You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புல்டோசர்: 'ஒரு சமூகத்தையே அழிக்க ஹரியாணா அரசு முயற்சியா?' - ஐகோர்ட் கேள்வி உணர்த்துவது என்ன?
- எழுதியவர், சோயா மதீன் & தில்னாவாஸ் பாஷா
- பதவி, பிபிசி நியூஸ்
"அவர்கள் சில வினாடிகளில் அனைத்தையும் அழித்துவிட்டனர்," என்று கண்களில் கண்ணீருடன் இடிக்கப்பட்ட தமது கடைகளுக்கு முன்பாக, இடிபாடுகளுக்கு இடையே நின்றிருந்த முகமது சவுத் கூறினார்.
அவரும், அவருடைய இளைய சகோதரர் நவாப் ஷேக்கும் அந்த இடிபாடுகளில் இருந்து அவர்களுடைய பொருட்களில் சிலவற்றையாவது மீட்க முடியுமா எனத் தேடிக்கொண்டிருந்தனர்.
அவர்கள் ஹரியாணா மாநிலத்தின் நூஹ் மாவட்டத்தில் சில கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டிருந்தனர். கடந்த சனிக்கிழமையன்று அவர் பிபிசியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, மஞ்சள் நிறத்தில் ஒரு புல்டோசர் வாகனம், அவருக்குப் பின்னால் அதிக சத்தத்துடன் கட்டடங்களை இடித்துக்கொண்டிருந்தது.
"எங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டிருந்த 15 கடைகள் எங்களுக்கு இருந்தன. இந்தக் கடைகளுக்கான அனைத்து சட்டப்பூர்வ ஆவணங்களையும் காட்டியும்கூட அவர்கள் (போலீசார்) இந்த கட்டடங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டிருந்ததாகத் தெரிவித்தனர்," என்றார் சவுத்.
டெல்லியின் புறநகர்ப் பகுதிகளை ஒட்டியுள்ள ஹரியாணா மாநிலத்தின் நூஹ் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு மதக்கலவரம் நடந்தது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நூஹ் மாவட்டத்தில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து நூஹ் நகரில் ஏராளமான கடைகளும் வீடுகளும் இடிக்கப்பட்டன.
இந்துக்கள் நடத்திய மத ரீதியிலான ஊர்வலம் ஒன்று நூஹ் நகரின் வழியாகச் சென்றபோது அவர்கள் மீது கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து அங்கு இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே தொடங்கிய சண்டை மிகப்பெரும் வன்முறையாக மாறியது.
இது தொடர்பான செய்திகள் பரவத் தொடங்கிய பிறகு, குருகிராம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் வன்முறைகள் பரவின. அப்போது, வழிபாட்டுத் தலங்கள், கட்டடங்கள் மற்றும் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டன.
அதன் பிறகு சில நாட்கள் கழித்து, பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறுவதைப் போலவே, நூஹ் நகரிலும் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டடங்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஏராளமான கட்டுமானங்கள் புல்டோசர்கள் மூலம் இடித்து நொறுக்கப்பட்டன. நான்கு நாட்களுக்குப் பின்னர், இந்த விஷயத்தில் தாமாகத் தலையிட்ட உயர்நீதிமன்றம் மாநில அரசைக் கண்டித்த பின்னரே கட்டடங்கள் இடிக்கப்படுவது நிறுத்தப்பட்டது.
"கட்டுமானங்களை இடிப்பதற்கான உத்தரவு அல்லது எந்தவிதமான முன்னறிவிப்புகளும் இன்றி வன்முறையை மட்டும் காரணம் காட்டி புல்டோசர்களை கொண்டு வந்து சட்டவிரோதமாக இந்த செயலில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது," என ஐகோர்ட் தெரிவித்தது.
முஸ்லிம்களுக்கு சொந்தமான கட்டடங்களைப் பெரும்பாலும் குறிவைத்து இடித்ததன் மூலம் "ஒரு சமூகத்தையே அழிக்க மாநில அரசு முயன்றதா," என ஐகோர்ட் கேள்வி எழுப்பியிருந்தது.
கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய பிரதமராக பாரதீய ஜனதா கட்சியின் நரேந்திர மோதி பதவியேற்ற பிறகு முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சுகளும், வன்முறைகளும் அதிகரித்துவிட்டதாக எதிர்க்கட்சிகளும், அரசு சாரா அமைப்புகளும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
பாஜக-வின் ஆட்சி நடத்தும் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், அசாம் போன்ற மாநிலங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சொந்தமான கட்டடங்களை புல்டோசர் கொண்டு இடிப்பது ஒரு வழக்கமாக மாறியுள்ளது.
இதற்கான காரணமாக, விதிமீறிக் கட்டப்பட்ட கட்டடங்கள் என மாநில அரசுகள் கூறினாலும், சட்ட நிபுணர்கள் இதுகுறித்துக் கேள்வி எழுப்புகின்றனர். இந்த மாநிலங்களின் முதலமைச்சர்கள், குற்றங்களைத் தடுக்க இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அடிக்கடி கூறுகின்றனர்.
இந்துக்களுக்குச் சொந்தமான கட்டடங்களும் இடிக்கப்படும் நிலையில், குறிப்பாக மதக் கலவரங்களுக்குப் பிறகு பெரும்பாலும் முஸ்லிம்களின் கட்டுமானங்கள்தான் குறிவைக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர்களும் பல்வேறு அமைப்புக்களும் குற்றம் சாட்டுகின்றன.
நூஹ்வில் இருக்கும் அதிகாரிகளிடம் இதுகுறித்துக் கேள்வி எழுப்பியபோது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைத் தருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் திரேந்திர கட்கடா பிபிசியிடம் பேசியபோது, விதி மீறிக் கட்டப்பட்ட கட்டடங்கள் மட்டுமே இடிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இருப்பினும் மாவட்ட திட்ட அலுவலரான வினேஸ் சிங்கிடம் கேட்டபோது, கலவரங்கள் ஏற்படுவதற்கு முன்பாக எந்த கட்டடங்களில் இருந்து கற்கள் வீசப்பட்டனவோ, அந்த கட்டடங்களை மட்டும் இடித்ததாகத் தெரிவித்தார்.
இப்படி கட்டுமானங்களை இடிப்பது குழந்தைகள் மற்றும் பெண்களை வீடற்றவர்களாக மாற்றும் என்பதால் இது ஒரு கொடூரமான நடவடிக்கை என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
"ஒருவரது வீட்டை அல்லது கடையை தன்னிச்சையாக இடிப்பது மிகவும் மோசமானது. இடைக்காலத்தில் இருந்த கூட்டு தண்டனையைப் போன்றது இது, " என்கிறார் அரசியல் திறனாய்வாளர் ஆஸிம் அலி. "இது போன்ற நடைமுறைகள் இக்காலகட்டத்திலும் நடைமுறையில் உள்ளன என்பது நமது சட்டங்கள் தோற்றுவிட்டதையே காட்டுகின்றன."
இதுபோல் கூட்டு தண்டனை முறையை நாம் இன்னும் பின்பற்றி வருவது மனிதத் தன்மையற்றது மட்டுமல்ல, சட்டவிரோதமானதும்கூட என்கின்றனர் சட்ட நிபுணர்கள்.
"எந்த விசாரணையும் இன்றி, உண்மையைக் கண்டுபிடிக்காமல், அரசு எப்படி அனைவரையும் ஒன்று திரட்டி அவர்களை ஒரே கூடையில் அடைக்கமுடியும்?
மதங்களைக் கடந்து, இதுபோன்ற கூட்டு தண்டனை முறை என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்பதுடன் மனித உரிமைகளுக்கும் எதிரானது," என்கிறார் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான மதன் லோகுர்.
"கட்டட உரிமையாளர்களுக்கு முறையான முன்னறிவிப்பு வழங்கப்படவில்லை. அவர்களுடைய உடைமைகளை எடுத்துக்கொள்ள அவகாசம் அளிக்கவில்லை. அந்த இடத்துக்கு மாற்றாக வேறு இடத்தைத் தேர்வு செய்ய ஒரு நாள் அவகாசம்கூட அளிக்கப்படவில்லை," என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.
பொதுமக்களின் உள்கட்டமைப்பை வேண்டுமென்றே தகர்ப்பதை எந்தச் சட்டமும் அனுமதிக்கவில்லை என்கிறார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஷதன் ஃபராஸட்.
"ஒருவர் மீது குற்றச்சாட்டைச் சுமத்துவதற்கு அரசு விரும்பினால், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் வழக்கு நடத்த முடியும். எதேச்சதிகாரமாக ஒரே நாளில் அவருடைய வீட்டை இடிக்க அதிகாரமில்லை."
சட்டவிரோதமாக கட்டடங்களை இடிக்கும் அதிகாரம் அரசுக்கு இருக்கிறது என்றாலும், அதற்கான சட்ட நடைமுறைகளும் உள்ளன என நீதிபதி லோகுர் கூறுகிறார்.
மேலும், கட்டட உரிமையாளருக்கு ஒரு நோட்டீஸ் அளிக்கும்போது அவரால் அபராதம் கட்ட முடியும் அல்லது அந்த நோட்டீஸை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியும் என்றும், அதற்குப் பிறகும் ஒரு கட்டடத்தின் எப்பகுதியில் விதிமீறல் இருக்கிறதோ, அப்பகுதியை மட்டுமே இடிக்கமுடியும் என்றும் அவர் கூறுகிறார்.
ஒரு கட்டுமானம் முழுமையாக விதிமீறிக் கட்டப்பட்டிருந்தால், அதை இடிப்பதற்கு முன் அதன் உரிமையாளரிடம் இருந்து விளக்கம் கேட்கவேண்டும் என்கிறார் நீதிபதி லோகுர். "இங்கே எல்லா இடிப்பு நடவடிக்கைகளும் தன்னிச்சையாக மேற்கொள்ளப்படுகின்றன. இது அரசமைப்புச் சட்டத்தை அப்பட்டமாக மீறுவதே ஆகும்," என்கிறார் அவர்.
நூஹ் நகரில் ஆக்கிரமித்த நிலத்தில் கட்டுமானங்களை மேற்கொண்டிருந்தவர்களுக்கு ஏற்கெனவே முறையான அறிவிப்பு வழங்கப்பட்டதாக காவல் துறையினர் கூறுகின்றனர். ஆனால் ஏராளமான குடும்பத்தினர்கள் அதுபோல் எந்த நோட்டீசும் அளிக்கப்படவில்லை என பிபிசியிடம் தெரிவித்தனர்.
வன்முறை நடந்த போது அவர்கள் அங்கேயே இல்லை என்றும், இருப்பினும் செய்யாத குற்றத்துக்குத் தண்டனை கிடைத்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இருபது வயதான முசைப் தனது அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் கட்டட இடிப்பு நடவடிக்கையை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார். அந்த கடையை அவர் தனது தந்தையின் சேமிப்பிலிருந்து ஒரு வாரத்துக்கு முன்புதான் அமைத்திருக்கிறார்.
"அதை மீண்டும் எப்படி நான் கட்டமைப்பேன்?" என அவர் கேட்கிறார்.
அவரைப் போலவே இந்துக்கள் உள்பட வேறு பலரும் கேள்விகளை முன்வைக்கின்றனர். சமன்லால் என்ற முடிதிருத்தும் தொழிலாளியின் கடையும் இதேபோல் இடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கும் அவர், கடன் வாங்கி அந்தக் கடையை நிறுவியதாகக் கூறுகிறார்.
"பத்து பேர் அடங்கிய எங்கள் குடும்பம் அந்தக் கடையை நம்பித்தான் இருந்தது. இப்போது நாங்கள் அனைவரும் தெருவில் நிற்கிறோம்," என்றார் அவர்.
நூஹ் நகரில் பல காலமாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்த இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே இதுபோல் பகை உணர்வு ஏற்பட்டுள்ளது நல்லதல்ல என பலர் அச்சம்கொள்கின்றனர்.
தற்போதைக்கு கட்டட இடிபாடுகள் நிறுத்தப்பட்டிருந்தாலும், முஸ்லிம்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறுகின்றனர்.
"நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒடுக்கப்படுகிறோம். இதுபோல் மீண்டும் ஏதாவது ஒன்று நடந்தால் நங்கள் எங்கே போவோம்?" எனக் கேட்கிறார் ஷேக்.
இருப்பினும் எல்லோருமே அதிகாரிகளைக் குறை கூறுகின்றனர் என நாம் கருத முடியாது.
"அரசு சரியான நடவடிக்கையைத்தான் எடுத்துள்ளது. இந்த வன்முறையாளர்களுக்கு ஒரு பாடம் புகட்டப்பட வேண்டும்," என்றார் கட்டிடங்கள் இடிக்கப்பட்ட போது அங்கே நண்பர்களுடன் வந்திருந்த அஷோக் குமார்.
தனது பீஸா கடையை இழந்த ஹர்கேஷ் ஷர்மாகூட, "அரசின் நடவடிக்கை சரியானதுதான். ஆனால் தப்பு செய்தவர்களுக்கு மட்டும் இதுபோன்ற தண்டனையை அளித்திருக்க வேண்டும்," என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்