கண்ணீர் வடித்த மெஸ்ஸி, கோபா அமெரிக்காவைக் கைப்பற்றிய அர்ஜென்டினா - இறுதிப் போட்டியில் என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, யூரோ 2024, கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்களின் பரபரப்பான இறுதிப் போட்டிகளில் என்ன நடந்தது?
கண்ணீர் வடித்த மெஸ்ஸி, கோபா அமெரிக்காவைக் கைப்பற்றிய அர்ஜென்டினா - இறுதிப் போட்டியில் என்ன நடந்தது?

மெஸ்ஸி களத்திற்கு வெளியே அழுது கொண்டிருக்கும் காட்சி திரையில் தோன்றியபோது அவரது ரசிகர்களின் கன்னங்களும் நனைந்திருக்கலாம்.

கொலம்பியா அணிக்கெதிரான இறுதிப்போட்டியின் 63-வது நிமிடத்தில் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி காயத்தால் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார்.

காலில் வீக்கம் ஏற்பட்டதால் அவர் இறுதிப்போட்டியில் இருந்து வெளியேற வேண்டியிருந்தது.

அவ்வப்போது சோகத்தால் வாடிய முகத்தையும் வீங்கிய காலையும் கேமராக்கள் படம்பிடித்துக்கொண்டிருந்தன.

ஆட்டத்தின் முழுநேர முடிவு வரை இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. 112-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் மார்டினெஸ் ஓங்கி அடித்த பந்து, கோலாக மாற, அர்ஜென்டினா ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் மைதானமே அதிர்ந்தது.

ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்கிற கோல் கணக்கில் கொலம்பியாவை அர்ஜென்டினா வீழ்த்த, கோபா அமெரிக்கா கோப்பை மெஸ்ஸியின் கரங்களில் தவழ்ந்தது.

8 மணி நேரத்திற்குள்ளாக உலகின் இரண்டு முக்கியமான கால்பந்து தொடர்கள் நடந்து முடிந்திருக்கின்றன. கோபா அமெரிக்காவை அர்ஜென்டினா கைப்பற்றிய சில மணி நேரங்களுக்கு முன்பு, யூரோ கால்பந்து தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றது.

இரண்டு முக்கியத் தொடர்களிலும் என்ன நடந்தது?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

யூரோ கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இங்கிலாந்தால் பதில் தாக்குதல் தொடுக்க முடியாமல் போகவே, ஸ்பெயின் அணி 2-க்கு 1 கோல் கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றது

யூரோ கோப்பையில் தகர்ந்த இங்கிலாந்தின் 58 ஆண்டுகாலக் கனவு

ஜூன் 14-ஆம் தேதி ஜெர்மனியில் தொடங்கிய ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான 2024 யூரோ கால்பந்து தொடர் ஜூலை 14-ஆம் தேதியோடு முடிவுக்கு வந்தது. 58 ஆண்டுகளாக கால்பந்து கோப்பைக்காக ஏங்கிய இங்கிலாந்து அணி, 4-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இருந்த ஸ்பெயினை எதிர்த்து இறுதிப்போட்டியில் விளையாடியது.

முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. விறுவிறுப்புடன் தொடங்கிய இரண்டாவது பாதியில் ஸ்பெயின் இளம் வீரர் லமின் யமால் கொடுத்த சிறந்ததொரு பாஸை 47-வது நிமிடத்தில் கோலாக மாற்றினார் நிகோ வில்லியம்ஸ்.

ஆட்டத்தின் பெரும்பகுதிக்கும் பந்து ஸ்பெயின் அணியினரிடமே இருந்தது. ஸ்பெயினின் ‘Attacking’ ஆட்டம் ஒரு பக்கம் சூடுபிடிக்க, மறுபுறம் இங்கிலாந்து அணியின் முன்கள வீரர்களால் பெரிதாகச் சோபிக்க முடியவில்லை. இங்கிலாந்திற்காக 66 முறை கோல் அடித்த கேப்டன் ஹேரி கேன் இறுதிப்போட்டியில் வெறும் 13 முறை மட்டுமே பந்தை தொட்டிருந்தார்.

இதனால், 61-வது நிமிடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேனுக்கு பதிலாக அரையிறுதியில் நெதர்லாந்துக்கு எதிராக கடைசி நேரத்தில் கோல் அடித்த வாட்கின்ஸை களத்திற்குள் அனுப்பினார் இங்கிலாந்து பயிற்சியாளர் சவுத்கேட்.

70-வது நிமிடத்தில் களத்தில் மற்றொரு மாற்றத்தையும் அவர் கொண்டு வந்தார். கோபி மைனூ-வுக்கு பதிலாக கோல் பாமர் நுழைந்தார். இங்கிலாந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியது. களத்திற்கு நுழைந்த 140 நொடிகளில் பெல்லிங்காம் உதவியுடன் இங்கிலாந்துக்காக சிறப்பானதொரு கோலை அடித்தார் பாமர். ஆட்டம் 1 – 1 என சமநிலைக்குத் திரும்பியது.

இந்த யூரோ தொடரின் நாக் அவுட் சுற்றுகளில் விளையாடிய போதெல்லாம் இங்கிலாந்து அணி முதலில் கோல் வாங்கும். அதன் பிறகுதான் கம்பேக் கொடுக்கும். இறுதிப்போட்டியிலும் இந்த வழக்கை தொடரும் என ரசிகர்கள் நினைத்திருக்கக்கூடும். ஆனால், ஸ்பெயின் கேப்டன் மொராட்டாவுக்கு பதிலாக 68வது நிமிடத்தில் களமிறங்கிய ஒயார்ஸபால். இங்கிலாந்து ரசிகர்களின் கனவைத் தவிடுபொடியாக்கினார். 86-வது நிமிடத்தில் குகுரெல்லா கொடுத்த அட்டகாசமான கிராஸை கோலாக மாற்றி ஒயார்ஸபால் அமர்களத்திப்படுத்தினார்.

எஞ்சிய நிமிடத்தில் இங்கிலாந்தால் பதில் தாக்குதல் தொடுக்க முடியாமல் போகவே, ஸ்பெயின் அணி 2-க்கு 1 கோல் கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதன் மூலம் யூரோ கால்பந்து தொடரின் வரலாற்றில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஒரே அணியாக ஸ்பெயின் உருவெடுத்திருக்கிறது. இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக இரண்டு யூரோ கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் தோற்று மோசமான வரலாறையும் படைத்திருக்கிறது. கோப்பைக்கான இங்கிலாந்தின் 58 வருட ஏக்கம் தொடர்கிறது. இறுதிப்போட்டி வரை சென்றபோதிலும் இங்கிலாந்து அணியால் கோப்பையை வெல்ல முடியாமல்போனது.

நடந்து முடிந்த யூரோ தொடரில், ஸ்பெயின் விளையாடிய 7 போட்டிகளிலுமே வெற்றிபெற்றிருக்கிறது. இதன் மூலம் முக்கிய கால்பந்து தொடரில் தொடர்ந்து 7 வெற்றிகளை படைத்த ஒரே அணி என்கிற சாதனையை ஸ்பெயின் படைத்திருக்கிறது. இதுதவிர, நடப்பு தொடரில் 15 கோல்களை அடித்ததன் மூலம் ஒரு யூரோ தொடரில் அதிக கோல்களை பதிவு செய்த அணி என்கிற பெயரையும் பெற்றிருக்கிறது.

கோபா அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்கிற கோல் கணக்கில் கொலம்பியாவை அர்ஜெண்டினா வீழ்த்த, கோபா அமெரிக்கா கோப்பை மெஸ்ஸியின் கரங்களில் தவழ்ந்தது

அர்ஜென்டினாவின் கைகளில் கோபா அமெரிக்கா

யூரோ கோப்பைத் தொடர் நடந்து முடிந்ததும், அமெரிக்காவின் மியாமி-யில் அர்ஜென்டினா அணி, கொலம்பியாவை எதிர்த்து கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் மோதியது. உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) இரவு 8 மணியளவில் தொடங்க இருந்தது இறுதிப்போட்டி.

இந்தப் போட்டியின் போது மைதானத்திற்குள் சில ரசிகர்கள் அத்துமீறி நுழைந்ததால் காவல்துறையினருக்கும் ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் கைது செய்யப்பட்டனர். இதனால் சுமார் 80 நிமிடங்களுக்குப் பிறகு போட்டி தாமதமாகத் தொடங்கியது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில், மெஸ்ஸி பாதியில் வெளியேறிவிட்ட போதிலும் அர்ஜெண்டினா கொலம்பியாவை வீழ்த்தி 16-வது முறையாக கோபா அமெரிக்கா கோப்பையை வென்றிருக்கிறது.

இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், ஆட்டத்தில் அர்ஜெண்டினாவை விட கூடுதல் possession கொலம்பியாவிடம் இருந்தது. 2001-க்குப் பிறகு கோபா அமெரிக்கா கோப்பையை வெல்லும் வாய்ப்பு கொலம்பியாவுக்கு கைகூடுவது போல இருந்தது. மெஸ்ஸி களத்தை விட்டு வெளியேறியபோதிலும் அது சாத்தியமாகவில்லை.

எனினும், இந்த கோபா அமெரிக்கா தொடர் மெஸ்ஸிக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. காலிறுதியில் ஈகுவடாருக்கு எதிரான பெனால்டி ஷூட் அவுட்டை தவறவிட்டார். கனடாவுக்கு எதிரான அரையிறுதியில் ஒரு கோல் அடித்தார். அதுதான் இந்த தொடரில் அவர் அடித்த ஒரே கோல். அதன் பிறகு மெஸ்ஸியிடமிருந்த கோலை எதிர்பார்க்க முடியவில்லை.

37 வயதாகும் மெஸ்ஸி 2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் விளையாடுவது குறித்து இதுவரை எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.

மெஸ்ஸியின் ஆட்டம் சற்று தோய்வடைந்திருக்கலாம். ஆனால் நாட்டுக்காக கோப்பையை வென்று கொடுக்கும் அவரது வேட்கை தொடர்கிறது.

தனது 34 வயது வரை மெஸ்ஸியால் அர்ஜென்டினாவுக்காக ஒரு கோப்பையைக் கூட வென்று தர முடியவில்லை. ஆனால் அதன் பிறகு 2021-இல் கோபா அமெரிக்கா, 2022-இல் உலகக்கோப்பை, 2024-இல் மீண்டும் கோபா அமெரிக்கா என மூன்றே ஆண்டுகளில் 3 மகத்தான கோப்பைகளை அர்ஜென்டினாவுக்கு பெற்றித் தந்திருக்கிறார் மெஸ்ஸி.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)