You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிகார் தேர்தல் முடிவு தமிழ்நாட்டிலும் கூட்டணி கணக்குகளில் எதிரொலிக்குமா?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி கடந்த முறையைவிட மிகக் குறைவான இடங்களையே கைப்பற்றி படுதோல்வியை எதிர்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் என்ன? இந்தத் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்குமா?
பிகாரில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகளை உள்ளடக்கிய மகா கூட்டணி படுதோல்வியை எதிர்கொண்டிருக்கிறது.
2020ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியால் 125 இடங்களையே பெற முடிந்தது. எதிர்த்துப் போட்டியிட்ட ஆர்.ஜே.டி. - காங்கிரஸ் கூட்டணி 110 இடங்களைக் கைப்பற்றி மிக நெருக்கத்தில் வந்தது. அந்தத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றிய தனிப்பெரும் கட்சியாக, ராஷ்ட்ரிய ஜனதா தளம் (75 இடங்களுடன்) உருவெடுத்தது. ஆனால், இந்த முறை எல்லாம் மாறிப் போனது. இந்த முறை தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்திருக்கிறது.
இந்தத் தேர்தலில் தே.ஜ.கூவின் வெற்றிக்குப் பல காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. முதலாவதாக, பெண்களின் வாக்குகள். 2005ஆம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதில் இருந்தே தங்கள் கட்சியின் அடித்தளமாக பெண்களின் வாக்குவங்கியை குறிவைக்க ஆரம்பித்தார் நிதிஷ் குமார். பல நலத் திட்டங்கள் பெண்களை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டன.
பள்ளிக்கூடங்களுக்குச் செல்லும் பெண்களுக்கு மிதிவண்டிகள், சுய உதவிக் குழுக்கள் என பெண்களை மையமாகக் கொண்டே தனது வாக்குவங்கியை உருவாக்கிய நிதிஷ் குமார், பிகாரில் முழுமையான மதுவிலக்கையும் அமல்படுத்தினார். பெண்களின் வாக்கு வங்கியை குறிவைப்பதன் உச்சகட்டமாக, சுயதொழில் துவங்க உதவி என்ற பெயரில் தேர்தலுக்கு முன்பாக, பத்தாயிரம் ரூபாய் நிதியுதவியை அறிவித்தது நிதிஷ் குமார் அரசு.
பிகார் மாநிலத்தில் பெரும் எண்ணிக்கையிலான ஆண்கள் வேலை தேடி வெளி மாநிலங்களுக்குச் சென்றிருக்கும் நிலையில், அங்குள்ள குடும்பங்களை நடத்திச் செல்வதில் பெண்களே முக்கியத்துவம் வகிக்கிறார்கள்; ஆகவே அவர்களை மையமாகக் கொண்ட திட்டங்கள் பலனளித்திருக்கின்றன என்கிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன்.
"தனது ஆட்சிக்காலம் நெடுக நிதிஷ் பெண்களை மையப்படுத்தியே நிறைய திட்டங்களைச் செயல்படுத்தினார். பெண் சிசுக் கொலைகளைத் தடுப்பதற்கான திட்டம், பெண்களின் ஆரம்பக் கல்வியிலிருந்து பல்கலைக்கழக கல்வி வரை படிப்புதவி வழங்கும் திட்டம், மதுவிலக்கு என எல்லாமே சேர்ந்து பெண்களின் ஆதரவை அவருக்கு மொத்தமாகப் பெற்றுத் தந்தன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பாட்னாவுக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த ஒரு ஹோட்டலிலும் மதுபானம் விற்கப்படவில்லை. மதுவிலக்கைப் பொறுத்தவரை அது பெண்களுக்கு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தியது. பெரும்பாலான ஆண்கள் வெளி மாநிலங்களுக்கு வேலைக்குச் செல்லும் ஒரு மாநிலத்தில் இந்தப் பாதுகாப்பு உணர்வு மிக முக்கியமானது" என்கிறார் மாலன்.
இந்தத் தேர்தல் பிரசாரத்தில் ஆர்.ஜே.டியின் தேஜஸ்வி யாதவும், ஜன் ஸ்வராஜ் கட்சியின் பிரசாந்த் கிஷோரும் மதுவிலக்கைத் தளர்த்துவது குறித்துப் பேசினார்கள். ஆனால், அது எடுபடவில்லை.
இது தவிர தேர்தல் பிரசாரங்களில் மாநிலத்தில் வேலை வாய்ப்பின்மை, வேலை தேடி வேறு மாநிலங்களுக்குச் செல்லும் நிலை ஆகியவற்றைப் பற்றி பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து பேசினார். பிகாரில் அது ஒரு முக்கியப் பிரச்னையாக இருந்தாலும், அதனைத் தீர்க்கும் வலிமை தே.ஜ.கூக்கே இருக்கிறது என வாக்காளர்கள் நம்புவதைப்போலத்தான் தேர்தல் முடிவுகள் அமைந்திருப்பதாக கூறுகிறார் மாலன்.
