கோவில் ஊர்வலத்திற்காக நிறுத்தப்படும் விமான சேவை - பாரம்பரிய நிகழ்வு எங்கே தெரியுமா?

    • எழுதியவர், அஷ்ரஃப் படானா
    • பதவி, திருவனந்தபுரம்

ஏப்ரல் மாதத்தின் வெப்பம் மிகுந்த ஒரு நாளில், கேரளாவின் தலைநகரம் திருவனந்தபுரத்தில், விமானங்கள் சில மணி நேரம் பறக்காமல் நிறுத்தப்பட்டதால், சர்வதேச விமான நிலையத்தின் மேலே இருந்த வானம் இரைச்சலின்றி அமைதியாக இருந்தது.

விமான நிலையம் மூடப்பட்டது, மோசமான வானிலை அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அல்ல, மாறாக அதன் ஓடுபாதையின் குறுக்கே அணிவகுத்துச் சென்ற ஒரு இந்து கோவில் ஊர்வலத்துக்கு வழிவிடுவதற்காக.

பக்தர்கள் கோவில் சிலைகளைத் தாங்கிய அலங்கரிக்கப்பட்ட மர பல்லக்குகளை ஓடுபாதையின் 2 கிமீ (1.2 மைல்) நீளத்துக்கு தூக்கிச் சென்றனர். இந்த பாரம்பரியம் மிகவும் மதிக்கப்படுவதால், விமான நிலையம் சில மணிநேரங்களுக்கு தனது செயல்பாடுகளை நிறுத்துகிறது.

இந்த விமான நிலையம் வழக்கமாக தினமும் 90 தரையிறக்கங்கள் மற்றும் புறப்பாடுகளைக் கையாளுகிறது. இந்தியாவில் இந்து மத நிகழ்வுகளின் பொதுவான அம்சமான யானைகளும் இந்த ஓடுபாதையில் நடந்து சென்றன.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வு, பில்லியன் கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்களை சொத்தாகக் கொண்ட புகழ்பெற்ற ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவிலால் நடத்தப்படும் வருடாந்திர பைங்குனி (பங்குனி) திருவிழாவின் ஒரு பகுதியாகும்.

பாரம்பரியமான நடைமுறை

10 நாள் திருவிழாவின் இறுதி நாளில் நடைபெறும் இந்த ஊர்வலம், கோவிலில் தொடங்கி விமான நிலைய ஓடுபாதை வழியாக சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ள சங்குமுகம் கடற்கரைக்கு செல்கிறது.

ஊர்வலம் கடற்கரையை வந்தடையும் போது, பூசாரிகள் கடலில் சிலைகளைக் குளிப்பாட்டும் சடங்கைச் செய்கிறார்கள். மறுபடியும் பயணம் வந்த பாதையில் திரும்பிச் செல்கிறது, மீண்டும் ஓடுபாதையைக் கடந்து கோவிலை அடைகிறது.

1932 ஆம் ஆண்டு, இந்த விமான நிலையத்தைக் கட்டிய திருவிதாங்கூர் முன்னாள் அரச குடும்பத்தின் தலைவரால் ஊர்வலம் வழிநடத்தப்படுகிறது. திருவிழா மற்றும் ஊர்வலம் எப்போது தொடங்கியது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அப்போதிலிருந்து நடக்கும் இந்த ஊர்வலம், விமான நிலையத்தின் நிர்வாகம் அவர்களிடமிருந்து அரசாங்கத்துக்கும், பின்னர் அரசிடமிருந்து ஒரு தனியார் நிறுவனத்திடமும் ஒப்படைக்கப்பட்ட பிறகும்கூட, தொடர்கிறது.

விமான நிலையத்தை தற்போது கோடீஸ்வரர் கௌதம் அதானியின் குழுமத்துக்குச் சொந்தமான அதானி விமான நிலைய ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிர்வகிக்கிறது.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் நடைபெறும் கோவிலின் அல்பசி (ஐப்பசி) திருவிழாவின் போது இதேபோன்ற ஊர்வலத்துக்காக விமான நிலையம் சில மணிநேரங்களுக்கு செயல்பாடுகளை நிறுத்துகிறது.

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம், மத நிகழ்வுகளுக்காக மூடப்படும் உலகின் சில விமான நிலையங்களில் ஒன்றாகும். பாலி இந்து புத்தாண்டின் போது இந்தோனேசியாவின் நுகுரா ராய் விமான நிலையம் மற்றும் யூத மதத்தின் புனித நாளான யாம் கிப்பூரின் போது, இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையம் ஆகியவை இப்படி மத நிகழ்வுகளுக்காக மூடப்படும் விமான நிலையங்கள் ஆகும்.

ஆனால், இங்கெல்லாம் பொது விடுமுறை நாட்களாகவும் இருப்பதால் விமான நிலையம் முழுவதுமாக மூடப்பட்டிருக்கும். எப்போதும் அதிக பாதுகாப்பில் இருக்கும் ஓடுதளத்தை, ஒரு மத அல்லது கலாசார நிகழ்வை எளிதாக்கப் பயன்படுத்துவது அரிதாக நடக்கும் விஷயம்.

கோவில் ஊர்வலத்தின் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் வாய்ப்பைப் பெற்றதில் விமான நிலையம் பெருமை கொள்கிறது என்று விமான நிலைய தலைமை அதிகாரி ராகுல் பட்கோட்டி கூறினார்.

"இதுபோன்ற ஒரு வரலாற்று நிகழ்வை எளிதாக்கும் உலகின் ஒரே விமான நிலையம் இதுவாக இருக்கலாம்" என்று வெள்ளிக்கிழமை மாலை ஊர்வலம் விமான நிலையத்துக்குள் நுழைவதற்கு முன்பு அவர் பிபிசியிடம் கூறினார்.

விமான நிலையத்தில் ஒரே ஒரு ஓடுபாதை மட்டுமே இருப்பதால், ஊர்வலத்தின் போது உள்நாட்டு மற்றும் சர்வதேச முனையங்கள் இரண்டும் மூடப்படும்.

நான்கு மணிநேர ஊர்வலம்

இங்கு இயங்கும் பெரும்பாலான சர்வதேச விமானங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று வருகின்றன, அங்கு கேரளாவைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

விமான நிலைய அதிகாரிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பே விமான நிறுவனங்களுக்கு மூடல் குறித்துத் தகவல் தெரிவித்ததாகவும், அன்று 10 விமானங்கள் நேரத்தை மாற்றி அமைத்துக் கொண்டதாகவும் தெரிவித்தனர்.

"உள்ளூர் நேரப்படி மாலை 4:45 மணிக்குத் தொடங்கும் ஊர்வலம் முடிவடைய சுமார் நான்கு மணி நேரம் ஆகும்" என்று கோவிலின் நிர்வாக அதிகாரி மகேஷ் பாலச்சந்திரன், பிபிசியிடம் தெரிவித்தார்.

நிகழ்வில் குறைவான நபர்களே பங்கேற்கின்றனர். கண்காணிப்பும் பலமாக இருக்கும்.

மூத்த அரச குடும்ப உறுப்பினர்கள், பூசாரிகள், அதிகாரிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள், மேலும் அவர்கள் கோவில் அறக்கட்டளையால் வழங்கப்படும் சிறப்பு பாஸ்களையும், விமான நிலைய அதிகாரிகளிடமிருந்து பாதுகாப்பு அனுமதியையும் பெற்றிருக்க வேண்டும்.

"விமான நிலையம் வழியாக ஆண்டுக்கு இரண்டு முறை, பைங்குனி மற்றும் அல்பசி திருவிழாக்களின் போது, ஊர்வலம் முழு வீரியத்துடன் செல்கிறது," என்று திரு. பாலச்சந்திரன் கூறினார். "இது எந்த அசம்பாவிதங்களும் இல்லாமல் அமைதியாக நடைபெறுகிறது. எல்லாம் கவனமாக திட்டமிடப்படும்."

விமான நிலைய பாதுகாப்பைக் கையாளும் துணை ராணுவப் படையான மத்திய தொழில் பாதுகாப்புப் படை, பாதுகாப்புக்காக முழு ஓடுபாதையையும் தடை செய்து கூட்டத்தை நிர்வகிக்கிறது. அதிகாரிகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கூட்டத்தைக் கண்காணித்து, ஊர்வலத்துக்குப் பிறகு ஓடுபாதையை கவனமாக ஆய்வு செய்கிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான நிலையம் வழியாக செல்லும் ஊர்வலம், "பாரம்பரியமும் நவீனத்துவமும் இங்கு ஒவ்வொரு ஆண்டும் எவ்வாறு இணைந்து வாழ்கின்றன" என்பதை நினைவூட்டுவதாக, திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கடந்த வார ஊர்வலத்துக்குப் பிறகு எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு