You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புற்று நோய் ஆபத்துடன் தொடர்புடைய உணவு பழக்கங்கள் - மது, சிகரெட் மட்டுமே காரணமல்ல
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
புகை பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கக் கூடும் என்ற விழிப்புணர்வு பரவலாக உள்ளது. ஆனால் அது மட்டுமே ஒருவருக்கு புற்றுநோய் ஏற்பட காரணமாக இருக்காது. பல்வேறு உணவுகளும் கூட புற்றுநோய்க்கு காரணமாக இருக்கலாம். இந்த உணவை சாப்பிட்டால் கண்டிப்பாக புற்றுநோய் வரும் என்று உறுதியாக கூறும் வகையில் ஆய்வுகளும் தரவுகள் இதுவரை இல்லாவிட்டாலும், எந்தெந்த உணவுகள் புற்றுநோயுடன் தொடர்புடையது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அந்த உணவுகளை நமது உணவுமுறையிலிருந்து தவிர்ப்பது நல்லது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
கதிரியக்கத்தைக் கண்டுபிடித்து, புற்றுநோய் சிகிச்சையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய நோபல் பரிசு பெற்ற மேடம் மேரி கியூரியின் பிறந்த நாளான இன்று தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது. இது நாட்டில் அதிகரித்து வரும் புற்றுநோய் சுமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், புற்றுநோய் தடுப்பு, புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சிகிச்சையை நோக்கிய நடவடிக்கையை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தினத்தில் புற்றுநோயை தடுக்க, எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.
அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள ஆபத்து என்ன?
இந்தியாவில், புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்றும் பெரும்பாலும் வாழ்க்கை முறை மாற்றங்கள், புகையிலை பயன்பாடு, மோசமான உணவுப் பழக்கம் மற்றும் போதுமான உடல் செயல்பாடு இல்லாதது காரணமாகவுள்ளன என்று மத்திய அரசு கூறுகிறது. மதிப்பீடுகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 800,000 புதிய புற்றுநோய் பாதிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கிறது.
அதீத பதப்படுத்தப்பட்ட உணவு (Ultra Processed foods) வகைகளுக்கும், புற்று நோய் பாதிப்புக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆராய்ச்சியை உலக சுகாதார நிறுவனத்தின் சர்வதேச புற்று நோய் ஆராய்ச்சி முகமை (IARC) மேற்கொண்டது. அந்த ஆய்வில் நமது உணவுப் பழக்கத்தில் அடிக்கடி உட்கொள்ளாமல் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் பற்றி தெரிய வந்தது.
சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகமையும், வியென்னா பல்கலை கழகமும் இணைந்து மிக முக்கியமான பன்னாட்டு ஆய்வு ஒன்றை நடத்தினார்கள். லான்செட் ஆய்விதழில் வெளியான இந்த ஆராய்ச்சியில் ஏழு ஐரோப்பிய நாடுகளில் இருந்து 2 லட்சத்து 66 ஆயிரத்து 666 ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர்.
சராசரியாக 11.2 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்ட போது, இந்த ஆய்வில் பங்கேற்ற 4,461 பேருக்கு (இதில் 39% பெண்கள்) புற்றுநோய் மற்றும் இதய-வளர்சிதை நோய்களின் பல்நோய்த்தொகுதி அதிகரித்தது தெரியவந்தது.
அதிகரிக்கும் ஆபத்து
இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட நாடுகளில் ஒரு நபர் தனது தினசரி உணவாக உட்கொள்வதில் பாதிக்கும் மேல், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் ஆகும். இந்த வகை உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது அதனால் புற்றுநோய் அபாயமும் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
வளர்ந்த நாடுகளில் மட்டுமல்லாமல், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் உட்பட உலகின் பல பகுதிகளில் பலநோய்த்தொகுதி (multimorbidity) என்பது வளர்ந்து வரும் சுகாதாரப் பிரச்சனையாகும். அதில் புற்றுநோய் அபாயமும் இருப்பதை இந்த ஆராய்ச்சி சுட்டிக்காட்டியுள்ளது.
"நான் மருத்துவம் பயில ஆரம்பிக்கும் போது, புற்றுநோய் பிரிவில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களே நோயாளிகளாக இருப்பார்கள். ஆனால் இப்போது 20-30 வயதினருக்கு கூட புற்றுநோய் ஏற்படுவதை பார்க்கிறோம். பதப்படுத்தப்பட்ட உணவு எடுப்பது அதிகரித்துவிட்டதை, புற்று நோய் தாக்கத்தில் உணர்கிறோம்" என்கிறார் புற்றுநோய் மருத்துவர் பிரசாத் ஈஸ்வரன்.
மேலும், உடல் பருமன் பிரச்சனைக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இருப்பதாக அவர் தெரிவித்தார். "பெண்களில் மார்பக மற்றும் கருப்பைப் புற்றுநோய் ஏற்படுவதற்கும் உடல் பருமனுக்கும் சம்பந்தம் உள்ளது. உடலில் அடிபோஸ் திசுக்களில் கொழுப்பு சேர்கிறது. இது ஈஸ்ட்ரோஜன் எனும் சுரப்பி சுரக்க உதவுகிறது. அளவுக்கு அதிகமான ஈஸ்ட்ரோஜன் மார்பக மற்றும் கருப்பைப் புற்றுநோயுடன் தொடர்புடையது என்று ஆய்வுகள் கூறுகின்றன. உடலில் கொழுப்பு சேர்வதற்கு பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிகம் உட்கொள்வது முக்கிய காரணமாகும்" என்றார் மருத்துவர் பிரசாத்.
எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்?
பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அடிப்படையாகக் கொண்ட உணவுத் தயாரிப்புகள், செயற்கையாக இனிப்பூட்டப்பட்ட பானங்கள் (குளிர் பானங்கள்) ஆகியவற்றுடன் தொடர்பு இருப்பதை சர்வதேச புற்று நோய் ஆராய்ச்சி முகமையின் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
அதீத பதப்படுத்திய உணவு வகைகள் வசதியானவை (அதிக நாட்கள் கெடாது, தயார் நிலையில் உண்ணலாம்), தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட இந்த உணவு வகைகளில், பொதுவாக நாம் வீட்டில் அல்லது சிறு உணவகங்களில் சமைக்கும் உணவு வகைகளில் பயன்படுத்தாத உணவுப் பொருட்களும், சேர்மானங்களும் பயன்படுத்தப்படும் (மாற்றியமைத்த ஸ்டார்ச், ஹைட்ரஜன் ஏற்றப்பட்ட எண்ணெய் போன்றவை).
இனிப்பூட்டப்பட்ட குளிர் பானங்கள், பேக்கேஜ் செய்த தின்பண்டங்கள், அதீத பதப்படுத்தி வைத்து செய்த இறைச்சி வகைகள், சமைத்து குளிரூட்டி வைக்கப்பட்டு கொண்டுவரும் உணவுகள் (frozen foods), பாதி சமைத்து அடைத்து வைக்கப்பட்ட உணவுகள், இனிப்பூட்டப்பட்ட காலை உணவு தானிய வகைகள் (cereals) ஆகியவை தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் ஆகும்.
அமெரிக்க கேன்சர் சொசைட்டி வழிகாட்டுதல்களின்படி இவ்வகை உணவுகளை அளவாக உட்கொள்ள வேண்டும் அல்லது மொத்தமாக தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மதுபான வகைகளை மொத்தமாக தவிர்ப்பது சிறந்தது எனவும் வழிகாட்டப்படுகிறது.
துரித உணவுகள் உட்கொள்ளும் பழக்கம் அதிகரித்து விட்டது எனவும் இது போன்ற உணவு பழக்கம் நாளடைவில் ஆபத்தாக மாறிவிடுகிறது எனவும் மருத்துவர் பிரசாத் கூறுகிறார். "இயற்கையான உணவுகள் குறைந்து, பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிகரித்துள்ளன. சர்க்கரையில் கூட 'சுத்திகரிக்கப்பட்ட' சர்க்கரையை தான் அதிகம் உட்கொள்கிறோம்" என்றார்.
மேலும் உணவிற்கு வண்ணம் ஏற்றுவதும் ஆபத்தானதே என்று கூறிய அவர், "செஸ்வான் பிரைட் ரைஸ் – ஏன் உணவகங்களில் கண்ணை கவரும் சிவப்பு நிறத்தில் வழங்கப்படுகிறது? வீட்டில் செய்தால் அதே போன்ற சிவப்பு நிறம் வருமா? எல்லா உணவகங்களிலும் அனுமதிக்கப்பட்ட உணவு நிறமிகள் மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை, அனுமதிக்கப்படாத நிறமிகளும் பயன்படுத்தப்படுகின்றன. மாம்பழச் சாறு என்று விளம்பரப்படுத்தப்படும் குளிர்பானங்களின் பாட்டில்களில் சிறிய எழுத்துகளில் பழங்கள் அல்லாமல் கூடுதல் சுவை சேர்க்கப்பட்டுள்ளது என்று எழுதப்பட்டிருக்கும். இதை எத்தனை பேர் கவனிப்பார்கள்?" என்றார்.
புற்றுநோய்க்கும் உணவுக்குமான தொடர்பு குறித்து பல முக்கியமான கேள்விகளுக்கு உலக சுகாதார நிறுவனமும் பதில் கொடுத்துள்ளது.
சுவையை மேம்படுத்தவோ, கெடாமல் நீண்ட காலம் வைத்திருக்கவோ உப்புக் கண்டம் போடுதல், பதப்படுத்துதல், நொதிக்கச் செய்தல், புகை போடுதல் உள்ளிட்ட செயல் முறைகளில் மூலம் இறைச்சியை மாற்றம் செய்வது அதீத-பதப்படுத்தல் ஆகும்.
இவ்வாறு பெரும்பாலும் பன்றி, மாட்டிறைச்சி வகைகள் பதப்படுத்தப்படும். சில சமயங்களில் கோழி இறைச்சி, குடல், கல்லீரல் போன்ற உள்ளுறுப்புகள், ரத்தம் போன்றவையும் இவ்வாறு செய்யப்படலாம்.
அதீத பதப்படுத்தல் செய்த உணவு வகைகளை ஹாட் டாக், ஹாம், நறுக்கிய இறைச்சி (சாசேஜ்), உப்பிட்ட மாட்டிறைச்சி, உலர்த்திய இறைச்சி, அடைக்கப்பட்ட இறைச்சி, இறைச்சியை அடிப்படையாகக் கொண்ட சாஸ் வகைகள் மற்றும் பிற தயாரிப்புகளாக தருகின்றனர்.
"குடல் புற்றுநோய்க்கும் (colon cancer) மாட்டிறைச்சிக்கும் தொடர்பு உள்ளதை பல ஆய்வுகள் கூறுகின்றன. என்றோ ஒரு நாள் சாப்பிடுவது பிரச்னை இல்லை. ஆனால் தினமும் அல்லது வழக்கமாக சாப்பிடும் பழக்கம் கொண்டிருப்பவர்களுக்கு புற்றுநோய்க்கான ஆபத்து அதிகம்" என்று மருத்துவர் பிரசாத் ஈஸ்வரன் சுட்டிக்காட்டுகிறார்.
அதீத பதப்படுத்திய இறைச்சிக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு உள்ளதா?
சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகமையின் பணிக்குழுவானது, பதப்படுத்திய இறைச்சியை உண்பது குடல் புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்று முடிவு செய்துள்ளது.
சுயேட்சையான கல்வி ஆராய்ச்சி நிறுவனமான குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் ப்ராஜெக்ட்டின் சமீபத்திய மதிப்பீடுகளின்படி, உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 34,000 புற்றுநோய் மரணங்கள் அதீத பதப்படுத்தல் செய்த இறைச்சி அடங்கிய உணவுமுறைகளால் ஏற்படுகின்றன. இந்த உணவு வகை குடல் புற்றுநோயுடன் குறிப்பிட்ட தொடர்பு கொண்டதால், உலக சுகாதார நிறுவனத்தினால் (WHO) அக்டோபர் 2015-ல் குரூப்-1 கார்சினோஜன் என்று வகைப்படுத்தப்பட்டது.
அதிக அளவில் உப்பிடப்பட்ட இறைச்சி, மீன் அல்லது ஊறுகாய் தன்மையில் தயாரித்த உணவுப் பண்டங்கள் – இவை ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன – மூக்கின் பின்புறத்தில் உள்ள தொண்டையின் மேற்பகுதியுடன் தொடர்புடைய நாசோபேரிங்கியல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும். இந்த உணவுகளில் நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட்டுகள் அதிக அளவில் இருக்கலாம், அவை புரதத்துடன் வினைபுரிந்து நைட்ரோசாமைன்களை உருவாக்குகின்றன.
உயர் வெப்பநிலையில் சமைப்பதற்கும் புற்று நோய்க்கும் தொடர்பு உள்ளதா?
பார்பிகியூ செய்வது அல்லது வாணலியில் வறுப்பது போன்று, உயர் வெப்பநிலையில் அல்லது நேரடியாக தீ படும் வகையிலோ, சூடான பரப்பில் வைத்தோ உணவை சமைப்பது, சில வகை புற்றுநோய் உருவாக்கக்கூடிய ரசாயனங்களை (பாலிசைக்ளிக் அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன்கள் மற்றும் ஹெட்டரோசைக்ளிக் அரோமாட்டிக் அமின்கள் போன்றவை) அதிக அளவில் உருவாக்குகிறது. இருப்பினும், இறைச்சி சமைக்கப்படும் முறை புற்றுநோய் அபாயத்தை உருவாக்குமா என்று முடிவு செய்வதற்கு போதுமான தரவுகள் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகமையின் பணிக்குழுவிற்கு கிடைக்கவில்லை.
பாலூட்டி விலங்குகளின் இறைச்சிக்கும் புற்று நோய்க்குமான தொடர்பு என்ன?
சிவப்பு இறைச்சி எனப்படும் பாலூட்டி விலங்குகளின் இறைச்சியை உண்பதனுடன் தொடர்புபடுத்தும் மிக வலுவான ஆதாரம் குடல் புற்றுநோய் பற்றி உள்ளது (அதுவும் வரையறுக்கப்பட்ட அளவிலேயே).
கணைய புற்றுநோய் மற்றும் ஆண் இனப்பெருக்க சுரப்பி (ப்ராஸ்டேட்) புற்றுநோயுடனான தொடர்புகளுக்கும் ஆதாரங்கள் உள்ளன.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 34 ஆயிரம் புற்றுநோய் மரணங்களுக்கு காரணமாக இருக்கின்றன என்று உலக நோய் சுமை திட்டத்தின் மதிப்பீடு (Global Burden of Disease Project estimaes) கூறுகிறது.
இருப்பினும், பாலூட்டி விலங்குகளின் இறைச்சி உண்பது புற்றுநோய்க்கான ஒரு காரணம் என இன்னும் நிறுவப்படவில்லை. எனினும் அந்த தொடர்புகள் உறுதிப்படுத்தப்பட்டால், உலக நோய் சுமை திட்டத்தின் மதிப்பீட்டின் படி உலகளவில் வருடத்திற்கு 50,000 புற்றுநோய் மரணங்களுக்கு அதிகமானவை பாலூட்டி விலங்குகளின் இறைச்சி அடங்கிய உணவுமுறைகள் பொறுப்பாக இருக்கக்கூடும்.
புகைபிடிப்பால் உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் புற்றுநோய் மரணங்கள், மது அருந்துவதால் வருடாந்திர 6 லட்சம் மரணங்கள், மற்றும் காற்று மாசுபாட்டால் வருடாந்திர 2 லட்சத்திற்கும் கூடுதலான மரணங்கள் போன்ற பிற அபாயங்களுடன் ஒப்பிட்டு மேற்சொன்ன எண்ணிக்கையை மதிப்பிடலாம்.
" மது பானங்களை அருந்துவது மார்பு, குடல், தொண்டை, கல்லீரல், உணவுக்குழாய், வாய்க்குழி மற்றும் தொண்டை புற்றுநோய்க்கான காரணமாக அமைகின்றன" என்று மருத்துவர் ஈஸ்வரன் கூறுகிறார். சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகமை மேற்கொண்ட வகைப்பாட்டின்படி இவை கணைய புற்றுநோய் ஏற்படுத்தும் சாத்தியம் கொண்ட காரணமாகவும் உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு