காணொளி: மூன்றாவது முறையாக டிரம்ப் அமெரிக்க அதிபராக முடியுமா? சட்டம் கூறுவது என்ன?
கடந்த திங்களன்று அமெரிக்க அதிபர் டிரம்பின் பயணத்தின்போது, மூன்றாவது முறையாக அதிபர் பதவி வகிப்பது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் இதுவரை அதைப்பற்றி யோசிக்கவில்லை என கூறினார்.
2028-ஆம் ஆண்டு துணை அதிபருக்கு போட்டியிட்டு அதன்மூலம் மீண்டும் அதிபராகும் வாய்ப்பை டிரம்ப் நிராகரித்தார். ஆனால், டிரம்ப் அமைப்பு 'டிரம்ப் 2028' என்ற வாசகத்துடனான சிவப்பு நிற தொப்பிகளை விற்பனை செய்து வருகிறது.
அமெரிக்க அரசமைப்பின் படி, மூன்றாவது முறையாக ஒரே நபர் அதிபராக முடியாது. ஆனால், இதனை தவிர்ப்பதற்கான வழியாக, துணை அதிபராக போட்டியிட்டு பின் அதிபராகும் யோசனை அவரது ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்டது.
சரி, இரண்டாவது முறையாக அதிபராக பதவி வகித்து வரும் டிரம்ப், மூன்றாவது முறையாக அதிபராக பதவி வகிக்க முடியுமா? அமெரிக்க அரசமைப்பு கூறுவது என்ன? டிரம்ப் ஆதரவாளர்கள் அவர் அதிபராக இருக்கும் வாய்ப்பாக கூறுவது எதனை? விரிவாகப் பார்க்கலாம்.
சில நாட்களுக்கு முன் டிரம்பின் ஆதரவாளர் ஸ்டீவ் பானன், மீண்டும் அவரை அதிபராக்கும் திட்டம் ஒன்று நடைமுறையில் இருப்பதாகக் கூறினார். அதைத் தொடர்ந்தே இது விவாதமாகியுள்ளது.
முன்னதாக, என்பிசி செய்தி முகமையுடனான நேர்காணலில், "இதை செய்வதற்கான வழிமுறைகள் இருப்பதாக" டிரம்ப் கூறினார்.
"இதை நகைச்சுவையாகக் சொல்லவில்லை. நிறைய பேர் அதனை செய்ய வேண்டுமென நினைக்கிறார்கள்." என்று அவர் கூறினார். இரண்டாவது பதவிக்காலம் முடியும் போது டிரம்புக்கு 82 வயதாகும்.
மூன்றாவது முறையாக ஒருவர் பதவி வகிப்பதை அமெரிக்க அரசமைப்பு தடை செய்கிறது. அதன் 22-வது சட்ட திருத்தம் பின்வருமாறு கூறுகிறது.
"எந்தவொரு நபரும் இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படக்கூடாது, மேலும் வேறு யாராவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பதவிக்காலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அதிபர் பதவியை வகித்த அல்லது அதிபராக செயல்பட்ட எந்தவொரு நபரும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படக்கூடாது."
அரசமைப்பை மாற்றுவதற்கு செனட் மற்றும் பிரதிநிதிகள் அவை இரண்டிலிருந்தும் மூன்றில் இரண்டு பங்கு ஒப்புதலும், மாகாண அளவிலான அரசின் நான்கில் மூன்று பங்கினரின் ஒப்புதலும் தேவைப்படும்.
டிரம்பின் குடியரசுக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கட்டுப்படுத்துகிறது, ஆனால் தேவையான பெரும்பான்மையைக் கொண்டிருக்கவில்லை. 50 மாகாண சட்டமன்றங்களில் 18 ஜனநாயகக் கட்சி வசம் உள்ளது.
முழு விவரம் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