"தனது வாக்குறுதிகளை செயல்படுத்துவதில் தற்போதைய ஆளும் கட்சியினர் தொடர்ந்து தங்களை நிரூபித்துவந்ததால், எதிர்க்கட்சியினரின் வாக்குறுதிகளை பிகார் வாக்காளர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை" என்கிறார் மாலன்.
இதுதவிர, தேர்தலை எதிர்க்கட்சிகள் கையாண்ட விதம் குறித்தும் சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. கடந்த முறை 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, இம்முறையும் அதே அளவு இடங்களை எதிர்பார்த்தது. ஆனால், 70 இடங்களில் போட்டியிட்டு 19 இடங்களை மட்டுமே வென்ற காங்கிரசிற்கு இந்த முறை குறைவான இடங்களையே கொடுக்க முன்வந்தது கூட்டணிக்குள் உரசலை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு, மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவை அறிவிக்க எடுத்துக்கொண்ட காலதாமதமும் கூட்டணிக்குள் எல்லாம் சரியாக இல்லை என்ற உணர்வை ஏற்படுத்தியது.
மாறாக, தேசிய ஜனநாயகக் கூட்டணி கடந்த தேர்தலில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டிருந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி தனியாகப் போட்டியிட்டது. அக்கட்சியால் பெரிய அளவிலான இடங்களை வெல்ல முடியவில்லை என்றாலும் ஜனதா தளத்தின் வாய்ப்புகளை 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாதித்தது. இந்த முறை அக்கட்சி இந்தக் கூட்டணியில் இடம்பெற்றது. எதிர்பார்த்ததைப் போலவே குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றிருக்கிறது. நிதிஷ் குமாரின் தலைமையில்தான் மாநிலத்தில் தே.ஜ.கூ. போட்டியிடுகிறது என பிரதமர் நரேந்திர மோதியே அறிவித்தது, அந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் இருந்த குழப்பத்தை நீக்கியது.
நிதிஷின் வயது, உடல்நலம் குறித்த சந்தேகங்களும் வாக்காளர்கள் மத்தியில் எடுபடவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கின்றன.
"இந்த வெற்றி, ஆளுங்கட்சிக்கு ஆதரவான அலையால் கிடைத்த வெற்றி. இந்தியத் தேர்தல்களில் எப்போதுமே ஆளும் கட்சிகளுக்கு எதிரான உணர்வு குறித்துதான் அதிகம் பேசப்படும். ஆனால், பா.ஜ.க. தேசிய அளவிலும் சரி, பல மாநிலங்களிலும் சரி இந்தப் போக்கை மாற்றியமைத்திருக்கிறது. ஆளும் கட்சிகளுக்கு எதிரான உணர்வுக்குப் பதிலாக, ஆதரவான உணர்வை ஏற்படுத்தி தொடர் வெற்றிகளைப் பெற்றுக்காட்டுகிறது. இது ஒரு புதிய போக்கு" என்கிறார் மாலன்.
ஆனால், சில நிபுணர்கள் இந்தத் தேர்தல் வெற்றிக்குப் பின்னால் வேறு காரணங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இது குறித்து பிபிசியிடம் பேசிய இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான பி. சாய்நாத், கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் தேர்தல்கள் வெகுவாக மாறியிருக்கின்றன என்கிறார்.
"கடந்த சில ஆண்டுகளில் தேர்தல் முடிவுகள் தேர்தலுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டுவிடுகின்றன. இது பல விதங்களில் செய்யப்படுகிறது. முதலாவதாக, எதிர்க் கட்சிகளின் நிதிக் கட்டமைப்பு நொறுக்கப்படுகிறது. பல சமயங்களில் அக்கட்சிகளின் பொருளாளர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். அடுத்ததாக, தேர்தல் பத்திரங்கள் என்ற முறை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இறுதியாக, வாக்காளர் பட்டியலில் இருந்து லட்சக்கணக்கானோரின் பெயர்கள் நீக்கப்படுகின்றன. இப்படித்தான் தேர்தல் முடிவுகள் முன்பே தீர்மானிக்கப்படுகின்றன" என்கிறார் பி. சாய்நாத்.
இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் தேர்தல் பிரசாரக் களத்தில் தே.ஜ.கூட்டணி மிக சுறுசுறுப்பாகவே செயல்பட்டது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது 200க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பங்கேற்ற தேஜஸ்வி யாதவ், இந்த முறை சுமார் 100 கூட்டங்களிலேயே பங்கேற்றார். மாறாக, நிதிஷ்குமாரின் பலவீனங்களையும் மறைக்கும் வகையில் தே.ஜ.கூவின் தேர்தல் பிரசாரம் இருந்தது என்பதைக் கவனிக்க வேண்டும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
"நிதிஷ் குமாரின் உடல்நலம் குறித்த பிரசாரம் எடுபடாமல் போனதற்குக் காரணம், பா.ஜ.கவின் தீவிரமான, உற்சாகமான பிரசாரம்தான். அவர்கள் தங்கள் பிரசாரத்தின் மூலம் நிதிஷின் இமேஜை உயர்த்தினார்கள்" என்கிறார் ப்ரியன்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தேஜஸ்வி யாதவின் தலைமையில் 2015, 2020, 2025 என இதுவரை மூன்று சட்டமன்றத் தேர்தல்களைச் சந்தித்திருக்கிறது. அதில் 2015ல் நிதிஷ்குமாரின் ஜனதா தளத்துடன் இணைந்து போட்டியிட்டபோது அக்கட்சி வெற்றிபெற்றது. அதிக இடங்களைப் பிடித்த கட்சியாகவும் உருவெடுத்தது. 2020ல் தேஜஸ்வி காங்கிரசுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். அப்போதும் 75 இடங்களைப் பிடித்து, அதிக இடங்களை வென்ற கட்சியாக ஆர்.ஜே.டி. உருவெடுத்தது. ஆனால், 2025 சட்டமன்றத் தேர்தல், அக்கட்சிக்கு 2010ஆம் ஆண்டின் தேர்தலை நினைவூட்டும் வகையில் அமைந்துவிட்டது. 2010ல் ஆர்.ஜே.டி. வெறும் 22 இடங்களையே வென்றது.
"இந்தத் தேர்தல் முடிவுகள் பல பாடங்களைச் சொல்லித் தந்திருக்கின்றன. அதாவது, அரசியல் கட்சிகள் விழிப்புடன் இருக்க வேண்டும், இணைந்து செயல்பட வேண்டும் என்பதை இந்தத் தேர்தல் சொல்லியிருக்கிறது. வேறு சில பாடங்களும் இந்தத் தேர்தலில் இருக்கின்றன. கடந்த சில தசாப்தங்களாக இந்துத்துவா VS மதச்சார்பற்ற சக்திகள் என்றுதான் புரிந்து வைத்திருந்தோம். இந்தத் தேர்தல் அதையெல்லாம் தாண்டிச்சென்றுவிட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் இருந்து 2024ஆம் ஆண்டுவரை, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் எந்த வாக்காளரும் விடுபட்டுவிடக்கூடாது என்பதாகத்தான் இருந்தது. ஆனால், இப்போது பலரை பட்டியலில் இருந்து விலக்குவதில் ஆர்வம் காட்டியது. இதையெல்லாம் சேர்த்துத்தான் இந்தத் தேர்தலைப் புரிந்துகொள்ள வேண்டும்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.
ஆனால், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்து எதிர்க்கட்சிகள் என்னதான் சொன்னாலும் அதனை மக்கள் ஏற்கவில்லையென்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்கிறார் மாலன். "இது தொடர்பான எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகள் எடுபடவில்லை. எதிர்க்கட்சிகளின் நம்பகத்தன்மை கடுமையாக அடிவாங்கியிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது" என்கிறார் அவர்.
இந்தத் தேர்தல் முடிவுகள் தேசிய அளவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? நிதிஷ்குமார்தான் முதலமைச்சர் என பா.ஜ.க. கூறியிருப்பதால் அந்தக் கூட்டணியில் குழப்பம் வருவதற்கான வாய்ப்புகள் இப்போதைக்கு தென்படவில்லை. காங்கிரசிற்கு ஏற்பட்ட பின்னடைவு, பிற மாநிலங்களில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் எதிரொலிக்கும்.
"பிகாரில் சுமார் 60 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் மிகக் குறைவான இடங்களையே வென்றிருக்கிறது. ஆகவே தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அக்கட்சியால் கூடுதல் இடங்களைக் கேட்க முடியாது." என்கிறார் மாலன்.
காங்கிரசின் இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள் சரியாக நடந்துகொள்வதை அக்கட்சி உறுதிப்படுத்த வேண்டும் என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன். "ராகுலும் சோனியாவும் கார்கேவும் முற்போக்குச் சிந்தனைகளோடு செயல்படுகிறார்கள். ஆனால், பல தலைவர்கள் பா.ஜ.கவின் சாயலோடுதான் செயல்படுக்கிறார்கள். சசி தரூர், மணீஷ் திவாரி போன்றவர்கள் பல தருணங்களில் அதனை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். புதிதாக ஆட்கள் அந்தக் கட்சியை நோக்கி வராதபோது, ஏற்கனவே இருப்பவர்கள் மீது அக்கட்சியால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை" என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு