நூறு ஆண்டுகளாக வைரலாகும் பூனைகள்: தபால் அட்டை முதல் இன்ஸ்டாகிராம் வரை தொடரும் டிரெண்ட்

    • எழுதியவர், ஐடன் வாக்கர்
    • பதவி,

இன்றைய சமூக ஊடக யுகத்தில், தொலைத்தொடர்பு புரட்சிக்கு மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சமூக ஊடகங்களில் வலம் வரும் பூனை மற்றும் நாய்களின் வீடியோக்கள் நம் வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிட்டன. இந்த பூனை மீம்கள், சமூக மாற்றத்தின் ஓர் அங்கமாகவும் இருக்கின்றன.

ஊடகங்களில் பூனைகள் முக்கியப் பங்கு வகிப்பது ஒன்றும் முதன்முறையல்ல என்று கூறுகின்றனர் ஊடக வரலாற்றை ஆய்வு செய்யும் நிபுணர்கள்.

ஊடக வரலாற்றில் இது எழுதப்படாத விதி: எந்தவொரு புதிய தொழில்நுட்பம் வந்தாலும் மக்கள் அதை வைத்து அருகில் பூனைகளோடு புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள்.

மனிதர்களுக்கும் பூனைகளுக்கும் இடையே இருக்கும் உறவின் அடையாளமாக மட்டும் அந்தப் புகைப்படங்கள் இல்லை, அவை மனிதர்களுக்கு இடையிலான உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களை வெளிப்படுத்தும் அடையாளமாகவும் இருந்திருக்கிறது.

இன்று நாம் பார்க்கும் பூனை 'மீம்கள்' மனிதர்களின் மத்தியில் இன்று நேற்று புழக்கத்திற்கு வந்ததில்லை. 1990களில் இருந்தே பூனை மீம்கள் பிரபலம். அலுவலகங்களில் முதன்முறையாக மின்னஞ்சல்கள் பயன்பாட்டிற்கு வந்தபோது, சலிப்புடன் பணியாற்றும் வேலையாட்கள் தங்களைச் சுறுசுறுப்பாக்கிக் கொள்ள பூனை புகைப்படங்களைத் தங்களுக்குள் அனுப்பிக் கொண்டனர்.

இணைய தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு அங்கிருந்த பூனைதான் இன்று சமூக ஊடகங்களில் குதித்துள்ளது. கீ போர்டுடன் அமர்ந்திருக்கும் பூனை வீடியோக்களும், 'கடுப்பான' பூனை மீம்களும் சமூக ஊடகங்களில் பிரபலமான ஒன்றாக மாறிவிட்டது. ICanHasCheezburger போன்ற இணையதளங்களில் இதுபோன்ற பூனை புகைப்படங்கள், வீடியோக்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. சிறந்த இணையதள பூனைகள் துவங்கி, பிரபலமான பூனை வீடியோக்கள், மீம்களை இந்தத் தளங்களில் நீங்கள் பார்க்கலாம்.

இன்று சீஸ்பர்கர் தேடும் பூனைகளுக்கும், தாங்கள் செல்லமாக வளர்க்கும் பூனைகளை வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடும் பூனை வளர்ப்பவர்களுக்கும் முன்பே பூனையை வைத்து ஒரு அம்சம் மிகவும் டிரெண்டாக இருந்தது. அது எட்வர்ட் அரசர் காலத்து தபால் அட்டை.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தே பூனை தபால் அட்டைகள் புழக்கத்தில் இருக்கின்றன. ஊடக வரலாற்றை ஆய்வு செய்யும் நிபுணர்கள் பலரும், 20ஆம் நூற்றாண்டின் பூனை தபால் அட்டைகளைப் புரிந்துகொள்வது இன்றைய சமூக ஊடகத்தை அறிந்து கொள்வதற்கு உதவிகரமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

தபால் அட்டைகளில் அங்கம் வகித்த பூனைகள்

பாஸ்டன் நுண்கலை அருங்காட்சியகத்தில் பணியாற்றும் மூத்த அருங்காட்சியக பொறுப்பாளர் பென் வெஸ் இதுகுறித்துப் பேசும்போது, "பல தலைமுறைகள் தாண்டியும், பல்வேறு ஊடகங்களிலும் ஒரு சில அம்சங்கள் மாற்றமே அடையாமல் இருக்கும். அதில் பூனைகளைப் பற்றிய சித்தகரிப்பும் ஒன்று," என்று தெரிவிக்கிறார்.

கடந்த 19ஆம் நூற்றாண்டு மற்றும் 20ஆம் நூற்றாண்டின் துவக்க காலங்களில், இன்று சமூக ஊடகங்கள் செயல்படுவது போல் தபால் அட்டைகள் செயல்பட்டன எனக் கூறும் வெஸ் தி போஸ்ட்கார்ட் ஏஜ் என்ற கண்காட்சியை பாஸ்டன் அருங்காட்சியகத்தில் இணைந்து நடத்தியுள்ளார்.

கடிதங்களைக் காட்டிலும் மலிவான, வேகமான மற்றும் ஏதுவான ஒரு தொடர்பு மூலமாகச் செயல்பட்டது தபால் அட்டைகள். சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளவும், எங்கே எப்போது சந்திக்கலாம் என்று தெரியப்படுத்திக் கொள்ளவும், நகைச்சுவைகளைப் பகிர்ந்து கொள்ளவும், பூனை படங்களைப் பயன்படுத்தவும் தபால் அட்டைகள் எப்போதும் பயன்படுத்தப்பட்டன.

இன்று ஒரே நொடியில் செய்தி அனுப்புவதாக இருந்தாலும் சரி, நூறாண்டுகளுக்கு முன்பு 1924இல் தபால்தலையை ஒட்டி தபால் அட்டையை அனுப்புவதாக இருந்தாலும் சரி, பூனைகள் கலைஞர்களுக்காகவும், பார்வையாளர்களுக்காகவும் என்றுமே இருந்திருக்கிறது.

கடந்த 1869ஆம் ஆண்டுதான் முதல்முறையாக தபால் அட்டைகள் அச்சிடப்பட்டன. தபால் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் வெளிவரத் துவங்கிய காலம் என்று அதைக் கூறலாம். 10 ஆண்டுகளுக்குள் தபால் சேவைகள் புதிய உச்சத்தை அடைந்தன. 1874ஆம் ஆண்டுவாக்கில், 21 நாடுகளில் சர்வதேச தபால் சங்கங்கள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் உலகெங்கிலும் தபால்களை அனுப்பவும் பெறவும் முடிந்தது.

அதைத் தொடர்ந்து வந்த சில ஆண்டுகளில் உலக நாடுகள் பலவும் தபால் அட்டைகளைப் பயன்படுத்தத் துவங்கின.

மறக்கப்பட்ட 20ஆம் நூற்றாண்டின் தொலைத்தொடர்பு வசதிகள்

மீம்களை போன்றே, தபால் அட்டைகளும் வெறும் புகைப்படங்களையும் சில வரிச் செய்திகளையும் மட்டுமே கடத்திச் செல்லவில்லை. பெரிய வலையமைப்பும், வலுவான நிறுவனங்களும் தொடர்ச்சியாக தொலைதூரங்களுக்கு இந்தத் தகவல்களை எடுத்துச் சென்றது என்பதை நிரூபிக்கும் வெளிப்படையான ஆவணங்களாகவும் இவை உள்ளன.

நவீனமடையும் தொழில்நுட்பத்தையும், மாறிவரும் உலகத்தையும் உணர்த்திய இந்தத் தபால் அட்டைகள் ஒவ்வொரு நாளும் மனிதர்களின் கையிலும், அவர்களின் அஞ்சல் பெட்டியும் தகவல்களைக் கொண்டு போய்ச் சேர்த்தது.

தபால் அட்டைகள் பயணித்த 20ஆம் நூற்றாண்டின் வலையமைப்புகளின் விதியை நாம் மறந்துவிட்டோம் என்று கூறுகிறார் வெஸ். "உன்னை நான் இன்று மாலை 5.30 மணிக்கு பார்க்க இருக்கிறேன் என்று காலை 10 மணிக்குச் செய்தி அனுப்பலாம். நீங்கள் மான்ஹட்டனில் இருந்து ஜெர்ஸி நகரத்திற்குச் செல்வீர்கள் என்றால் நீங்கள் அந்தச் செய்தியை விரைவாக அவர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க இயலும்," என்று விவரிக்கிறார் அவர்.

ஒரு சராசரி மனிதனாலும் ஒரு தகவலை விரைவாகவும் மலிவாகவும் அணுக முடியும் என்பதை வரலாற்றில் நிரூபித்தது தபால் தலைகள்தான். 1900களில் துவங்கி 1914ஆம் ஆண்டு வரை, உலகம் முழுவதும் தபால் அட்டைகளின் பயன்பாடு புதிய உச்சத்தை அடைந்தது என்றே கூறலாம். அதைப் பற்றிப் பேசுவது மக்களின் ரத்தத்தில் ஊறியதைப் போன்று மாறியிருந்த காலகட்டம் அது என்று கூறுகிறார் வெஸ்.

இந்தக் காலகட்டத்தில்தான் பல மில்லியன் தபால் அட்டைகள் பயன்படுத்தப்பட்டன. பூனைகள் இந்த ஊடகத்தைச் சரியாக பயன்படுத்திக் கொள்ள ஏதுவான காலமாக அது மாறிவிட்டது.

பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக மட்டுமே அன்று பூனைகள் பயன்படுத்தப்படவில்லை. மன்னர்களும், சமூக ஆர்வலர்களும், ஏன் ராணி விக்டோரியாவும்கூட பூனைகளை செல்லப் பிராணிகளாக வளர்த்தனர். ஹாலோவீன் நிகழ்வில் விலங்குகளின் பங்கு எத்தகையது என்பது அனைவராலும் அறிந்து கொள்ளப்பட்ட ஒன்று.

அந்த நேரங்களில் வெளிவந்த தபால் அட்டைகளில் பிரசுரிக்கப்பட்ட பூனைகள் பூனைகளுக்கான பணியை மட்டுமே செய்வது போல் இருந்தது.

பாலைக் குடிப்பதாகவும், நூல் கண்டை வைத்து விளையாடுவதாகவும், சூரிய வெளிச்சதை ரசிப்பதாகவும் பூனைகளின் படங்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால் ஒரு சில தபால் அட்டைகளில் பூனைகள் மனிதர்களாக மாறியிருந்தன. வேலைக்குச் சென்றன. வீட்டு வேலைகளையும் அவை கவனித்துக் கொள்வது போன்றும் தபால் தலைகள் வெளியாகின.

தபால் அட்டைகளுக்குக் கிடைத்த வரவேற்பு அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரவில்லை. மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் இதன் பிரபலம் குறித்து, செய்தித்தாள்கள் இது 'புதிய அச்சம்' என்றும் 'ஃப்ரான்கென்ஸ்டெய்னின் அசுரன்' என்றும் அதன் தாக்கத்தை வரையறுத்தன என்று கூறுகிறார் மோனிக்கா க்யூர். மூட்டை மூட்டையாக தபால் அட்டைகளைத் தூக்கிச் செல்லும் தபால்காரர்களுக்கு ஏற்படும் உடல்நலக் கோளாறும் மக்கள் மத்தியில் பேசுபொருளானது.

வாசிக்கும் பழக்கத்தில் தாக்கத்தை உருவாக்கியதா தபால் அட்டைகளின் பயன்பாடு?

மிகவும் வேகமாகச் செயல்படும் ஒன்றாக தபால் அட்டைகள் பார்க்கப்பட்டன என்று கூறுகிறார் க்யூர். Picturing the Postcard: A New Media Crisis at the Turn of the Century என்ற புத்தகத்தை எழுதிய அவர், "ஓரிரு வரிகளில் உங்களால் ஒரு செய்தியைக் கூற முடிந்தால் நீங்கள் ஏன் இலக்கணத்தைப் படித்து ஒரு நல்ல எழுத்தாளராக வர ஆசைப்படப் போகிறீர்கள் என்ற கேள்விகளோடு, இந்தத் தபால் அட்டைகள் பயன்பாடு எழுத்து மற்றும் வாசிப்புப் பழக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருந்தது," என்றார்.

ஒருவருக்கு மற்றொருவர் பக்கம் பக்கமாகக் கடிதம் எழுதுவதற்குப் பதிலாக மக்கள் தற்போது வெறும் புகைப்படங்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். தபால் அட்டைகளின் பயன்பாடு மனித உறவுகளை ஆழமற்ற ஒன்றாக மாற்றும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவியது.

யார் வேண்டுமென்றாலும் படிக்கலாம் என்ற வகையில் இருந்த தபால் அட்டைகள் மக்கள் மத்தியிலும் பயத்தை உருவாக்கியது. உங்கள் வீட்டில் வேலை பார்ப்பவர்கள்கூட உங்களின் தபால் அட்டையைப் படிக்க இயலும் என்ற காரணத்திற்காக முதன்முதலாக தபால் அட்டைகளைப் பயன்படுத்தலாம் என்று கொடுக்கப்பட்ட முன்மொழிவு நிராகரிக்கப்பட்டது.

அன்று தபால் அட்டைகளின் பயன்பாடு தொடர்பாக ஏற்பட்ட அதே அச்சம் இன்றைய சமூக ஊடக பயன்பாட்டிலும் ஏற்பட்டுள்ளது. இது மிகவும் வேகமானது. தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கும் இது குறுகிய எண்ண ஓட்டத்திற்கும் வகை செய்கிறது. புதிய வகையான தொழில்நுட்பங்கள் மக்களையும் அவர்கள் சார்ந்திருக்கும் சமூகங்களையும் மக்கள் அணுகும் முறையை மாற்றியுள்ளதாகக் கூறுகிறார் க்யூர். புதிய வகையான சமூக ஊடகங்கள் புதிய வகையான பூனைகளை நமக்கு அறிமுகம் செய்கின்றன.

இன்றைய மீம்களை போன்றே அன்று தபால் அட்டைகள் அரசியல் பேசின. அதில் முக்கியமான ஒன்று பெண்களுக்கு வாக்குரிமைகளை வழங்க நடைபெற்ற போராட்டங்களைப் பிரதிபலிக்கும் பூனை படங்களைக் கொண்ட தபால் அட்டைகள். சமூக பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் நிதி திரட்ட தபால் அட்டைகள் பயன்படுத்தப்பட்டன. தபால் அட்டைகளை உருவாக்கும் நிறுவனங்களும், இதை ஒரு வாய்ப்பாகக் கொண்டு மக்கள் மத்தியில் நிலவும் பிரச்னைகளையும் தபால் அட்டைகளில் பிரசுரித்தன.

தபால் அட்டைகள் மீம்களை போன்றவை. 20ஆம் நூற்றாண்டின் காட்சி ஊடக கலாசாரம் விலங்குகளை, குறிப்பாக பூனைகளைச் சார்ந்தே இருந்தது என்று கூறுகிறார் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் நூலகராகப் பணியாற்றும் ஹெய்தி ஹெர். வாக்குரிமை போராட்டத்திற்கான காட்சி ஊடக கலாசாரத்தை 'வோட்ஸ் அண்ட் பெட்டிகோட்ஸ்' என்ற பெயரில் கண்காட்சியாக நடத்தினார்.

பூனைகள் செயலற்ற, அழகான, அலங்காரப் பண்புகொண்ட, அடக்கமான வீடுகளுக்கே உரித்தான பண்புகளுடன் தொடர்புடையவை என்று கூறுகிறார் ஹெர். பூனைகளை வைத்திருக்கும் யாரும் அவற்றின் கால் நகங்களை வைத்து என்ன செய்யும் என்று கூற இயலும். பூனைகள் வேட்டையாடிகள் என்றும் அவர் கூறுகிறார்.

"பெண்களுக்கான வாக்குரிமைகளுக்காகப் போராடிய பெண்கள் முதலாளித்துவவாதிகள். அவர்கள் தம் பிராண்டுகளை அப்போது கட்டமைத்தனர்," என்று கூறுகிறார் ஹெர்.

தபால் அட்டைகள், படங்கள் போன்ற புது ஊடகங்களை அந்த இயக்கம் பயன்படுத்தி மக்களிடம் தங்களின் செய்திகளைக் கொண்டு சேர்த்தது. அதில் பூனைகள் முக்கிய அடையாளமாக மாறின.

க்ளிண்டன் வெள்ளை மாளிகையின் முன்னாள் தொடர்பு இயக்குநராகப் பணியாற்றிய ஆன் லெவிஸ் வாக்குரிமை இயக்கத்தின் நினைவுப் பொருட்களைச் சேகரித்து வருகிறார். வாக்குரிமைப் போராட்டத்தின் அரசியல் செய்திகளைப் பார்த்து வியப்படைந்துவிட்டதாகக் கூறும் அவர், "நீங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்த செய்தியே அரசியல்," என்று வர்ணிக்கிறார்.

செய்தித்தாள்களும், அஞ்சல்களும் மட்டுமே தொலைத்தொடர்பு சாதனங்களாக இருந்த காலகட்டத்தில் அந்தப் பெண்கள், ஆண்கள் மட்டுமே அதிகாரம் செலுத்திய தேர்தல் அமைப்பில் வெற்றிகரமாக வாக்குரிமைப் போராட்டத்தை நடத்தினார்கள். அவர்களின் வெற்றிக்கு அந்த ஊடகங்கள் முக்கியப் பங்கு வகித்தன. "தபால் அட்டைகள் அந்தக் காலத்தைச் சேர்ந்த மின்னஞ்சல்கள். மலிவாகவும், தனிப்பட்டதாகவும் இருந்தன, அந்தத் தபால் அட்டைகள்," என்று கூறுகிறார் லெவிஸ்.

பூனை மீம்களை பார்த்து வளர்ந்த தலைமுறையினர் மத்தியிலும் வாக்குரிமைப் போராட்ட காலத்தில் வெளியான பூனை தபால் அட்டைகள் பிரபலமானவை. ஜான் ஹாப்கின்ஸ் வளாகத்தில் இந்தத் தபால் அட்டைகளில் இடம் பெற்றிருக்கும் பூனைகளின் ஸ்டிக்கர்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு என்று கூறுகிறார் ஹெர்.

"தண்ணீர் பாட்டில்களிலும் லேப்டாப்களிலும் மாணவர்கள் இந்த ஸ்டிக்கர்களை ஒட்டுவதை நானே பார்க்கிறேன். விடுதிகளிலும் மாணவர்கள் அதை ஒட்டுகின்றனர்," என்று தெரிவிக்கிறார் அவர்.

மக்கள் எப்போதும் பூனைகளைப் பற்றியும் சிந்திக்கின்றனர். அதோடு மற்றவர்களைப் பற்றியும் சிந்திக்கின்றனர். மீமோ, தபால் அட்டையோ, ஊடக வரலாற்றைப் பார்க்கும்போது மக்கள் அழகான, நகைச்சுவையான விலங்குகளின் புகைப்படங்களை அனுப்பவதைக் காட்டிலும் அதிகம் ஆர்வம் காட்டுவது எதுவுமில்லை என்பதை நிரூபிக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)