You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பின் பின்னணி என்ன? தி.மு.க-வுக்கு பாதிப்பா? த.வெ.க-வில் குழப்பம் வருமா?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயை, கடந்த திங்கள்கிழமையன்று (பிப்ரவரி 10) ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசியுள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
பிரசாந்த் கிஷோர் முன்பு பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றியுள்ளார். அவர் தொடங்கிய நிறுவனம் தற்போதும் தேர்தல் வியூக பணிகளை செய்து வருகிறது
பிரசாந்த் கிஷோரின் வருகையால் த.வெ.க-வுக்குள் குழப்பம் ஏற்படவே வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
த.வெ.க தலைவர் விஜயை பிரசாந்த் கிஷோர் சந்தித்தது ஏன்? தமிழக அரசியல் களத்தில் ஏதேனும் விளைவை ஏற்படுத்துமா?
- விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஓராண்டாக என்ன செய்தது? தாக்கம் ஏற்படுத்தியதா?
- ஆதவ் அர்ஜுனா: திமுக-வில் அரசியலை தொடங்கியவர் விஜய் உடன் இணைந்தது எப்படி?
- 'ஏதோ ஒரு லாபம் இருக்கிறது' - பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் விஜய் பேசியது என்ன?
- விஜய் வருகைக்கு பிறகு தமிழக அரசியலில் என்ன நடக்கிறது? 2026 சட்டமன்ற தேர்தலில் புதிய கூட்டணி உருவாகுமா?
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக பணிகளை ஜான் ஆரோக்கியசாமி கவனித்து வருகிறார்.
அண்மையில் வாய்ஸ் ஆஃப் காமென் அமைப்பின் நிறுவனரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜூனா, த.வெ.க-வில் இணைந்தார்.
தேர்தல் வியூக வகுப்பாளராகப் பார்க்கப்படும் ஆதவ் அர்ஜூனாவுக்கு த.வெ.க-வில் தேர்தல் மேலாண்மைப் பிரிவின் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அவர், ஜான் ஆரோக்கியசாமி உடன் இணைந்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக, த.வெ.க தலைமை அறிவித்தது.
ஏன் சந்திப்பு
விஜய்- பிரசாந்த் கிஷோர் சந்திப்பு மூன்று மணிநேரம் நடந்ததாகக் கூறுகிறார், பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய த.வெ.க நிர்வாகி ஒருவர்.
"மரியாதை நிமித்தமான சந்திப்பாக இது நடந்தது. அப்போது தமிழக அரசியல் சூழல்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்" எனக் கூறினார்.
இந்த சந்திப்பின் பின்னணியில் ஆதவ் அர்ஜூனா இருப்பதாகக் கூறும் அவர், "2026 சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க-வுக்கு சிறப்பு ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "புதிய கட்சியாக இருந்தாலும் த.வெ.க-வுக்கு மிகப் பெரிய தொண்டர்கள் பலம் உள்ளது. இதனை தேர்தல்ரீதியாக பலப்படுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன. த.வெ.க மீது நம்பிக்கை இருப்பதால் நேரடியாக விஜயை சந்திப்பதற்கு பிரசாந்த் கிஷோர் வந்துள்ளார்" என்கிறார்.
த.வெ.க-வின் தேர்தல் வியூக சிறப்பு ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்பட உள்ளதாக அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறினாலும் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் அக்கட்சித் தலைமை இதுவரை வெளியிடவில்லை.
த.வெ.க-வின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணியிடம் இதுகுறித்து கேட்டபோது, "இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை தலைமை வெளியிடும். அதற்கு முன்னதாக யூகத்தின் அடிப்படையில் கூறுவது சரியாக இருக்காது" என்று மட்டும் பதில் அளித்தார்.
2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் பணியாற்றியுள்ளார்.
ஆனால், தேர்தல் வியூக வகுப்பாளர் தொழிலில் இருந்து விலகுவதாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சி நேர்காணலின்போது பிரசாந்த் கிஷோர் கூறினார். அவரது ஐபேக் (IPAC) நிறுவனத்தை தனது கம்பெனி ஊழியர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்
த.வெ.க-வுக்கு பலன் தருமா?
"அரசியல் களத்தில் பிரசாந்த் கிஷோர் பிராண்டாக இருக்கிறார். அவர் வெற்றியை நோக்கி, கொண்டு செல்வார் என்ற எண்ணம் பொதுவாக உள்ளது. ஆனால், களத்தில் ஒரு கட்சி வலுவாக இருந்தால்தான் அது சாத்தியம்" எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
"கட்சிக் கட்டமைப்பு எதுவும் இல்லாத த.வெ.க-வை எந்தளவுக்கு அவரால் உயரத்துக்குக் கொண்டு செல்ல முடியும் எனத் தெரியவில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுக்கும் பணியில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் ஈடுபட்டிருந்ததையும் அவர் பட்டியலிட்டார்.
2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு ஐபேக் நிறுவனம் தேர்தல் வியூக பணிகளை மேற்கொண்டது. 2019 ஆம் ஆண்டு ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், 2021 ஆம் ஆண்டு தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு ஐபேக் நிறுவனம் தேர்தல் பணிகளை மேற்கொண்டது.
"இவர்கள் எல்லாம் அந்தந்த காலகட்டத்தில் வெற்றி பெறும் நிலையில் இருந்தனர். அவர்களுடன் பிரசாந்த் கிஷோர் இணைந்து பணியாற்றினார். மற்றபடி, பூஜ்ஜியமாக உள்ளதை பத்தாக மாற்றுவதற்கு அவரால் முடியாது" எனக் கூறுகிறார் ப்ரியன்.
மூன்று ஆலோசகர்கள் - த.வெ.க-வுக்குள் குழப்பம் வருமா?
அதேநேரம், பிரசாந்த் கிஷோர் வருகையால் த.வெ.க-வுக்குள் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார் ப்ரியன்.
"அக்கட்சியில் ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜூனா ஆகியோர் தேர்தல் வியூக வகுப்பாளர்களாக உள்ளனர். தற்போது பிரசாந்த் கிஷோர் வந்தால் அது குழப்பத்தைத் தான் ஏற்படுத்தும். மூன்று தேர்தல் ஆலோசகர்கள் ஒரேநேரத்தில் ஒரு கட்சிக்கு வேலை பார்ப்பது சாத்தியமில்லாத ஒன்று. இதில், யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் முடிவை எடுக்கப் போகிறார் என்பது முக்கியம்" என்கிறார் அவர்.
ஆனால், "இது எந்தவகையிலும் குழப்பத்தை ஏற்படுத்தாது" எனக் கூறுகிறார் த.வெ.க-வின் மூத்த நிர்வாகி ஒருவர். பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் அவர் சில தகவல்களைத் தெரிவித்தார்.
"ஒவ்வொருவரும் அவரவருக்கான வேலைகளைப் பிரித்துக் கொண்டு செயல்படுவார்கள். தேர்தல் என்பது மிகப் பெரிய வேலை. அரசியல் பணி, பூத் கமிட்டி, தேர்தல் வியூகம் என தனித்தனி வேலைகள் உள்ளன. இதில் எந்தவித சிக்கலும் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை" எனக் கூறுகிறார்.
தி.மு.க-வுக்கு பாதிப்பா?
2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் வேலை பார்த்தது. "இதனால் தி.மு.க குறித்த தரவுகள் அந்நிறுவனத்திடம் இருக்கும்" எனக் கூறும் ஷ்யாம். "இது த.வெ.க-வுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்த உதவும்'' என்கிறார்
ஆனால், இந்தக் கருத்தை மறுத்துப் பேசுகிறார் திமுக முன்னாள் எம்.பி-யும் அக்கட்சியின் செய்தித் தொடர்பு தலைவருமான டி.கே.எஸ்.இளங்கோவன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தேர்தல் வியூகங்களை ஐபேக் நிறுவனம் மேற்கொண்டாலும், ஒரு கட்சிக்கு அடிப்படைக் கட்டமைப்பு, அக்கட்சியின் செயல்பாடுகளுக்கு மக்கள் தரும் ஆதரவு போன்றவை மிக முக்கியமானவை" எனக் கூறுகிறார்.
தி.மு.க-வின் கட்சிக் கட்டமைப்பு மிக வலுவாக உள்ளதாக கூறும் அவர், "அனைத்து கிராமங்களிலும் தி.மு.க-வுக்கு வேலை செய்வதற்கு ஆட்கள் உள்ளனர். த.வெ.க-வுக்கு தேர்தல் வியூகங்களைக் கணக்கிட்டு சொல்ல முடியுமே தவிர, தி.மு.க-வை போன்று வலுவாக உள்ள கட்சிக்கு ஆபத்தை உண்டாக்க வாய்ப்பில்லை" என்கிறார்.
" தி.மு.க-வுக்கு ஐபேக் நிறுவனம் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கும் புதிதாக தொடங்கப்பட்ட ஒரு கட்சிக்கு தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது" என்று குறிப்பிட்டார் டி.கே.எஸ்.இளங்கோவன்
"கட்சியைத் தொடங்கிய உடனே தேர்தலில் தி.மு.க போட்டியிடவில்லை" எனக் கூறிய டி.கே.எஸ்.இளங்கோவன், "கட்சியை வளர்ப்பது என்பது மிகப் பெரிய வேலை. மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். கொள்கையில் உறுதியாக நிற்க வேண்டும்.''
"அந்தவகையில், நடிகர் விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பை தாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை" என டி.கே.எஸ்.இளங்கோவன் குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)