You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்தின் பின்னணி என்ன?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு அமைச்சரவையில் மனோ தங்கராஜின் நீக்கமும் பொன்முடியின் துறை மாற்றமும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை (செப்டம்பர் 28) இரவு ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஆறு அமைச்சர்களின் துறைகள் மாற்றி அமைக்கப்படுவதாக தெரிவித்திருந்தது.
2021-ஆம் ஆண்டு தி.மு.க., ஆட்சி அமைந்த பிறகு தற்போது வரை ஐந்தாவது முறையாக தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் வளர்ச்சிக்காகவே அமைச்சரவையில் சில மாற்றங்களை முதலமைச்சர் ஸ்டாலின் செய்திருப்பதாகக் கூறுகிறார், தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.
யாருக்கு எந்தத் துறை?
உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறையும், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.
வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன், ஆதிதிராவிடர் நலத்துறைக்கும், இதே துறையைக் கையாண்டு வந்த கயல்விழி செல்வராஜுக்கு மனிதவள மேம்பாட்டுத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.
நிதி அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசுவுக்கு கூடுதலாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பனுக்கு பால்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்து, அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், இளித்துறை ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நீக்கப்பட்டதற்கான காரணத்தை தி.மு.க., தலைமை அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கவில்லை.
அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக கோவி.செழியனும் சுற்றுலா துறை அமைச்சராக பனமரத்துப்பட்டி ராஜேந்திரனும் புதிதாக இணைந்துள்ளனர்.
செஞ்சி மஸ்தான் வசம் இருந்த சிறுபான்மை நலத்துறை, ஆவடி நாசருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சிறை செல்வதற்கு முன்னதாக செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மீண்டும் அவருக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு இரவே பதவியேற்றது ஏன்?
ஞாயிறு (செப்டம்பர் 29) அன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு முடிந்த உடன் அன்று இரவே தலைமைச் செயலகத்தில் செந்தில் பாலாஜி பொறுப்பேற்றுக் கொண்டார்.
உச்ச நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளின்படி, ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளி அன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி செந்தில் பாலாஜி கையெழுத்திட வேண்டும்.
"திங்கள் அன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் முதல் கையெழுத்தை போட்டால் விமர்சனம் எழும் என்பதால், முதல் நாள் இரவே தலைமைச் செயலகத்தில் செந்தில் பாலாஜி பொறுப்பேற்றுக் கொள்ள எண்ணியிருக்கலாம்", என பிபிசி தமிழிடம் தெரிவித்தார், மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி.
"செந்தில் பாலாஜி அமைச்சராகப் பொறுப்பேற்பதில் சட்டரீதியாகத் தடை இல்லை என்றாலும் இந்த நியமனம் தவறானது," எனக் குறிப்பிடும் மணி, "செந்தில் பாலாஜிக்கு எதிரான மூல வழக்கை நடத்துவது தமிழக அரசுதான். அவர் அமைச்சராக இருப்பதால் வழக்கின் விசாரணையில் அது பாதிப்பை ஏற்படுத்தும்," என்கிறார்.
பொன்முடியின் துறை மாற்றம் ஏன்?
"பொன்முடி வசம் இருந்த துறை மாற்றம் மனோ தங்கராஜின் பதவி பறிப்பு ஆகியவை சில கேள்விகளை எழுப்புகின்றன," என்கிறார் ஆர்.மணி.
2006 முதல் 2011 வரையிலான தி.மு.க., ஆட்சியிலும் 2021-ஆம் ஆண்டு அமைந்த தி.மு.க., அரசிலும் தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி நீடித்து வந்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் தண்டனையை நிறுத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவரை மீண்டும் அமைச்சராக்குவதற்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனமும் தெரிவித்தது. இதையடுத்து, பொன்முடி மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
"தற்போது திடீரென பொன்முடியின் இலாகாவை மாற்றியதற்கான காரணத்தை அரசு தெரிவிக்கவில்லை," என்கிறார் ஆர்.மணி.
முன்னதாக, கடந்த ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை பொன்முடி விமர்சித்த வீடியோ வெளியானது. அதன்பிறகு ஆட்சிக்கும் ஆளுநருக்கும் இடையே உரசல் அதிகரித்தது.
பின்னர், கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஆளுநர் மாளிகை அளித்த தேநீர் விருந்தில் தி.மு.க., அமைச்சர்கள் பங்கேற்றனர். 2024 செப்டம்பர் மாதம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பொன்முடியும் ஆளுநர் ஆர்.என்.ரவியும் இணைந்து பங்கேற்றனர்.
அமைச்சரவை மாற்றத்தில் பா.ஜ.க-வை குளிர்விக்கும் வகையில் சில விஷயங்கள் நடந்துள்ளதாக கூறுகிறார் ஆர்.மணி.
"பா.ஜ.கவுக்கு எதிராகத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் செயல்பட்டு வந்ததால் மனோ தங்கராஜின் பதவி பறிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதிலும் பதவி பறிப்புக்கான காரணம் சொல்லப்படவில்லை," என்கிறார் ஆர்.மணி.
ஓர் ஆட்சியின் இரண்டாவது பகுதியில் வரக்கூடிய மாற்றங்கள் என்பது தலைமையிடம் உள்ள பலவீனத்தை சுட்டிக் காட்டுவதாக உள்ளதாக கூறுகிறார் அவர்.
தென்மாவட்டங்களில் தி.மு.க-வுக்கு பலவீனமா?
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், மனோ தங்கராஜின் பதவி பறிப்பின் மூலம் தற்போது கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் யாரும் இல்லாத நிலை ஏற்படுள்ளதாக கூறுகிறார்.
“இது தி.மு.க-வுக்கு பலவீனமாக முடியும்," என்று கூறுகிறார் குபேந்திரன்.
பொன்முடியால் வளர்க்கப்பட்ட செஞ்சி மஸ்தான், பின்னர் அவரை எதிர்த்து அரசியல் செய்ததால், முதலில் மாவட்ட செயலாளர் பதவியையும் பின்னர் அமைச்சர் பதவியையும் பறிகொடுத்ததாகக் கூறுகிறார் குபேந்திரன்.
''துணைவேந்தர் நியமனம், நிதி நெருக்கடி என உயர்கல்வித்துறையில் பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும், பொன்முடியைப் பதவி இறக்கம் செய்தது கட்சியின் சீனியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் எனப் பேசப்பட்டு வந்த நிலையில் அவர்களின் துறைகள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன," என்கிறார் குபேந்திரன்.
இந்த மாற்றத்தில் திருவிடைமருதூர் தனித் தொகுதியின் எம்.எல்.ஏ-வான கோவி.செழியன் உயர்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை மாற்றத்துக்கு முன்னதாக அரசு தலைமைக் கொறடாவாக பொறுப்பு வகித்து வந்தார்.
"தமிழக அமைச்சரவை வரலாற்றில் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவருக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கப்படுவது இதுவே முதல் முறை," என்கிறார், 'தலித் முரசு' பத்திரிகையின் ஆசிரியர் புனித பாண்டியன்.
தற்போதைய தி.மு.க., ஆட்சியில் தலித் சமூகத்தை சேர்ந்த நான்கு பேர் அமைச்சர்களாக உள்ளனர்.
"ஆட்சியில் தலித் பிரதிநிதித்துவம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பேசியதால், கோவி.செழியனுக்கு உயர்கல்வித்துறை கிடைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதில் உண்மை இல்லை," என்கிறார் குபேந்திரன்.
தஞ்சை, சேலத்துக்கு முக்கியத்துவம்
"தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அமைச்சர்கள் இல்லை. மாவட்ட அரசியலைக் கவனிப்பதற்கு ஓர் அமைச்சர் வேண்டும் என்பதற்காகவே கோவி.செழியன் நியமிக்கப்பட்டிருக்கிறார்," என்கிறார் குபேந்திரன்.
"எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமாக சேலம் இருப்பதால், அங்கு அ.தி.மு.க வலுவாக உள்ளது. தனியாக ஓர் அமைச்சரை நியமித்தால் அந்த மாவட்டத்தில் தி.மு.க-வுக்கு வலு சேர்க்கும் என்பதால் ராஜேந்திரனை சேர்த்துள்ளனர்," என்கிறார்.
‘காரணம் சொல்லப்படுவதில்லை’
இதுகுறித்து மேலும் பேசிய ஆர்.மணி, "அமைச்சரவையில் யாரைச் சேர்க்க வேண்டும் என்பது முதலமைச்சரின் தனி உரிமை என்றாலும், அதைத் தெரிந்து கொள்வதற்கான உரிமை மக்களுக்கு உள்ளது," என்கிறார்.
"ஆனால் எந்த அரசுகளும் காரணத்தை வெளியில் சொல்வதில்லை. ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சர்களை இடமாற்றம் செய்ததை விமர்சித்து முரசொலி நாளேட்டில் கட்டுரை ஒன்றை கருணாநிதி எழுதினார்.
அதில், 'எதைச் செய்யவில்லை அல்லது எதைச் செய்தார்கள் என்பதற்காக பதவியில் இருந்து இவர்களை ஜெயலலிதா நீக்கினார் என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்' என்றார். இந்த வார்த்தைகள் எல்லா காலத்துக்கும் பொருந்தும்," என்கிறார் ஆர்.மணி.
‘முதலமைச்சர் விரும்பவில்லை... ஆனால்?’
நிர்வாக வசதிக்காகவும் கட்சியின் வளர்ச்சிக்காகவும் அமைச்சரவையில் சில மாற்றங்களை முதலமைச்சர் ஸ்டாலின் செய்திருப்பதாகவும் கூறுகிறார், தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.
பொன்முடியின் இலாகா மாற்றம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, "பொன்முடியை இடையூறு செய்வதை முதலமைச்சர் விரும்பவில்லை,” என்றார்.
செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விவரங்களுக்குள் தான் செல்ல விரும்பவில்லை எனக் கூறும் ஆர்.எஸ்.பாரதி, "தி.மு.க-வில் இணைந்த பிறகு மேற்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி தீவிரமாக பணியாற்றியதால் அவரை உள்நோக்கத்துடன் ஒடுக்கும் வகையில் பா.ஜ.க., சதி செய்தது," என்கிறார்.
‘விமர்சிப்பது சரியானதல்ல’
மேலும், "அமைச்சரவையில் யாரைச் சேர்க்க வேண்டும் என்பது முதலமைச்சரின் அதிகாரம். சீனியர், ஜூனியர் என்ற பாகுபாடுகள் இல்லை. அனைத்து அமைச்சர்களும் சமமானவர்கள்தான். இதை உள்நோக்கத்துடன் பார்ப்பதோ, அரசியல்ரீதியாக விமர்சிப்பதோ சரியானதல்ல," என்கிறார் ஆர்.எஸ்.பாரதி.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சியிலும் பலமுறை அமைச்சர்களை மாற்றி அமைத்துள்ளதாக கூறும் ஆர்.எஸ்.பாரதி, "ஆவடி நாசரை நீக்கினோம். மீண்டும் அவர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஒருவரை நீக்குவதால் அதை தண்டனை எனக் கூற முடியாது. அவர்களை வேறு பணிகளுக்கு முதலமைச்சர் பயன்படுத்திக் கொள்வார்," என்கிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)