசியும் ரசாயனங்களின் அளவுகள் மிகவும் குறைவாக இருப்பதால் அவை மனித ஆரோக்கியத்திற்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று கூறுகின்றனர்.
உணவுத் தரநிலைக் கழகம் (FSA) வகுத்துள்ள விதிமுறைகளில், உணவுடன் தொடர்பு கொள்ளும் பிளாஸ்டிக்கில் என்னென்ன பொருட்களைப் பயன்படுத்தலாம் மற்றும் பயன்படுத்தக்கூடாது என்பதைக் குறிப்பிடுகிறது. இந்த விதிகளின் கீழ், தீங்கு விளைவிக்கும் அளவில் உணவில் ரசாயனங்களை வெளியிடும் பொருட்களை உற்பத்தியாளர்கள் பயன்படுத்துவது சட்டவிரோதமானது.
உற்பத்தியாளர்கள் உணவின் வெப்பநிலை, உணவின் வகை மற்றும் சேமிப்பு நேரம் உட்பட பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். பல்வேறு நாடுகளில் உள்ள கண்காணிப்பு அமைப்புகளின்படி உற்பத்தியாளர்கள் தாங்கள் தயாரிப்புகளை சோதித்ததையும் அவர்கள் சட்டத்திற்கு இணங்குவதையும் நிரூபிக்க முடியும்.
இருப்பினும், சில விஞ்ஞானிகள் இந்த விதிகள் அமல்படுத்தப்படவில்லை என்று வாதிடுகின்றனர்.
உணவில் பிளாஸ்டிக் கலக்கிறதா?
பிரிட்டிஷ் பிளாஸ்டிக் கூட்டமைப்பு (BPF) படி, உணவுப் பாக்கெட்ககளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் வகைகளில் ஒன்று பாலிப்ரோப்பிலீன்(Polypropylene) (மிருதுவான பாக்கெட்டுகள் முதல் பிஸ்கட் ரேப்பர்கள் வரை எல்லாவற்றிலும் இது காணப்படுகிறது). நம்மில் பலர் வைத்திருக்கும், டிபன் பாக்ஸ்கள், பாலிஎதிலீன் எனப்படும் மற்றொரு வகை பிளாஸ்டிக்கிலிருந்து தயாரிக்கப்படுகின்றது.
ஆனால் உற்பத்தியின் போது பல ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன, அதாவது டிபன் பாக்ஸ்கள் நெகிழ்வானதாக மாற்றுவதற்கு வண்ணங்கள் மற்றும் சில பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
"பிளாஸ்டிகின் வேதியியல் கலவை நம்பமுடியாத அளவிற்கு சிக்கலானது" என்று சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட ஒரு லாப நோக்கற்ற அமைப்பான புட் பேக்கிங் போரம் (Food Packaging Forum) இன் நிர்வாக இயக்குநரும் தலைமை அறிவியல் அதிகாரியுமான முனைவர் ஜானி முன்கே கூறினார்.
உற்பத்தியின் போது ரசாயனங்கள் ஒன்றோடொன்று வினைபுரியும் போது மாறுவது மட்டுமல்லாமல், தெரியாத கூறுகளும் கலவையில் உருவாகும். இவை வேண்டுமென்றே சேர்க்கப்படாத பொருட்கள் என குறிப்பிடப்படுகின்றன.
சில ரசாயனங்கள் பிளாஸ்டிக்கிலிருந்து உணவு மற்றும் பானங்களில் இடம்பெயர்கின்றன, மேலும் சில நம் உடலால் உறிஞ்சப்படுகின்றன என்பது சர்ச்சைக்குரியது அல்ல. "சில வகையான உணவுகள் அதிக ரசாயன பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதையும் நாங்கள் அறிவோம்" என்று டாக்டர் முன்கே கூறினார்.
எடுத்துக்காட்டாக, அமில உணவுகள் (தக்காளி சாஸ் போன்றவை) அல்லது கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றவற்றை விட பிளாஸ்டிக் பாக்ஸ்களில் இருந்து அதிக ரசாயனங்களை உறிஞ்சும் வாய்ப்பு உள்ளது.
2022 ஆம் ஆண்டில், விஞ்ஞானிகள் குழு, 'கவலைக்குரிய ரசாயனங்கள்' என 388 ரசாயனங்களின் பட்டியலை வெளியிட்டது, அவை உணவுடன் தொடர்பு கொள்ளும் பொருட்களில் பயன்படுத்தப்படலாம். கவலைக்குரிய ரசாயனங்கள் அபாயகரமானதாகக் கருதப்படுகின்றன, ஏனெனில் அவை புற்றுநோயை உண்டாக்கும் திறன் அல்லது பிற வழிகளில் நமது ஆரோக்கியத்தை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
பெயரிடப்பட்ட 388 கவலைக்குரிய உணவு தொடர்பு ரசாயனங்களில்', 197 ரசாயனங்கள் உணவு பேக்கேஜிங், உணவு சேமிப்பு பாக்ஸ்கள், மேஜை பாத்திரங்கள் மற்றும் பல பொருட்கள் உட்பட, உணவுடன் தொடர்பு கொள்ளும் பிளாஸ்டிக் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன.
"இந்த ரசாயனங்களை தினசரி பயன்படுத்துவதால் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் உண்டு என்பது அதன் அர்த்தம் இல்லை," என முனைவர் முன்கே கூறினார்.
பிளாஸ்டிக் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானதா?
ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி நிபுணர்களின் கூற்றுப்படி, பிளாஸ்டிக்கில் உள்ள பல ரசாயனங்கள் ஒரு நேரத்தில் சிறிய அளவில் வெளிப்பட்டாலும் கூட, "கவலைக்குரியவை" எனக் குறிப்பிடுகின்றனர். ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் இணையதளத்தில் முனைவர் ரஸ் ஹவுசர், "பலவிதமான பாதகமான உடல்நல பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். மிக முக்கியமாக, நாம் ஒரே நேரத்தில் பல ரசாயனங்கள் (உதாரணமாக, ரசாயன கலவைகள்) சேர்க்கும்போது, நம் உடலில் பாதகமான விளைவுகளை ஏற்படலாம்," என எழுதியுள்ளார்.
பிளாஸ்டிக்கில் காணப்படும் இரண்டு ரசாயனங்கள், ப்தலேட்ஸ் மற்றும் பைபினால்(பிபிஏ)(BPA) அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. அவை எண்டோகிரைன் சீர்குலைப்பான்கள் என்று அழைக்கப்படுகின்றன, அதாவது அவை உடலின் ஹார்மோன்களில் தலையிடுகின்றன.இயல்பான வளர்ச்சி, கருவுறுதல் மற்றும் இனப்பெருக்கம் போன்ற உயிரியல் செயல்முறைகளின் வரிசையை பாதிக்கலாம்.
சமீபத்தில், ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு ஆணையம் (EFSA) ஆய்வுப்படி, இந்தப் பிளாஸ்டிக்கள் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்பதை உறுதிப்படுத்தியது.
பாலிப்ரோப்பிலீன் அல்லது பாலிஎதிலினில் இருந்து தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் உணவு பாக்ஸ்கள் அல்லது இரண்டின் கலவையான "பொதுவாக" பிபிஏ அல்லது ப்தலேட்ஸை கொண்டிருக்காது என்று பிரிட்டிஷ் பிளாஸ்டிக் கூட்டமைப்பு கூறுகிறது.
பிளாஸ்டிக் பாக்ஸ்களில் இருந்து ரசாயனங்கள் கசியுமா?
நம் உணவில் எந்த ரசாயனமும் கசிவதைத் தவிர்க்க விரும்பினால், எந்த வகையான டப்பாக்களை பயன்படுத்த வேண்டும்?
வாஷிங்டனில் உள்ள சுகாதார ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் தலைவர் முனைவர் டயானா ஜுக்கர்மேன் கூறுகையில், "பிளாஸ்டிக் கலவையானது எல்லா நேரத்திலும் மாறிக்கொண்டே இருப்பதுதான் பிரச்னை. பெரும்பாலான மக்களைப் போலவே, என்னிடம் பழைய பிளாஸ்டிக் பாக்ஸ்களால் நிரப்பப்பட்ட சமையலறை உள்ளது, ஆனால், அவற்றில் என்ன இருக்கிறது என எனக்குத் தெரியாது,"என்றார்.
“பிளாஸ்டிக்குகள் காலப்போக்கில் உடைந்து, ரசாயனத்தை வெளியிடலாம். பிளாஸ்டிக் சூடாக்கப்படும்போது அல்லது பழையதாகி, மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டு கழுவப்படும்போதும் இது நடக்கும்" என்றும் அவர் கூறுகிறார்.
பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் மற்றும் அவை எந்த அளவிற்கு உணவில் சேரும் என்பது பற்றி முழுமையாகத் தெரிய வரும்வரை, கண்ணாடி அல்லது பீங்கான் பாக்ஸ்களை தேர்வுசெய்ய பரிந்துரைக்கிறார் ஜுக்கர்மேன். குறிப்பாக சூடான உணவு மற்றும் மைக்ரோவேவில் உணவை சூடாக்குவதற்கு கண்ணாடி அல்லது பீங்கான் பாக்ஸ்களை பயன்படுத்தலாம் என்கிறார் அவர்.
“ஒரு பாக்ஸ் மைக்ரோவேவ் பாதுகாப்பானது என்று உற்பத்தியாளர் கூறினால், அது உருகாது என்று பொருள். ஆயினும் நான் ஒருபோதும் பிளாஸ்டிக்கில் எதையும் சூடாக்குவதில்லை - நான் அதை ஒரு கண்ணாடி அல்லது பைரெக்ஸ் பாக்ஸில் வைத்து உணவை காகித துண்டு அல்லது தட்டில் மூடுகிறேன். அதைத்தான் மற்ற அனைவருக்கும் செய்ய நான் பரிந்துரைக்கிறேன்,” என்றார் முனைவர் ஜுக்கர்மேன்.
ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுவது என்ன?
உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் உலகின் மிகப்பெரிய அமைப்பான அமெரிக்காவில் உள்ள அகாடமி ஆஃப் நியூட்ரிஷன் அண்ட் டயட்டெடிக்ஸ், குளிர்ந்த உணவை சேமிக்க குறிப்பிட்ட பிளாஸ்டிக் பாக்ஸை மட்டுமே பயன்படுத்துமாறு நுகர்வோருக்கு அறிவுறுத்துகிறது.
பெரும்பாலான பிளாஸ்டிக் உணவு பாக்ஸ்களில் ஒரு முக்கோணம், ஒன்று முதல் ஏழு வரையிலான எண்களைக் கொண்டுள்ளது. இது அதைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் என்பதை அடையாளம் காட்டுகிறது. உணவுப் பயன்பாட்டிற்கான பாதுகாப்பான தேர்வுகள் எண்கள்- ஒன்று, இரண்டு, நான்கு மற்றும் ஐந்து என்று அகாடமி கூறுகிறது. அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் மூன்று, ஆறு மற்றும் ஏழு குறியீடுகளைக் கொண்ட பிளாஸ்டிக் பாக்ஸ்களை தவிர்க்க பரிந்துரைக்கிறது.
பிஎப்ஏ,வின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,“உணவு வைப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பிளாஸ்டிக் தயாரிப்பும் உணவு தர ஆணையத்தின் "மிகக் கடுமையான" தரநிலைகளை சந்திக்க வேண்டும். வேண்டுமென்றே சேர்க்கப்படாத பொருட்கள் பொதுவாக மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கில் மட்டுமே காணப்படுகின்றன, ஆனால் தற்போது, மறுசுழற்சி செய்யப்பட்ட பாலிப்ரோப்பிலீன் அல்லது பாலிஎதிலீன் நேரடி உணவுத் தொடர்புக்கு அனுமதிக்கப்படவில்லை. எனவே, இது ஒரு பிரச்னையாக இருக்கக்கூடாது," என்றார் அந்தச் செய்தித் தொடர்பாளர்.
பிளாஸ்டிக் பாக்ஸ்களால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் குறித்து அனைத்து நிபுணர்களும் ஒரே கருத்தை தெரிவிப்பதில்லை. பிரிட்டனின் புற்றுநோய் ஆராய்ச்சியைச் சேர்ந்த டாக்டர் ரேச்சல் ஓர்ரிட் கூறுகையில், “பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவது புற்றுநோயை உண்டாக்குகிறது என்பதற்கான ஆதாரம் இல்லை. பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து குடிப்பது மற்றும் உணவைச் சேமிக்க பிளாஸ்டிக் பாக்ஸ் மற்றும் பைகளைப் பயன்படுத்துவது ஆகியவை இதில் அடங்கும். இந்த பாக்ஸ்களில் உணவை ஒரே நேரத்தில் பல மணிநேரங்களுக்கு சூடாக்கினாலும், அவை புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்காது" என்று அவர் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)