இயக்குநர் சித்திக் : வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் 'நேசமணிகளை' உருவாக்கியவர்

    • எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன்
    • பதவி, பிபிசி நியூஸ்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் சித்திக் நேற்று மாரடைப்பால் (ஆகஸ்ட்-8) காலமானார். அவருக்கு வயது 69.

விஜய்யின் “பிரண்ட்ஸ்”, “காவலன்”, விஜயகாந்தின் “எங்கள்அண்ணா”, நடிகர் பிரசன்னாவின் “சாது மிரண்டா", நடிகர் அரவிந்த் சாமியின் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” உள்ளிட்ட திரைப்படங்களை இவர் இயக்கியிருக்கிறார்.

இயக்குநர் சித்திக்கின் மறைவுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் சித்திக்கின் திரைப் பயணம்

எந்தவொரு பெரிய பின்புலமும் இல்லாமல், கலைத்துறைக்குள் நுழைந்தவர் இயக்குநர் சித்திக். ஆரம்ப காலகட்டத்தில் நேரடியாக திரைப்பட இயக்கத்தில் சித்திக் காலடி எடுத்து வைக்கவில்லை.

கேரளாவின் புகழ்பெற்ற கலாபவன் மையம் நடத்தும் மிமிக்ரி குழுவில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார் சித்திக். பின்னர் தனது நண்பர் லாலுடன் சேர்ந்து திரைப்படங்களுக்கு நகைச்சுவை காட்சிகளை எழுதத் தொடங்கினார். கிடைத்த வாய்ப்பினை கெட்டியாக பிடித்துக் கொண்டு படிப்படியாக முன்னேறினார் சித்திக்.

மலையாள திரைப்படங்களான “பாப்பன் பிரியப்பேட்ட பாப்பன்”, ”நாடோடிக் கட்டு” உள்ளிட்ட திரைப்படங்களுக்கு 1986-இல் நகைச்சுவைக் காட்சிகளை எழுதி தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அடுத்த மூன்று ஆண்டுகளிலேயே அதாவது 1989-ஆம் ஆண்டே இயக்குநர் நாற்காலியில் அமர்ந்தார். லாலும் சித்திக்கும் இணைந்து 1989 இல் திரைப்படங்களை இயக்கத் தொடங்கினர். அவர்களது முதல் திரைப்படமான ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங் பெரிய நகைச்சுவைத் திரைப்படமாக வெற்றியடைந்தது.

அவர்களின் அடுத்த இரண்டு படைப்புகளான் இன் ஹரிஹர் நகர் (1990) மற்றும் காட்பாதர் (1991) ஆகியவையும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. காட் ஃபாதர் திரைப்படத்திற்கு கேரள அரசு விருது வழங்கி கவுரவித்தது.

1996 இல் இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்தனர். சித்திக் தொடர்ந்து படங்களை எழுதி இயக்கினார். லால் நடிக்கத் தொடங்கினார்.

சித்திக்கின் பாடிகார்ட் திரைப்படம் தமிழில் விஜய் நடிப்பில் காவலன் என ரீமேக் செய்யப்பட்டது. இந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடித்தார். அரவிந்த் சாமி நடித்த பாஸ்கர் தி ராஸ்கல் என்ற திரைப்படமும் ரீமேக் திரைப்படம்தான்.

20 படங்களுக்கு மேல் இயக்கியுள்ள இயக்குநர் சித்திக் தமிழில் “பிரண்ட்ஸ்”, “எங்கள் அண்ணா”, ”சாது மிரண்டா”, “காவலன்” உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

'காமெடி கிங்' என்று அறியப்பட்டவர்

நகைச்சுவைக் காட்சிகளையும் திரைப்படங்களையும் எடுப்பதில் வித்தகர் இவர் என்று சித்திக்கை ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். தமிழில் வெளியான பிரண்ட்ஸ் திரைப்படம் இந்த வகையைச் சேர்ந்தது.

கடந்த 2001-ஆம் ஆண்டு நடிகர்கள் விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா, வடிவேலு, சார்லி, தேவயானி, விஜயலட்சுமி, ஸ்ரீமன் உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்த திரைப்படம் “பிரண்ட்ஸ்” வெளியானது.

இத்திரைப்படத்தில், நகைச்சுவை நடிகர் வடிவேலு கான்ட்ராக்டர் நேசமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். வீடு வெள்ளையடிக்க வடிவேலு கான்ட்ராக்ட் எடுத்து, அவருடன் உதவிக்குச் செல்லும் விஜய், சூர்யா, ரமேஷ், கண்ணா, சார்லி உள்ளிட்டோர் சிரிக்க வைத்திருப்பார்கள்.

“ஆக்‌ஷன்”, “ஃபேமிலி ட்ராமா” உள்ளிட்ட ஜானரில் தன்னை நிரூபித்த எத்தனையோ இயக்குநர்கள் காமெடி ஜானர் எடுக்கும்போது தங்களை நிரூபிக்க முடியாமல் தோற்ற கதை ஏராளம் உண்டு. அதில், இயக்குநர் சித்திக் விதி விலக்கு.

படப்பிடிப்பு களத்தையே சிரிக்கவைத்த காமெடி

இயக்குநர் சித்திக்கின் மறைவு குறித்து அவருடன் “பிரண்ட்ஸ்”, “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தில் பணிபுரிந்த நடிகர் ரமேஷ் கண்ணாவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

அவர் கூறும்போது, ”பிரண்ட்ஸ்” திரைப்படத்தின் ”ஆணியே புடுங்க வேண்டாம்” காட்சி எடுக்கும்போது விஜய், சூர்யா உள்ளிட்ட அனைவரும் சிரிப்பினைக் கட்டுப்படுத்த முடியாமல் நின்று கொண்டிருப்பார்கள். நீங்கள் இன்று அந்த நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்தாலும் தெரியும் பல காட்சிகளில் ஓரமாக புன்முறுவலோடு சிரிப்பினைக் கட்டுப்படுத்திக் கொண்டு நிற்போம்," என்றார்.

மேலும், "தமிழில் காமெடி திரைப்படம் என்றால், இன்றும் எப்படி “காதலிக்க நேரமில்லை” திரைப்படத்தைக் கண்ணை மூடிக் கொண்டு சொல்வோமோ, அதுபோல இந்த தலைமுறையினர் எத்தனை ஆண்டுகளானாலும், “பிரண்ட்ஸ்” திரைப்படத்தையே கூறுவார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை. “ஃப்ரெண்ட்ஸ்” திரைப்படமே எனக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை ரசிகர்களிடையே பெற்றுத் தந்தது. அந்த திரைப்படத்திற்குப் பின்பே என்னை பலரும் அடையாளம் கண்டு என்னிடம் பேசத் தொடங்கினார்கள்," என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "எனக்கு எப்பொழுதுமே அந்த நன்றி உணர்வு உண்டு. இயக்குநர் சித்திக்கின் அத்தனை திரைப்படங்களும் ஃபீல் குட் திரைப்படங்கள். குடும்பத்தோடு அமர்ந்து ரசிக்கலாம். இயல்பிலேயே அவர் மிகவும் மென்மையானவர். யாரையும் சத்தம்போட்டோ, திட்டியோ நான் பார்த்தது இல்லை. அவருடைய ”பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்திற்கு நான் வசனம் எழுதிய நாட்களை என்னால் மறக்க முடியாது. அவருடைய மறைவு என்னை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது" என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: