சென்னை தவிர்த்த பிற இடங்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது ஏன்?

    • எழுதியவர், சுஜாதா நடராஜன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் தவிர பெரும்பாலான நகரம் மற்றும் கிராமங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பத்து ரூபாய் நாணயங்களை பொதுமக்கள் பலரும் வைத்துக் கொண்டு அதனை செலவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

வணிக வளாகங்கள், டீ கடை, பேருந்து நிலையம் என எங்கு கொடுத்தாலும் பத்து ரூபாய் நாணயம் செல்லாது எனக் கூறி வாங்க மறுப்பு தெரிவிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

10 ரூபாய் நாணயம் குறித்து ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது?

ரூ.10 நாணயம் செல்லாது என்ற கருத்து உருவானது எப்படி?

முதன்முதலில் 2005 ஆம் ஆண்டு பத்து ரூபாய் நாணயம் அறிமுகப்பட்டது. 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டு நாணயம் மாற்றியமைக்கப்பட்டது.

இதனால், வணிகர்கள் பழைய 10 ரூபாய் நாணயம் செல்லாது என்று தெரிவித்தனர். பழைய நாணயம் செல்லாது என்று சொன்னதை வைத்து புதிதாக மாற்றியமைக்கப்பட்ட பத்து ரூபாய் நாணயமும் செல்லாது என பலரும் நினைத்துக் கொண்டனர். முதன் முதலில் போக்குவரத்து கழகங்களில் பத்து ரூபாய் நாணயம் வைத்திருந்தால் பேருந்துகளில் ஏற்ற மாட்டேன் என்று கீழே இறக்கி விடப்பட்டதாக பொது மக்கள் கூறினர்.

பத்து ரூபாய் நாணயங்களை சில வங்கிகளும் வாங்க மறுத்த காலகட்டத்தில் ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதன் பிறகு வங்கிகள் வாங்க தொடங்கினர்.

நாணயத்தை எடுத்துச் செல்லும்போதும், எண்ணும் போதும் அதிக சிக்கல்கள் இருப்பதாகவும் அதனால் தான் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதாகவும் சமூக ஆர்வலர் வடிவேல் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

அரசு பேருந்துகளில் கூட பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பு

பிபிசியிடம் பேசிய சமூக ஆர்வலர் வடிவேல் சுப்பிரமணியம், "சென்னையில் பத்து ரூபாய் நாணயத்தை அனைத்து இடங்களிலும் வாங்குகின்றனர். சென்னையில் இருந்து வாங்கி வரும் நாணயத்தை திருப்பத்தூர் மாவட்டத்தில் வாங்குவதில்லை. என்னிடமும் ஒரு நூறு நாணயங்கள் உள்ளன. அரசாங்கம் இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பத்து ரூபாய் நாணயங்களை பயன்படுத்துவோர் எல்லாம் சாமானிய மனிதர்கள். ஏழை மக்களின் பிரச்னைகள் எப்போதுமே அரசாங்கத்தின் காதுகளுக்கு போகாது. அதுவே 2000 ரூபாய் நோட்டுப் பிரச்னை என்றால் பெரிய மனிதர்கள் தலையீடு இருக்கும். அது உடனடியாக அரசாங்கத்தால் தீர்க்கப்படும்.

நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிக்கை விடுவது மட்டும் சமுதாயத்தை மாற்றுவதற்கான வழியில்லை. அதிகாரிகள் களத்தில் இறங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில் பத்து ரூபாய் நாணயம் முற்றிலும் வாபஸ் பெற வேண்டும்," என கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதி மலைநாயக்கன் பள்ளி அஞ்சல் பகுதியைச் சார்ந்த முனிசாமி மகன் கஜேந்திரன் கடந்த 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் நகரப் பேருந்தில், பத்து ரூபாய் நாணயத்தை வாங்கவில்லை என புகார் கொடுத்தார்.

அந்தப் புகாரில், "பேருந்து நடத்துநர் ஒருவர் திருப்பத்தூரில் இருந்து சீரகப்பட்டிக்கு செல்லும் நகரப் பேருந்தில், இரவு 9:30 மணி அளவில் பயணம் செய்யும் போது பத்து ரூபாய் நாணயத்தை வாங்கவில்லை.

பேருந்தில் இருந்த நடத்துநர் என்னை அவதூறாக பேசியது மட்டுமல்லாமல், பேருந்தில் பயணம் செய்த பயணிகளிடமும் என்னை கேலி செய்யச் சொல்லி என்னை அவமதித்தார். என்னை ஒருமையில் பேசி அவமரியாதையாக நடத்தினர்," என்றார் கஜேந்திரன்.

திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு பேருந்துகளில் கூட பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர்.

ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் ஒரு துணிக்கடையில் பத்து ரூபாய் நாணயம் ஐந்து கொடுத்தால் ஷர்ட், ஷூ இலவசம் என இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அப்போது நீண்ட நாட்களாக செலவு செய்ய முடியாமல் வைத்திருந்த பத்து ரூபாய் நாணயங்களுடன் பொதுமக்கள் அந்தக் கடையை சூழ்ந்தனர்.

அந்தக் கடையில் பத்து ரூபாய் நாணயத்தை மாற்றிய திவ்யா என்ற பெண் பேசுகையில், "பத்து ரூபாய் நாணயம் நிறைய இடங்களில் செல்லாத நாணயமாக உள்ளது. ஒரு சில இடங்களில் மட்டுமே வாங்குகின்றனர். எங்குமே யாருமே வாங்காமல் இருந்த நிலையில் வீட்டில் நாங்கள் நீண்ட காலமாக அதை வைத்திருந்தோம்.

பெங்களூருவில் நாங்கள் சிறிது காலம் வாழ்ந்து வந்தோம். அங்கேயும் 10 ரூபாய் நாணயம் வாங்குவதில்லை. நாங்கள் வைத்திருந்த நாணயங்களை இந்த துணிகளை வாங்கியதன் மூலம் அவர்களிடம் கொடுத்துவிட்டோம்," எனறார்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பெருநகரங்களில் பத்து ரூபாய் காயினை வாங்க பெரும்பாலான வணிகர்கள், போக்குவரத்து ஊழியர்கள் மறுப்பதில்லை. மாறாக இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நகரங்களிலும், கிராமங்களில் பத்து ரூபாய் நாணயம் குறித்து போதிய விழிப்புணர்வு இன்னும் சென்று சேரவில்லை என்கிறார் வங்கி ஊழியரான செல்வம்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய வணிகர் கூட்டமைப்பைச் சேர்ந்த மருதுபாண்டி, "வாடிக்கையாளர்களிடம் பெறும் பத்து ரூபாய் நாணயத்தை எடுத்துச் சென்று வங்கிகளில் நேரடியாக செலுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது. தானியங்கி இயந்திரங்களில் ரூபாய் நோட்டைச் செலுத்துவது போல நாணயங்களை செலுத்த வழியில்லை. வங்கிகளிலும் அதிக நேரம் செலவிட்டு நாணயங்களை டெபாசிட் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதன் வெளிப்பாடாக பல இடங்களில் வணிகர்கள் பத்து ரூபாய் நாணயங்களை பெற மறுக்கின்றனர்," என்றார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள வணிகர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலமாகவும், ரிசர்வ் வங்கி மூலமாக பத்து ரூபாய் நாணயங்களை பெறுவதில் தடை ஏற்படுத்தக் கூடாது என்று ஏற்கெனவே சொல்லப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்

ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல் என்ன?

ரிசர்வ் வங்கி பத்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டதிலிருந்தே அவ்வப்போது, நாணயங்களை வாங்க மறுக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால் அண்மை காலமாக இந்த போக்கு அதிகரிப்பதை தடுக்க ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

10 ரூபாய் நாணயம் செல்லும் என்றும், மக்கள் பயமின்றி அதை வைத்து பணப் பரிமாற்றம் செய்யலாம் என்று விளம்பரம், குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்பு மூலமாக பல வழிகளில் விழிப்புணர்வு செய்து வருகிறது.

பத்து ரூபாய் நாணயம் தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள் குறித்து தெளிவு பெற '14440' என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தல், வாடிக்கையாளர்களுக்கு போன் செய்து விளக்கம் அளிக்கும் நடைமுறையையும் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களை பணப் பரிமாற்றத்தின் போது வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம் என்கிறார் வங்கி ஊழியர் செல்வம்.

நாணயத்தை வாங்க மறுக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் மீது புகார் அளித்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றார் அவர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)