சிறிய ஆப்பிரிக்க பூச்சியால் இந்திய சமையல் எண்ணெய் வரலாறு மாறியது எப்படி?

சமையல் எண்ணெய், எண்ணெய் பனை, ஆஃப்ரிக்க எண்ணெய் பனை வண்டுகள், விவசாயம்
    • எழுதியவர், பிரவீன் சுபம்
    • பதவி, பிபிசிக்காக

தலை பேன் அளவுள்ள ஆஃப்ரிக்க பூச்சி (வண்டு) ஒன்று, இந்தியாவில் சமையல் எண்ணெயின் மகசூலை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஆஃப்ரிக்க எண்ணெய் பனை வண்டு (Elaeidobius kamerunicus) என்று அழைக்கப்படுகிறது.

இந்த 'குட்டி விருந்தினர்' இந்திய எண்ணெய் பனைத் தோட்டங்களுக்கு வந்த பிறகு, தாவரங்களுக்கு இடையிலான இயற்கையான மகரந்தச் சேர்க்கை மேம்பட்டுள்ளது. எண்ணெய் பனை மகசூல் மற்றும் சாகுபடி பரப்பை அதிகரிக்கவும் இந்த வண்டு கணிசமான பங்களித்துள்ளது.

இந்தியாவின் சமையல் எண்ணெய் தேவைகள் பாரம்பரிய பயிர்களையே நம்பியுள்ளது. அதிகரித்து வரும் சமையல் எண்ணெய்க்கான தேவையை பூர்த்தி செய்வது, அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவிற்கு பெரிய சவாலாக மாறியுள்ளது. உலகில் சமையல் அதிகமாக எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

பிற எண்ணெய் பயிர்களை விட எண்ணெய் பனை விதைகள் ஐந்து மடங்கு அதிக எண்ணெயை உற்பத்தி செய்கின்றன என்பதும், ஆண்டு முழுவதும் அறுவடை செய்யப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பாரம்பரிய எண்ணெய் பயிர்களான எள், நிலக்கடலை, கடுகு, தேங்காய் ஆகியவை, அதிகப்படியான மழை மற்றும் வறட்சியை எதிர்கொண்டு நிலையான மகசூலை கொடுப்பது கடினமாகிவிட்டது. இந்த நிலையில், எண்ணெய் பனை, நம்பகமான பயிராகவும், சமையல் எண்ணெய்கான சிறந்த தீர்வாகவும் பார்க்கப்படுகிறது.

எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இந்தப் பயிரின் சாகுபடியை கணிசமாக விரிவுபடுத்துவதற்காக மத்திய அரசு 2021-ஆம் ஆண்டில் 'National Mission on Edible Oils - Oil Palm' (NMEO–OP) என்ற தேசிய எண்ணெய் பனை இயக்கத்தைத் தொடங்கியது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 28 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் இந்தப் பயிரை பயிரிடுவதற்கான சாதகமான சூழ்நிலைகளைக் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

1991-92 ஆம் ஆண்டில் இந்தியாவில் எண்ணெய் பனை சாகுபடி வெறும் 8,000 ஹெக்டேராக மட்டுமே இருந்த நிலையில், 2025 மார்ச் மாதத்திற்குள் இது 5.56 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது என மத்திய வேளாண் அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டுக்குள் இந்தப் பரப்பளவை 10 லட்சம் ஹெக்டேராக அதிகரிப்பதே NMEO–OP திட்டத்தின் நோக்கமாகும் .

சமையல் எண்ணெய், எண்ணெய் பனை, ஆஃப்ரிக்க எண்ணெய் பனை வண்டுகள், விவசாயம்

இந்தியாவில் விளைச்சலை அதிகரித்த ஆஃப்ரிக்க வண்டு

எண்ணெய் பனை மரங்களின் பிறப்பிடமான மேற்கு ஆஃப்ரிக்காவில் இயற்கை மகரந்தச் சேர்க்கைக்கு எலைடோபியஸ் காமெருனிகஸ் என்ற பூச்சியே காரணம் என்று மலேசிய விவசாய விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

கடந்த காலத்தில் இந்தியாவிலும் மலேசியாவிலும், ஆண் மரங்களின் பூக்களிலிருந்து மகரந்தத்தைச் சேகரித்து, பெண் மரங்களின் பூக்களில் தெளிக்க வேண்டியிருந்தது.

1981-ஆம் ஆண்டில், ஆஃப்ரிக்காவிலிருந்து மலேசியாவிற்குக் கொண்டுவரப்பட்ட இந்த வண்டு, அங்குள்ள எண்ணெய் பனைத் தோட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் விளைவாக மலேசியாவில் எண்ணெய் பனை விளைச்சலில் வியத்தகு அதிகரிப்பு ஏற்பட்டது.

மலேசியாவின் அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு இந்தியாவும் அதே உத்தியைப் பின்பற்றியது.

இந்தப் பூச்சி முதன்முதலில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் 1985-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .

பின்னர் 1988-ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பெடவேகியில் உள்ள இந்திய எண்ணெய் பனை ஆராய்ச்சி நிறுவனத்தின் (IIOPR) எண்ணெய் பனைத் தோட்டங்களில் இந்தப் பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சி குறித்த முழுமையான ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

சமையல் எண்ணெய், எண்ணெய் பனை, ஆஃப்ரிக்க எண்ணெய் பனை வண்டுகள், விவசாயம்

இந்தப் பூச்சி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகள், எண்ணெய் பனை மகசூல் அதிகரித்திருப்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.

பழக் குலைகள் மற்றும் குலைகளில் உருவாகும் பழங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, இதனால் மரங்களின் தரம் மேம்பட்டுள்ளது மற்றும் அதிக எண்ணெய் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது என தோட்டக்கலை அதிகாரிகள் கூறுகின்றனர்.

"இந்த பூச்சியின் வருகைக்கு முன்பு, கொத்துக்களிலிருந்து கிடைக்கும் பழங்களின் மகசூல் 25 முதல் 28 சதவீதமாக இருந்தது. அவற்றின் வருகைக்குப் பிறகு, இது 78 முதல் 85 சதவீதமாக அதிகரித்தது" என, பிபிசியிடம் பேசிய ஜக்தியால் மாவட்ட தோட்டக்கலை அதிகாரி ஷியாம் பிரசாத் தெரிவித்தார்.

சமையல் எண்ணெய், எண்ணெய் பனை, ஆஃப்ரிக்க எண்ணெய் பனை வண்டுகள், விவசாயம்

சாகுபடியில் முதலிடம் பிடிக்கும் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்கள்

தற்போது, ​​ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகியவை நாட்டில் எண்ணெய் பனை சாகுபடியில் முதலிடத்தில் உள்ளன.

2020-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, ஆந்திராவில் 1.86 லட்சம் ஹெக்டேரிலும், தெலுங்கானாவில் 1.12 லட்சம் ஹெக்டேரிலும் எண்ணெய் பனை பயிரிடப்பட்டுள்ளது.

இந்த இரு மாநிலங்களுடன் கேரளாவும் சேர்ந்து மொத்தம் மூன்று மாநிலங்கள் மட்டுமே நாட்டின் மொத்த எண்ணெய் பனை உற்பத்தியில் 98 சதவீதம் வரை பங்களிக்கின்றன.

நாடு தழுவிய எண்ணெய் பனை சாகுபடி குறித்து மக்களவையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் சாகுபடி பரப்பளவு கணிசமாக அதிகரித்துள்ளது.

இருப்பினும், சமீபத்திய விவசாய ஆண்டிற்கான மாநில வாரியான விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.

சமையல் எண்ணெய், எண்ணெய் பனை, ஆஃப்ரிக்க எண்ணெய் பனை வண்டுகள், விவசாயம்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

NMEO-OP அறிக்கையின்படி, 2020-21 நிதியாண்டில் உள்நாட்டு சமையல் எண்ணெய் உற்பத்தி 12.28 மில்லியன் டன்களாக இருந்த நிலையில், நுகர்வு 25 மில்லியன் டன்களைத் தாண்டியது.

பற்றாக்குறையை ஈடுகட்ட, 80,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 13.35 மில்லியன் டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது, இதில் பாமாயில் இறக்குமதி மட்டும் 56 சதவீதம் ஆகும்.

அதே அறிக்கையின்படி, 2012-13 ஆம் ஆண்டில் ஒரு இந்தியரின் வருடாந்திர சமையல் எண்ணெய் நுகர்வு 15.8 கிலோவாக இருந்த நிலையில், அது 2020-21-ஆம் ஆண்டில் 19 கிலோவாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கான (2015-2021) கிடைக்கக்கூடிய தரவுகளின்படி, உள்நாட்டு எண்ணெய் தேவையில் பாதிக்கும் அதிகமாக இந்தியா இறக்குமதி செய்தது.

சமையல் எண்ணெய், எண்ணெய் பனை, ஆஃப்ரிக்க எண்ணெய் பனை வண்டுகள், விவசாயம்

எண்ணெய் பனை செடி இந்தியாவை எப்படி வந்தடைந்தது?

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயர்கள், கொல்கத்தாவில் உள்ள தேசிய தாவரவியல் பூங்காவிற்கு எண்ணெய் பனை செடிகளை கொண்டு வந்தனர்.

பின்னர் நாட்டின் சில பகுதிகளில் அவை காணப்பட்டாலும், அவை பெரும்பாலும் தாவரவியல் ஆராய்ச்சிக்காகவே நடப்பட்டன.

இருப்பினும், மகாராஷ்டிராவில், பாசன கால்வாய்களின் கரைகளை வலுப்படுத்த எண்ணெய் பனை நாற்றுகள் நடப்பட்டதாக மத்திய தோட்டப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் (CPCRI) 1992-ஆம் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது .

எண்ணெய் பனை சாகுபடியை இந்தியாவில் முறையாகத் தொடங்கிய முதல் மாநிலம் கேரளா. மாநில வேளாண்மைத் துறை, 1960-ஆம் ஆண்டில் தொடுபுழா என்ற பகுதியில் 40 ஹெக்டேர் பரப்பளவில் எண்ணெய் பனை சாகுபடியைத் தொடங்கியது.

ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் பெடவேகி பகுதியில் 1987-ஆம் ஆண்டு 160 ஹெக்டேரில் 86 விவசாயிகளுடன் சிறிய அளவில் தொடங்கப்பட்ட எண்ணெய் பனை சாகுபடி இன்று பரந்து விரிந்திருக்கிறது.

இந்திய எண்ணெய் பனை ஆராய்ச்சி நிறுவனம் (IIOPR) பெடவேகியில் நிறுவப்பட்டது.

சமையல் எண்ணெய், எண்ணெய் பனை, ஆஃப்ரிக்க எண்ணெய் பனை வண்டுகள், விவசாயம்

தெலங்கானாவில், முந்தைய கம்மம் மாவட்டத்தில் சில உள்ளூர் விவசாயிகளால் எண்ணெய் பனை சாகுபடி முதன்முதலில் மேற்கொள்ளப்பட்டது. சமீபத்தில், தெலங்கானாவின் வடக்கு மாவட்டங்களில் இந்தப் பயிரின் பரப்பளவு அதிகரித்து வருகிறது.

ஜக்தியால் மாவட்டத்தில் முதன்முறையாக அறுவடை செய்யப்பட்ட எண்ணெய் பனை தோட்டங்களில் ஆஃப்ரிக்க எண்ணெய் பனை வண்டுகள் சமீபத்தில் விடுவிக்கப்பட்டன.

"இது ஒரு வெளிநாட்டு பூச்சி என்றாலும், உள்ளூர் பயிர்களுக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்தாது. இதன் வாழ்க்கை சுழற்சி எண்ணெய் பனை பூக்களில் முடிந்துவிடுகிறது" என்று ஜக்தியால் மாவட்ட தோட்டக்கலைத் துறை அதிகாரி ஷியாம் பிரசாத் பிபிசியிடம் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு