You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை: பெண் சாப்பிட்ட சாக்லேட்டுக்குள் புதைந்திருந்த மனித கை விரல் - எப்படி வந்தது?
- எழுதியவர், யூ.எல். மப்றூக்
- பதவி, பிபிசி தமிழுக்காக
(எச்சரிக்கை - இந்தச் செய்தியில் தரப்படும் தகவல்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்)
இலங்கையில் பெண் ஒருவர் சாப்பிட்ட சாக்கலேட்டினுள் மனித கைவிரல் ஒன்று இருந்தமை தொடர்பான செய்தி பெரும் அதிர்ச்சியினையும் பரபரப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள மஹியங்கணை பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
மஹியங்கணை ஆதார வைத்தியசாலையின் 'ஈசிஜி' பிரிவில் பணியாற்றும் பெண் ஒருவர், வைத்தியசாலை சிற்றுண்டிசாலையில் (கேன்டீன்) இந்த சாக்கலேட்டை வாங்கியதாக மஹியங்கணை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சஹன் சமரவீர பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
'நட்ஸ்' என நினைத்த பெண்
”குறித்த நபர் கடந்த 03ஆம் தேதி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட அந்த சாக்லேட்டை வாங்கி - அதில் ஒரு பகுதியைச் சாட்பிட்டு விட்டு, மீதியை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ளார். பின்னர் சனிக்கிழமை (05ஆம் தேதி) மிகுதி சாக்கலேட்டை சாப்பிட்டுள்ளார்.
அப்போது ஏதோ கடினமான பொருள் வாயினுள் இருப்பதை உணர்ந்துள்ளார். அது சாக்கலேட்டினுள் உள்ள 'நட்ஸ்' ஆக இருக்குமென நினைத்து அதனை கடித்துள்ளார்.
ஆனாலும் அது வித்தியாசமான ஒன்றாக அவருக்கு புரியவே, வெளியில் எடுத்துப் பார்த்த போது - மனித கைவிரலைக் கண்டுள்ளார் என, இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் - சுகாதார பரிசோதகர்களில் ஒருவரான சல்மான் பாரிஸ் பிபிசி தமிழிடம் கூறினார்.
இதன் பின்னர் இவ்விடயம் தொடர்பில் மஹியங்கணை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்கு குறித்த நபர் முறையிட்டுள்ளார்.
பின்னர், இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், மனித விரல் காணப்பட்ட சாக்கலேட் உற்பத்தி செய்யப்பட்ட தினத்தைக் கொண்ட - அதே வகை சாக்கலேட்கள் அனைத்தையும், அந்தப் பகுதியிலுள்ள விற்பனை நிலையங்களில் கைப்பற்றி, அவற்றினை தம்வசம் எடுத்துக் கொண்டனர்.
இவ்விடயம் தொடர்பில், மஹியங்கணை நீதவான் நீதிமன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 07) அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளனர்.
இருந்தபோதும், சாக்லேட்டினுள் இருந்த பொருள் - மனித விரல்தானா என்பதை விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையுள்ளதால், அதனை கொழும்பு ஆய்வகத்துக்கு அனுப்பவுள்ளதாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர் சல்மான் பாரிஸ் குறிப்பிட்டார்.
தற்போது மஹியங்கணை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில், குறித்த தடயப் பொருளான மனித விரல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
ஆய்வக அறிக்கை கிடைத்த பின்னர் இது தொடர்பில் முறையாக வழக்குத் தொடுக்கப்படும் என சல்மான் கூறுகின்றார்.
இது குறித்து பிபிசி தமிழிடம் மஹியங்கணை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சஹன் சமரவீர கூறுகையில், "உணவுப் பொருளொன்றில் மனித கைவிரல் ஒன்று இருந்தமை பாரதூரமான விடயமாகும். குறித்த சாக்கலேட் உற்பத்தி நிறுவனத்தின் தவறாகவே இதனை நாம் பார்க்கிறோம். இது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளோம். அங்குதான் தீர்மானம் மேற்கொள்ளப்படும்,” என்றார்.
குறித்த சாக்கலேட்டினுள் மனித விரல் கண்டெடுக்கப்பட்ட தகவல் வெளியான அன்றைய தினம், அந்த சாக்கலேட் நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதிகள் மஹியங்கணை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் வந்து விபரங்களைப் பெற்றுக் கொண்டதாக அறிய முடிகிறது. பின்னர் தொடர்புடைய சாக்கலேட் உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து வந்தவர்களும் - மஹியங்கணை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் தகவல்களைப் பெற்றுச் சென்றுள்ளனர்.
இவ்விடயம் குறித்து பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சல்மான் பாரிஸ் மேலும் தெரிவிக்கையில், ”இலங்கையில் இவ்வாறான சம்பவமொன்று நடந்துள்ளமை இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர் உணவுப் பொருள்களில் பூச்சிகள் இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மனித உறுப்பு ஒன்று உணவுப் பொருளில் காணப்பட்டமை இதுவே முதன்முறை. அதனால், இது குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு மட்டங்களுடனும் கலந்தாலோசித்து வருகிறோம்," என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்